"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், நவம்பர் 03, 2016

வீட்டை கட்டிப்பார் - 5 வெள்ளை எழில் மாளிகை


ஒரு காலை நேரத்தில் அருண் என்பவரை ரஞ்சித் அழைத்துவந்தான். "அருணே வீடு உள்ள போய் பார்த்துட்டு வா" என்று அனுப்பிவிட்டு என்னிடம் பெயிண்டர் சித்தப்பா பக்கத்தூர் பையன். நல்ல பண்ணுவான் என்றான் . வீட்டை சுற்றி பார்த்துவிட்டு ஒரு நாப்பது குடுத்துடுங்கணா என்றான் அருண் . சரி ஒரு முப்பத்தஞ்சி வாங்கிக்க என்ன சித்தப்பா சரியா என்றான் ரஞ்சித். நான் சரி என்றேன். அருண் சற்று யோசித்துவிட்டு சரிங்கணா நாளைக்கு வேலை ஆரமிச்சுடலாம் என்றான்.
அருண் வேண்டிய பொருட்களை தன் முத்து முத்தான கையெழுத்தில் எழுதி கொடுத்தான்.
முதல் இரண்டு நாட்க்களில் வெளிப்பகுதி முழுவதும் வெள்ளை சிமெண்ட்டை நீரில் கலந்து பூசினார்கள். மறுநாள் முழுக்க சுவர்களை நீரில் நனைத்து காயவிட்டானர்.
பின்பு Exterior primer white paint இரண்டு முறை அடித்ததும் வீடு நீவிய வெள்ளை குதிரைபோல மினு மினுத்தது . எங்களுக்கே அது ஒரு வீடு என்ற உணர்வு அப்பொழுதான் வந்தது.
அருண் பட்டி வேண்டும் என்றவுடன் நான் 20 லிட்டர் வாங்கிவந்தேன். இது வேண்டாம் பொடியாக மூட்டையில் வரும் அது வேண்டும் என்றான். அது இதனினும் பாதிவிலை தான். வீட்டின் உட்புறம் இருமுறை பட்டி பார்த்து காயவிட்டனர்..
வீட்டின் உள்வேலைகள் முடியும் தருவாயில் Interior Primary white paint ஒரு முறை மட்டும் அடித்தனர். அனைத்துவேலைகளும் முடிந்தபின்னர் இன்னொரு முறை வெள்ளை அடித்து வேலையை முடித்தனர். வீடு வெள்ளை எழில் மாளிகையானது.
எனக்கு பிடித்ததே அருணின் தன்மை தான். நாம் எந்த பகுதி எப்போது முடியவேண்டும் வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். அதேகேற்றாற்போல் ஆட்களை அமர்த்தி சொன்ன நேரத்தில் வேலையை முடித்துவிடுவான். அவனுக்கு காசு கொடுக்கும்போது மட்டும் மனசுக்கு அவ்வளவு திருப்தியாக இருக்கும்.
" உம் " என்ற ஒலியை ஒரு வார்த்தையாக பயன்படுத்துவர் தான் கார்த்திக். எங்கள் எலக்ட்ரிசியன். தயங்கி தயங்கி ஆனால் வேகமாக பேசுவார் .
நானும் அண்ணனும் அவரை கூட்டிக்கொண்டு எலக்ட்ரிக்கல் பொருள் வாங்க வேலூர் சென்றோம். வேண்டிய பொருட்களின் பட்டியலை ஒரு அட்டையில் எழுதிவைத்திருந்தார். வேலூரில் எலக்ட்ரிகல் கடைகள் நிறைய இருக்கின்றன. பெரும்பாலும் இது போன்ற பொருட்க்களின் மொத்த விலை சந்தை மார்வாடிகளின் கையில் இருக்கும் . " பாம்பே எலெக்ட்ரிக்கல்ஸ்" பழைய கடை , ஒரே விலை , எலெக்ட்ரிசின்னுக்கு கமிஷன் கிடையாது என்று அண்ணனுக்கு தெரிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அங்கு தான் சென்றோம். மொத்த பொருட்களையும் வாங்கி அடுக்கிய பின்னர் 80 ஆயிரம் பில் வந்தது.
