"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

புதன், மார்ச் 26, 2014

பாலை மழை

பாலைவனத்தின் நடுவே சாலை பயணம் வெறுமையானது. மனம் முழுக்க வெம்மை நிறைந்து இருக்கும்.  ஒரு நாள் முன்மாலையில் பாலையின் நடுவே காரில் பயணித்துக்கொண்டு இருந்தேன். காலையிலிருந்து பறந்த கொடியை மாலையில் அவிழ்த்து இறக்குவதை போல சூரியனை மேற்கு திசையில் யாரோ கிழே இறக்கி கொண்டுடிருந்தார்கள்.

பாலையின் நடுவே காரின் வேகம் தெரிவது இல்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சாலை நீண்டு நேர்க்கோட்டில் தெரியும். " நீயா நானா " நிகழ்ச்சியை ஒலி வடிவில் கேட்டுக்கொண்டு இருந்தேன். வெயில் காரின் முன்கண்ணாடி வழியே  உள்ளே நுழைந்து என் மடியில் தவழ்ந்து கொண்டு இருந்தது.

சிறிது நேரத்தில் காற்றின் வேகம் மாறுவதை காரின் நுன்னசைவில் தெரிந்தது. எனக்கு முன்னாள் சற்று தூரத்தில் வேர் பிடுங்கும் மணல் காற்று, சாலையை கடப்பது தெரிந்தது. வண்டியின் வேகத்தை குறைக்கும் தருணத்தில் ஒரு பெரும் மணல் போர்வைக்குள் நான் நுழைவதை உணர்ந்தேன். காற்று எங்கு விசையடுத்து எப்படி நகர்கிறது என்று தெரியவில்லை. காரின் வேகம் முழுமையாக குறைத்து மெல்ல நகர்ந்துகொண்டு இருந்தேன். மணல் திரை முழுமையாக காரின் கண்ணாடியை மூடியது. இதற்க்கு முன்னாள் இது போல மணல் காற்றை பார்த்திருக்கிறேன். ஆனால் இதன் வேகம் என்னை பயமுறுத்தியது.

வண்டி ஒருபக்கம் இழுக்கவே ஓரமாக நிறுத்தினேன். கொஞ்சம் மூச்சடைத்தது. சிறிது நேரம் கழித்து ஆடிய களைப்பில் மணல் வெளி அடங்க துவங்கியது. சூரியன் முழுவதும் மறைந்து இருள் அதை பின் தொடர்ந்தது.

காரை மெதுவாக மறுபடியும் ஓட்டத்துவங்கினேன். கொஞ்சநேரம் வானம், காற்று, பூமி மூன்றும் அமைதியாக இருந்தது. பின்னர்  வானம் மெதுவாக  துவங்கியது. மழையின் முதல் துளி காரின் கண்ணாடியில் பட்டு தெரித்தது. தெறித்த துளி , குட்டி கால் தடம் போல தெரிந்தது. அதை தொடர்ந்து கண்ணாடி முழுவதும் கால் தடங்கள். கரு மேகங்கள் திரண்டு கொஞ்ச வெளிச்சத்தையும் விரட்டியது.

பெரும்மழை துவங்கியது. மழையின் ஓசை மனதில் இறங்கி பயமாக ஊறியது. எனக்கு எதிர்புறத்தில் எந்த வண்டியும் கடந்து போகவில்லை. எல்லாம் முன்னாள் எங்காவது நின்றிருக்கலாம். மேகத்திலிருந்து வழுக்கிய மழைத்துளிகள் சாலையில் விழுந்து சிதறி சிரித்தது.  என் முன் சூழ்ந்த இருளை வண்டியின் வெளிச்சம் முட்டித்தள்ளி விளக்கியது. மண்ணை மழை நிரப்புவதால் மண்வாசம் மேல் எழுந்து காற்றை நிரப்பியது. பாசை மடிந்த நீர்நிலையில் வெகுநாள் நிலைத்திருக்கும் நீரின் வாசம் அது.

