"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

சனி, மே 20, 2017

"அவுனுக்கு இன்னா " - சவுதிலிருந்து சிவக்குமார்


"அவுனுக்கு இன்னா " என்ற வார்த்தை ஊரில் சொந்தங்கள் மற்றும் நண்பர்களிலின் நடுவே என்னை பற்றிய பொதுவான சொல். 

நான் சவூதிக்கு வந்து பத்துவருடங்கள் நிறைவுற போகிறது. பொருளியல் ரீதியாக ஓரளவுக்கு நிறைவடைந்திருக்கிறேனே தவிர முழுமையாக இல்லை . நாளைக்கு உனக்கு வேலை இல்லை என்று கம்பெனிகாரன் சொல்லிவிட்டால் வியர்த்து படபடத்து மயங்கிவிடும் நிலையில் தான் என் பொருளாதரம் இருக்கிறது.

ஊரில் இருப்பவர்கள் வெளியில் சென்று வேலை செய்பவர்களை வெறும் பொருளாதார பண அடிப்படையிலேயே வைத்து சிந்திக்கிறார்கள். ஊரில் என்னை பார்ப்பவர்கள்  "உனக்கு என்னப்பா " துபாய் பணம் என்ற ரீதியில் தான் பேசத்துவங்குவார்கள்.

ஆனால் பொருளாதார நிறைவு மட்டுமே வாழ்வின் முழு நிறைவு இல்லை.

ஊரில் ஒரு சாதாரண மனிதர் அனுபவிக்கும் கண்ணுக்கு தெரியாத அவர் பிரஞ்சையில் உணராத எத்தனையோ வசதிகள் இங்கிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. 
உலகத்தில் சுகந்திரம் என்னும் சொல்லின் முழுமையான அர்த்தத்தை அனுபவிப்பவர்கள் இந்திய மக்கள் தான் என்று ஒவ்வொரு முறையும் நான் ஊருக்கு வரும்போதும் உணர்கிறேன்.

என் ஆசிரியர் சொல்வது போல ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நீங்கள் சென்றால் ஒருமுறை கூட யாரும் உங்களை நிறுத்தி நீங்கள் யார் என கேட்கமாட்டார்கள். ஆனால் இங்கு அப்படி அல்ல. ஒவ்வொரு நூறு கிலோமீட்டர்க்கும் நீங்கள் சோதனை சாவடியை தாண்ட வேண்டியிருக்கும். மனம் பட படத்து கைகள் தன்னை அறியாமல் உங்கள் அடையாள அட்டையை தேடும்.

 நான் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை கிராமத்தில் வளர்ந்தேன். என்  ஊரை சுற்றி தென்னை மரம் தான் பிரதானம் . அதனால்  பசுமையும் பச்சை நிறமும் கண்களில் எப்போதும் நிறைந்தது இருக்கும். என்னை சுற்றி  வெவ்வேறு மனிதர்கள்  இருந்துகொண்டே இருப்பார்கள். வெவ்வேறு முகங்கள் அந்த முகங்களில் தவழும் வெவ்வேறு உணர்வு நிலைகள். அதே போல பெண்கள். எப்போதும் சாதாரண உடையில் அல்லது இரவு உடையில் இருக்கும் எங்கள் வீட்டு பெண்கள் குடும்ப விழாக்களிலும் திருவிழாக்களிலும் பொட்டுட்டு , பட்டுடுத்தி, குழல் திருத்தி தெய்வமகள்கள் போல மாறிவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். திருவிழா காலங்களில் ஊரும் அப்படித்தான் மாறிவிடும்.
நாங்கள் பயன்படுத்திய மொழியும் நாகரிகம் மற்றும் வாழ்வியல் முறையும் தொன்று தொட்டு அந்த கிராமத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. பேசும் மொழியில் பெரும்பாலும் கட்டுபாடுகள் இல்லை . ஒரு நாளைக்கு ஐம்பது கெட்டவார்த்தைகள் பேசாத மனிதர்கள் அங்கு குறைவு. பள்ளி பருவத்தில் மேற்சொன்ன அனைத்தும் தான் என் ஆழமனதை வடிவமைத்தது.