அடுத்து பிளம்பிங் பொருட்கள் வேறு கடையில் வாங்கினோம். குளியலறை பொருட்கள் பல்வேறு தரத்தில் இருந்தது. Parry ware அனைவருக்கும் தெரிந்த கம்பெனி. பெரும்பாலான பொருட்களை அதில் தான் எடுத்தோம். குழாய் பொருட்களின் விலை பத்து ரூபாயில் துவங்கி ஆயிரம் ரூபாய்வரை செல்கிறது. மனதை கட்டுப்படுத்திக்கொண்டு பொறுமையாக நடுத்தரமாக பார்த்து எடுத்தோம். கடைசியில் விலைப்பட்டியல் 40 ஆயிரம் என கை நீட்டி நின்றது.
வீட்டுக்கு வந்ததும் அன்று செலவானதை கவிதாவிடம் சொன்னதும் அயர்ந்துவிட்டாள். ஏன்பா எல்லாம் கொஞ்சம் பார்த்து வாங்க வேண்டியது தானே என்றாள். ம்ம் .. பார்த்து தான் வாங்கினேன். என்று சுருங்க சொல்லிவிட்டு அகன்றுவிட்டேன்.
கையிருப்பை பார்த்து மனதிலிருந்து பயம் உடலுக்கு சொட்டிக்கொண்டு இருந்தது. அதன் குளிர்விசை தாளாமல் உடல் விதிர்க்க துவங்கியது.
மறுநாளே எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் வேலைகளும் துவங்கின.
கார்த்திக்கின் கூட்டாளி சுவாரசியமான மனிதர். கூட வேலை செய்யும் பசங்களை " என் சின்னாள சீனத்து பட்டே வாடி செல்லம் அந்த சுத்திய எடு .... அடடா சனியனே சனியனே மூதேவி உளிய எடுக்காத சுத்தி சுத்தி என்று கத்துவார். ஆவுன்னா உளிய கையில எடுத்துப்பான் என்று பச்சை வாசனை வீச பேசிக்கொண்டே இருப்பார்.
அவர்கள் செய்யும் வேலை கோர்வையாக இருக்காது. ஒன்றை முழுமையாக முடிக்குமுன்னமே அடுத்த வேலைக்கு சென்றுவிடுவார்கள். ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டாலும் ஏதோ ஒன்று குறை இருப்பதுபோலவே நமக்கு தோன்றுகிறது.
பேன் மற்றும் விளக்குகள் அனைத்தும் HAVELLS கம்பெனி வாங்கினோம். நல்ல விதவிதமான வடிவில் கிடைத்தது. LED tube லைட்டுகள் 18 வாட்ஸ் 600 ரூபாய். அது 40 வாட்ஸ் tube லைட் தரும் அதே வெளிச்சத்தை தரும் மற்றும் ஆயுட்காலம் அதிகம். ஆனால் எங்கள் நிலைக்கு அது கட்டுப்படி ஆகவில்லை. மூன்றை மட்டும் அதை வாங்கிக்கொண்டு மற்றவை சாதா விளக்குகளையே வாங்கினோம்.
அதுவே 37000 ரூபாய் வந்துவிட்டது.
குளியல் அறையில் டைல்ஸ் போடும்முன் அனைத்து நீர் வழி பாதைகளையும் ஒருமுறை சரிபார்க்க சொல்லி மேஸ்திரி சொல்லிக்கொண்டே இருந்தார். டைல்ஸ் போட்டபின் எதாவது ஒழுகினால் மறுபடியும் அனைத்தையும் உடைத்தெடுக்க வேண்டும் என்பது அவர்க்கவலையாக இருந்தது.
நல்லவேளையாக அதைபோல எந்த சங்கடமும் ஏற்படவில்லை . எல்லாம் முடிந்து குழாய்களை திறந்தபோது குழாய் இணைப்புகளில் எந்த ஒழுக்களும் இல்லை அதனால் சுவரும் ஈரமாகவில்லை.
என்னுடன் படித்த சரவணன் தான் அந்த பகுதி லைன் மேன். வீட்டு வேலை நடந்துகொண்டு இருக்கும்போது வாரம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டு சென்றான்.
மணியக்காரரிடம் இந்த வீட்டின் சர்வே நம்பர் எழுதி வாங்கு பின் இந்த நிலத்துக்கு வரிகட்டிய ரசீது ஊர் தலைவர் ஆபீஸ்ல வாங்கிக்க மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு போனான்.
