அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம். சவூதியிலிருந்து சிவக்குமார் எழுதுகிறேன். நானும் மனைவி மற்றும் சிறு மகனும் மகிழ்வோடு இருக்கிறோம்.
இன்று தான் வெள்ளை யானை நாவலை படித்து முடித்தேன்.
நான் கல்லூரியில் படிக்கும்போது நானும் என் நண்பர்களும் ராணிபேட்டை BEHL நிறுவனத்தில் ப்ரொஜெக்ட் செய்தோம். அதற்காக அந்த நிறுவனத்தில் ஒரு மேலாளர் எங்களுக்கு உதவி செய்தார். முதல் நாள் அவருக்காக அவர் அறை வெளியே காத்திருந்தோம். ஒல்லியான, உயரம் குறைந்த, கருப்பான அவர் எங்களை கண்டதும் புன்னகைத்து நான் தான் " லஷ்மின பறையன்". உள்ள வாங்க பேசுவோம் என்று அழைத்து சென்றார். அந்த பெயர் அந்த பெயர் என்னால் சட்டென்று அதை உள்வாங்க முடியவில்லை . சிறிது நேரம் கழித்து அந்த பெயர் தானாக நினைவுக்கு வந்து அன்று முழுதும் என் மனதை ஆக்ரமித்திருந்தது.
அந்த பெயர் இடை நிலை சாதி வகுப்பை சார்ந்த எனக்கு சற்று அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்ப்படுத்தியது. அந்த சாதியில் நிறைய படித்த , நல்ல வேலையில் இருக்கும் எத்தனையோ பேரை எனக்கு தெரியும். ஆனால் அவர்களை பார்த்து ஏற்ப்படாத பயமும், பதட்டமும் அந்த பெயர் எனக்கு அளித்து. " லஷ்மின பறையன்".
சாதிய சூழல் ஒரு இயங்கு சக்தியாக இருக்கும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். இரண்டு ஊர்கள் அருகருகே இருக்கும். ஒரு ஊர் முழுக்க வன்னியர்கள். இன்னொரு ஊர் முழுக்க முதலியார் வகுப்பு மற்றும் அந்த ஊர் முடிவில் பறையர் இனத்தவர்.
ஊரை சுற்றி உள்ள நிலம் அனைத்தும் வன்னிய மற்றும் முதலியார்கள் வைத்திருப்பதால் பறையர்கள் அவர்களிடத்தில் விவசாய கூலிகளாகவும், மரமேரிகளாகவும் , தோப்பில் காவல் இருப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
எங்கள் நிலத்தில் வேலை செய்துவிட்டு மத்திய சாப்பாட்டுக்காக வீட்டின் பின்புறம் அவர்கள் வந்து நிற்ப்பார்கள். அம்மா அவர்களுக்காக தையல் இலையில் சோறு அல்லது கேள்விறகு களி முருங்கை கீரை குழம்பு பரிமாறுவார். வீட்டில் இலை இல்லை என்றால் அம்மா அவர்களை பூசனை இல்லை அறுத்துவரச் சொல்லுவார்.
சாப்பிட்டு முடித்ததும் குடிக்க தண்ணிரை கையில் தான் ஊற்றுவார். என் சிறு வயதில் ஒரு முறை நான் தண்ணிரை சொம்புடன் குடிக்கக்கொடுத்து விட்டேன். தாகத்தவிப்பில் ஒரு முதியவர் அதை வாங்கி குடித்துவிட்டார். அம்மா அந்த சொம்பை மறுபடியும் தொடவே இல்லை. அதை தூக்கி போட மனமில்லாமல் ஒரு சுவற்றின் மீது வெகு நாள் கவிழ்த்து வைத்திருந்தார்.
எங்கள் வீட்டில் புழங்கும் பெரும்பாலான சொற்களும் செயல்களும் சாதியை தொட்டு தன் மீது பூசிக்கொல்லும். அதே சூழலில் வளர்ந்த என்மனதிலும் சாதி ஒரு நஞ்சு இழையாக மனதில் படர்ந்துள்ளது. உறவினர்கள் ஒன்று கூடுபோதும், ஊர் திருவிழா காலங்களிலும், ஒற்ற சாதி நண்பர்கள் ஒன்று கூடும் போதும் அந்த நஞ்சு ஒரு போதையை தருகிறது. கட்டுப்பாடற்ற தைரியமும் சுகந்திரத்தையும் தருகிறது. அந்த சுவையை என்னால் கைவிட முடியவில்லை. கிட்ட தட்ட ஒரு குடி நோயாளியை போல.
நான் படித்த கணிதமும் அறிவியலும் பொறியியலும் அதை கடந்து செல்ல உதவவே இல்லை. பின் புத்தகங்களை படிக்கத்துவங்கிய பின் மனிதம் பற்றி சிந்தனையே மனதில் உதிக்கத்துவங்கியது. ஒருவழியாக உங்களை வந்து அடைந்த பின் அறத்தை பற்றிய உணர்வு துளிர்த்ததது.
அதனால் தான் என்னவோ
சங்கரை வெட்டி கொள்ளும் காட்சியை என்னால் பார்க்க முடியவில்லை. அதற்க்கான மன தைரியம் எனக்கு இல்லை . ஆனால் அந்த நிகழ்வு நெஞ்சை அழுத்துகிறது. சாதியை தாண்டி மனம் இரண்டு மூன்று நாட்களாக அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
வெள்ளை யானை நாவலில் தன் இழி நிலைக்கு எதிராக போராடும் அந்த இன மக்களின் மேல் விழ துவங்கும் அடி இன்று வரை தொடர்கிறது என்று எண்ணிக்கொண்டேன்.
மனிதனின் உச்சங்களை நாவல் சில இடங்களில் தொடும் போது அதை ஆழ்ந்த பயத்தோடும் நடுக்கத்தோடும் தான் மனம் உள்வாங்கிக்கொள்கிறது.
பஞ்சத்தால் பசியின் உச்சத்தில் இருக்கும் ஒரு தாய் தன்னுள் இருக்கும் இறுதி சிறு துளி பிரஞ்சயயைகொண்டு தன் குழந்தையை எய்டனை நோக்கி விசி எறிந்த கட்சி மானுடத்தின் எல்லை.
அந்த எல்லை வரை செல்லும் எந்த ஒரு மனித இனமும் அதன் பின் முற்றிலும் வேறு பாதையில் பயணிக்கும்.
நாவலை பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை. அது தந்த உணர்வை புரவயமாக்கவும் விரும்பவில்லை.
அந்த உணர்வு எனக்கானது. இந்த நாவல் என்னை போன்றவர்களுக்கானது.
நன்றி