எனக்கு பயம் ஊறி வழிந்தோட துவங்கியது. இன்னும் 20 கிலோ மீட்டரில் ஒரு பெட்ரோல் பங்க் இருப்பது நினைவில் வந்தது. எப்படியாவது அங்கு சென்றுவிட்டாள் இந்த பயம் நம்மைவிட்டு விலகும் என்று நினைத்துக்கொண்டேன். வண்டியில் ஒலித்த " நீயா நானா " முடியும் தருவாயில் கோபி , விளிம்பு நிலை மனிதர்களின் விழுமியங்களை என்று ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தார். நாம் எந்த நிலையில் இருந்தாளும் சில கணங்களில் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்று நினைத்துக்கொண்டேன். சாலை ஒரு மேடு ஏறும்போது தூரத்தில் பெட்ரோல் பங்க் வெளிச்சம் தெரிந்தது , பயஈரம் கொஞ்சம் காயத்துவங்கியது. விழுந்த அனைத்து மழைத்துளிகளை தாகம் தணியாது சிந்தாமல் விலங்கின் உறுமலோடு குடித்துக்கொண்டே இருந்தது பாலை.

 பெட்ரோல் பங்க் உள்ளே மெதுவாக நுழைந்தேன். ஒரே ஒரு கடையில் மட்டும் வெளிச்சம் இருந்தது. நிறைய வண்டிகள் வரிசையாக நின்றிருந்தது.
அதில் நிழல்கள்  அசைந்து கொண்டு இருந்தது. நானும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு செய்வதறியாமல் இருந்தேன். தாகமெடுத்தது தண்ணீர் அருந்திவிட்டு சீட்டை கொஞ்சம் பின்னுக்கு தள்ளி சாய்ந்து கண்ணயர்ந்தேன்.

கொஞ்ச நேரத்தில் கதவை தட்டும் ஓசை கேட்டு கதவு கண்ணாடியை சற்று இறக்கி யார்ரென்று பார்த்தேன். மழைநீர் குமிழ் போல இரண்டு கண்கள் தெரிந்தது. இன்னும் சற்று இறக்கியபின் ஒரு வயதானவர் முழுவதும் நனைந்து நாடிகள் அதிர நின்றிருந்தார். நான் அறியாமலே என் கை கதவை திறந்தது. நடுங்கிய கைகளை மார்போடு அணைத்துக்கொண்டு மெதுவாக உள்ளே வந்து அமர்ந்துக்கொண்டார்.

அவர் முகம் புளிய மர பட்டை போல வரி வரியான சுருக்கங்களோடு அதிர்ந்துக்கொண்டு இருந்தது. எதுவும் பேசவில்லை. நான் அவரையே பார்த்தேன், அவர் என் செல்போனை பார்த்துக்கொண்டு இருந்தார். பின் ஏதோ கேட்டார். அவர் பேசுவது எனக்கு புரியவில்லை. நான் அனிச்சையாக என் செல்போனை எடுத்தேன். அவர் ஆடையில் மறைத்து வைத்திருந்த குருநீள கத்தி ஒன்றை எடுத்தார். இப்பொது அவர் மொழி தெள்ளத்தெளிவாக புரிந்தது.

இப்பொது அந்த கத்தியை விட அவர் முகம் பார்க்க பயமாக இருந்தது. நொடி பொழுதில் கத்தியை கழுத்தில் சொருகினார்.