என் அண்ணன் ஒருவர் ஊர் கவுசிலர். அவர் மூலம் மணியக்காரரின் சிப்பந்தியை பிடித்து பதிவுகளை எடுத்து பார்த்தபோது அந்த நிலம் உள்ள வரைபடத்தையே காணோம் என்றான். என்னாது கிணறு காணோமா என்றேன் . ஒரு சிறு தொல்பொருள் ஆராட்சிக்கு பிறகு சர்வே எண்ணை பிடித்து மணியக்காரரிடம் கையப்பம் வாங்கி நிலவரி ரசீதையும் வாங்கி சரவணனிடம் கொடுப்பதற்குள் பழைய செருப்பை மாற்றிவிட்டு புது செருப்பை வாங்கிவிட்டேன்.
நல்லவேளை நம்ம லைன் மேன் அலையவிடவில்லை. அரசு எந்திரத்துக்கு கொஞ்சம் ஆயில் மட்டும் விடவேண்டி இருந்தது. மீட்டரை கொண்டுவந்து அவர்களே பொருத்திவிட்டு அதில் சக்கரம் சுழல்கிறதா என்று பார்த்துவிட்டு சென்றார்கள்.









வீட்டை கட்டிப்பார் -4 - டைல்ஸ் , மார்பில்ஸ் , கிரானைட்


கவிதா வீட்டுக்கு டைல்ஸ் போடவேண்டும் என்றதும் அதற்கான கடைகளில் ஏறி இறங்கினோம். டைல்ஸ் பத்து பதினைந்து வருடம் மட்டும் நன்றாக இருக்கும் பின் தேய்ந்து பழையதாகிவிடும் அல்லது நடந்தால் சத்தம் வரும் என்று கேட்பவர்கள் சொன்னார்கள். கிரானைட் கல் சிலருக்கு ஆகாது என்றனர் . பெரும் குழப்பமாக இருந்தது.
மார்பில் ஆரம்ப விலை 45 ரூபாய். பாண்டிச்சேரி பக்கம் சென்றால் 35ரூபாய் முதல் கிடைக்கும். டைல்ஸ்சும் துவக்க விலை 42 ரூபாய். அதனால் நான் மார்பில் போடலாம் என்று முடிவெடுத்தேன்.
மார்பில்ஸ் போடுபவன் ஒருவன் வந்தான். அவன் பேச்சே யாருக்கும் பிடிக்கவில்லை. ஒரு சதுர அடிக்கு முப்பத்தி ஐந்து ரூபாய் என்று பேச்சை துவங்கினான். நாங்கள் 28 க்கு முடித்தோம்.
கவிதா இரண்டு மூன்று பேரிடம் விசாரித்து முடிவு செய். இவன் ஒருவனை மட்டுமே நம்பாதே என்றாள். எனோ நான் அவனை முடிவு செய்த்துவிட்டேன்.
அவன் ஆட்கள் இரண்டு பேர் முதலில் வந்து வேலையை துவங்கினார்கள். வேலை நன்றாக போய்க்கொண்டு இருக்கும் திடீர் என்று யாருமே வரமாட்டார்கள். செல் பேசியும் எடுக்கமட்டான். அடுத்து ஆறேழு பேர் கூட்டிவருவான் வேலை போகும் அப்படியே நிறுத்திவிட்டு போய்விடுவான். அவனை சமாளிக்கவே முடிவில்லை.
அப்போது தான் தெரிந்தது டைல்ஸ் மற்றும் கிரானைட் போடுவதில் வேலை குறைவு. மொத்தம் பத்து நாட்களில் அனைத்து வேலைகளும் முடிந்திருக்கும். ஒரு சதுர அடிக்கு எட்டிலிருந்து பத்து ரூபாய்த்தான்.
