"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், பிப்ரவரி 04, 2014

காப்பகம்

சமிபத்தில் ஒரு பொங்கல் பட்டிமன்றம் பார்த்தேன் அதில் ஒரு பேச்சாளர் பெற்றோரை காப்பகத்தில் விடும் மகன்களை வழக்கம் போல் வசை பாடினார்.

எனக்கு சில கேள்விகள் மனதில் எழுந்தன

பெற்றோரை காப்பகத்தில் விட காரணம் அன்பு குறைவதினாலா  அல்லது பொருளாதார நெருக்கடியா?

வயதான பெற்றோர்கள் மீது மகனுக்கு அன்பு குறையும் என்றால் அதன் உளவியல் காரணம் என்ன ?

பெற்றோர்களை காப்பகத்தில் விடும் மகனுக்கு அன்பு இல்லை என்றால் தன் குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் தாய்க்கு அன்பு இல்லையா ?

மருமகளின் நெருக்கடியும் மீறி மகனோடு இருக்கும் பெற்றோர்கள் மனநிம்மதியோடு இருக்கிறார்களா?

நல்ல நிலையிலிருந்து வயதான காலத்தில் மகனுக்கும் மருமகளுக்கும் எடுபுடி வேலை செய்யும் பெற்றோர்களின் மனநிலை எப்படி இருக்கும் ?

வெளிநாடுகளில் வேலை பார்க்கும் மகன் பெற்றோர்களை அங்கு அழைத்து சென்றால்  அந்த சூழலும் கால நிலையும் அவர்கள் மகிழ்வாக இருக்க உதவுமா?

மகனும் மருமகளும் வேலைக்கு சென்ற பின் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா ?

காப்பகங்கள் இல்லாத காலங்களில் இவர்களின் நிலை என்னவாக இருந்தது ?

காப்பகத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சி இல்லாமல் துன்பத்தில் வாழ்கிறார்களா ?

நகரத்தில் மாறிவரும் சூழல், பொருளாதார நிலை , வாழ்வியல் இவை அனைத்தும் பெற்றோர்களை காப்பகம் நோக்கி தள்ளுகின்றன.
இதை உணர்வு பூர்வமாக மட்டுமே  சிந்திக்கும் சிலர் மகன்களை முன்வைத்து வசவு பாடிக்கொண்டே இருக்கிறார்கள்.

கிராமத்திலும் மகன் தாயை அடிக்கும் காட்சியை பார்த்திருக்கிறேன். கைவிடப்படும் வயதானவர்களுக்கு அந்த கிராமமும், சாதியும், உறவுகளும்  உதவுகின்றன. அவர்கள் கூலி வேலை செய்கிறார்கள், கீரை, பழங்கள் விற்கிறார்கள், அரசாங்கம் உதவி தொகை அளிக்கிறது .

என் அப்பா காலையில் ஆறுமணிக்கு எழுவார். சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்து கிராமத்துக்கு சென்று டீ குடிப்பார். அது ஒரு முஸ்லிம்கள் வாழும் கிராமம். அங்கு நண்பர்களோடு பேசிக்கொண்டு இருப்பார். வணக்கம் வைக்கும் நாலு பேர்க்கு டீ வாங்கி கொடுப்பார். மறுபடியும் வீட்டுக்கு வந்து கூழ் குடித்துவிட்டு நிலத்துக்கு சென்று கூலி ஆட்களை வைத்து வேலை செய்வார். மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தூங்குவார். மாலை வெள்ளை உடை அணிந்துகொண்டு அருகில் இருக்கும் நகரத்துக்கு செல்வார். அங்கும் நண்பர்களோடு பேசிக்கொண்டு இருப்பார். இரவு வந்து கொஞ்ச நேரம்  டிவி பார்த்துவிட்டு சாப்பிட்டுவிட்டு துங்கி விடுவார்.

கடந்த இருவது வருடங்களாக இது விடாமல் நடக்கிறது. எனக்கு தெரிந்து அவர் வெளியில் தங்கியதே இல்லை, வீடுவந்து சேர்ந்து விடுவார். வீடு வந்தால் தான் நிம்மதி என்பார்.

அவருக்கு உன்ன உணவும் , தங்குமிடம் மட்டும் இருந்தால் போதாது , அவரை பார்த்து வணக்கம் வைக்க நான்கு பேர், அவர் வேலை வாங்க நான்கு பேர் , பேச நண்பர்கள் என எல்லாம் வேண்டும்.

அவரை வேறு இடத்துக்கு  மாற்றுவது என்பது ஒரு ஆலமரத்தை பிடுங்கி ஆற்றுக்கு நடுவில் நடுவதை போன்றது. வேரும் அழுகும் மரமும் உதிரும்.


