வெளிச்சமின்மை இருள். இருள் என்றவுடன் கருமை நினைவில் எழுகிறது. அது ரகசியம்
நிறைந்ததாக மேலும் விறிகிறது.
வெளிச்சத்தை அறியாத எத்தனையோ உயிர்கள் இந்த உலகில்
இருக்கும் ஆனால் இருள் அறியாத உயிர்கள் இல்லை. இருளை உள்ளிடாக கொண்டு இரவு
நிகழ்கிறது. பூவினுள் வாசம் போல.
இரவு எல்லா ஒளியையும் சூழ்ந்து இருக்கிறது. ஒளி
அனையும் போது அந்த இரவு மட்டுமே எஞ்சி நிற்கிறது.
இரவு எனக்கு ஒரு
போதை போல. நான் மகிழ்வாக இருக்கும் போது அது என்னை மேலும் மகிழ்விக்கிறது.
துயரத்தில் உழலும் போது மேலும் துயரத்தில் ஆழ்துகிறது.
நிலவோடு கூட நான் பேசி
இருக்கிறேன் ஆனால் இரவோடு நான் பேசியதே இல்லை. ஏனெனில் என் அனைத்து ரகசியங்களையும் இரவு அறியும் .
இரவு ஒரு பரந்து விரிந்த மௌனம். மௌனத்தை நாம்
எதிர்கொள்ளும்போது மனதில் கட்டற்ற எண்ணங்கள் எழுகிறது.
எங்கள்
தென்னந்தோப்பில் ஒரு கல் திட்டு இருக்கும். அதன் அருகில் இருள் வழிந்தொடுவது போல
கால்வாய் நீர் ஓடிக்கொண்டு இருக்கும். இரவில் அங்கு சென்று அமர்ந்திருக்க எனக்கு
பிடிக்கும். ஓடும் கால்வாய் நீரில் இரண்டு கால்களையும் நனைத்துக்கொண்டு பெரும்
இருள் வெள்ளத்தில் மூழ்கி மறையும் ஒரு சிறு கூழாங்கல்லை போல இரவில் தனிமையில்
அமைந்திருப்பேன். என்னை சுற்றி பூச்சிகள் , தவளைகள் ஒலி எழுப்பிக்கொண்டே
இருக்கும். அவை இரவோடு பேச தெரிந்தவை இரவில் மட்டும் பேச தெரிந்தவை. இரவில் அங்கு அமர்ந்துகொண்டாள் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து ஒலிக்கும் பழைய திரைப்பட பாடல்கள் என்னை மெய் மறக்க செய்யும். தூரத்தில் காய்ந்த தென்னை ஓலை மரத்தை உரசிக்கொண்டே மண்ணில் விழும் சத்தம் அச்சம் கொள்ள செய்யும். எங்கேயோ விழும் உலர்ந்த தேங்காய் அல்லது பழுத்த பனம் பழத்தின் சத்தம் மறுநாள் அதை தேடி எடுக்க தூண்டும்.
இளமையில் நான் வேலை தேடி அலைந்த துக்கம்மிகு நாட்களில் யார் கண்ணிளும் படாமல் யார் சொல்லும் படாமல் ஓடி ஒளிந்து கொள்ள ஒடுங்கி மறைந்து கொள்ள இரவை எதிர்பார்த்து இருப்பேன். ஏனெனில் இரவு என்னை எந்த கேள்வியும் கேட்பதே இல்லை.
இரவு ஒரு மாயை. வெளிச்சம் ஒரு காட்சியை ஒரு அர்த்தத்திலும்,
இரவு அதே காட்சியை வேறு அர்த்தத்திலும் காட்டும். எங்கள் வீட்டு அருகில் இருக்கும்
சுடுகாட்டு பனைமரத்தை இரவில் இன்றும் நான் ஏரெடுத்து பார்த்ததே இல்லை.
என்
இளம் வயதில் ஒரு நன்பன் இருந்தான். அவன் கிராமத்தின் பெயர் மயில் சோலை. அந்த
ஊருக்கு செல்ல சரியான பாதை இல்லை. ஒரு மண் பாதை வழியாக அந்த ஊர் முக்கிய சாலையொடு
இனைக்கப்பட்டு இருந்தது. அந்த இரு சாலைகளும் இனையும் இடம் மயில்சோலை கூட் ரோடு
என்று அழைக்கப்பட்டது. அது அந்த ஊருக்கான பேருந்து நிருத்தம்.
அங்கு ஒரே ஒரு
பெட்டிக்கடையும் அதன் பின் பகுதியில் ஒரு குடிசை வீடும் இருந்தது. பெட்டிக்கடையில்
எப்பொதும் ஒரு கிழவர் அமர்ந்திருப்பார். அந்த குடிசையின் வெளிபகுதியில் எப்பொழுதும்
ஒரு கிழவி எதாவது ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்.