ஆனால் மார்பில்ஸ் அப்படி அல்ல. அங்கு கடையில் வாங்கும்போதே பஞ்சாயத்து துவங்கிவிடும். கற்களை வண்டியில் ஏற்றி இறக்குவதற்கு ஒரு சதுரடிக்கு இரண்டு ரூபாய் தனியாக தரவேண்டும். ஏற்றுவது கடையில் உள்ள ஆட்கள். நம் இடத்துக்கு வந்து அவர்களே இறக்கவும் செய்வார்கள். ஆனால் இறக்கும் இடம் நகரமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அந்த பகுதி யூனியன் கூலி ஆட்கள் தான் இறக்கவேண்டும். மீறி கடை ஆட்கள் இறக்கினால் அவர்களை மிரட்டவும் அடிக்கவும் செய்வார்களாம். அதனால் அவர்களை தனியாக பணம் கொடுத்து கவனிக்கவேண்டும். நம் வீடு கிராமம் என்பதால் கடை ஆட்களே இறக்கிவிட்டார்கள். பின் அவர்களுக்கு டீக்கு தனியாக இருநூறு கொடுத்ததால் பொன்போல் சிரித்து வணக்கம் வைத்துவிட்டு சென்றார்கள். செங்கல், சிமெண்ட், ஜல்லி எது இறக்கினாலும் நூறு இருநூறு தனி.
முதலில் அணைத்து அளவுகளும் எடுத்து கற்களை அதன் வரிசை படி அறுக்கவேண்டும். அதை ஒவ்வொரு அறையாக பதித்தபின் வண்ண கற்களால் பார்டர் மற்றும் டிசைன் செய்ய வேண்டும். வண்ணக்கற்களில் பார்டர் அமைத்தால் அதன் அகலம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை ஒரு அடியாகவே கணக்கில் கொள்ளப்படும். சுவர் ஓரங்களில் பதிக்கும் கற்களை அறுத்து அதன் ஓரங்களை மழுங்க தேய்த்து பதிக்க வேண்டும். ஓரங்களை மழுங்கடிப்பதை நோசிங் என்கிறார்கள். நேசிங் செய்ய ஒரு அடிக்கு 45 ரூபாய்.
கற்களை பதிக்கும் வேலைகள் முடிந்துவிட்டால் அடுத்து தேய்க்கும் வேலை துவங்கும். மொத்தம் ஏழு முறை தேக்கப்படும். அதற்கான மெஷினை கொண்டுவருவதற்கு ஆட்டோ கூலி நாம் கொடுக்க வேண்டும். போகும்போது அவர்கள் எடுத்து செல்வார்கள். ஒவ்வொரு முறையும் தேய்க்கும்போதும் அதற்கான தேய்க்கும் கற்களை அந்த மெஷினில் பொருந்துகிறார்கள். கடைசியாக தேங்காய் நாரை பொருத்தி தேய்க்கிறார்கள். இறுதியாக மார்பில்ஸ் கண்ணாடி போல பள பளக்க வேண்டும். மேலும் பளபளப்பு வேண்டும் என்றால் அதற்க்கான திரவங்கள் கடையில் கிடைக்கிறது. அதை பயன்படுத்தலாம்.
என் விடுமுறை நாட்களும் குறைந்து கொண்டே போனது ஆனால் வேலை முடியவில்லை. மற்ற எல்லா வேலையும் மார்பில்ஸ் போடுபவனால் பாதித்தது. கவிதாவுக்கு என் மேல் கடும் கோவம். டைல்ஸ் போட்டிருக்கலாம் என்று கடுகாடுத்தாள். எனக்கும் அதுவே தோன்ற ஆரமித்தது.
செப்டம்பர் 14 புகுவிழா வைத்தோம். அந்த நாளை சொல்லி சொல்லி அவனை வேலை வாங்கிக்கொண்டு இருந்தோம்.
ஒருவழியாக தரை மட்டும் முடித்து கொடுத்தான். அதன் பின் பத்து நாட்கள் வரவே இல்லை. இடை இடையே வந்து குளியலறை டைல்ஸ் போட்டு கொடுத்தான். ஒரு கட்டத்தில் வெறுத்து எங்களுக்கும் அவனுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. கவிதா வார்த்தைகளால் தாண்டவம் ஆடிவிட்டாள்.
மறுநாள் காலை ஆறுமணிக்கு வந்து கை வைத்த வேலை அனைத்தையும் முடித்தான். தொடாத வேலையை அப்படியே விட்டுவிட சொன்னோம். மாலை அத்தனையும் அளவெடுத்து கணக்கை முடித்து கையில் காசை கொடுத்தோம்.
