"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

சனி, செப்டம்பர் 19, 2015

எழுத்தாளர் திரு. ஜெயமோகன் சந்திப்பு -1

இந்த விடுமுறையில் முக்கியமான நிகழ்வு திரு . எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை சந்தித்தது. கடந்த மூன்று வருடங்களாக அவரை தீவிரமாக படித்து வருகிறேன். என் சிந்தனை முறையில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய எழுத்து  அவருடியது. பொதுவாக ஒருவரின் குரலை மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கும்போது போது அவரை பற்றிய பிம்பம் நம் மனதுக்குள் உருவாகும். குரல், மொழி, பேசும் பொருள் போன்றவை வைத்து நாமே அவருக்கான பிம்பத்தை படைத்து ரசிக்கத்துவங்கி விடுகிறோம். அவரை நேரில் பார்க்கும் போது இரண்டுவிதமாக நடக்க வாய்ப்புள்ளது. ஒன்று பிம்பம் உடைந்து ஒரு மனவிலக்கம் ஏற்ப்படும் அல்லது இன்னும் நெருக்கமும் மதிப்பும் கூடும்.

அதேபோல திரு ஜெயமோகன் எழுதுவதை கொண்டு  அவரை பற்றிய  ஒரு பிம்பம் கட்டமைத்து இருந்தேன். அவரை சந்திக்க முடிவெடுத்தப்பின் அந்த பிம்பம் உடைந்து விடுமோ என்ற பயம் முதலில் எழுந்தது. சந்திக்க வேண்டாம் என முதலில் நினைத்தேன். அவர் வாசகர்கள் ஒரு நண்பனை போலதான் அவரை அணுகுகிறார்கள் என்று அறிந்திருந்தும் மனதில் ஒரு தயக்கம் நிலவியது.

அதை எல்லாம் தவிர்த்து அவரை  பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். 16.08.2015 அன்று அவர் கோவையில் கிஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு இலக்கிய கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. அதற்க்கு முதல் நாள் சனிக்கிழமை நான் சென்னை சென்றேன். அங்கு கல்லூரி நண்பர்களின் சந்திப்பு.

இன்று குழந்தை மற்றும் சிறுவர்களுக்கான எழுத்துலகில் விழியன் என்று பரவலாக அறியப்படும் உமாநாத் என் கல்லூரி நண்பன். அவன் வீட்டில் நான்கு நண்பர்கள் வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்டோம்.

நாங்கள் கல்லூரி முடித்து பதினாறு வருடங்கள் முடிந்துவிட்டது. அதன் பின் வாழ்வில் எத்தனையோ அனுபவனங்களால் மனம் வளர்ச்சி அடைந்து முதிர்ந்துவிட்டது என்று நம்பி இருந்தேன். ஆனால் நண்பர்களை கண்ட நொடிமுதல் என் மனம் அத்தனை பாவனைகளையும் கழற்றி எறிந்துவிட்டு ஒரு கல்லூரி மாணவன் மனம் போல சட்டென மாறிவிட்டது. 

மனதின் அந்த டைம் Travel அற்புதமானது. அந்த மனநிலையில் தான் நண்பனின் மடியில் இரண்டு கால்களையும் போட்டுக்கொண்டு சாவதானமாக சாயிந்து படுத்துக்கொள்ள முடிந்தது, அதே மனநிலையில் தான் டேய் கிறுக்கா  நாயே என்று அவன் மனைவி உடனிருக்க அழைக்க முடிகிறது, அந்த மனநிலையில் தான் குழந்தைகளின் முன்னால் நண்பனின் தலையில் தட்டி ஓடிப்பிடித்து விளையாட முடிகிறது. அந்த ஒரு நாள் முழுவதும் மனம் என்னிலிருந்து விடுபட்டு வனங்களின் நடுவே நடனம் ஆடும் காட்டுவாசி போல ஆடிக்கொண்டு இருந்தது.

நண்பன் உமாநாத் திரு ஜெயமோகன் அவர்களின் நெருங்கிய நண்பரான அரகங்கநாயகம் அவர்களிடம் பேசி அவர்கள் எங்கு தங்குகிறார்கள் என்ற விவரங்களை எனக்கு சொன்னான்.

