"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

சனி, செப்டம்பர் 20, 2014

கொடைகானல் முருகன்

நண்பர்களே

சமிபத்தில் கோடைவிடுமுறையில்  கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். KPN பேருந்தில் அங்கு சென்று இறங்கினோம் . நாங்கள் சென்றது ஜூன் மாதம் ஆதலால் எதுவும் முன்பதிவு செய்யவில்லை. அந்த பேருந்து ஓட்டுனரிடம் விசாரித்தோம். அவர் ஒரு நண்பரை தொலைபேசியில் அழைத்து எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர் பெயர் முருகன். அவர் ஒரு வண்டி வைத்திருந்தார். அங்கு வருபவர்களுக்கு கொடைக்கானலை சுற்றிக்காட்டுவது அவர் வேலை.

வெளிப்படையாக பேசினார். நல்லமனிதராக இருந்தார். குடும்பத்தோடு சென்றிருந்ததால் அதற்கு ஏற்றாற்போல் ஒரு விடுதிக்கு அழைத்து சென்றார்.

3000 ரூபாய் அவருக்கு நாங்கள் கொடுத்தோம். இரண்டு நாள் எங்களை பாதுகாப்பாக கொடைக்கானல் முழுவதும் அவர் வண்டியில் சுற்றி காண்பித்தார். பல தகவல்களை எங்களுக்கு கூரினார்.

திருப்தியாக இருந்தது. இன்னும் காடுகள், ட்ரக்கிங், கிராமங்கள் எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்வதாக கூறினார் ஆனால் எங்களுக்குத்தான் நேரம் இல்லை.

நீங்கள் கொடைகானல் போவதாக இருந்தால் இவரை அழைத்தாள் அனைத்து உதவிகளையும் செய்வார்.

அவர் தொலைபேசி எண் : 9442803254, 9159883536

மகன் வயது 2.3 - அறிதல்

மே, ஜூன் , ஜூலை ஆகிய மூன்று மாதங்கள் மகன் எங்கள் கிராமத்திலும் அவன் பாட்டி வீட்டிலும் மாறி மாறி இருந்தான்.

அங்கு சென்ற இரண்டு மூன்று நாட்களில் அவன் சுபாவம் முற்றிலும் மாறியது.

முதல் இரண்டு நாட்கள் அவன் யாரிடமும் செல்லவில்லை. என்னோடும் அவன் அம்மாவோடும் ஒட்டிக்கொண்டு இருந்தான். அவனை ஆசையாக அணைக்க வரும் கைகளை கண்டு பயந்துகொண்டே இருந்தான் . பின் ஒவ்வொரு முகமாக அவனுக்கு ஞாபகம் வந்து பழக துவங்கினான்.

இங்கு வீட்டில் அவன் எங்கள் கண்பார்வையிலேயே இருப்பான். ஆனால் அங்கு அவன் அண்ணன்களோடு மண்ணில் விளையாட துவங்கிவிட்டான். தென்னந்தோப்பில் தேங்காய் பிஞ்சுகளை பொறுக்கியும், கீற்றுகளை இழுத்தும், கோழிகளை துரத்தியும் அவன் கால்கள் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. நாய்களை முதல் முறை பார்த்தான். நாய் ஒன்று வீட்டுக்குள் வந்தபோது அதை ஏய் என்று நான் துரத்தினேன். அதை பார்த்த அவன் எப்பொழுது நாயை பார்த்தாலும் அதை ஏய் என்று துரத்திக்கொண்டே இருந்தான்.

ஆடு, மாடு, குரங்கு எல்லாவற்றையும் புத்தகத்திலும், டிவியிலும் அவனுக்கு பலமுறை  காட்டினேன். ஆனால் அவன் மனதில் பதியவே இல்லை. அங்கு அனைத்தையும் நேரில் கண்டுவிட்டான். இப்பொழுது அவைகளை எதில் பார்த்தாலும் அதன் பெயர்களையும் அதே போல கத்தியும் காட்டுகிறான்.

