"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், மார்ச் 17, 2015

ஆங்கிலம் தெரியாத முட்டாள்

என்னை யாரவது திட்டினால்  அதிலிருந்து கடந்து வருவது எனக்கு ரொம்ப எளிது. திட்டுபவரை உடனே என் எதிரியாக  பாவித்து அவன்   மட்டும் யோக்கியமா ? அவனை பத்தி எனக்கு  தெரியாதா என்று திருப்பி திட்டினால் போதும் மனம் சாந்தி ஆகிவிடும்.

என்னை யாராவது  பாராட்டினால்   நான்  நெளியத் துவங்கிவிடுவேன். அதை எப்படி எதிர் கொள்ளவது என்று எனக்கு தெரிவது இல்லை.

அதே போல எனக்கு யாரவது அறிவுரை சொன்னா அதையும்  எப்படி கடந்து போவது என்று தெரியாது.

அட்வைஸ் பண்ணுபவர் பெரும்பாலும் நெருக்கமானவராக இருக்கலாம், உன் நல்லதுக்கு தான் சொல்றேன் என்று அவர் ஆரம்பிக்கும் போது சப்த நாடியும் அடங்கி சரிங்க சரிங்க என்று சொல்லத்துவங்கி விடுவேன்.

அட்வைஸ் பண்ணும் போது என் சுயம் ( ஈகோ ) உரசப்படும். முன்பெல்லாம் மனம் கொந்தளிக்கத்துவங்கிவிடும். ச்ச்சே  இப்படி பண்ணிட்டோமே என்று புலம்பி, குழம்பி, ததும்பி , வெம்பி இரண்டு நாள் பித்தொடு அலைந்து பின் மறந்து விடுவேன்.

ஆனால் இப்போது வேறு விதமாக முயன்று வருகிறேன். அப்படி அட்வைஸ் செய்து என் சுயம் அடிபடும்போது வழக்கம் போல மனம் கொந்தளிக்கத்துவங்கும். அவன் யாரு அதை சொல்வதற்கு எனக்கு தெரியாதா ? நா மட்டுமா இப்படி இருக்கேன் ? மத்தவங்களுக்கு நா மேல்  என்று துவங்கி பெனாத்த ஆரம்பிக்கும் , கொஞ்ச நேரம் கழித்து இல்ல இல்ல நா பண்ணது தப்பு , அப்படி இனி பன்னக்கூடாது என்று புலம்பும். கொஞ்ச நேரம் அதை கவனித்தால் செம காமடியா இருக்கும். அதிக பட்சம் அரை  மணி நேரம் மனதை கவனித்துக்கொண்டே இருந்தால் மனம் ஒரு முடிவுக்கு வரும். நான்  வேறு வேலை பார்க்க  சென்று விடுவேன்.

எனக்கு அதிகம் அட்வைஸ் பண்ணப்படுவது என்  ஆங்கில  அறிவை பற்றித்தான்.

எங்கள் கிராமத்து பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது A , B , C , D தடை இல்லாமல்  நான் மட்டுமே சொல்லி கைதட்டல் வாங்கினேன்.

அதன் பின் பொறியியல் படிப்பு முதலாண்டு முடியும் வரை ஆங்கில வாத்தியார் தான் என் முதல் எதிரி.

பொறியியல் படிக்கும் போது நண்பர்கள் அனைவரும் திட்டுவார்கள். ஏனோ அது மண்டையில் ஏறவே இல்லை. என்னோடு படித்த கிராமத்து நண்பர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி அடைந்தார்கள்.  நான் மட்டும் தேங்கிவிட்டேன்.

வேலைக்கு வந்தவுடன் ஆங்கிலம் பேச நன்றாக வந்துவிட்டது. ஆனால் எழுத ம்ம்ம்ம்ம் ...spell checking  கொஞ்சம் என்னை காத்துவருகிறது. மறந்தது spell check பண்ணாமல் மெயில் அனுப்பிவிட்டால் அதோ கதி தான். சில நேரம் அதுவும் என்னை காலை வாரி கழுத்தறுக்கிறது.

ஆங்கிலம் மட்டும்மில்லை தமிழும் எனக்கு இதே பிரச்சனைதான் 'ல' ள , 'ர' , ற , ன , ண  மாத்தி மாத்தி போட்டு " உன் தமிழில் கொள்ளிகட்டைய வைக்க " என்று திட்டு வாங்கினேன். " மாலை இட்ட மங்கை " என்று எழுதுவதற்கு            " மாலை இட்ட மாங்காய் " என்று எழுதி தொலைத்து பல நாள் கிண்டலுக்குள்ளானேன்.