அன்று இரவு நான் கோவைக்கு செல்லவேண்டும் . இரவு 9 மணிக்கு  சென்ட்ரலில் எனக்கு Train. இரவு 7.45 க்கு கூட நான் ஐயப்பன்தாங்கலில் இருந்தேன். அங்கிருந்து ஆட்டோவில் அதுர்ஷ்டம் இருந்தால் ஒரு மணிநேரத்தில் சென்ட்ரல் போகலாம் என்றான் நண்பன். அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டேன் 300 ரூபாய் என்றார். ஒரு மணிநேரத்தில் சென்ட்ரல் சென்றால் தருவதாக சென்னேன். சென்னையின் சிறந்த ஆட்டோகாரரில் ஒருவராக அவர் இருந்திருக்க  வேண்டும். கோடம்பாக்கம் , வடபழனி , நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம் என்று வண்டி பரந்தது. சார் இன்னக்கி சனிக்கிழம அதனால ரோடு ப்ரீய இருக்குது, மத்தநாள்ல இப்டி போமுடியாது என்றார். பேருந்து, கார் , வண்டி எல்லாத்தையும் சாதாரணமாக முந்தி சென்றார்.

நான் கூகிள் map ல் எங்கிருக்கிறோம் என்று பார்த்தேன் அது இன்னும் tension ஐ ஏற்றியது. பெரிய மேடு வந்தது அப்பா வதுடோம்ட என்று பெருமூச்சு விட்டேன். சார் சென்ட்ரல் வந்துச்சி எறங்குங்க என்றார். நான் ரொம்ப தங்க்ஸ் நா என்று 300 ரூபாய் குடுத்தேன். ஒரு வெற்றி பெருமிதம் அவர் முகத்துல , திடீர்ன்னு நம்ம முகத்துல யாரவது தண்ணி தெளிச்சா ஒரு சிளிர்ப்பு வருமே அந்த மாதிரி. அந்த முகத்தையும் என் முகத்தையும் ஒன்ன வச்சி ஒரு செல்பி எடுத்திருக்கணும், அந்த நேரத்துக்கு அது எனக்கு தோனல. 

தூங்கு பெட்டியில் sorry sleeper ல இடம் கிடைக்கவில்லை, அதனால் முதல் வகுப்பு AC யில் டிக்கெட் போட்டு இருந்தேன். நம் ஊரில் வசதி என்றால் "நம்மை தனிமை படுத்திக்கொள்ளுதல் " என்று ஒரு அர்த்தம் இருக்கின்றது. அந்த பெட்டியில் அப்படித்தான் அனைத்து இருக்கைகளையும்  திரை போட்டு மூடி  இருந்தார்கள். எனக்கு மேல்படுக்கை. மேல பையை வைத்துவிட்டு கீழ் இருக்கையில் அமர்ந்தேன். எதிரில் இருந்த இளஞ்சனிடம் நீங்க கோவையா என்றேன். காதிலிருந்த இசைமாட்டியை கழற்றாமல் ஆமாம் என்று தலையாட்டினான். அதற்க்கு மேல் நான் எதுவும் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து நீங்க கோவையா என்றான். இல்ல நான் குடியாத்தம் இப்ப கோவை போறேன் என்றேன். அதற்க்கு மேல் அவன் என்னை எதுவும் கேட்கவில்லை. 
சிறிது நேரம் கழித்து நீங்க வேணுன்னா  கிழையே படுத்துங்க. அண்ணனுக்காக அந்த சீட் போட்டேன் அவர் நாளைக்கு பிளைட்ல வரேன்னு சொல்லிட்டார் என்றான். அண்ணன் என்று அழுத்தி சொன்ன போது அவர் ஏதோ பெரிய அரசியல்வாதியாக இருப்பார் என்று நினைத்தேன். நீங்க " சண்டிவீரன் " படம் பார்த்திங்களா என்றார், கொஞ்சம் சுதாரித்து இல்ல பார்க்கணும் என்றேன்.