செவ்வாய், ஜனவரி 07, 2014

ஒரு ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் - 2

ஒன்றாம் வகுப்பு முதல் மூன்ராம் வகுப்பு வரை தரையில் அமர்ந்து பாடம் படிக்க வேண்டும். தரை சொர சொரப்பாக தரமற்று இருக்கும். அதில் அமர்ந்தால் விரைவில் டௌசர் கிழியும். நான்கு ஐந்து வகுப்புக்கு பலகை. ஆறு முதல் எட்டு வகுப்புக்கு பெஞ்ச். சீமை ஓடு கூரை அமைக்கப்பட்ட கட்டிடங்கள். விளையாட்டு மைதானம் இல்லை ஆனால் அகலமான மணல் நிறைந்த பாலாறு இருந்தது. பள்ளியின் முன்னுள்ள மரமல்லி தினமும் தினமும் பூக்களால் கோலம்போடும். கழிவரை தனியாக இல்லை, சுற்றும் தோப்புகள் வயல்கள் என்பதால் தேவைப்படவில்லை.  

மத்திய உணவு அரசு உணவு. அதன் வாசனை என்னுள் எங்கோ தேங்கி இருக்கிறது. குழம்பு ஒரே மாதிரியான சில காய்கள் சேர்த்து பாமாயில் எண்ணை ஊற்றி   செய்யும் பருப்பு குழம்பு. சோறு வடித்த கஞ்சி குழம்பில் சேர்ப்பர். ஒருவருக்கு இரண்டு கரண்டி சோறு , ஒரு கரண்டி குழம்பு. கையில் அலுமினிய தட்டோடு கண்ணில் பசியோடு முண்டியடித்த சிறுவர்களை இன்னும் நினைவிருக்கிறது. கொஞ்சம் வசதியான மாணவர்கள் வீட்டிக்கும் அல்லது வீட்டிலிருந்து கொண்டுவந்தும் சாப்பிடுவர். வாரம் இருமுறை முட்டை. சாப்பிட்டபின் கழுவுவதற்கு சுற்றி இருந்த நான்கு பம்பு செட்டுகளுக்கு பிள்ளைகள் போவார்கள்.

புத்தகங்கள் அரசாங்கம் கொடுத்தது. அது எல்லோருக்கும் போதுமானதாக இருக்காது. தலைமை ஆசிரியர் அதை சரியாக பிரிப்பார். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் , கூலி வேளை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கும் எல்லா படத்திர்க்குமான  புத்தகங்களை கொடுப்பார் , ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தாள் மூன்று புத்தகம், இரண்டு ஏக்கர் நிலம் இருந்தாள் இரண்டு புத்தகம், பம்பு செட்டு வைத்திருந்தாள் புத்தகம் இல்லை. மேலும் போதவில்லை என்றால் பழைய புத்தகங்களை சேகரித்து கொடுப்பார். சில பெற்றோர்கள் அவரிடம் வந்து சண்டையிடுவர். சீருடை, செருப்பு, பல்பொடி எல்லாம் கொடுத்தார்கள். நிறைய சிறுவர்கள் முதன் முறையாக செருப்பு அணிந்து பள்ளிக்கு வந்தனர். 

ஆறாம் வகுப்பு வரை தமிழ் தவிர வேறு பாடங்கள் முன்னெடுத்து படிக்கவில்லை. ஏழாம் வகுப்புக்கு மேலே அறிவியல்,கணக்கு, வரலாறு & புவியியல் என தனித்தனியாக படித்தோம். ஆங்கிலம் சுத்தம்.

ஆறாம் வகுப்பில் ஒரு  வாத்தியார் Grammar என்றால் என்ன என்னறார். நான் எழுந்து கிராமம் என்றால் சிறிய ஊர் சார் என்றேன். கிளாஸ்ல எல்லோரும் கை தட்டினார்கள். அந்த வாத்தியாரோட நிலமைய நெனச்சி பாருங்க.

எங்கள் தலைமை ஆசிரியர் தான் அதை எளிமையாக்கி அடிப்படைகளை சொல்லிகொடுத்தார். ஏழாம் வகுப்பில் தமிழை சரளமாக பெரும்பாலும் படித்தனர் சிலர் எழுத்துக்கூட்டி படித்தனர். ஆங்கிலம் எட்டாம் வகுப்பு வரை யாருக்கும் படிக்க வரவில்லை. சில மாணவர்களுக்கு ABCD முழுமையாக தெரிந்திருக்கவில்லை.