ஆனால் தினமும் தமிழில் நல்ல கட்டுரைகள் , நாவல்கள் படித்துக்கொண்டே இருக்கிறேன். அவ்வபோது தொழில் சார்ந்து ஆங்கிலத்தில் படிக்கிறேன்.
மேடையில் தடையில்லாமல் தமிழில் பேச வருகிறது. தொழில் சார்ந்து ஆங்கிலத்தில் உரையாட முடிகிறது. ஆனால் எழுதும் போது சரியான எழுத்தை பயன் படுத்த மூளை  முட்டி முணங்குகிறது.

நம் மூளை  ஒரு வார்த்தையின் முதல் மற்றும் இறுதி எழுத்தை மட்டுமே படிக்கும். அதைகொண்டு அந்த வார்த்தையை அடையாளம் கண்டுவிடும்.
தொடர்ந்து படிப்பதனால் மட்டும் சரியான எழுத்துக்களோடு நம்மால் எழுத முடியாது. சிறு வயதிலிருந்தே பள்ளியில் அதற்கான பயிற்சி இருக்கவேண்டும். ஆழ்மனதில் துளி துளியாக படிந்து அது ஒரு அறிவாக வளர வேண்டும். அல்லது நாம் வளர்ந்த பின் ஒரு தனியான ஈடுப்பாட்டோடு அந்த பயிற்சியை எடுக்க வேண்டும். அப்போதுதான் எந்த தனிகவனமும்  இல்லாமல் எழுத்துப்பிழை இல்லாமல் சரளமாக எழுத முடியும். இன்றைய நகர மற்றும் சிறு நகர குழந்தைகளுக்கு இந்த அறிவு பள்ளிகளில் எளிமையாக கிடைக்கிறது.

தொழில் நுட்ப வளர்ச்சி  மனிதனின் சிறு சிறு அறிவு குறைகளை நிவர்த்தி செய்து கொண்டே இருக்கிறது. இப்போது voice to text converter சாப்ட்வேர்கள்  கிடைக்கிறது. இவை வளர்ச்சி அடைந்தால் இதை பற்றி அதிகம் யோசிக்கத்தேவை இல்லை. ஆனாலும் யாருக்கு என்ன எழுத வேண்டும் , எங்கு எப்படி எழுத வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
" kind request " என்பதற்கு பதில் " kind information " என்று போட்டால் Manager திட்டாமல் என்ன பண்ணுவார்.

இதோ நான் நூறாவது முறை உறுதி எடுக்கிறேன். ஆங்கிலம் பிழையில்லாமல் எழுத கற்றுக்கொள்வேன். என் மகனை இன்னும் இரண்டு மாதத்தில் LKG சேர்க்க இருக்கிறேன். அவனோடு சேர்ந்து படிக்க இருக்கிறேன். வாழ்க ஆங்கிலம் , வளர்க என் ஆங்கில அறிவு , வெற்றி வேல் , வீர வேல், வெற்றி வேல் , வீர வேல்.

வியாழன், மார்ச் 05, 2015

பொது புத்தி



கிறுக்கு புத்தி கேள்வி பட்டு இருக்கிறோம் அது என்ன  பொது புத்தி.

பசி வயிரின்னுடையது , தேடல் மனதின்னுடயது.

அடிப்படையான தினவாழ்விற்கு தேவையான தவகவல்களை நாம் சேகரித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் நம் மனம் அதோடு நின்று விடுவதில்லை. உலகத்தில் உள்ள அனைத்து பெரிய விசயங்களிலும் தெரிந்துகொள்ள ஆசை மட்டும் படுகிறது.

அந்த விசயங்களை எளிமை படுத்தி , பொதுமை படுத்தி, ஒரு பொது புத்தியாக நாம் மாற்றிக்கொள்கிறோம்.

எடுத்துக்காட்டாக அரசியல் என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டால் அது வன்முறையாளனுக்கு உரியது என்று எளிமை படுத்துகின்றோம், நல்லவர்கள் அதில் ஈடுபட முடியாது என்று பொதுமை படுத்துகின்றோம், அது ஒரு சாக்கடை என்று பொது புத்தியாக மாற்றிக்கொள்கிறோம்.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஊசி போடுபவன் நல்ல டாக்டர் , போடாதவன் டாக்டரே இல்லை.