அந்த படத்தோட டைரக்டர் சற்குணம் தான் என் அண்ணன்.நாளைக்கு கோவையில எங்களுக்கு ஒரு மீட்டிங் இருக்கு என்றார். நான் ஓ ... என்றேன்.

பின் எங்களுக்கு முன்னால்  ஆஜானு பாகுவாக கழுத்தில் தங்க சங்கிலியும், முகத்தில் தாடியும் , கருப்பு சட்டையும் அணிந்த ஒரு ஆள் எங்களை பார்த்துக்கொண்டு நிற்றார். எனக்கு லேசான பயம் எழுந்தது. அவர் சற்று குனிந்து என்ன யாருன்னு தெரியுதுங்களா என்றார். நான் அடையாளம் கண்டு நீங்க தளபதி தினேஷ் தானே என்றேன். ஆமாங்க என்று உற்சாகமாக அருகில் அமர்ந்தார். எனக்கு urine problem  நா இந்த சீட்ல படுத்துகிட்டமா என்றார்.
எதிரில் இருந்தவர் படுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

அரண்மனை -2 ஷூட்டிங் பொள்ளாச்சியில, நேத்துதான் சென்னைக்கு வந்தேன் மறுபடியும் கூப்புராங்க. நீங்க எங்க வேல செய்றிங்க , நா சவுதில என்ஜினியரா இருக்கேன். எனக்கு ரெண்ட்டு பசங்க , ரெண்டு பேருமே என்ஜினியர்க்கு படிக்க வச்சேன் ஆனா ரெண்டு பேரும் பைட் மாஸ்டர் ஆகிடாங்க. வேலை இல்லா பட்டதாரி படத்துக்கு அவங்க தான்  பைட் மாஸ்டர். என்னோட போகட்டும் இந்த கஷ்டம், நீங்க சினிமாவுக்கு வரவேண்டாம் இன்னு சொன்னா கேக்கல என்றார் . எவ்வளவு நல்ல மனுஷன் ஒரு செல்பி எடுத்துகொள்ளலமா என்று யோசிக்கும் போதே அவர் மெதுவாக  ஒரு கோக் பாட்டிலை எடுத்தார்.  அதை திறந்தவுடன் குப்பென்று வாடை வந்தது. அதை ஒரே மூச்சாக குடித்துமுடித்தர் . நான் நைசாக நழுவி மேலேறி படுத்துக்கொண்டேன்.

அதன் பின் இன்னொருவர் அந்த இடத்தில் வந்து அமர்ந்தார். தினேஷ் மெதுவாக ஆரமித்தார். 

தி : சார் நீங்க கோவை போறிங்களா  

ஆமா சார்  

தி :நான் யார் தெரிதா 

தெர்லிங்லெனா 

தி : நான் தான் தளபதி தினேஷ் சினிமா actor தமிழ் நாட்டுல  நான் தான் முதல் தளபதி , எனக்கு அப்புறம் தான் இளைய தளபதி , புரட்சி தளபதி எல்லாம் 

இல்லங்னா எனக்கு தெரிலிங்னா

தி :  தெர்லிய உடு கொஞ்சம் தள்ளி உக்காரு அமலா பால்  பாத் ரூம் போய் இருக்காங்க இப்ப வருவாங்க. 

எங்க இங்கியா 

தி : ஆமா இங்க தான் 

இங்க எடம் இல்லியே 

தி : எங் உங்க மடில உக்கார வச்சுக்க மாட்டிங்களா 

நிஜமலுமா வாரங்களா 

தி : யோவ் 25 வருஷம் சினிமாவுல ஓதப்பட்டு மிதிபட்டு நடிக்கிற என்ன தெரில அமலா பால்னா வாய பொலக்குர 

தெரியாம சொல்லிட்டேன் என்ன விட்டுருங்க என்று நழவி மேலே வந்து படுத்தார். 

தினேஷ் எதிரில் இருந்தவரை பார்த்து உங்களுக்கு என்ன தெரிதா சார். 

அவர் : எங்க அண்ணன் டைரெக்டர் சற்குணம்  நா உங்களை பார்த்திருக்கேன். 