ஆனால் சவூதி வந்த ஒருவருடத்தில் ஒரு இருளை அதன் சிறு எடையை மனதில் உணர்ந்தேன். அந்த இருளை அதனுள் உள்ளதை என்னால் அறியவே முடியவில்லை. நான் தனிமையில் இருக்கும் போது அந்த இருள் ஏக்கமாக , வெறுமையாக உருமாறி நிற்கும். என் மனதில் மகிழ்ச்சியும் முகத்தில் சிரிப்பும்  குறைந்து கொண்டே வந்தது. சில வருடங்களில் நல்ல சம்பளம் வீடு, கார் எல்லாம் கிடைத்தது.ஆனால் அந்த இருள் பெரும் நோய் போல முகம் முழுக்க பரவி இருந்தது.

அது ஏன் என்று பலநேரம் நான் யோசித்ததுண்டு. சில மட்டுமே எனக்கு தட்டுப்பட்டது.

இங்கு பசுமை என்பதே இல்லை , தமிழர்கள் எந்த கலாச்சார நிகழ்வுகளையும் இங்கு நடத்துவதில்லை, ஒரு திரையரங்கு கூட இல்லை , பெண்கள் ஆண் துணையுடன் பர்தா அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும், எப்போதும் நன்மை யாரோ ஒருவர் கண்காணித்து கொண்டே  இருப்பது போன்ற ஒரு உணர்வு, சொந்தங்கள் கூடி தன் மகிழ்வை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை, 

இல்லை என்ற பட்டியலை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். 

இப்படி தன் ஆழ் மன கட்டமைப்புக்கு முற்றிலும் தொடர்பில்லாத சூழலில் நாம் வாழ முற்படும்போது ஆழ்மனம் குழம்பதுவங்கும். தனிமையும் ஏக்கமும் நம்மை ஆட்கொள்ளும். பலநேரங்களில் காரணம் இல்லாமல் நமக்கு அழுகை கூட வரும்.

அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி கடுமையாக வேலைசெய்வது. காலையில் 6.30 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 8 மணிக்கு மேல் தான் அறைக்கு வருவோம். கட்டுமான பணியில் உள்ள பெரும்பாலானவர்களின் வழக்கம் இதுவே. ஒருகட்டத்தில் என் மனமும் உடலும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

அந்த தருணத்தில் சரியான நேரத்தில் மனைவி ( கவிதா) வாழ்வோடு இணைந்தார்.  கவிதாவின் உதவியோடு கொஞ்சம் கொஞ்சமாக என்னையும் வாழ்வையும் மேம்படுத்திக்கொண்டேன்.வேலையை குறைத்துக்கொண்டு பாடுவது, ஆடுவது, சிலம்பம்   என்று  கலாச்சாரத்தோடு தொடர்பு படுத்திக்கொண்டேன். 
நவீன தமிழ் இலக்கியம் அறிமுகமானது. அதன் வழியாக பல்வேறு மனிதர்களின் வாழ்வில் நானும் இணைந்து கொண்டேன்.
மேலும்ன் கவிதாவும் நானும் ஊர் நிகழ்வுகளை , உறவுகளின் செயல்பாடுகளை சதா பேசிக்கொண்டே இருப்போம். 

ஆழமாக சொல்வதென்றால் உடல் மட்டும் இங்கு இருக்கிறது , உள்ளம் ஊரைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த பத்துவருடங்களில் என் கனவுகளில் இந்த ஊர் ( சவூதி) ஒருமுறைகூட வந்ததே இல்லை.
எப்படியோ ஒரு வழியில் வாழ்வை உயிர்ப்போடு வைத்திருக்க முயற்சிக்கிறோம். 

ஏன் எவ்வளவு கஷ்ட்டப்படணும் ஊருக்கு போகலாம் என்று தோன்கிறோம் . 
மனுஷ் ஒரு கவிதையில் கூறியது போல "ஊருக்கு செல்லும் எல்லா வழிகளையும் அழித்துவிட்டு தானே இங்கு வந்திருக்கிறோம்", என்ற வரி தான் நினைவுக்கு வருகிறது.