இந்த மாணவர்களுக்கு  நகரத்துடனான தொடர்பு மிகவும் குறைவு. மருத்துவமனைக்கும் சினிமாவுக்கும் யாராவது அழைத்து சென்றாள் உண்டு. இங்கு படித்துவிட்டு மேலே படிக்க செல்லும் போது ஆங்கிலம் மட்டும் பயமுறுத்துவது இல்லை  நகர பின்னணி மாணவர்களின் பழக்கங்கள், பேச்சு, உடல் மொழி , உடை அத்தனையும் புதியதாக கற்க வேண்டும். அப்படி கற்காமல் இருக்கும் பட்சத்தில் பயம் சூழ்கிறது.

எதையும்  உணர்வு சார்ந்து சிந்திக்கவே  பழகிவிட்டு  அறிவு சார்ந்து சிந்திக்க துவங்கும் போது இயல்பாகவே ஒரு குழப்பம் வருகிறது அதை தொடர்ந்து பயம் சூழ்கிறது.

அடுத்து ஏழ்மை. கிராமத்தில் அடிப்படை தேவைகளின் எண்ணிக்கை குறைவு. நகரத்தை நோக்கி நகரும் கிராமத்து மாணவனை அதன் அடிப்படை தேவைகளின் எண்ணிக்கையே பயமுருத்திவிடும்.

அடுத்து ஆங்கிலம். நாகரிகத்தின் அடையாளமாக அதை உள்வாங்க துவங்கும் போது அது பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது.

இதையெல்லாம் தாண்டி நிறைய இளஞ்சர்கள் சாதிக்கிறார்கள்.

( தொடரும் )

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

ஒரு ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் - 1

அணங்காநல்லூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (வேலூர் மாவட்டம் ).அணங்காநல்லூர், மோட்டூர், கார்னாம்பட்டி, வாத்தியார்பட்டி, பட்டுவாம்பட்டி, ஏரிக்கரை என சுற்றி உள்ள கிராம பிள்ளைகளுக்கு ஒரே பள்ளிக்கூடம்.

என் பாட்டி தான் என்னை பள்ளியில் சேர்த்தாங்க . நுழைவு தேர்வு இல்லை, அப்பா அம்மா படித்திருக்க தேவை இல்லை, ஏங் பாட்டிகூட படித்திருக்க தேவை இல்லை , நன்கொடை ( கொடையே நல்லது நன்கொடை நல்லது அல்ல ) தேவை இல்லை, சிபாரிசு தேவை இல்லை ஆனா நீங்க ஒன்னாவுதுல சேரத்துக்கு ஒரே ஒரு தகுதி வேணும், உங்க வலது கைய அப்படியே உயர்த்தி தலைமேல மடக்கி இடது காத தொடணும் அவுளவுதான்.

தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் நம்ம பக்கத்து ஊர்காரர் , அதனால சுற்று வட்டாரத்தில் அனைவரையும் தெரியும். அப்பா பேர் சொன்னதும் சேர்த்துக்கொண்டார்.

80பதுகளில் ரேடியோ தான் உலக தொடர்பு சாதனம். காலை 7.15க்கு செய்திகள் அதைதொடர்ந்து நிகழ்ச்சி நிரல், 7.40க்கு இன்று ஒரு தகவல் , தென்கட்சி  சுவாமிநாதன் தகவலை சொல்லுவார். நெருக்கமான மொழி நடையில் சிறிய கதையோடு அவர் சொன்ன தகவல்கள் இன்றும் வாழ்வோடு பயணித்து வழிகாட்டுகிறது. 7.45க்கு தமிழ் பாடல்கள் அதை தொடர்ந்து  8 மணிக்கு ஒரு இசை வரும் , அதுவே ம்ம்ம் டைம் ஆச்சு school க்கு ஓடு என சொல்வது போல இருக்கும் , அதற்குள் நானும் செங்கல் போடி அல்லது கரிதூள் அல்லது கோபால் பல்பொடியில் பல்விளக்கி, பம்பு செட்டில் குளித்து, பழயதை தின்று ஓடுவதற்கு தயாராகவே இருப்பேன். ஒரு பை அதில் பலகை மற்றும் பல்பம் போட்டு வைக்கும் டப்பா. ஒரு பக்க சிறகு போல அது தோளில் தொங்க, டப்பாவும் பலகையும் மோதி டங் டங் என சத்தத்துடன் பள்ளிக்கு ஒரு சிறிய பயத்தோடு ஓடுவேன். இன்றும் நான்  காலையில் வேலைக்கு கிளம்பும் போது coffee யில் மெலிதாக எழும் ஆவி போல பயம் எழுவது அதன் நீட்சியாக இருக்கலாம்.

