"அவுனுக்கு இன்னா " என்ற வார்த்தை ஊரில் சொந்தங்கள் மற்றும் நண்பர்களிலின் நடுவே என்னை பற்றிய பொதுவான சொல்.
நான் சவூதிக்கு வந்து பத்துவருடங்கள் நிறைவுற போகிறது. பொருளியல் ரீதியாக ஓரளவுக்கு நிறைவடைந்திருக்கிறேனே தவிர முழுமையாக இல்லை . நாளைக்கு உனக்கு வேலை இல்லை என்று கம்பெனிகாரன் சொல்லிவிட்டால் வியர்த்து படபடத்து மயங்கிவிடும் நிலையில் தான் என் பொருளாதரம் இருக்கிறது.
ஊரில் இருப்பவர்கள் வெளியில் சென்று வேலை செய்பவர்களை வெறும் பொருளாதார பண அடிப்படையிலேயே வைத்து சிந்திக்கிறார்கள். ஊரில் என்னை பார்ப்பவர்கள் "உனக்கு என்னப்பா " துபாய் பணம் என்ற ரீதியில் தான் பேசத்துவங்குவார்கள்.
ஆனால் பொருளாதார நிறைவு மட்டுமே வாழ்வின் முழு நிறைவு இல்லை.
ஊரில் ஒரு சாதாரண மனிதர் அனுபவிக்கும் கண்ணுக்கு தெரியாத அவர் பிரஞ்சையில் உணராத எத்தனையோ வசதிகள் இங்கிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை.
உலகத்தில் சுகந்திரம் என்னும் சொல்லின் முழுமையான அர்த்தத்தை அனுபவிப்பவர்கள் இந்திய மக்கள் தான் என்று ஒவ்வொரு முறையும் நான் ஊருக்கு வரும்போதும் உணர்கிறேன்.
என் ஆசிரியர் சொல்வது போல ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நீங்கள் சென்றால் ஒருமுறை கூட யாரும் உங்களை நிறுத்தி நீங்கள் யார் என கேட்கமாட்டார்கள். ஆனால் இங்கு அப்படி அல்ல. ஒவ்வொரு நூறு கிலோமீட்டர்க்கும் நீங்கள் சோதனை சாவடியை தாண்ட வேண்டியிருக்கும். மனம் பட படத்து கைகள் தன்னை அறியாமல் உங்கள் அடையாள அட்டையை தேடும்.
நான் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை கிராமத்தில் வளர்ந்தேன். என் ஊரை சுற்றி தென்னை மரம் தான் பிரதானம் . அதனால் பசுமையும் பச்சை நிறமும் கண்களில் எப்போதும் நிறைந்தது இருக்கும். என்னை சுற்றி வெவ்வேறு மனிதர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். வெவ்வேறு முகங்கள் அந்த முகங்களில் தவழும் வெவ்வேறு உணர்வு நிலைகள். அதே போல பெண்கள். எப்போதும் சாதாரண உடையில் அல்லது இரவு உடையில் இருக்கும் எங்கள் வீட்டு பெண்கள் குடும்ப விழாக்களிலும் திருவிழாக்களிலும் பொட்டுட்டு , பட்டுடுத்தி, குழல் திருத்தி தெய்வமகள்கள் போல மாறிவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். திருவிழா காலங்களில் ஊரும் அப்படித்தான் மாறிவிடும்.
நாங்கள் பயன்படுத்திய மொழியும் நாகரிகம் மற்றும் வாழ்வியல் முறையும் தொன்று தொட்டு அந்த கிராமத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. பேசும் மொழியில் பெரும்பாலும் கட்டுபாடுகள் இல்லை . ஒரு நாளைக்கு ஐம்பது கெட்டவார்த்தைகள் பேசாத மனிதர்கள் அங்கு குறைவு. பள்ளி பருவத்தில் மேற்சொன்ன அனைத்தும் தான் என் ஆழமனதை வடிவமைத்தது.
