தமிழ், மலையாளம் , தெலுகு , வட இந்திய நண்பர்கள் தத்தம் குடும்பத்துடன் கலந்துகொண்டு நட்பையும் அன்பையும் பரிமாறிக்கொண்டனர்.
குழந்தைகளும் பெரியவர்களும் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் மகிழ்வித்தனர்.
முதல் நிகழ்வே ஒரு குழந்தையின் திருக்குறளோடு துவங்கியது. அடுத்தடுத்து குழந்தைகளின் பாடல்கள் நடனங்கள் வியப்பில் ஆழ்த்தியது.
நிகழ்த்துகலையை நாம் எப்போதும் நேரில் கண்டு ரசிக்க வேண்டும். தொலைகாட்சியில் பாரத நாட்டியம் நான் பார்த்திருக்கிறேன் ஆனால் அது என்னை ஈர்த்தது இல்லை. நேற்று நான்கு சிறுவர் சிறுமியர் மேடையேறி நிகத்திய பரத நாட்டியம் எனக்கு உணர்வு மிகுதியில் கண்களில் கண்ணிர் வந்துவிடும் போல் இருந்தது.
ஒவ்வொரு உணர்வும் அபிநயமாக முகத்தில் துவங்கி கன நேரத்தில் உடல் முழுவதும் பரவுவதை காணமுடிந்தது.
நம் இந்திய மரபில் உயரிய தத்துவங்களையும் வாழ்வியல் கோட்பாடுகளையும் புராண கதைகளாக மாற்றி வைத்துள்ளோம்.
புராணமாக மாறியதால் தான் அதை மென்மேலும் நம்மால் சிந்திக்க முடிகிறது . அதை வெவ்வேறு கலை வடிவங்களாக மாற்றி கொண்டாட முடிகிறது.
கிருஷ்ணன் புகழ்பெற்ற யாதவ மன்னன் .
அவர் கதை புராணமாக மாற்றி வாழ்வை எப்படி ஆனந்தமாக கொண்டாவேண்டும் என்று அதில் புகுத்தப்பட்டது.
இன்றுவரை அந்த புராணம் மாபெரும் இலக்கியமாகவும், நடன கலையாகயும், இசைவடிவமாகவும், நாடக வடிவமாகவும் இன்னும் எண்ணற்ற கலை வடிவமாகவும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
கிருஷ்ணனின் கதையை தான் அந்த சிறுவர்கள் பரத நாட்டியமாகவும் , மற்றும் ஒரு இளம்பெண் மோகினி ஆட்டமாகவும் நிகழ்த்தினர்.
அவர்கள் அணிந்திருந்த அணிகள் மற்றும் ஆடைகள் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. அவர்களின் பெற்றோர் பெரும் சிரத்தை எடுத்திருக்கிறார்கள். போற்ற வேண்டியவர்கள்.
அந்நிய நாட்டில் இது போன்ற குடும்ப நிகழ்வுகள் விவரிக்க முடியாத மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் அளிக்கிறது.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், கலை நிகழ்வில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றிகள்.