அவனிடம் பேரம் பேசவே இல்லை. அது அவனுக்கு சங்கடமாக இருந்தது. ஆயிரம் ரூபாய் திருப்பி கொடுத்தான். வேண்டாம் நீயே வைத்துக்கொள் கிளம்பு என்றோம். கொஞ்சநேரம் யோசித்து கொண்டு இருந்தான். பின் திரும்பி சென்றுவிட்டான். அவனை புண்படுத்திவிட்டோம் என்று மனது சங்கடமாக இருந்தது. அவன் பண்பு எங்களுக்கு பிடிக்கவில்லை ஆனால் அவன் வேலையை கட்சிதமாக செய்கிறான் என்ற நம்பிக்கை இருந்தது.
மறுநாள் காலை தான் தரை காயும் யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்தான். மறுநாள் நாங்கள் உள்ளே சென்றோம். அப்படி ஒன்றும் தரை பளபளப்பாக இல்லை. அவன் நான்கு முறை மட்டுமே மெஷின் ஓட்டி இருப்பான் பின் மெழுகு (வேக்ஸ்) பயன்படுத்தி இருப்பான் என்று விஷயம் அறிந்தவர்கள் சொன்னார்கள். சின்ன வயதில் பேசித்திரிந்த எல்லா கெட்டவார்த்தைகளும் மனதில் எழுந்து குத்தாட்டம் போட்டன.
எங்களுக்கு கிடைத்த வேலை ஆட்களில் அவன் ஒரு திருஷ்டி.
அவனை நயமாக பேசி வரவழைத்து குமுறலாம் என்று தோன்றியது. அன்று எனக்கு இருந்த அழுத்தத்தில் முடியவில்லை.
நான் ஊருக்கு கிளம்பும் தருவாயில் வேறு ஆட்கள் கிடைத்தார்கள்.
நேர்த்தியாக சொன்ன நேரத்தில் முடித்துக்கொடுத்தார்கள்.
உடைந்த மரபெல்ஸ் துண்டுகளைவைத்து கோலமிடுவதுபோல அழகாக செய்திருந்தனர். அந்த வேலையும் நல்லபடியாக முடிந்தது.






வீட்டை கட்டிப்பார் -3 அணிநகை


ஆகஸ்டு இறுதியில் நான் ஊருக்கு வந்தேன். பூசு வேலை நடந்து கொண்டு இருந்தது.
அண்ணன் எங்களிடம் கணக்குகளை ஒப்படைத்தார் . அவர் ஆசிரியர் என்பதால் வேலைக்கு சென்று வந்து வீடுகட்டும் வேலையும் பார்ப்பார். அவருக்கு அது பெரும் அழுத்தமாக இருப்பதாக அண்ணி கூறினார். அதனால் அவருக்கு வீடு சம்மந்தமாக எந்த வேலையும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அது ஒருவகையில் உண்மையே ஆனால் அப்படி திடீரென நான் அனைத்தையும் கையில் இடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் எனக்கு யாரும் தெரியாது. அண்ணனே ஒவ்வொருவராக அறிமுகம் செய்துவைத்தார்.
மேஸ்திரி , பெயிண்டர் , எலெக்ட்ரிசின், மரபெல்ஸ் மற்றும் டைல்ஸ் ஓட்டுபவன் குழி எடுப்பவன் , வீட்டுக்கு லைன் கொடுப்பவன், சிற்ப வேலை செய்பவன் , ஆச்சாரி , கதவுக்கு பாலிஷ் போடுபவர் , செங்கல் கொடுப்பவர் , ஜல்லி கொடுப்பவர், மதிய சாப்பாட்டுக்கு ஹோட்டல் அனைவரும் எங்கள் வட்டத்துக்குள் வந்தனர்.
பூசு வேலை முடிவதற்குள்ளாகவே பதினைந்து லட்ச்சத்தை தொட்டு இருந்தது. ஏழு மாத சம்பளம் மற்றும் சிறிய சேமிப்பு , கையிருப்பு அனைத்தும் கரைந்திருந்தது. ஏல சீட்டு ஒன்று துவங்கி சில மாதங்கள் ஆகி இருந்தது. அதையும் எடுத்துவிட்டோம்.