இப்படி பொதுவான விசயங்களை பற்றி , மனிதர்களை பற்றி , நாடு நிலங்களை பற்றி நமக்குள் ஒரு பொது புத்தி இருக்கிறது.

சற்று சிந்தித்து பாருங்கள் மலையாளிகள் பற்றி நம் பொது புத்தி என்ன , பாகிஸ்தானிகளை பற்றிய நமது பொது புத்தி என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.

பொது புத்தியை இரண்டாக பிரித்துப்பார்க்கலாம். ஒன்று நாமே உருவாக்கிகொள்கிற பொது புத்திகள். அது அதிக அளவு நம்மை பாதிப்பது இல்லை. ஆனால் திட்டமிட்டு வியாபார நோக்கில் நமக்குள் ஏற்றப்படும் பொது புத்திகள் நமக்கும் சமூகத்திற்கும் ஆபத்தானவை.

சமிபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சியில் ஒரு குழந்தையிடம் உன் அம்மாவிடம் ஒரு வேண்டுகோள் வைக்க வேண்டும் என்றால் என்ன கேட்பாய் என்று அதை நடுத்துபவர் கேட்கிறார். அந்த குழந்தை சொல்கிறது தினமும் என் அம்மா இரவு தூங்கும் போது ஒரு ஊட்ட சத்து பானம் ( health drink ) கொடுப்பார்கள். அது எனக்கு பிடிக்கவே பிடிக்காது. குடிக்கவில்லை என்றால் அடிப்பார்கள். அதை எனக்கு கொடுக்க வேண்டாம் என சொல்லுங்கள் என்றது. நிகழ்ச்சி நடத்துனர் அம்மாவிடம் திரும்பி ஏன் என்று வினவ அதை குடித்தால் தான் நன்றாக வளருவாள் என்றார். யார் அதை சொன்னது என்றால் டிவியில் சொன்னார்கள் என்றார்.

இது தான் திட்டமிட்டு நம் மனதில் ஏற்றுகின்ற பொது புத்தி. இதை பார்க்கும் வளர்ச்சி குறைவான குழந்தை தாழ்வு மனப்பான்மை கொள்ளும்.

ஒரு குழந்தை நன்றாக வளர்ந்தால் மட்டுமே இந்த சமுகத்தில் வாழமுடியுமா ? உயரம் குறைவாக இருந்தால் சாதிக்க முடியாதா ?

இன்னொரு விளம்பரம் சில குழந்தைகள் பழங்களை தட்டிவிட்டு செல்கின்றன. ஒரு அம்மா வந்து இந்த காலத்தில் யார் பழங்களை சாப்பிடுகிறார்கள். எங்கள் பழச்சாறை கொடுங்கள் என்று குழந்தைகள் குடிப்பார்கள் என்கிறார்.

வியாபாரிகள் மட்டும் இல்லை பெரும் தலைவருகளும் அதையே தன் செய்கிறார்கள்.

இணையம் வழியாக கொஞ்ச கொஞ்சமாக தன்னை பற்றி மிகையான செய்திகளை பரப்பி ஒரு பொது பிம்பத்தை உருவாக்கி வெற்றி பெறுகின்றார்கள்.

எந்த ஒரு பெரிய விசயத்தையும் பொது புத்தியாக மாற்றி விட்டால் மேற்கொண்டு அதை பற்றி சிந்திக்க தேவை இல்லை என்று நாம் நினைக்கிறோம்.

ஒரு நாட்டை பற்றி ஒரு சாதியை பற்றி அண்டை மாநில மக்களை பற்றி ஒரு பொது புத்தி நம் மனதில் படிந்து இருக்கிறது.

சற்றேனும் விழிப்போம்

நன்றி வணக்கம்.

- கிராமத்தான்


திங்கள், ஜனவரி 26, 2015

விசும்பல் -2

அவள் மண்வெட்டியை பிடித்த சில நிமிடத்தில்  கைகால்கள் நடுங்கத்துவங்கி விட்டன. முதுகு நனைய தளர்ந்து அமரும் தருவாயில் " ருக்கு இதா அந்த மரத்தாண்ட போய் ஒக்காரு போ " என்றாள் மணி. கணவன் இறந்தபின் நூறு நாள் வேலைக்கு வந்துவிட்டாள் ருக்கு. ஒரே மகன் வேலு பத்தாம் வகுப்பில் தவறிவிட்டு , வெல்டிங்க் கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டான்.