கடந்த ஒரு வருடமாக மனதில் தேன் துளிகளாக சேர்ந்த வார்த்தைகள் இப்பொழுது மழலை மொழியா சொட்டத்துவங்கியுள்ளது. ஒவ்வொரு வார்த்தையையும் முழுமையாக சொல்லிமுடித்தபின் பெருமிதத்தில் முன்பால் தெறிக்க சிரிக்கின்றான்.

தண்ணீரின் மீது அவனுக்கு இருந்த பயத்தை போக்க  தோப்பில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் அவனை தூக்கி ஒரு முக்கு முக்கினேன். அலறிபயந்தவன் கொஞ்ச கொஞ்சமாக பயம் தெளிந்து நீரோடு விளையாட துவங்கினான். ஒவ்வொரு முறையும் அவன் குளிர்ந்த நீரில் இறங்கும்போதும் அவன் முகம் சிலிர்த்து மலரும். அவன் தூவி எறியும் தண்ணீர் குமிழ்கள் அவன் தலைமீதே உடைந்து தெறிக்கும். களைப்பில்லாமல் தண்ணீரில் தண்ணீரோடு விளையாடிக்கொண்டே இருந்தான். இப்போது அவன் சிறந்த நண்பர்களில் தண்ணீரும் ஒன்று.

அவன் பாட்டி வீட்டில் இரவில் ஒருநாள் மழை பெய்தது. முதல் துளி அவன்மீது விழுந்ததும் அப்பா தண்ணி என்று என்னிடம் காட்டினான். அது மழை என்றேன். அவன் " மாழ் " என்றான். இங்கு சவுதியில் ஒருநாள் மழையை ஜன்னல் வழியே அவனுக்கு காட்டினேன். ஆனால் அவனால் அதை உணர்ந்துகொள்ள முடியவில்லை. அங்கு முதல்முறையாய் அவன்மீது மழைத்துளிகள் விழத்துவங்கியதும் அது எங்கிருந்து வருகிறது என்று வானத்தை பார்த்தான். மழை வேகமாக வரவே மகிழ்வில்  குதிக்கத்துவங்கினான்.  மழையை முதன்  முதலில் உணர்ந்து பரவசத்தில் திளைக்கும் உயிரை முதன் முதலில் நான் கண்டேன். அவனை தடுக்கவே இல்லை.

முற்றிலும் தூய்மையான தொல்மனிதனாகவே ஒரு குழந்தை பிறக்கிறது. அது இயற்கையை முழுதுணர்ந்து அதில் திளைப்பதற்கு முன்பே இன்று நாம் உருவாக்கி இருக்கும் புற உலகு தன் கோடி கைகளால் இழுத்து வந்து நிகழ் காலத்தில் அதை நிறுத்திவிடுகிறது.

எங்கள் போனில் Tomy பூனையை அவன் சுட்டு விரலால் குத்திக்கொண்டே இருப்பான். அது நோ  நோ என்று அலறும்போது அதைகண்டு சிரிப்பான். அதை போலவே அவன் குழந்தைகளிடம் விளையாடும்போது கண்ணை குத்த துவங்கிவிட்டான். பின் அந்த பழக்கத்தை கஷ்டப்பட்டு மாற்றினோம்.
இப்போதெல்லாம் அவன் சந்தோஷப்படும் விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறோம். அதுவே அவனை வழி நடத்துகிறது.

ஒருவயதாக இருக்கும்போது அவனிடம் எந்தப்பொருளை கொடுத்தாலும் அதை வாயில் நுழைத்து எச்சிலில் நனைத்து சுவைத்துப்பார்த்து அறிந்துகொள்ள முயல்வான். ஆனால் இப்பொழுது பொருட்களை பிரிக்கத்துவங்கிவிடுகிறான். விதவிதமான சாக்லெட், பிஸ்கெட்களை அவனுக்கு வாங்கி கொடுத்தால் அதை சுவைப்பதைவிட அனைத்தையும் ஒரே நேரத்தில் பிரித்து அதில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு வைத்துவிடுவான். பொம்மைகளுக்கும் அதே நிலைதான்.