ஓ சார் தம்பியா நீங்க அவர பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நேத்து தான் சண்டி வீரன் பார்த்தேன். நீகளே ஹீரோவா நடிக்கலாமே சார் 

அவர் : இல்ல சார் நா கபடி ப்ளேயர் 

இல்ல சார் நீங்க நல்லா பாடியா இருக்கீங்க நடிங்க 

அவர் : இல்ல சார் எனக்கு interest இல்ல 

நான் எப்படியோ தூங்கி விட்டிருந்தேன். ஒரு மணி நேரம் கழித்து முட்டிக்கொண்டு வந்தது. மெதுவாக எழுந்தேன் கீழே தினேஷ் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார் 

"இல்ல சார் நீங்க நல்லா வருவிங்க" 

ஐயோ சாமி முட்டிக்கொண்டு செத்தாலும் பரவாயில்லை கிழே மட்டும் இறங்கிவிடக்கூடாது என்று தம் கட்டி படுத்துவிட்டேன்.

தொடரும் ........


வெள்ளி, செப்டம்பர் 18, 2015

புத்தகம் வாங்க


புத்தக கண்காட்சிக்கு முதல் முறையாக சென்றுவந்தேன். வெகுநாள் ஆசை நிறைவேறியது. இந்த பதிவை ஒரு மாதம் முன்னரே எழுத வேண்டியது. இந்த விடுமுறை நாட்களில் தொடர் பயணத்தில் இருந்ததால் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை.

இந்த விடுமுறையின் முதல் பயணமாக ஈரோடு சென்றேன்.  பொதுவாக சேலம் , ஈரோடு ,கரூர், கோயம்பத்தூர் போன்றவை தொழில் நகரங்கள். வெளியில் இருந்து தொழில் சார்ந்து மட்டும் அதிகம் வருவார்கள். சுற்றுல பயணிகள் அந்த நகரங்களை கடந்து மட்டுமே செல்வார்கள்.

இரவே சேலம் சென்று அங்கு என் நண்பன் ராஜாவுடன் தங்கினேன். சேலம் எனக்கு நெருக்கமான நகரம் . அங்கு மூன்று வருடம் தங்கி படித்தேன் . நானும் நண்பனும்  விடிய விடிய பேசிக்கொண்டிருந்தோம் . தூக்கம் கண்களை முட்டி துளைத்தபோது எங்களை அறியாமல் தூங்கிவிட்டு இருந்தோம்.

மறுநாள் காலை பேருந்தில் ஈரோடு சென்றேன். பவானி ஆற்றில் நீர் நிறைந்து இருந்தது மனதுக்கு எதோ நிம்மதி அளித்தது. சமிப காலங்களில் மழை இல்லை , மணல் கொள்ளை , காடுகள் அழிப்பு , காற்று மாசு , மக்கள் தொகை பெருக்கம் , விவசாயம் அழிப்பு போன்ற கருத்துக்கள் மனதில் வாழ்வை பற்றி ஒரு லேசான பயத்தையும் அவநம்பிக்கையும் உருவாக்கியுள்ளது. எங்காவது நீர்நிலைகளை கண்டாள்  இறங்கி குளிக்க வேண்டும் என தோன்றும்  பேர புள்ளங்களுக்கு சொல்லலாம் நாங்கெல்லாம் ஒரு காலத்துல ஆத்துல குளிச்சிருக்கோம் என்று. ஈரோடு நெருங்குகையில் சாலை ஓரத்தில் பெரிய பெரிய வீடுகளை கண்டேன். பெரும்பாலான வீடுகளில் ஒரு ஆடீ காரும் ஒரு சிறிய காரும் நின்றிருந்தன . எங்கள் வேலூர் மாவட்டத்தில் இது போன்ற வீடுகளை நான் பார்த்தது இல்லை.

புத்தக கண்காட்சி பேருந்து அருகிலேயே இருந்தது. அதிகம் அலையாமல் அந்த இடத்துக்கு சென்றேன். நம் தமிழகத்தில் அறிவு சார்ந்த நிகழ்வுகள் இப்படி பொது வெளியில் நடப்பது அரிது. இந்த கண்காட்சி திரு. ஸ்டாலின் குணசேகர் என்பவரின் தனிப்பட்ட பெரும் முயற்சியால் நடத்தப்படுகிறது.

