"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, மே 17, 2015

வாழும் கலை - கலை நிகழ்ச்சி


வெள்ளி அன்று வாழும் கலை அமைப்பின் சார்பாக ஜுபைல் நகரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. திரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு அமைக்கப்பட்ட நிகழ்ச்சி.

தமிழ், மலையாளம் , தெலுகு , வட இந்திய நண்பர்கள் தத்தம்  குடும்பத்துடன் கலந்துகொண்டு  நட்பையும் அன்பையும் பரிமாறிக்கொண்டனர்.

குழந்தைகளும் பெரியவர்களும் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் மகிழ்வித்தனர்.

முதல் நிகழ்வே ஒரு குழந்தையின் திருக்குறளோடு துவங்கியது. அடுத்தடுத்து குழந்தைகளின் பாடல்கள் நடனங்கள் வியப்பில் ஆழ்த்தியது.

நிகழ்த்துகலையை நாம் எப்போதும் நேரில் கண்டு ரசிக்க வேண்டும். தொலைகாட்சியில் பாரத நாட்டியம் நான் பார்த்திருக்கிறேன் ஆனால் அது என்னை ஈர்த்தது இல்லை. நேற்று நான்கு சிறுவர் சிறுமியர் மேடையேறி நிகத்திய பரத நாட்டியம் எனக்கு உணர்வு மிகுதியில் கண்களில் கண்ணிர் வந்துவிடும் போல் இருந்தது.

ஒவ்வொரு உணர்வும் அபிநயமாக  முகத்தில் துவங்கி  கன நேரத்தில் உடல் முழுவதும் பரவுவதை காணமுடிந்தது.

நம் இந்திய மரபில் உயரிய தத்துவங்களையும் வாழ்வியல் கோட்பாடுகளையும் புராண கதைகளாக மாற்றி வைத்துள்ளோம்.

புராணமாக மாறியதால் தான் அதை மென்மேலும் நம்மால் சிந்திக்க முடிகிறது . அதை வெவ்வேறு கலை வடிவங்களாக மாற்றி கொண்டாட முடிகிறது.

கிருஷ்ணன் புகழ்பெற்ற யாதவ மன்னன் .

அவர் கதை புராணமாக மாற்றி  வாழ்வை எப்படி ஆனந்தமாக கொண்டாவேண்டும் என்று அதில் புகுத்தப்பட்டது.

இன்றுவரை அந்த புராணம் மாபெரும் இலக்கியமாகவும், நடன கலையாகயும், இசைவடிவமாகவும், நாடக வடிவமாகவும் இன்னும் எண்ணற்ற கலை வடிவமாகவும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

கிருஷ்ணனின்  கதையை தான் அந்த சிறுவர்கள் பரத நாட்டியமாகவும் , மற்றும் ஒரு இளம்பெண் மோகினி ஆட்டமாகவும்  நிகழ்த்தினர்.

அவர்கள் அணிந்திருந்த அணிகள் மற்றும் ஆடைகள் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. அவர்களின் பெற்றோர் பெரும் சிரத்தை எடுத்திருக்கிறார்கள். போற்ற வேண்டியவர்கள்.

அந்நிய நாட்டில் இது போன்ற குடும்ப  நிகழ்வுகள்  விவரிக்க முடியாத மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் அளிக்கிறது.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், கலை நிகழ்வில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றிகள்.












வியாழன், ஏப்ரல் 30, 2015

அகம் - ஆறாவது திருமண நாள்

நேற்று முதல் முறையாக ஒரு புடவைக்கடைக்கு சென்றேன். கடைக்குள் நுழைந்தவுடன் தான் தெரிந்தது இதுவரை நான் தனியாக வந்து யாருக்கும் புடவை எடுத்ததே இல்லை என்று.

கடைக்காரர் என்ன வேண்டும் என்றதும் நான் புடவை என்று இயல்பாக சொன்னேன். அவர் எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்திருப்பார் போல அதை மென்சிரிப்பில் வெளிபடுத்தினார்.

நான் அப்படியே நின்றேன் . அவர் நகர்ந்து போய்விட்டார். பூக்களை கொட்டிவைத்தால் அவை ஒற்றை பூவாக தெரியும். அதுபோல தான் புடவைகளும்.

பக்கத்தில் பெண்கள்  ஒவ்வொரு புடவையாக மென்மையாக  தொட்டு வருடி மேலே வைத்துப்பார்த்து ரசனையோடு  பார்த்துக்கொண்டு இருந்தார்கள். புத்தாடைகளுக்கு முன்னாள் பெண்கள் சிறுமிகளாகவே இருக்க விரும்புகிறார்கள் போல

ஆண்களால் அப்படி துணிகளுடன் உறவாட முடிவதுதில்லை.

மனைவிக்கு கம்மல் , பென்டன்ட் என சின்ன சின்ன பொருட்கள் வாங்கி இருக்கிறேன். அந்த பொருட்களைவிட அதை தேடுகின்ற தருணம் அழகானவை. அந்த ஐந்து பத்து நிமிடங்கள் அவர்களையே நினைத்து கொண்டு இருப்பேன் . கவிதையான தருணம்.

அதேபோல எப்படியோ தேடி  ஒரு புடவையை கண்டுகொண்டேன். அதே ஆளை அழைத்து பில் போட சொன்னபோது அதே மென்சிரிப்பை உதிர்த்தான். ஆனால் இந்த முறை என்னால் உகிக்க முடியவில்லை.

என் மனைவிக்கு இரண்டு மனங்கள்.

ஒன்று புறவயமானது.

அது  தன் சுயத்தை நிறுவ முயன்று கொண்டே இருக்கிறது. அதற்காக  பெண்மை பேசுகின்றது.உரிமை பேசுகின்றது. என் சிறுமைகளோடு   சண்டை இடுகின்றது. கேள்வி கேட்கின்றது.
அது அவர் கண்களில் ஒளியை  ஊறி  நிரையச்செய்கிறது . ஒரு நிமிர்வு முகமெல்லாம் பரவி திளைக்கச்செய்யும் . எனக்கும் அந்த மனதுக்கும் இடையேயான உறவு என்பது  சிறு நீர்த்துளி தாமரை இலைமேல் ஒட்டாமல் உருளுவது போல.

இன்னொன்று அவர் அகம்

அது என்னோடு எப்போதும் உறவாடிக்கொண்டு இருப்பது. தாமரை இலை அடிப்பரப்பும் தண்ணீரும் போல

அந்த அகம்  தான் என்னை எப்போதும் மகிழ்வோடு வைத்திருக்கிறது . என்னை பாதுகாத்தும் வைத்திருக்கிறது.

இன்று எங்கள் ஆறாவது திருமண நாள் .

கடவுளுக்கு நன்றி.