இப்பொழுது அவன் மகிழ்வு "சுகந்திரம்" மட்டுமே . அவன் துன்பம் அதை தடுக்கும் என் சொல். அனைத்தையும் அறிந்துக்கொள்வது மட்டுமே அவன் நோக்கமாக இருக்கிறது. அவனுக்குள் துளிர்விடும் அறிவு பார்ப்பதையெல்லாம் உண்டு தன்னை வளர்தெடுக்கிறது. அவனுக்கு நான் கற்றுக்கொண்ட வித்தைகளும், அனுபவங்களும் எதுவும் தேவையே இல்லை. அவன் நடந்து பழக என் சுட்டு விரலை மட்டுமே எதிர்பார்க்கிறான்.

அந்த மூன்று மாதங்கள் அவன் அத்தைமார்கள், மாமாமார்கள் , பெரியப்பாக்கள், பெரியம்மாக்கள், சித்தப்பாக்கள், சித்திகள், அண்ணன்கள், அக்காக்கள் , பாட்டிமார், தாத்தா இருவர் என அவனை கண்டுமகிழ்ந்து, தொட்டு அரவணைத்த தருணங்கள் ஒவ்வொரு நாளும் அவனுக்கு கிடைகாத என்ற ஏக்கம் எனக்குள் எழுகிறது.

ஒரு செடி வளர்வதற்கு கூட வளமான மண்ணும், நல்ல காற்றோட்டமும், நீரும், சூழலும் வேண்டும் என்ற எளிமையான அறிவு எனக்கு இருக்கிறது. ஆனால் ஒரு குழந்தை வளர்வதற்கு இயற்கையான சூழலும், உளமான உறவுகளும் அவனுடன் வேண்டும் என்று புரியாமல் போனது.

இன்னும் அவன் மல்டி காம்ப்ளெக்ஸ் மால்களில் ஒய்யாரமாக நடப்பதையும், வீட்டுக்குள் அமர்ந்து  TAB, I போன்களை லாவகமாக கையாள்வதையும் பார்த்து வியந்து மகிழ்வது என் தவிர்க்க முடியாத அறியாமை, கையறுநிலை.

Skin dices


நண்பர்களே,

கடந்த ஒரு வருடங்களாக எனக்கு தலையின் முன் பகுதியில் , பொடுகு போல வெள்ளை செதில்கள் உருவாகி அரித்துக்கொண்டே இருந்தது. பல மருத்துவர்களிடம் வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. பெரும்பாலும் அவர்கள் தலையில் தடவிக்கொள்ள கிரீமை தந்தார்கள். அதை தடவிய சில நாட்கள் வராமல் இருக்கும், ஆனால் சில நாட்களில் மறுபடியும் வந்துவிடும். அவதியாக இருந்தது.

பின் CMC Vellore  மருத்துவமனையின்  கிளை   நிறுவனமான கரிகிரி மருத்துவமனையின் மருத்துவர்கள் வாரம் இரு முறை குடியாத்தம் நகருக்கு வருவார்கள். அவர்களிடம் நான் சிகிழ்ச்சை எடுத்துக்கொண்டேன். மருத்துவர்கள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் அங்கு வருகிறார்கள் . காலை ஐந்து மணிமுதல் வரிசை எண் அளிக்கப்படுகிறது . 9 மணிக்கு சிகிழ்ச்சை துவங்குகிறது. அவர்கள் கொடுக்கும் மருந்து பிரத்தியோகமானது. வெளியில் கிடைக்காது.