ருக்குவும், மணியும் பின் மத்தியத்தில் வீடு நோக்கி நடந்தனர். மணி மெதுவாக சரோஜாவீட்டுக்கு போகலாமா என்று கேட்டாள். வெம்மையில் ஊறி இறுகிய கரும்பாறை போல் இருந்தாள் ருக்கு.

சரோஜா வீட்டில் அவன் புருஷன் மட்டும் இருந்தான். காலில் விழும் நிலையில் அவனை கெஞ்சிக்கொண்டு இருந்தாள் மணி. " சனியனுங்க சடாவுல அடிச்சாலும் திரும்பிவந்து நிக்கும்க " , கடன் இல்லன்னு சொன்ன கேக்காதுங்க ". கொஞ்ச நேரத்தில் இரண்டு பாட்டிலோடு நமட்டு சிரிப்போடு வெளியில் வந்தாள் மணி.

ருக்குவின் தலை சும்மாடு துணியை வாங்கி அவசரமாக அதை சுற்றி அவள் கைகளில் கொடுத்தாள்.

இரவு ருக்குவின் உடலில் அங்கங்கு நீர் போல உறி எழுந்த வலி  கைகோர்த்து ஒற்றை வலியாக மாறியது.

வலி ஒலியாக மாறி அவள் உதடுகளில் முனங்கலாக வழிந்தது.

உடல் முழுவதும் நடுங்கத்துவங்கியது. மணியின் முகம் அவள் நினைவில் எழுந்தது. மூலையில் சுருட்டி வைத்திருந்த சும்மாட்டு துணியை பார்த்தாள்.

வேலு ஊருக்கு வந்தான். நடுத்தெருவை அடைந்ததும் சரோஜா வீட்டு முன்னால் உடைகள் கலைந்திருக்க,  புழுதியேறிய தலையுடன் அம்மா கத்திக்கொண்டு இருந்தாள். அவன் ஓட்டமும் நடையுமாக அவளை நெருகும்போது சரோஜாவின் கணவன் வீட்டுனுளிருந்து அவளை உதைக்க காளைதூக்கிக்கொண்டு ஓடி வந்தான். இவனை பார்த்ததும் " தே..........வ்வ்டியா" சனியன் தெனாமும் காலையில வந்திடுது கடன் கேக்க ,  என்றபடி உள்ளே சென்றான். இவனை  கண்டதும் அங்கு எதுவும் நடக்காதது போல  " எப்ப குட்டி வந்தே " என்று சிரித்த முகத்தோடு கேட்டாள் ருக்கு. அவள் கண்கள் கலங்கி கைகால்கள் நடுங்கிக்கொண்டு இருந்தன.

இரவு இருவருமே சாப்பிடவில்லை. இவள் ஒரு மூலையில் அவன் ஒரு மூலையில் படுத்துக்கொண்டு இருந்தனர்.

இவனுக்குள் கோவம் ஏறி ஏறி வந்தது. அம்மாவை அவன் திட்டிய போது நான் ஏன் சும்மாவே இருந்தேன் ? திரும்பத்திரும்ப இதே கேள்வி மனதில் எழுந்துக்கொண்டே இருந்தது. அம்மாவின் மஞ்சள் பூசிய முகமும் நெற்றியிலிட்ட பொட்டும் சிரித்த முகமும் அவன் கண்முன்னே எழும் தோறும் கோவம் உச்சிக்கு ஏறியது. இப்போதே அவனை வெட்டி சாய்க்க வேண்டும் போலிருந்தது. அம்மாவை பார்த்தான், அவள் கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தது. கண்கள் இருண்டு நிலைத்து இருந்தது. அவள் முனங்கள் சத்தம் ஏறிக்கொண்டே வந்தது. செய்வதறியாமல் படுத்திருந்தான்.

பின் மெதுவாக எழுந்து தான் கொண்டுவந்த பையை திறந்து ஒரு பாட்டிலை எடுத்து அவள் முன் வைத்துவிட்டு வெளியில் திண்ணையில் படுத்துக்கொண்டான்.

ருக்கு ருக்கு என்று அழைப்பதை கேட்டு மெதுவாக விழித்தெழுந்தான் .                  " எப்படா குட்டி வந்த" அம்மா வேலைக்கு வரளா கேளு என்று மணி  கூறியதும், விட்டுக்குள் நுழைந்தான் வேலு.