உள்ளே நுழைந்ததும் வெறுமனே ஒரு முறை சுற்றிவந்தேன். அனைத்து கடைகளிலும் பெரும்பாலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இருந்தார்கள். சுஜாத்தா  எழுதிய புத்தகங்கள் சிலரும் , அறிவியல் புத்தகங்கள் சிலரும் வாங்குவதை கண்டேன் . சில பெண்கள் கோல புத்தகங்களையும் , சமையல் புத்தகங்களை வாங்கி கொண்டு இருந்தனர். அதிகம் பேர் புத்தகங்களை வெறுமனே பிரித்துப்பர்த்தும் அவற்றை களைத்தும் கடைக்காரர்களை நோகச்செய்து கொண்டு இருந்தனர். எனக்கு கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. புத்தகங்கள் புடவைகள் அல்ல. நிறம், விலை எல்லாம் பார்த்து வாங்க. முதலில் நமக்கான ஒரு விருப்பு எதாவது ஒரு துறையில் இருக்க இருக்கவேண்டும். பொழுதுபோக்கு , அரசியல் , அறிவியல் , சூழியல் , பெரியாரியம் , வாழ்வியல் , ஆன்மீகம், காந்தியம், வரலாறு , சினிமா  என்று   எதாவது ஒரு துறையில் ஈடுபாடு இருந்தால் அது சார்ந்த புத்தகங்களை இணையம் வழியாகவோ அல்லது அதை பற்றி தெரிந்தவர்கள் வழியாகவோ அறிந்துகொண்டு புத்தகம் வாங்க செல்வது நலம். பல்வேறு நிகழ்வுகள் நடக்கும் அந்த கண்காட்சியில் யாராவது ஒரு ஆர்வலர் உள்ளே நுழையும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு ஐந்து நிமிடம் புத்தகங்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விவரித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

நான் தேடிய அனைத்து புத்தகங்களும் எனக்கு கிடைத்தது.வெகுநாள் தேடிய புத்தகங்கள் கிடைத்த தருணம் அற்புதமானது. நான் கொண்டு சென்ற பட்டியல் ஒருவருடம் நண்பர்கள் மூலம் மற்றும் இணையத்தில் பார்த்த புத்தகங்களின்  வரிசை

1. இன்றைய  காந்தி  - ஜெயமோகன்
2. இந்து மதம் எளிய அறிமுகம் - சூதி மோகன்
3. வெக்கை நாவல்- பூமனி
4. இயற்கை வேளாண்மை - மானச ஃ க்பூபுகா
5. கொற்றவை - ஜெயமோகன்
6. யாருடைய எலிகள் நாம் - சமஸ்
7. கொற்கை - ஜோ டி குருஸ்
8. சிலுவையின் பெயரால் - ஜெயமோகன்
9.கொற்றவை - ஜெயமோகன்
10. மறைக்கப்பட்ட இந்தியா - எஸ் .ரா
11. ரப்பர் - ஜெயமோகன்
12.பண்டைய இந்தியா ஒரு அறிமுகம் - டி .டி . கோசம்பி
13. இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன்
14. உணவே மருந்து - சிவராமன்

இந்த வருடத்துக்கு இது போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நான் மறுபடியும் சேலம் திரும்பும் வழியில் நானும் ராஜாவும் சங்ககிரியில் சந்திப்பதாக முடிவு செய்திருந்தோம். சங்ககிரி டோல் கேட்டுக்கு அருகில் மண்சட்டி சமையல் என்ற ஹோட்டல் இருக்கிறது. அங்கு சந்திப்பதாக திட்டம். எனக்கு முன்பே ராஜா அங்கு இருந்தான். அந்த ஹோட்டலில் என்ன சிறப்பு என்றால் நாட்டுக்கோழிகளை ஒரு பட்டியில் அடைதிருப்பார்கள். நமக்கு தேவையான கோழியை தேர்வு செய்து கொடுத்துவிட்டால் அதை சுத்தம் செய்து மண்சட்டியில் சமைத்து பரிமாறுவார்கள்.