அவர்கள் எனக்கு ஒரு மாதத்துக்கு மாத்திரைகளையும் களிம்பையும் கொடுத்தார்கள். எனக்கு 20 நாட்களில் சரியாகிவிட்டது. அதன் பின் வரவேயில்லை.

உங்களுக்கும் ஏதாவது தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ( All Skin dices) இருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

http://www.karigiri.org/page/dermatology/    

திங்கள், ஆகஸ்ட் 25, 2014

இரவு

வெளிச்சமின்மை  இருள். இருள் என்றவுடன் கருமை நினைவில் எழுகிறது. அது ரகசியம் நிறைந்ததாக மேலும் விறிகிறது. 

வெளிச்சத்தை அறியாத எத்தனையோ உயிர்கள் இந்த உலகில் இருக்கும் ஆனால் இருள் அறியாத உயிர்கள் இல்லை. இருளை உள்ளிடாக கொண்டு இரவு நிகழ்கிறது. பூவினுள் வாசம் போல.

இரவு எல்லா ஒளியையும் சூழ்ந்து இருக்கிறது. ஒளி அனையும் போது அந்த இரவு மட்டுமே எஞ்சி நிற்கிறது.

இரவு எனக்கு ஒரு போதை போல. நான் மகிழ்வாக இருக்கும் போது அது என்னை மேலும் மகிழ்விக்கிறது. துயரத்தில் உழலும் போது மேலும் துயரத்தில் ஆழ்துகிறது. 

நிலவோடு கூட நான் பேசி இருக்கிறேன் ஆனால் இரவோடு நான் பேசியதே இல்லை. ஏனெனில் என் அனைத்து ரகசியங்களையும் இரவு அறியும் . 

இரவு ஒரு பரந்து விரிந்த மௌனம். மௌனத்தை நாம் எதிர்கொள்ளும்போது மனதில் கட்டற்ற எண்ணங்கள் எழுகிறது.

எங்கள் தென்னந்தோப்பில் ஒரு கல் திட்டு இருக்கும். அதன் அருகில் இருள் வழிந்தொடுவது போல கால்வாய் நீர் ஓடிக்கொண்டு இருக்கும். இரவில் அங்கு சென்று அமர்ந்திருக்க எனக்கு பிடிக்கும். ஓடும் கால்வாய் நீரில் இரண்டு கால்களையும் நனைத்துக்கொண்டு பெரும் இருள் வெள்ளத்தில் மூழ்கி மறையும் ஒரு சிறு கூழாங்கல்லை போல இரவில் தனிமையில் அமைந்திருப்பேன். என்னை சுற்றி பூச்சிகள் , தவளைகள் ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். அவை இரவோடு பேச தெரிந்தவை இரவில் மட்டும் பேச தெரிந்தவை. இரவில் அங்கு அமர்ந்துகொண்டாள் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து ஒலிக்கும் பழைய திரைப்பட பாடல்கள் என்னை மெய் மறக்க செய்யும். தூரத்தில் காய்ந்த தென்னை ஓலை மரத்தை உரசிக்கொண்டே மண்ணில் விழும் சத்தம் அச்சம் கொள்ள செய்யும். எங்கேயோ விழும் உலர்ந்த தேங்காய் அல்லது பழுத்த பனம் பழத்தின் சத்தம் மறுநாள் அதை தேடி எடுக்க தூண்டும். 

இளமையில் நான் வேலை தேடி அலைந்த துக்கம்மிகு நாட்களில் யார் கண்ணிளும் படாமல் யார் சொல்லும் படாமல் ஓடி ஒளிந்து கொள்ள ஒடுங்கி மறைந்து கொள்ள  இரவை எதிர்பார்த்து இருப்பேன். ஏனெனில் இரவு என்னை எந்த கேள்வியும் கேட்பதே இல்லை.

 இரவு ஒரு மாயை. வெளிச்சம் ஒரு காட்சியை ஒரு அர்த்தத்திலும், இரவு அதே காட்சியை வேறு அர்த்தத்திலும் காட்டும். எங்கள் வீட்டு அருகில் இருக்கும் சுடுகாட்டு பனைமரத்தை இரவில் இன்றும் நான் ஏரெடுத்து பார்த்ததே இல்லை.