அம்மா என்று அலறி படுக்கையிலிருந்து கிழே விழுந்தேன். ச்சே இத்தனையும் கனவா , இந்த அலறலுக்கு என் மனைவியும் எழுந்திற்க வேண்டுமே என மெல்ல படுக்கையை பார்த்தேன். படுக்கையில் இல்லை. தாகம் எடுத்தது.
சமையல் அறைக்கு போனேன். அங்கு எந்த சலனமும் இல்லாமல் மனைவி தண்ணிரை குடித்துக்கொண்டு இருந்தாள். பாலை, மழையை குடிக்கும் அதே ஓசை. எனைப்பார்த்து என்ன என்றால், தண்ணீர் என்றேன். அகன்ற தாமரை மேல் சுர்ரித்திறியும் இரு வண்டுகள் போல் கண்கள் அலைபாய்ந்தது அவளுக்கு. தண்ணிரை கொடுத்துவிட்டு மெல்ல நகர்ந்தாள்.

அவள் நடக்கும்போது பாதங்களிலிருந்து ஈர மணல் உதிர்வதை கண்டேன். குழப்பத்திலேயே தண்ணிர் அருந்தும் போது பின்னாலிருந்து கட்டியனைப்பதை உணர்ந்தேன். மென்சிரிப்போடு மேலும் தண்ணீரை குடித்த பொது இறுக்கம் எல்லை மீறி மூச்சடைத்து விம்மினேன்.

தீடீரென நிலை இழந்து விழித்த போது உணர்ந்தேன் சீட் பெல்ட் என் இடுப்பை இறுக்கி பிடித்திருந்தது. அதை விடுவித்து கார் கதவை திறந்து கிழ் இறங்கினேன். பயம் இல்லாதவன்  கனவில்லாமல் தூங்குவான் போல என்று நினைத்துக்கொண்டேன் . மழை முற்றிலும் அருந்து நீர் மட்டும் ஆங்காங்கே தேங்கி இருந்தது. கிழவனும், மனைவியும் கனவு தான என்று எண்ணிக்கொண்டே அங்கிருந்த டீ கடையை நோக்கி நடந்தேன். கடையில் ஒரு சேட்டா இருந்தார். ஒரு கட்ட டீ என்றேன். அதை வாங்கி அருந்திக்கொண்டே காரை நோக்கி நடந்தேன். வீட்டை நோக்கிய பயணத்தில் மழை பெரும் சுமை எனத்தோன்றியது.

காரை அடைந்ததும் வீட்டிலிருந்து செல் போனில் மனைவி " இங்க பயங்கர மழ எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு நீ எப்ப வருவே ?"


                                                                                                                 - கிராமத்தான்











திங்கள், மார்ச் 17, 2014

மகன் வயது 1.11

ஒரு நிமிடம் அவனால் ஓரிடத்தில் சும்மா இருக்க முடியவில்லை.

அவன் கையிக்கு எட்டும் பொருட்களை எடுத்து விளையாடி விட்டு அவைகளை அப்படியே போட்டுவிட்டு போய்விடுவான், அதனாலேயே அவனுக்கும் அவன் அம்மாவிற்கும் சண்டை வலுக்கும்.

பாதுகாப்பு குறித்த எண்ணங்கள் அவன் மனதில் முளைத்திருக்கிறது. வெளியில் விளையாடும்போது  பக்கத்து விட்டு நபர்களை பார்த்தாள் வீட்டுக்குள் ஓடிவந்து கதவடைக்கிறான். என்னை பாதுகாக்கும் பொருட்டு என்னையும் வீட்டுக்குள் இழுக்கிறான். யாரையும் தொட அனுமதிப்பது இல்லை.

வாரம் ஒரு முறை அருகில் இருக்கும் பூங்காவுக்கு அழைத்து செல்கிறேன். மணல் அவனுக்கு மிக சிறந்த விளையாட்டு பொருள். அவன் கற்பனைக்கு தகுந்தவாறு அது  வளைந்து கொடுக்கிறது. அதை குவித்தும் பரப்பியும், கைகளில் எடுத்து வீசி எறிவதுமாக விளையாடுகிறான். அவன் மண்ணில் விளையாடுவது எனக்கு பிடித்திருக்கிறது. அழுக்கு படாத உயர்ரக பிள்ளை என்ற எண்ணம் அவனுக்குள் எழாது என நம்புகிறேன்.