கிராமத்தில் வீடு கட்டும்போது பெரும்பாலான வேலைகளை அந்த ஊர்காரர்களே செய்வார்கள். பெரும்பாலும் மாமா மச்சான் பங்காளி என்று உறவு கொண்டு அழைப்பவர்கள். அப்பாவுக்கும் அண்ணனுக்கும் பழக்கமானவர்கள். வெளி ஆட்கள் உள்ளே வந்து வேலை செய்ய சங்கடப்படுவார்கள். அதையும் மீறி ஜன்னல் மற்றும் மர வேளைகளை வாணியம்பாடியில் மாமா ( கவிதாவின் அண்ணன் ) அங்குள்ள ஆச்சாரிகளை வைத்து எங்களுக்கு செய்து கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். முதல் விஷயம் மரம் மண்டி மாமாவின் நண்பருடையது. அவரிடம் நன்கு விளைந்த நாட்டு தேக்கு இருந்தது. இரண்டாவது ஆச்சாரிகளின் (கங்கா & குரூப் ) நேர்த்தியான வேலை. அதனினும் முக்கியமான ஒன்று பணம் மாமா பார்த்துக்கொள்வார் நான் சில மாதங்கள் கழித்து கொடுத்தால் போதும்.
ஆனால் அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் ஆச்சாரிக்கு ஏமாற்றம். மேஸ்திரிக்கு கொஞ்சம் ஒவ்வாமை. எப்பா நம்மவூர்ல இல்லாத ஆச்சாரியா என்று சிலர் எண்ணெய் ஊற்றினார். வீட்டில் என் தங்கம் என் உரிமை போராட்டம் எழுந்தது. நம்ம ஊர் ஆச்சாரி நல்லா செய்வான் அவன விட்டுட்டு அங்க எதுக்கு போன. அப்புறம் ஏதாவது சின்ன வேலை செய்ய கூட இவனுங்க வரமாட்டானுங்க பார்த்துக்க என்றார்கள். அது உண்மைதான்.
வாணியம்பாடி ஆச்சாரிகளும் அதை மனதில் வைத்தே வேலை செய்தனர். மாமா மரங்களை பார்த்து பார்த்து எடுத்திருந்தார். மரம் கதவுகள் அவர் மேற்பார்வையில் வணியம்பாடியிலேயே செய்யப்பட்டது. தேர்ந்த ஆச்சாரிகள் என்பதால் மர வேலைகள் நேர்த்தியாக இருந்தது.
ஜன்னல் கண்ணாடி , கைப்பிடி , பூட்டு ஆகியவற்றின் வகைகளை வீட்டுக்கு எடுத்துவந்து காண்பித்தார்கள். கவிதாவும் நானும் தேர்வு செய்தோம். முதல் நுழைவாயிலின் பக்கவாட்டில் பொருத்தும் கண்ணாடியில் மயிலிறகு ஓவியம் வரைய சொன்னோம். கண்ணாடியில் ஓவியம் வரைய தனியாக ஆட்கள் இருக்கிறார்கள்.
சாதாரணமாக வரைய வேண்டும் என்றால் ஒரு தொகை. அதிலே அமிலம் பயன்படுத்தினால் ( Acid Finishing) தொகை அதிகம். எப்போதும் முதல் தரத்தை விரும்பும் மாமா ஆசிட் பினிஷிங் செய்யுங்கள் என்கிறார்.
ஜன்னல்களையும் கதவுகளையும் கொண்டுவந்து வீட்டில் பொருத்தியபின் அதன் அமைப்பே மாறிவிட்டது. வீட்டை பார்க்கும்போது சட்டெனெ கண்ணில் படுவது ஜன்னல்கள்தான்.
ஜன்னல் மற்றும் கதவுகளை மெருகேற்றுபவர்கள் தனி குழுவாக வந்தார்கள். பத்துநாட்கள் வேலை செய்தார்கள். அதில் ஏழு நாட்கள் ஜன்னல்களையும் கதவுகளையும் சலிக்காமல் தேய்த்து மெருகேற்றி இறுதியில் மூன்று அடுக்கு வண்ணங்கள் பூசப்பட்டன.
Wood tech pu - Interior & Exterior
Wood tech - Varnish
Wood tech emporio PU
மரம் சம்பந்தப்பட்ட வேளையில் மட்டும் மரம் விற்றவர் , ஆசாரிகள் , அதில் கம்பி கிரில் பொருத்தியவர்கள் , கண்ணாடியில் ஓவியம் வரைபவர்கள், மரத்தை மெருகேற்றுபவர்கள் , கிரில்களுக்கு வண்ணம் திட்டியவர்கள் என்று ஆறு குழுக்கள் தனியாக வேலை பார்த்தன.