ஆனால் சவூதி வந்த ஒருவருடத்தில் ஒரு இருளை அதன் சிறு எடையை மனதில் உணர்ந்தேன். அந்த இருளை அதனுள் உள்ளதை என்னால் அறியவே முடியவில்லை. நான் தனிமையில் இருக்கும் போது அந்த இருள் ஏக்கமாக , வெறுமையாக உருமாறி நிற்கும். என் மனதில் மகிழ்ச்சியும் முகத்தில் சிரிப்பும் குறைந்து கொண்டே வந்தது. சில வருடங்களில் நல்ல சம்பளம் வீடு, கார் எல்லாம் கிடைத்தது.ஆனால் அந்த இருள் பெரும் நோய் போல முகம் முழுக்க பரவி இருந்தது.
அது ஏன் என்று பலநேரம் நான் யோசித்ததுண்டு. சில மட்டுமே எனக்கு தட்டுப்பட்டது.
இங்கு பசுமை என்பதே இல்லை , தமிழர்கள் எந்த கலாச்சார நிகழ்வுகளையும் இங்கு நடத்துவதில்லை, ஒரு திரையரங்கு கூட இல்லை , பெண்கள் ஆண் துணையுடன் பர்தா அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும், எப்போதும் நன்மை யாரோ ஒருவர் கண்காணித்து கொண்டே இருப்பது போன்ற ஒரு உணர்வு, சொந்தங்கள் கூடி தன் மகிழ்வை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை,
இல்லை என்ற பட்டியலை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படி தன் ஆழ் மன கட்டமைப்புக்கு முற்றிலும் தொடர்பில்லாத சூழலில் நாம் வாழ முற்படும்போது ஆழ்மனம் குழம்பதுவங்கும். தனிமையும் ஏக்கமும் நம்மை ஆட்கொள்ளும். பலநேரங்களில் காரணம் இல்லாமல் நமக்கு அழுகை கூட வரும்.
அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி கடுமையாக வேலைசெய்வது. காலையில் 6.30 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 8 மணிக்கு மேல் தான் அறைக்கு வருவோம். கட்டுமான பணியில் உள்ள பெரும்பாலானவர்களின் வழக்கம் இதுவே. ஒருகட்டத்தில் என் மனமும் உடலும் வெகுவாக பாதிக்கப்பட்டது.
அந்த தருணத்தில் சரியான நேரத்தில் மனைவி ( கவிதா) வாழ்வோடு இணைந்தார். கவிதாவின் உதவியோடு கொஞ்சம் கொஞ்சமாக என்னையும் வாழ்வையும் மேம்படுத்திக்கொண்டேன்.வேலையை குறைத்துக்கொண்டு பாடுவது, ஆடுவது, சிலம்பம் என்று கலாச்சாரத்தோடு தொடர்பு படுத்திக்கொண்டேன்.
நவீன தமிழ் இலக்கியம் அறிமுகமானது. அதன் வழியாக பல்வேறு மனிதர்களின் வாழ்வில் நானும் இணைந்து கொண்டேன்.
மேலும்ன் கவிதாவும் நானும் ஊர் நிகழ்வுகளை , உறவுகளின் செயல்பாடுகளை சதா பேசிக்கொண்டே இருப்போம்.
ஆழமாக சொல்வதென்றால் உடல் மட்டும் இங்கு இருக்கிறது , உள்ளம் ஊரைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த பத்துவருடங்களில் என் கனவுகளில் இந்த ஊர் ( சவூதி) ஒருமுறைகூட வந்ததே இல்லை.
எப்படியோ ஒரு வழியில் வாழ்வை உயிர்ப்போடு வைத்திருக்க முயற்சிக்கிறோம்.
ஏன் எவ்வளவு கஷ்ட்டப்படணும் ஊருக்கு போகலாம் என்று தோன்கிறோம் .
மனுஷ் ஒரு கவிதையில் கூறியது போல "ஊருக்கு செல்லும் எல்லா வழிகளையும் அழித்துவிட்டு தானே இங்கு வந்திருக்கிறோம்", என்ற வரி தான் நினைவுக்கு வருகிறது.
எங்கு நம் பொருளியல் தேவைகளும் அன்றாட லெளதீக தேவைகளும் தடையில்லாமல் கிடைக்கிறதோ அங்கேயே முடங்கிவிடத்தான் பெரும்பாலான ஆண் மனம் நினைக்கிறது. அதில் நானும் ஒருவனாக தான் நெளிந்து கொண்டு இருக்கிறேன்.