என் இளம் வயதில் ஒரு நன்பன் இருந்தான். அவன் கிராமத்தின் பெயர் மயில் சோலை. அந்த ஊருக்கு செல்ல சரியான பாதை இல்லை. ஒரு மண் பாதை வழியாக அந்த ஊர் முக்கிய சாலையொடு இனைக்கப்பட்டு இருந்தது. அந்த இரு சாலைகளும் இனையும் இடம் மயில்சோலை கூட் ரோடு என்று அழைக்கப்பட்டது. அது அந்த ஊருக்கான பேருந்து நிருத்தம். 

அங்கு ஒரே ஒரு பெட்டிக்கடையும் அதன் பின் பகுதியில் ஒரு குடிசை வீடும் இருந்தது. பெட்டிக்கடையில் எப்பொதும் ஒரு கிழவர் அமர்ந்திருப்பார். அந்த குடிசையின்  வெளிபகுதியில் எப்பொழுதும் ஒரு கிழவி எதாவது ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்.

காலையில் வேலைக்கு செல்பவர்கள், சந்தைக்கு செல்பவர்கள், வெளியூருக்கு செல்பவர்கள் அந்த கடையில் டீ அருந்திவிட்டு கிழவரிடம் எதாவது பேசிவிட்டு செல்வார்கள். அந்த கிழவருக்கு ஊர்கதைகள் அத்தனையும் அத்துபடி. மாலை நேரங்களில் நானும் நண்பனும் கடையின் முன்னிருக்கும் கல் திட்டில் அமர்ந்து டீ அருந்திவிட்டு போண்டா சுவைத்தபடி அந்த கிழவரிடம் வம்பலப்போம். இரவு கவியும் நேரத்தில் மண் சாலை வழியே ஊருக்கு நடப்போம்.

அந்த சாலை ஒரு ஏரிக்கரை வழியே செல்லும். இரவில் அந்த ஏரிக்கரையில் நடந்து செல்லும் போது இயற்கையின் இனிமையான தருனங்களை அனுபவிக்க முடியும். ஏரியில் நீரும் இரவும் நிரம்பி இருக்கும் . வானில் மிதக்கும் வென்னிலா நீரில் நீந்தும் வென்னிலாவோடு பேசிக்கொண்டு இருக்கும், நீரின் குளிர் ஸ்பரிசத்தில் போதையுற்று  அலையும் காற்று. மினுக்கு பூச்சிகள் பூத்த செடிகள். பனைமரத்தின் காய்ந்த ஓலை எழுப்பும் சர சர சத்தம். எங்களை கடந்து போகும் சைக்கிள்களின் மணி சத்தம். கண்களை மூடி அந்த தருனத்தை இப்போது நினைத்தாலும் மகிழ்வில் திளைக்கிறது மனம். ஏரிக்கரை பாதை முடிவில் ஒரு கண்மாய் துவங்கும். கண்மாய் வழியாக ஏரி நீர், சுற்றி உள்ள வயல்களுக்கு பாயும். ஒரு சிறிய சிமன்ட்டு பாலம் வழியாக அந்த கண்மாயை கடக்க வேண்டும். அந்த பாலத்தின் அருகில் ஒரு tube லைட் கம்பம் இருந்தது. அந்த லைட் எரிவது இரவை ரசிக்கும் பூச்சிகளுக்கு பிடிக்காது. அதை அணைத்துவிட அதன் மீது மோதிக்கொண்டே இருக்கும்.