இங்க ஒன்னு கவனிக்கணும், முதல்ல எங்க ஊர்ல "பள்ளிக்கூடம் போகலியா " ? என கேட்பாங்க . ஆனால் தானியார் பள்ளிகளில் கொஞ்சம் வசதியானவங்க புள்ளைங்கள சேர்த்தாங்க. அப்புறம் எங்க பள்ளிக்கூடத்தை  "school " அப்படின்னு கூப்பிட ஆரமிச்சிட்டாங்க.

காலையில் prayer. அதில் தமிழ் தாய் வாழ்த்து ( நீராரும் கடலோடுத்த ) இரண்டு பெண்களே தினமும் பாடும்,ஒருகட்டதில் தாங்க முடியாமல் டேப் ரெகார்டரில் போட்டார்கள்,  அப்போது தான் தெரிந்தது அது எவ்வளவு அழகான பாடல் என்று. ( ஒரு நாள் இந்த பாடலை நீராரும் ஓ !ஓஹோ கடலோடுத்த ஓ !ஓஹோ என மச்சான வச்சிக்கடி முன்தான முடிச்சிலதான் பாட்டு மெட்டில் பாடிக்கொண்டு இருந்தேன் P .T வாத்தியார் தலமேல ஒரு அடிவிட்டார்) . பின்பு ஒரு குறளும் அதன் பொருளும் சொல்வார்கள், தினமணி செய்தித்தாள் வாசிப்பர், உறுதிமொழி ஒருவர் சொல்ல மற்றவர் சேர்ந்து சொல்லவேண்டும். அதில் இருந்த வார்த்தைகள் எனக்கு மறந்து விட்டது, ஆனால் ஒரு பெரிய அரசமரத்தை காற்று உலுக்குவதை போல  500 சிறுவர் சிறுமியர் சேர்ந்து ஒலிக்கும் போது ஏற்பட்ட  அதிர்வு இன்னும் நினைவில் இருக்கிறது. வெள்ளிகிழமை மட்டும் காலையில் தேசிய கொடி ஏற்ற வேண்டும். தேசிய கொடியில் மரமல்லி பூ போட்டு அழகாக மடித்து கட்டி பாதிவரை ஏற்ற பட்டு இருக்கும். ஒரு சிறுவன் மார்ச்பாஸ் அடித்து தலைவர் போல் நிற்கும் ஒரு சிறுவனிடம் கொடியின் கயிறை அவிழ்த்து கொடுப்பான். தலைசிறுவன் மெதுவாக அதை மேல் ஏற்றி கொடியை அவிழ்த்து பறக்க விடுவான். அனைவரின் கர ஒலி முடிந்ததும் தலைசிறுவன் சுதந்திர தியாகி யாராவது ஒருவரை பற்றி பேச வேண்டும். அதன்பின் தேசிய கொடி வாழ்த்து பாடலான தாயின் மணிக்கொடி பாரீர் பாடல் பாடப்படும். 

கிராமத்து சிறுவர்கள் எந்த தன்ஒழுக்க கட்டுக்குள்ளும் வருவது இல்லை. கெட்ட வார்த்தைகளை பெற்றோர் மற்றும் சூழ்லையிலிருந்து எளிமையாக எடுத்து கையாள்வர். வன்முறையில் வலியவன் வகுப்பில் அனைவராலும் மதிக்கபடுவான். ஒரே சாதி சிறுவர்கள் ஒன்றாய் விளையாடுவர். 

படித்தால் மட்டுமே வாழ முடியும் என யாரும் அவர்களை பயமுறுத்துவது இல்லை. ஏனெனில் கிராமத்தில், படித்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை இல்லை.  நகரத்திலிருந்து வரும் ஆசிரியர்கள் இவர்களை ஒழுக்க எல்லைக்குள் நிருத்தவே படாதபாடுபடுவர். அதன்பின் அவர்களுக்கு கல்வி அளிப்பது இன்னும் சிரமமான விஷயம். ஆனாலும் சில ஆசிரியர் மாணவர்களுக்கு பிடித்தமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் பாடங்களை ஒரு சுவாரசியமான கதைகளாக மாற்றி நடத்தினார்கள். 


ஞாயிறு, டிசம்பர் 22, 2013

மகன் வயது ஒன்றரை


காலையில் எழுந்தவுடன்  உடல் முறுக்கி திமிர் விடுகிறான்.