பாட்டில் வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. அம்மாவின் கண்கள் அதன் மீது நிலைகுத்தி இருந்தது. இரவெல்லாம் அழுத கண்ணீரின் தடம் அவள் மூக்குவரை நீண்டு இருந்தது.

அனிச்சையாக அவள் நெற்றியை தொட்ட வேலுவின் கைகள் குளிர்ச்சியை உணர்ந்து நடுங்கத்துவங்கியது.

செவ்வாய், ஜனவரி 20, 2015

மகன் வயது 2.8

மகன் வயது 2.8

என் குழந்தையாக இருந்தவன் இப்பொழுது என் பையனாக மாறிவிட்டான்.

"ஒரு விதை எப்படி முளைக்க வேண்டும் என்ற அறிவை மட்டுமே கொண்டு தன் வாழ்வை துவங்குகிறது. தன் புலன்களின் வழியாக வளர்வதற்கான அறிவை வாழ்நாளெல்லாம் அது அடைந்துகொண்டே இருக்கிறது"

ஒற்றை சொல்லாக இருந்த அவன் மொழி , இப்போது சொற்களெல்லாம் கோர்த்து பதம் அமைத்து பேசத்துவங்கி இருக்கிறான்.
வார்த்தைகள் அவனுக்குள் ஒலி வடிவாக பதிந்திருக்கிறது. என்றோ எப்போதோ அவன் பேசத்துவங்கியதற்கு முன் நாங்கள் பேசிய சொற்கள், பெயர்கள் அனைத்தும் இப்போது பேசத்துவங்கி இருக்கிறான்.
குழல் இனிது யாழ் இனியது என்று யார் சொன்னது ? என்ற கேள்வி அவன் பேசும் போதெல்லாம் எழுகிறது.

அப்பா "இது " , அப்பா " இது " , அப்பா " அது " , ஸ்வீட்டா ? என்ன ஸ்வீட்டு ? அப்பா யாரு என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறான். கேள்விகள் மூலம் அவன் அறிதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
சலிப்பு என்ற ஒன்று அவன் மனம் இன்னும் அறியவே இல்லை. அவனுக்கு தேவையான ஒன்றை நூரு முறைக் கூட அவனால் தொடர்ந்து கேட்க முடிகிறது.சலிப்பு என்ற ஒன்றை ஒருவன் வாழ்நாளெல்லாம் அறியாமலே இருந்தால் அவன் நினைப்பதெல்லாம் அவனுக்கு கிடைத்துவிடும்.

அனைத்தையும் கண்டு வியந்துக்கொண்டே இருக்கிறான்.  பொம்மை , உணவு மனிதர்கள், திறந்த வெளி , கடல் , வானம் , குருவிகள் அனைத்தும்.
ஒவ்வொரு கணமும் உலகத்தை கண்டு வியந்துகொண்டே இருக்கும்  வியந்து வியந்து கொண்டாடிக்கொண்டே இருக்கும் அவனை காணும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது.

அவன் முதல் முறையாக பொய் சொன்னது  நினைவில் நிறைந்து இருக்கிறது.
ஒரு டீ கப்பை உடைத்துவிட்டு யாருடா உடைத்தது என்று அவன் அம்மா கேட்க விழிகளை ஒரு ஓரமாக நிறுத்தி அதற்கு எதிர் திசையில் உதடுகளை சுழித்து முகத்தில் சிரிப்பை தவழவிட்டு " அப்பா " என்று என்னை கை காண்பித்தான்.
குழந்தைகளின் பொய்யைவிட அதை சொல்லும்போது அவர்கள் செய்யும் பாவனைகள் அழகோ அழகு. குழந்தைகளின் பொய்யை நாம் ரசிக்கிறோம். ஒருகட்டத்தில் அதை உண்மை என நம்பி நாம் ஏமாறும் போது பொய் சொல்லுவது தவறு என்று உபதேசிக்கத்துவங்கி விடுகிறோம்.

உணவை பொருத்தவரை ,  வெந்நீர் தான் குடிக்க  வேண்டும் , மூலை மற்றும் உடல் வளர்ச்சிக்கு ஹோர்லிக்ஸ், ஐஸ் கிரீம் சாப்பிட கூடாது, மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு எந்த வரையறையும் நாங்கள் விதிக்கவில்லை பசித்தால் சாப்பிடு , எது வேண்டுமானாலும் சாப்பிடு அவ்வளவு தான். அதனால் கம்பகூழும் குடித்து விடுகிறான் , பிசாவும் தின்றுவிடுகிறான். கொஞ்சநாள் முன்புவரை அவனுக்கு உணவு என்பது பசியை ஆற்றும் ஒரு பொருள். அதில் உள்ள சத்து, சுவை, நாகரீக அடையாளம் என்று எந்த மதிப்பீடும் இல்லை. ஆனால் சமிப காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை பார்த்துவிட்டு " அப்பா KFC என்று கேட்க துவங்கி இருக்கிறான்.