எங்கு நம் பொருளியல் தேவைகளும் அன்றாட லெளதீக தேவைகளும்  தடையில்லாமல் கிடைக்கிறதோ அங்கேயே முடங்கிவிடத்தான் பெரும்பாலான ஆண் மனம் நினைக்கிறது. அதில் நானும் ஒருவனாக தான் நெளிந்து கொண்டு இருக்கிறேன்.



புதன், மார்ச் 29, 2017

அனுபவம் இலவசம் !!!


சமீபத்தில் ஒரு DSLR கேமரா வாங்கினேன். அதை பற்றி இணையத்தில் படித்துக்கொண்டு இருக்கிறேன். படிக்க படிக்க தான் அதன் பிரமாண்டம் துலங்கி வருகிறது. தொழில் நுட்பமும் ரசனை சார்ந்த நுண்ணுரவும் இருந்தால் மட்டுமே புகைப்பட கலை நமக்கு கைகூடும்.
இணையத்தில் வினோத் என்பவற்றின் வீடியோ பதிவுகள் நன்றாக இருக்கின்றன.
https://www.youtube.com/channel/UCMMtgJ_Y92Xbr1ekvqG3IuA
அனுபவங்களை தன் நேரத்தையும் உழைப்பையும் செலவழித்து பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவுகள் ஒரு அடிப்படையான புரிதளை நமக்கு அளிக்கிறது. மேற்கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து எடுத்து பழகவேண்டும்.
ஒரு பறவையை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தேன். அமர்ந்த நிலையில் எடுத்துவிட்டேன் அது பறப்பதற்காக பட்டனில் கைவைத்து காத்திருந்தேன். சிறகு விரிக்கும் தருணத்திற்காக காத்திருந்த அந்த நொடிகள் சித்தம் அனைத்தும் விரலில் குவிந்திருந்த அந்த நொடிகள் என்னை பரவசத்தில் ஆழ்த்தியது. அந்த ருசிக்காகத்தான் புகைப்பட கலைஞசர்கள் கேமராவை தூக்கிக்கொண்டு காடுமலைகளில் அலைகிறார்கள் போலும்.
இணையம் வந்தது முதல் இத்தகைய அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்தல் அதிகமாகி உள்ளது. உலகில் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஏதோ ஒரு நபர் அதை பயன்படுத்திக்கொள்கிறார் பெரும்பாலும் இலவசமாக.
எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் ஒரு சக என்ஜினியர் ஒருவர் கையில் ஒரு டாக்குமெண்ட் வைத்திருந்தார். என்னது என்று வாங்கி படித்துப்பார்த்தேன். அவர் நான் ஒரு prablam solve பண்ணமுடியாம இரண்டு நாள் திணறி கொண்டு இருந்தேன். யாரோ ஒரு புண்ணியவான் அதப்பத்தி நெட்ல எழுதி இருத்தான். அது தான் இது என்கிறார்.
நான் அந்த புண்ணியவான் நான் தான் இது என்னோட blogல நான் எழுத்தியது என்றேன். அவர் ஓ என்கிறார். நான் எழுத்தியது என் துறையில் சிறிய விஷயம் தான். ஆனால் எந்த புத்தகத்திலும் கிடைக்காத என் தனிப்பட்ட அனுபவம்.
என் துறையில் நான் சந்தித்த அனுபவங்களை blog ல் தொகுத்து வருகிறேன். அது எனக்கு பின்னும் நிற்கும்.
http://testingcommissioning.blogspot.com/
விளையாட்டாக துவங்கியது இன்று உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 200 பேர்வரை பார்க்கிறார்கள். மொத்த பார்வையாளர்கள் ஒரு லட்சம் தாண்டி போய்க்கொண்டு இருக்கிறது.
மனதில் பகிர்தலின் சந்தோசம். யாரோ ஒருவரின் புண்ணியவான் என்ற வாழ்த்து. அது போதும்.

வியாழன், மார்ச் 09, 2017

மனித நியதி


இப்போது நான் படித்துக்கொண்டு இருக்கும் "பின் தொடரும் நிழலின் குரல்"  நாவலில் ஒரு வார்த்தையை படித்தேன்  " மானுட நியதி ".  இந்த வாரத்தை கடந்த ஒரு வாரமாக மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

எந்த ஒன்றை பற்றி நினைவுகள் எழுந்தாலும் அது இந்த வார்த்தையில் வந்து முடிவடைகிறது.