அத்தனை வேலைகளும் முடிந்ததும் ஜன்னல்களும் கதவுகளும் வீட்டை அலங்கரித்த அணிநகை போல ஜொலித்தன.








வீட்டை கட்டிப்பார் - 2


பூசை முடிந்து மூன்று மாதம் பணம் சேருவதற்காக காத்திருந்தோம். சம்பளம் போனஸ் என்று 5 லகரம் நிறைந்தது.
ஜனவரி 2016 இறுதியில் வேலை துவங்கியது. மேற்பார்வை அண்ணன் பார்த்துக்கொண்டார்.
என் பெரியப்பா வழி அண்ணன் மகன் ரஞ்சித் ஹோம் பில்டர். என் தலைமுறையில் ரஞ்சித்தின் அப்பா தான் மூத்தவர் நான் கடைசி. அதே போல அடுத்த தலைமுறையில் ரஞ்சித் முதலாமவன். கடைசியில் என் மகன் அக்க்ஷய் . ரஞ்சித்திடம் தான் நாங்கள் முக்கியமான ஆலோசனைகளை கேட்போம்.
யார் யாருக்கு எவ்வளவு கூலி தரவேண்டும் எந்த வேலைக்கு எவ்வளவு பணம் தரலாம் என்று அவனை வைத்து தான் பேசுவோம்.
கட்டுமான பணிகளை பார்வையிட்டு தகவல்களை பரிமாறிக்கொள்வோம்.
ரஞ்சித், அண்ணன் மற்றும் அப்பா மூவரும் மேஸ்திரியுடன் அமர்ந்து கட்டுமானத்திற்க்கான கூலியை பேசி முடிவு செய்தனர்.
மேஷ்திரிக்கு கட்டிட வேலை , சிற்ப வேலை , எஞ்சினீரிங் வேலை அனைத்துக்கும் சேர்த்து 10 X 10 சதுர அடிக்கு ( ஒரு சதுரம் ) 19500 ரூபாய் பேசினர். கட்டுமான பொருட்கள் நாம் வாங்கி தரவேண்டும். அண்ணன் ஆசிரியர் என்பதால் ஒரு பெரும் நட்பு வட்டம் இருந்தது. அப்பா தன் பங்குக்கு உதவிகளை செய்தார்.
1000 செங்கல் 5500 ரூபாய் , 100 மூட்டை சிமெண்ட் 33000 ரூபாய் , கம்பி என்று கணக்கு துவங்கியது. பாலாற்று படுக்கை என்பதால் எங்கள் நிலத்திலேயே கொஞ்சம் தோண்டியவுடன் மணல் கிடைத்தது.
வீட்டின் அடித்தளம் வேகமாக மேல் எழுந்தது. வார இறுதியில் சனிக்கிழமை தவறாமல் கூலி கொடுத்துவிட வேண்டும். அது ஆணியில் அறைந்த விதி.
கொஞ்சம் கட்டிடம் மேலெழுந்துடன் இரண்டு கை நிறைய பொறியை எடுத்து காற்றில் ஊதியது போல 5 லட்சம் கரைத்து பறந்தது.
அண்ணன் அனுப்பிய புகைப்படங்களை பார்த்தபின்பு என் சென்னியில் தழல் ஒன்று எழுத்தாடியது. வீட்டின் முன்னால் பிரமிடு இல்லை வெறும் தூண்களை மட்டும் நான்கைந்தை மேஸ்திரி நிறுத்தி வைத்திருந்தான்.
மேஸ்திரியை அலைபேசியில் அழைத்து நான் கேட்ட அந்த பிரமீடு எங்கே என்றேன். அந்தாம்பா இது என்றான். அடேய் என்று கவுண்டமணி போல பொங்கிவிட்டேன்.
அவன் அப்பாவிடம் முறையிட்டிருப்பான் போலிருந்தது. அப்பா என்னை அழைத்து " அவன் நல்ல கட்டி தருவான் பா " , நல்ல கட்டி தருவான் என்று திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டே இருந்தார்.
எனக்கு தலை சுற்றியது.
இங்கு எனக்கு கடுமையான வேலை. அயர்ந்து சோர்ந்து வீடு வந்தால் இதை பற்றி பேச்சு எழுந்து மேலும் சோர்வடைவேன்.
அதனால் எல்லா கணக்குகளையும் கவிதா பார்த்துக்கொண்டாள்.