நான் எப்போதுமே என் மனைவியிடம் தான் அவன் சாப்பிட்டான என்று கேட்ப்பேன். நம் சமுகத்தில் அம்மா தான் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கவேண்டும், அது அவர்களின் கடமை என்று நம்புகிறோம். பிள்ளைகள் சாப்பிடவில்லை என்றால் பழி அம்மாவுக்கே. அந்த அழுத்தம் அம்மாக்களுக்கு  இருப்பதனால் பிள்ளைகள் சாப்பிட மறுக்கும்போது  அவர்களுக்கு   கோவம் எழுகிறது.

Tap ல் YOUTUBE வழியாக குழந்தைகளுக்கான ஆங்கில பாடல்களை கற்றுக்கொண்டு இருந்தான். அதில் ஒரு அப்பா  மகனை "ஹாய் சாமீய் " How are You என்று கேட்டு பொம்மை கடைகளுக்கு  சென்று பொம்மைகள் , சாக்லைட்  எல்லாம் வாங்கி கொடுக்கிறான். இருவரும் அதை பிய்த்து கொட்டி விளையாடுகிறார்கள். அதே போல பொம்மைகள் கடைகளில் எங்காவது இவன் பார்த்தால் அங்கேயே  அழுது அடம் பிடித்து அது வேண்டும் என்கிறான்.

பொதுவாக எங்களை போல குருங்குடும்பங்களில் ( அம்மா , அப்பா, ஒரு பிள்ளை ) பெரியவர்கள்  இல்லை என்பதால் அம்மா அல்லது அப்பா யாரவது ஒருவர் பிள்ளைகளோடு  எப்போதும் இருக்க வேண்டும். அதனால் அவர்கள் வீட்டு வேலைகளும் மற்ற வேலைகளும் பாதிக்கும் என்பதால் பிள்ளையை  டிவி பார்க்கவும் , TAP ல் ஏதாவது பார்க்கச்சொல்லுகிறோம்.

இன்று டிவியும் இண்டர்நெட்டும் குழந்தைகளின் பொது புத்தியையும், வாழ்வின் அடிப்படைகளையும் வடிவமைத்து அவர்களை வேறெதையும் சிந்திக்காத நுகர்வோனாக மாற்றுவதை நாங்கள் கண்முன்னே காண்கிறோம்.

இப்போதைக்கு அவன் முழுமையாக நம்புவது எங்கள் இருவரைமட்டுமே. அதனால் அவனை சமாதானம் செய்ய நாங்கள் சொல்லும் சில பொய்கள் அவனுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. நான் ஆபீஸ்க்கு செல்லும் போதுகூட அவனுக்கு தெரியாமல் ஒளிந்து தான் செல்வேன். அவன் அம்மா ஒரு முடிவெடுத்துவிட்டார். அவனை ஏமாற்றும் படி எதுவும் பொய் சொல்லுவது இல்லை என்று. தேவையில்லாமல் ஏதாவது கேட்டால் பின்பு வாங்கி தருகிறேன் என்று சொல்வதை விடுத்து அவன் அழுதாலும்  பரவாயில்லை என்று 'முடியாது' என்று சொல்லிவிடுகிறார். இப்போதெல்லாம் அவன் கண்முன்பாக தான் ஆபீஸ்க்கு கிளம்புகிறேன். சிலநாள் அழுதான், இப்போது அவனே வழியனுப்பி வைக்கிறான்.

ஒவ்வொன்றையும் வியக்கும், ஒவ்வொன்றையும் புதியதாய் பார்க்கும், ஒவ்வொரு கணமும் துள்ளிக்கொண்டே , கொண்டாடிக்கொண்டே இருக்கும் ஒருவன், நம்மை கோவத்தின் உச்சிக்கும் ஆனந்தத்தின் உச்சிக்கும் கொண்டு செல்லும் ஒருவன் நம்மோடு எப்போதும் இருப்பது ஒரு வரம்.

அவன் வாழ்க!!!