படுக்கைலிருந்து இறங்கி வீட்டில் இருக்கும் இரு அறைகளையும் ஒரு நோட்டம் விட்டுவிட்டு டிவியை எழுப்பி அதில் விளம்பரம்  வருகிறதா என பார்க்கிறான். டிவியில் அவன் விளம்பரங்களை தவிர வேறெதுவும் பார்ப்பது இல்லை. பின்பு விளையாட துவங்கி விடுகிறான்.

எந்த பொருளுக்கும் அவனிடத்தில் எந்த மதிப்பீடும் இல்லை. ஆதலால் அவனை பொருத்தவரை எல்லா பொருளும் விளையாட்டு பொருள்தான்.
வயிறு  நிறைந்தாள் உணவை வைத்து விளையாடுகிறான். சமையல் அறையில் பாத்திரங்கள், குளியல் அறையில் தண்ணீரோடு ,  படுக்கை அறையில் படுக்கையில், அம்மாவின் அழகுசாதன பொருட்கள், என் சுத்தியல், திருப்பிலி , அடுக்கி வைத்த துணிகள் , துப்புரவு பொருட்கள் என அவன் விளையாடும் பொருட்களின் பட்டியல் நீளும். அவன் பொம்மைகளை அதிகம் தொடுவது இல்லை. ஏனெனில் அவன் எங்கள் இருவரை பார்த்து கற்றுக்கொள்ள நினைக்கிறான். ஆதலால் நாங்கள் உபயோகிக்கும் பொருட்களே அவனுக்கும் தேவைபடுகிறது. சில நேரங்களில் நானும் அவனும் விளையாடுவோம். அவன் உற்சாகத்தோடு ஏறி குதித்து , சிரித்து மகிழ்ந்து , ஓடி சுழன்று விளையாடுவான். அந்த உற்சாகம் எனக்குள்ளும் பொங்கும் ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. மறுபடியும் மனம் இறுகி அமைதியாகிவிடும். ஆனால் அவன் தொடர்ந்து அதே நிலையில் இருப்பான். இந்நிலையில் அவன் முன் எஞ்ஞாநியும் அஞ்ஞானியே .

ஒருநாள் parkக்கு அழைத்து சென்றேன். பரந்த புல்வெளியில் விளையாட விட்டேன். திடீரென உற்சாகம் கொண்டு புல்வெளி முழுவதும் கைகளை உயர்த்தி ஓட துவங்கினான். ஆனந்தமாக  ஓடிக்கொண்டே இருந்தான். என்னால் அவனை பிடிக்கவே முடியவில்லை. பெரிய மழைத்துளிகளை போல அவன் பாதங்கள் புல்வெளியில் படர்ந்து கொண்டே இருந்தது. அங்கிருந்த புல்வெளியும், சறுக்கு மரங்களும் , ஊஞ்சலும் மணல் பரப்பும் அவனை ஈர்க்கவில்லை, ஆனால் அந்த திறந்தவெளி அவனை ஈர்த்தது. மூச்சுமுட்ட அந்த திறந்தவெளியை பருகித்திளைத்தான்.

அவன் விரும்பி உண்ணும் உணவு என்று எதும் இல்லை. பசித்தால் பழைய சோறு முதல் பாதாம் பருப்பு வரை தின்பான்.  இப்போது ஊட்டுவது பிடிக்கவில்லை, அவனே இரைத்து பூசி தின்றால் ஒரு திருப்த்தி.

இட்லியை இட்டா அல்லது இட்டி என்பான். ஹலோவுக்கு ஹலா என்பான். இன்னும் சில நாளில் ஒரு புது மொழி எங்கள் வீட்டில் உலாவும் என நினைக்கிறேன்.

தூங்கும்முன் கட்டை விரலை வாயில் வைத்துக்கொள்கிறான். தூக்கத்தை உறுஞ்சி குடிக்கிரானோ என தோன்றும். அம்மா தலைமீது கொஞ்சநேரம், எங்களுக்கு இடையில் கொஞ்சநேரம், குருக்குவெட்டாக கொஞ்சநேரம் என புரண்டுவிட்டு இறுதியில் காலுக்கு அடியில் தூங்கிவிடுவான்.

கோவம் தெரியவில்லை ஆனால் வீம்பு உள்ளது. அழ தெரிகிறது ஆனால் துக்கம் தெரியவில்லை. அவன் நினைத்ததை செய்கின்றான் ஆனால் ஒரே மாதிரி அல்ல. சிரித்தாள் கண்களும் சிரிக்கின்றது.

அவன் விரல் பிடித்து என் உலகத்திற்கு அவனை அழைத்து வர இது வரை எனக்கு தோன்றவில்லை . அவன் மழலையில் திளைத்திடவே எனக்கு நேரம் போதவில்லை.