பணம் கொஞ்சம் முன் பின் அனுப்பினேன். உடனடி தேவைகளுக்கு அண்ணன் நண்பர்களிடம் வாங்கி பணம் வந்தவுடன் திருப்பி கொடுத்திருக்கிறார்.
சுற்று சுவர்கள் வேகமாக எழுந்து வீடு தன்னை முழுமை செய்துகொண்டிருந்தது.
மேல் தளம் (மோல்டிங்) அமைக்கும் நாள் வந்தது. அன்று ஒருநாள் மட்டும் ஒரு லட்சம் வேண்டும் என்று அண்ணன் சொன்னதால் இங்கு தின செலவுக்கு வைத்திருந்த பணத்தையும் சுரண்டி அனுப்பிவைத்தோம். மேல் தளம் அமைக்கும் பணியின் இறுதியில் சிமெண்ட் போதாமலானதால் அண்ணன் விரைந்து சென்று சிமெண்டு மூட்டைகளை கடனுக்கு எடுத்துவந்திருக்கிறார். ஒருவழியாக மேல் தளம் அமைத்து பூசை போட்டிருக்கிறார்கள்.
நானும் கவிதாவும் நிலைமை கொஞ்சம் மீறுவதை உணர்தோம்.
மேஸ்திரியின் போக்கு எங்களுக்கு புரியவில்லை. என்ன செய்வது என்று யோசித்தால் பதற்றம் மட்டுமே ஏறியது.
விவாதித்து ஒரு முடிவை எட்டினோம். அதன்படி கவிதா மே மாதம் ஊருக்கு கிளம்பினாள். நான் ஆகஸ்ட் இறுதியில் வருவதாக கூறினேன். நான்கு மாத பிரிவு. எங்களுக்கு வேறு வழியும் இல்லை. கவிதா அங்கு இருந்தால் இங்கு பணம் கொஞ்சம் மிச்சமாகும்.
மேஸ்திரி புதிய பூதத்தை கிளப்பினான். மாடியில் ஒரு அறை கட்டி அதன் மேல் தண்ணீர் தொட்டி காட்டினால்தான் குழாயில் தண்ணீர் வேகமாக வரும் என்றான் . டேய் ஒரு தண்ணீர் தொட்டி கட்ட ஒரு ரூம் கட்ட வேண்டுமடா என்றேன். அவன் கேட்பது போல தெரியவில்லை. அப்பாவிடம் உடுக்கை சொடுக்கி இருக்கான்.
கவிதாவின் தலையில் அனல் எழுந்தது. பணம் ரொம்ப நெருக்கடியாக இருக்கு , மேல ரூம் கட்டினா நமக்கு ரொம்ப கஷ்டம் அவர்களிடம் சொல் என்றாள். நான் கடுமையாக பின்பு வேறுவழி இல்லாமல் கனிவாகவும் சொல்லி பார்த்தேன். அவர்கள் கேட்ப்பது போல தெரியவில்லை. மேல் தளத்தில் அறை கட்ட அவன் காசு கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நான் தருகிறேன் என்று நாட்டாமை போல துண்டை உதறி எழுந்து போயிருக்கிறார் அப்பா.
கிடா வெட்ட காத்திருந்த மேஸ்திரி அந்த சிலிர்ப்பை பார்த்து ஒரே போடாக போட்டுவிட்டான். இரண்டு நாளில் மேலே ஒரு அறை எழுந்து விட்டது. அதற்க்கு மட்டும் ஆறு ஏழு லட்சம் தனியாக செலவானது.
கவிதா அப்பாவியாக உங்க அப்பா காசு கொடுப்பாரா என்றாள். எனக்கு சிரிப்பு வந்தது. வீட்டு விவகாரத்தில் முதல் முறையாக எனக்கும் அவளுக்கு முட்டிக்கொண்டது. ஒருவிசயத்தை எப்படி பேசணுன்னு தெரியல வாழ வாழ கொழ கொழவென்று பேசுவது, எத சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டுவது என்று அம்மியில் வைத்து நசுக்கி எடுத்துவிட்டாள்.
பெரும் போராட்டத்துக்கு பின் தண்ணீர் தொட்டியை தவிர்த்தோம். தொட்டி கட்டி இருந்தால் மேலும் ஐம்பதாயிரம் செலவாகி இருக்கும்.