இந்த வார்த்தைக்கு அர்த்தங்களை தொகுத்துக்கொள்ள
என் வாழ்க்கை நிகழ்வுகளை , இதுவரை படித்தவற்றை , இதுவரை பார்த்த கேட்டவற்றை துழவிக்கொண்டே இருக்கிறேன். இன்னும் தொகுத்துக்கொள்ள முடியவில்லை.

 ஆனால் இந்த வார்த்தை நான் கடந்துவந்த சில மனிதர்களை மனிதர்களை மட்டும் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

ஒரு நாள் இரவு கவிதாவுக்கு ( மனைவிக்கு) கடும் வற்றுவலி. அந்த இரவில் அரசு மருத்துவமனை மட்டுமே திறந்திருந்தது. காலையும் வலி தொடர்ந்தது. திடீர் என்று படுக்கையிக்கு அருகில் வாந்தி எடுத்துவிட்டாள். நர்ஸ் வந்தால் தயவில்லாமல் திட்டுவார்கள் என்று தெரியும். மூளையிலிருந்து ஒரு கிழவி எழுந்து வந்தாள். வெளியே சென்று ஒரு இரும்பு முறத்தில் மண்ணும் தென்னை துடப்பமும் எடுத்துவந்து வாந்தியை முற்றாக வாரி வெளியில் கொட்டிவிட்டு தண்ணீரால் சுத்தமாக அலம்பிவிட்டு மறுபடியும் அதே முலையில் அமர்ந்துகொண்டாள். அருகே கருவுற்ற சிறுவயது பெண் படுத்திருந்தாள்.
அன்றிருந்த பதற்றத்தில் சிறிது நேரத்தில் அதை மறந்து போனேன்.

ஆனால் பலதருணங்களில் அந்த கிழவியை  நினைத்து பார்த்திருக்கிறேன். அந்த கிழவி என் முகத்தை முற்றாக பார்க்கவே இல்லை. எங்களிடம் எதையுமே எதிர்பார்க்கவில்லை. தன் கடமை போல அந்த வேலையை செய்து முடித்துவிட்டு தன் இயல்புக்கு சென்றுவிட்டாள்.

 அதே போல இன்னொரு மனிதர். அவர் என் தூரத்து பெரியப்பா பெங்களூருக்கு 80 பதுகளில் சென்றவர். படித்து முடித்து பெங்களூருவில் நண்பர்கள் அறையில் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்தேன். அவர் ஞாபகம் வந்து பார்க்கபோனேன். திருவிழாக்களில் திருமண நிகழ்வுகளில் மட்டும் பார்த்து சிரித்த உறவு. ஆனால் சந்ததோஷமாக வரவேற்றார். நான் வேலை தேடுகிறேன் என்று தெரிந்து மறுநாள் காலை என்னை வரச்சொன்னார். மறுநாள் காலை ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு தனக்கு தெரிந்த நண்பர்கள், அலுவலர்கள், தொழிற்ச்சாலை நண்பர்கள் சொந்தங்கள் என்று அத்தனை பேரிடமும் என்னை அறிமுகம் செய்து எனக்காக வேலை கேட்டார்.  ஒரு பெரிய வீட்டின் தாழ்வாரத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தோம். ஒரு பெண்மணி சித்தப்பா என்று வாஞ்சையாக அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். கடைசியில் ஒரு ஆள் நேர்த்தியான உடையில் வெளியில் வந்தார்.
பெரியப்பா அவரிடம் என்னை பற்றி சொல்ல துவங்கும் முன் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார். அவன் கண்டிப்பா பண்ணுவான் என்று உற்சாகமாக என் தோளை அனைத்து அழைத்துவந்தார்.
 அவர் அறிமுகம் செய்த மனிதர்களால் எனக்கு வேலைகிடைக்கவில்லை. ஆனால் எங்கள் கிராமத்திலிருந்து அவரை நம்பி எத்தனையோ பேர் பெங்களூருக்கு சென்றிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் நல்ல வளமையோடு இருக்கிறார்கள். இன்றும் கூட அவர் யாரைவது தன்னுடன் அழைத்துக்கொண்டு அவர்கள் வாழ்வுக்காக அலைந்துகொண்டு இருக்கலாம்.