பூங்காவில் புறா ஒன்று மரத்தில் அமர்ந்திருந்தது. அதை அசையாமல் நின்று பார்த்துக்கொண்டு இருந்தான். அது ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு பறந்தது. தரைக்கு வந்து தான்னியங்களை கொத்தி தின்றது . கரும்பழுப்பு கழுத்தை திருப்பி அவனை பார்த்தது . சத்தம் எழுப்பிக்கொண்டே கொஞ்சம் நடந்தது. பின் மேழேழுந்து பறந்தது .அதன் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டு இருந்தவன் அது பறந்து சென்ற திசையை நோக்கி " அப்பா" என்று அழைத்து சுட்டி காட்டினான். அவன் ஏதோ சொல்ல வந்தான், ஆனால் சொல்ல முடியவில்லை. சொல்லி இருந்தால் அது அழகான கவிதையாக இருந்திருக்கும்.

பொம்மைகளை அவன் கையாள்வது வித்தியாசமாக இருக்கிறது. நமக்குத்தான் பொம்மைகள் BUS, வாத்து , கரடி, CAR , சைக்கிள் என தெரிகிறது ஆனால் அவனுக்கு,  அனைத்தும்  கற்பனைக்கு உதவும் பொருட்கள். சைக்கிளை படுக்க வைத்து அதன் சக்கரத்தை சுழற்றுவதில் மகிழ்ச்சி, பஸ்சின் பின் பகுதியை கழற்றி அதன் பாட்டரிகளை எடுத்து உருட்டி விளையாடுவது என்று அவன் கற்பனைக்கு ஏற்ப விளையாடுகிறான்.

அவன் கேட்டு எதையாவது கொடுக்க மறுத்தாலோ அல்லது கவனிக்க மறுத்தாலோ முகத்தில் துக்கம் பொங்கி வழிந்தோடும். அவன் அழும்போது அதட்டி அடக்க முயல்வது இல்லை, அதற்கு பதிலாக அவன் கவனத்தை திசை திருப்ப முயல்கிறோம்.

ஒரு நாள் அவன் கண்களை பார்க்கலாம் என அவனை தூக்கினேன். கையில் அள்ளும் நீர் வழிந்தோடுவது போல என்னிடமிருந்து அவிழ்ந்தோடினான். பின் அவன் புகைப்படம் ஒன்றை கணினியில் திறந்து அவன் கண்களை பார்த்தேன். பின் புருவம் நெற்றி என்று பார்க்க துவங்கும் பொது என் அப்பா நினைவில் வந்தார், அதன் பின்பு என் அண்ணன் மகன் நினைவில் வந்தான் , என் சகளையின் மகன் வந்தான், ஒவ்வொரு உறவுகளாக மனதில் பிம்பமாக தோன்றிக்கொண்டே இருந்தது. இறுதியில் என் பிம்பம் மனதில் தோன்றி நிலைத்தது. இனம்புரியாத பயம் என்னுள் பரவி ஆட்கொண்டது. தீடீரென கண்களை விலக்கிக்கொண்டு அமைதியாக சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.

என் அப்பாவை இப்படி ஒரு நிமிடம் பார்த்தாள் சொல்லமுடியாத மன எழுர்ச்சி எழும் என்று எண்ணிக்கொண்டேன்.

சமிப நாட்களில் அவன் கவனம் என் smart போனிலும் அம்மாவின் நோட் padலும் குவிந்துள்ளது. தோடு திரையை தள்ளி பாடல்கள், வீடியோ, போட்டோ போன்றவற்றை திறக்கிறான். அதே பாணியில் சுட்டு விரலைக்கொண்டு டிவியின் திரையை தள்ளிப்பார்க்கிறான். இதையெல்லாம் ரசித்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருக்கிறது. இவன் காலம் தோடு திரை காலம்.

அவன் என்றும் வாழ்க