அந்த இரவு நேரத்தில் பாலத்தில் அமர்ந்துகொண்டு நண்பன் அவன் காதல் கதைகளை சொல்ல துவங்கிவிடுவான். அதை நான் கவனிக்கவேண்டும் என அவன் எதிர்பார்ப்பதில்லை. இரவு அந்த நினைவுகளை அவனுக்குள் எழுபிக்கொண்டே இருக்கும். அவன் அதை வார்த்தைகளாக்கி இரவிடமே சொல்லிக்கொண்டு இருப்பான்.

"வண்ணங்களை எடுத்து அவள் கோலம் போடுவாள் கோலத்தை விட வண்ணங்கள் படிந்த அவள் கைகள் அழகாக இருக்கும்"

"அவளுக்குள் ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு  தேவதை வாழ்கிறது . வெக்கத்துக்கு ஒரு தேவதை, துக்கத்துக்கு ஒரு தேவதை, புன்னகைக்கு ஒரு தேவதை , சிணுங்களுக்கு ஒரு தேவதை என்று இதுவரை ஆயிரம் தேவதைகளை அவள் முகத்தில் பார்த்துவிட்டேன்"

"அவள் கால் விரல்களில் நட்டை உடைத்து அதை டேப்பில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்"

இப்படி அவன் பேசுவதை கேட்க கேட்க எனக்கு சிரிப்பு வரும் . இரவு ஒரு மனிதனை யதார்த்தமா சிந்திக்கவே விடாதா என்று தோன்றும்.

நான் வேலைக்கு சென்றவுடன் பல வருடங்கள் அவனிடம் தொடர்பில்லாமல் போனது.

வெகுநாள் கழித்து அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன். அம்மா பக்கத்துவீட்டு பெண்மணியிடம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும் அவர் முகம் மாறிவிட்டது. நான் வீட்டுக்கு வந்ததுமே அவர்களுக்கு தெரிந்துவிட்டது நடந்தது எதுவும்  எனக்கு தெரியாது என்று. வெளியிலிருந்து வந்த அப்பா எதுவும் பேசாமல் வீட்டுக்குள் சென்றுவிட்டார். எனக்கு லேசாக புரிந்துவிட்டது.

சங்கடத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் மெதுவாக திரும்பி நடக்கத்துவங்கினேன்.  பெட்டிக்கடைக்கு வந்து அந்த கிழவரிடம் கேட்டபோது நண்பன் பெண்ணை கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்றும் அதனால் ஊரில் பெரிய சண்டை என்றும் கூரினார்.

அந்த நிகழ்வை அவரை தவிர வேறு யாரும் அவ்வளவு விவரமாக சொல்ல முடியாது. அப்பொழுது அவர் எனக்கு ஒரு இரவின் வடிவமாக தோன்றினார். 

அதன் பின் மறுபடியும் அவனை பார்க்கவே இல்லை.

சமிபத்தில் எஸ்.ரா வின் " யாமம்"  நாவலை படித்தேன். இதில் யாமம் என்ற வாசனை திரவியம் மையா சரடு. மூன்று வெவ்வேறு கதைகள். பழைய சென்னை பட்டினம். பலதரப்பட்ட மனிதர்கள் நிகழ்வுகள். இரவு அழகான படிமமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நாவலை படித்த பின்னால் இரவை பற்றி இரண்டு நாட்கள் சிந்தித்துக்கொண்டே இருதேன். என் வாழ்வில் இரவில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் மனதில் எழுந்தவண்ணம் இருந்தது. அதில் எத்தனையோ துக்கங்கள் எத்தனையோ மகிழ்வுகள் . அவை அனைத்தையும் எழுத்துகளாக மாற்றிவிட வேண்டும் என நினைக்கும் போது ஒரு கோர்வையாக திரலவே இல்லை. 

நம் வாழ்வில் எத்தனையோ மறக்க முடியாத  நிகழ்வுகள்  பகலில் நடந்தாலும், இரவு மட்டுமே அந்த நிகழ்வை மனதில் மீண்டும் மீண்டும் நிகழ்திகாட்டுகிறது.
அது மகிழ்வான தருணமாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும்.