நான் அங்கு போகும்போது எங்கள் கோழி கொதிதுக்கொண்டு இருந்தது. பெரிய உயரமான அடுப்பு. தீ நேரடியாக சட்டியின் மீது படவில்லை. கீழே கட்டைகள் மிதமாக எரிந்து கொண்டு இருக்க அந்த அனலில் குழம்பு கொதித்துக்கொண்டு இருந்தது. அதில் மசாலா அதிகம் சேர்க்கவில்லை . வரமிளகாய், இஞ்சி பூண்டு , உப்பு போன்ற அடிப்படை பொருட்கள் மட்டும் சேர்த்திருந்தார்கள். நான் சென்று அமர்ந்ததும் கோழி சூப்பு இரண்டு சிறிய சட்டியில் வந்தது. சட்டியின் மனமும் குழம்பின் மனமும் மூக்கின் வழி ஏறி மண்டையில் எதோ ஒரு மூலையில் முட்டிக்கொண்டு நின்றது. சுவை நா முழுக்க, சூடு உடல் முழுக்க பரவியது. நிலைகொள்ளாமல் கொழம்பு கொதிக்கும் சட்டியை எட்டி பார்த்தேன். இறக்கிவிடலாம என்றேன். இன்னும் குழம்பு  கொஞ்சம் கெட்டியாகட்டும் என்று ராஜா சொன்னான். பசித்தவன் உணவுக்காக காத்திருப்பது கொடுமை ருசித்தவன் ருசிக்காக காத்திருப்பது அதனினும் கொடுமை.

சிறிது நேரத்தில் குழம்பு சட்டி டேபுளுக்கு வந்தது. சட்டியின் ஓரத்தில் குழம்பு ஒரு மெல்லிய அடுக்காக படிந்திருந்தது. மண்சட்டியில் மட்டுமே அப்படி படியும். அதை சுட்டு விரலால் வழித்து வாயில் வைத்தேன். என் முன்னால் மண்சட்டியில் சோறு , மண்சட்டியில் மிளகு ரசம் , மண்சட்டியில் தோயவைத்த சின்ன வெங்காயம் போட்டு தளித்த கெட்டி தயிர் . பின் நடந்தவை எல்லாம் சென்சார் ......

பின் ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தேன்.
                                                                                                                      - கிராமத்தான் 

புதன், செப்டம்பர் 16, 2015

மென்வெப்பம்

நீண்ட விடுமுறை முடிந்து வேலைக்கு சவுதி திரும்பிவிட்டேன். நாற்பது நாட்கள் விடுமுறை , ஒரு நாள்கூட வீணாக்கவில்லை என்று தோன்றுகிறது. வாழ்வில் முக்கியமான நிகழ்வுகள் முக்கியமான சந்திப்புகள் நடந்தேறியது. ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுதவேண்டும். நான் ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும்போதும் இவ்வளவு பரந்த வெளியில்  இவ்வளவு மக்கள் திரள் கொண்ட நாட்டில் எனக்கான ஒரு வாழ்வை நான் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லையே என்ற  எண்ணம் எழும். அது என் இயலாமை என்ற தன்கோவம் மேலெழும் பின் அதை வெல்ல தன்னிரக்கம் எழுந்து அழத்தோன்றும்.

இங்கு சவுதியில் எனக்கு அத்தனை வசதிகளும்  உள்ளது. ஆனாலும் மனதில் ஒரு நிறைவின்மை. ஊருக்கு வந்து சில நாட்களில் கிடைக்கும் நிறைவு எதனால் என பலமுறை நினைத்ததுண்டு. எதைக்கொண்டு மனம் தன்னை நிரப்பிக்கொள்கிறது. கட்டற்ற சுகந்திரம் , விரிந்து கிடக்கும் பசுமை , எப்போதும் கேட்டுக்கொண்டு இருக்கும் ஏதேதோ ஒலிகள், நண்பர்கள் உறவினர்கள் எது வேண்டுமானாலும் இருக்கலாம். என் ஆழ்மனதுக்கு மட்டுமே தெரியும் எதில் அது நிறைவடைகிறது என்று.