இதை போன்ற  மனிதர்களை என் வாழ்நாள் முழுக்க கடந்து வந்துகொண்டே இருக்கிறேன்.

சாதி மதம், கொள்கைகள், தர்க்கம், பொருளியல்  அத்தனையும் தாண்டி இது போன்ற மனிதர்கள் இந்த மானுடத்துக்காக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

என் தர்க மனத்தைக்கொண்டு அவர்களின் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் அவர்களை இயக்குவது எதோ ஒரு "மானுட நியதி" என்று மட்டும் புரிகிறது.

அவர்களை நிறுத்தி உங்களுக்கு எந்தப்பயனும் இல்லாமல் ஏன் இதை செயிகிறீர்கள் என்று கேட்டால் ஒருவேளை அவர்கள் மெலிதாக சிரிக்கக்கூடும்  அல்லது தெரியவில்லை என்று சொல்லலாம்.

ஆனால்  வாழ்வில் நான் சோர்வுறும்போதும் மனிதம் மீது எனக்கு அவநம்பிக்கை எழும் போதும் இது போன்ற மனிதர்கள் தான் என் நினைவில் எழுகிறார்கள். எளிமையாக புன்னகை மட்டும் செய்துவிட்டு போகிறார்கள்.


வியாழன், பிப்ரவரி 16, 2017

மாடு விடும் திருவிழா

ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தபோது தென் தமிழகத்தில் சில கிராமங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு தமிழ் நாடே எழவேண்டுமா என்ற  விவாதம் எழுத்தது.

எங்கள் ஊர் வடதமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே உள்ள மோட்டூர் கிராமம்.

எங்களூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கும் ஆனால் அதற்க்கு பெயர் "மாடுவிடும்  திருவிழா". ஜல்லிக்கட்டு மாட்டுக்கு "குமார் மாடு " என்று  பெயர். தெருவின் ஒருமுனையிலிருந்து மாடுகளை அவிழ்த்து விடுவார்கள். அது எவ்வளவு குறைந்த நேரத்தில் தெருவின் அடுத்த முனையை அடைகிறது என்பது தான் வெற்றிக்கான கணக்கு.

பொதுவாக மாட்டு பொங்கல் அன்று அந்த பஞ்சாயத்தை சேர்ந்த மாடுகாளை  மட்டும் கழுவி அலங்கரித்து தெருவில் விடுவார்கள். இளைஞசர்களும் பெரியவர்களும் தெருவின் இருபுறமும் நின்று மாட்டின் மீது கை போடுவார்கள் ( மாடு ஓடும்போது கையால் தட்டுவார்கள் ).

சிறுவர்கள் பெண்கள் அனைவரும் வீடுகளுக்கு மேல் அல்லது தட்டிகளுக்கு பின்னலிருந்து அதை உற்சாகமாக கண்டுகளிப்பார்கள்.

பெண்கள் சிறுமியரின் வண்ண உடைகள் தெருவின் இரு புறமும் கட்டிய தோரணம் போல இருக்கும்.

ஆண்கள் கபடி விளையாட்டில்  நிற்பதுபோல இருவர் மூவர் என கைகோர்த்து மாடுகளை எதிர்கொள்வர்.
"மகுடி வீட்டு மாடு ", செவிடி ஊட்டு மாடு என்று , சொட்டி காலன் மாடு என்று ஊரில் ஒவ்வொரு மாட்டுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். அந்த மாட்டுவைத்திருப்பவர்களுக்கு ஊரில் தனி மரியாதை உண்டு.
பெரும்பாலான  மாடுகள் அவிழ்த்தவுடன் மின்னல் வேகத்தில் தெருவை கடக்கும். அதன் மீது கை போடவே முடியாது. சில நன்றாக மொத்து வாங்கும். மிகச்சில மட்டும் நின்று விளையாடும். தெருவில் நிற்கும் அத்தனை பெரும் வீட்டு திண்ணைகளில் ஏறி ஒடுங்கிக்கொள்வர்.

இந்த நிகழ்வு முடிந்ததும் ஊரில் உள்ள அனைத்து பசுமாடுகளை ஓரிடத்தில் குழுமச் செய்வார்கள். மாடுகளுக்கு நோய் வாராமல் இருக்க பூசை செய்வார்கள் . சிறுவர்களுக்கு அங்கு அனுமதி இல்லை. பெரிய இலையில் சோறு கொட்டி குங்குமம் சேர்த்து அதை பிசைந்து படைப்பார்கள், பூசை முடிந்ததும் அதை ஊர் முழுக்க வீடுகளில் உள்ள மாட்டு கொட்டகைகளில் "பொலியோ பொலி" "பொலியோ பொலி" என்று கத்திக்கொண்டே வீசுவார்கள். அப்படி வீசுபவரின் எதிரே ஊர்மக்கள் யாரும் வரக்கூடாது.

அதற்க்கு மறுநாள் காணும் பொங்கல் சிறுவர்களுக்கானது. அன்று சிறுவர்கள் கன்று குட்டி விடுவார்கள். நான் சிறுவனாக இருந்த போது எங்கள் பசுமாடு வெள்ளை கன்று குட்டி ஈன்றது. அதை எப்படியாவது குமார் மாடாக ஆக்குவது தான் என் அப்போதைய லட்சியமாக இருந்தது.
அதன் சின்ன திமிலில் சாக்கு பை போட்டு பல்லால்  கடித்து இழுத்தால் அது பெரியதாக வளரும் என்று யாரோ சொன்னார்கள். தினமும் நான்கு முறை அதை செய்ய போக கன்றுக்குட்டி என்னை பார்த்தாலே மிரள ஆரமித்தது.

காணும் பொங்கல் அன்று கன்று குட்டியை குளிப்பாட்டி அதன் மொட்டு கொம்புகளில் வண்ணம் பூசி நான்கைந்து நண்பர்கள் கூடி நடுத்தெருவுக்கு அழைத்து சென்றோம். செல்லும் வழியெல்லாம் தகர டபாவில் நண்பர்கள் மேளம் அடித்துக்கொண்டே வந்தார்கள். பொங்கலுக்கு சேர்ந்த காசு பையில் இருந்தததால் துள்ளிக்கொண்டே வந்தோம். தெருவெல்லாம் சிறுவர்களின் கூட்டம் கன்று குட்டிகளின் கூட்டம். எங்கள் முறை வந்ததும் நாங்கள் அவிழ்த்துவிட்டோம். கன்று குட்டி ஓடவே இல்லை. கீழே குனிந்து மண்ணை மண்ணை முகர்ந்து பார்த்தது. மற்றவர்களுக்கும் கேலியாக இருந்தது. கூட வந்த நண்பர்களும் கழண்டு கொண்டனர். மறுபடியும் கன்று குட்டியை படாத பாடுபட்டு இழுத்து வந்து வீட்டில்கட்டுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

காணும் பொங்கல் முடிந்து அடுத்த மாதத்தில் பரிசு வைத்து மாடுகளை விடும் போட்டி நடக்கும். போட்டிக்கு வெளியூரிலிருந்து மாடுகள் வரும். நிகழ்ச்சி திருவிழா போல நடக்கும்.
ஒவ்வொரு மாட்டுக்கு ஐந்து சுற்றுகள் அனுமதி. மாடு தெருவை கடக்கும் வேகத்தை ஐந்து முறையும் கணக்கிட்டு  அதன் சராசரியை கணக்கிடுவார்கள். குறைந்த நேரத்தில் ஓடிய மாட்டுக்கு முதல் பரிசு.

பல வருடங்களுக்கு பிறகு " மாடுவிடும் திருவிழா " எங்களூரில் அறிவித்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

முதல் பரிசு 25001 ரூபாய்.

இது போன்ற விழாக்கள் தான் கிராம வாழ்வை உயிர்ப்போடு வைக்கிறது.

ஜல்லிக்கட்டுக்காக போராடிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.