இங்கு வருபவர்கள் இரண்டு வருடம் மூன்று வருடம் என்று கணக்கு வைத்துக்கொண்டு வருவார்கள். ஆனால் வந்து சில வருடங்களில் அவர்களின் பழக்கவழகம் , எண்ணங்கள் வசதிகள் எல்லாம் மாறும்போது திரும்பி போகவேண்டும் என்ற எண்ணம் வெறும் புலம்பலாக மட்டுமே மாற்றிக்கொள்கிறார்கள். எங்க சார் போறது அங்க போய் என்ன பண்ணுவது நம்ம யார் அங்க மதிப்பா.

முன்பெல்லாம் சவுதியில் வேலை பார்க்கிறேன் என்று சொல்வது எனக்கு பெருமையாக இருந்தது. ஆனால் இப்போது சொல்லும்போது ஒருவித தயக்கம் மனதில் எழுகிறது. இந்த ஐந்தாறு வருடங்கள் நான் பெற்றதைவிட இழந்தது அதிகமா இருக்கிறது.

கிளம்புவதற்கு முதல் நாள் மனதில் பாரம் ஏறி ஏறி வந்தது. அது எரிச்சலாகவும் கோவமாகவும் மாறி நிலைகொள்ளாமல் அலைகழித்தது. வெறுமனே சாலை ஓரம் வந்து நின்றுகொண்டு டீ அருந்திவிட்டு போகும்வரும் மக்களை பார்த்துக்கொண்டு இருந்தேன். எத்தனைவிதமான மக்கள். எவ்வளவு மக்கள்.

மறுநாள் விமான நிலையத்தில் அனைத்து பரிசோதனைகளும் முடித்துவிட்டு விமானத்துக்காக காத்துக்கொண்டு இருந்தேன். அழுத்தம் ஏறிக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் கண்ணீர் வந்துவிடும் போல் இருந்தது. ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கத்துவங்கினேன். எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் மூழ்கி மேலும் மூழ்கி இறுக்கிக்கொண்டேன்.

பின் விமானத்தில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு படிக்கத்துவகினேன். பின் இருக்கையில் ஒருவர் தொலைபேசியில்

" ம் அக்கா நா பிளைட்டுக்குள்ள உக்கார்ந்து இருக்கேன்

இங்கைகும் அங்கைக்கும் ரெண்டு மணி நேரம் வித்தியாசம்

அங்க போயி போன் பண்றேன்

அம்மாகிட்ட குடு

" ம்  சாப்டேன்மா ஒன்னு இல்ல நீ அழுவாத , இதுல சார்ஜ் இல்ல நா வச்சிடட்டுமா

அந்த புள்ள சின்ன புள்ள அதாவது சொன்ன கொன்சம் பொறுத்து போ

பக்கத்துல இருந்தா  குடு

" ஏயி சும்மா அழுவாத உடம்ப பத்துக்க  (மௌனம் .......) 

சரி அம்மா வயசானவங்க நீ கோவிச்சிக்காத

இங்க திட்டறாங்க நா வச்சிறேண்டா ,,,"


அவர் சத்தமாக பேசியது சுற்றி உள்ள அனைவரையும் கொஞ்சம் எரிச்சல் கொள்ள செயிதது. பணிப்பெண் இரண்டு மூன்று முறை வந்து தொலைபேசியை அணைக்குமாறு சொல்லிவிட்டு போனார்.

புத்தகத்தை முடிவிட்டு சற்று நேரம் அமைதியாய் அமர்ந்துவிட்டு பின் மறுபடியும் படிக்கத்துவங்கினேன். விமானம் ஓடு பாதையில் ஓடும் போதும்  மேலெழும் போதும்  பறக்கும் போதும் படித்துக்கொண்டே இருந்தேன்.

சவுதி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். அந்த இரவு நேரத்திலும் ஒரு மென்வெப்பம் என்னை சூழ்ந்து கொண்டது. இன்னும் ஒரு வருடம் என்னை அது விடப்போவது இல்லை.

செவ்வாய், ஜூலை 07, 2015

யானை டாக்டர்

திரு. ஜெயமோகன் அவர்களின்

அறம் சிறுகதை தொகுப்பு

கதை நான்கு

"யானை டாக்டர்  "


For Audio download