காலையில் வேலைக்கு
செல்பவர்கள், சந்தைக்கு செல்பவர்கள், வெளியூருக்கு செல்பவர்கள் அந்த கடையில் டீ
அருந்திவிட்டு கிழவரிடம் எதாவது பேசிவிட்டு செல்வார்கள். அந்த கிழவருக்கு ஊர்கதைகள்
அத்தனையும் அத்துபடி. மாலை நேரங்களில் நானும் நண்பனும் கடையின் முன்னிருக்கும் கல்
திட்டில் அமர்ந்து டீ அருந்திவிட்டு போண்டா சுவைத்தபடி அந்த கிழவரிடம்
வம்பலப்போம். இரவு கவியும் நேரத்தில் மண் சாலை வழியே ஊருக்கு நடப்போம்.
அந்த சாலை
ஒரு ஏரிக்கரை வழியே செல்லும். இரவில் அந்த ஏரிக்கரையில் நடந்து செல்லும் போது
இயற்கையின் இனிமையான தருனங்களை அனுபவிக்க முடியும். ஏரியில் நீரும் இரவும் நிரம்பி இருக்கும் . வானில் மிதக்கும் வென்னிலா நீரில் நீந்தும்
வென்னிலாவோடு பேசிக்கொண்டு இருக்கும், நீரின் குளிர் ஸ்பரிசத்தில் போதையுற்று அலையும்
காற்று. மினுக்கு பூச்சிகள் பூத்த செடிகள். பனைமரத்தின் காய்ந்த ஓலை எழுப்பும் சர சர சத்தம். எங்களை கடந்து போகும் சைக்கிள்களின் மணி சத்தம். கண்களை மூடி அந்த தருனத்தை இப்போது நினைத்தாலும் மகிழ்வில் திளைக்கிறது மனம். ஏரிக்கரை பாதை முடிவில் ஒரு கண்மாய் துவங்கும். கண்மாய் வழியாக ஏரி நீர், சுற்றி உள்ள வயல்களுக்கு பாயும். ஒரு சிறிய சிமன்ட்டு பாலம் வழியாக அந்த கண்மாயை கடக்க வேண்டும். அந்த பாலத்தின் அருகில் ஒரு tube லைட் கம்பம் இருந்தது. அந்த லைட் எரிவது இரவை ரசிக்கும் பூச்சிகளுக்கு பிடிக்காது. அதை அணைத்துவிட அதன் மீது மோதிக்கொண்டே இருக்கும்.
அந்த இரவு நேரத்தில் பாலத்தில் அமர்ந்துகொண்டு நண்பன் அவன் காதல் கதைகளை சொல்ல துவங்கிவிடுவான். அதை நான் கவனிக்கவேண்டும் என அவன் எதிர்பார்ப்பதில்லை. இரவு அந்த நினைவுகளை அவனுக்குள் எழுபிக்கொண்டே இருக்கும். அவன் அதை வார்த்தைகளாக்கி இரவிடமே சொல்லிக்கொண்டு இருப்பான்.
"வண்ணங்களை எடுத்து அவள் கோலம் போடுவாள் கோலத்தை விட வண்ணங்கள் படிந்த அவள் கைகள் அழகாக இருக்கும்"
"அவளுக்குள் ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு தேவதை வாழ்கிறது . வெக்கத்துக்கு ஒரு தேவதை, துக்கத்துக்கு ஒரு தேவதை, புன்னகைக்கு ஒரு தேவதை , சிணுங்களுக்கு ஒரு தேவதை என்று இதுவரை ஆயிரம் தேவதைகளை அவள் முகத்தில் பார்த்துவிட்டேன்"
"அவள் கால் விரல்களில் நட்டை உடைத்து அதை டேப்பில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்"
இப்படி அவன் பேசுவதை கேட்க கேட்க எனக்கு சிரிப்பு வரும் . இரவு ஒரு மனிதனை யதார்த்தமா சிந்திக்கவே விடாதா என்று தோன்றும்.
நான் வேலைக்கு சென்றவுடன் பல வருடங்கள் அவனிடம் தொடர்பில்லாமல் போனது.
வெகுநாள் கழித்து அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன். அம்மா பக்கத்துவீட்டு பெண்மணியிடம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும் அவர் முகம் மாறிவிட்டது. நான் வீட்டுக்கு வந்ததுமே அவர்களுக்கு தெரிந்துவிட்டது நடந்தது எதுவும் எனக்கு தெரியாது என்று. வெளியிலிருந்து வந்த அப்பா எதுவும் பேசாமல் வீட்டுக்குள் சென்றுவிட்டார். எனக்கு லேசாக புரிந்துவிட்டது.
சங்கடத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் மெதுவாக திரும்பி நடக்கத்துவங்கினேன். பெட்டிக்கடைக்கு வந்து அந்த கிழவரிடம் கேட்டபோது நண்பன் பெண்ணை கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்றும் அதனால் ஊரில் பெரிய சண்டை என்றும் கூரினார்.
அந்த நிகழ்வை அவரை தவிர வேறு யாரும் அவ்வளவு விவரமாக சொல்ல முடியாது. அப்பொழுது அவர் எனக்கு ஒரு இரவின் வடிவமாக தோன்றினார்.
அதன் பின் மறுபடியும் அவனை பார்க்கவே இல்லை.
சமிபத்தில் எஸ்.ரா வின் " யாமம்" நாவலை படித்தேன். இதில் யாமம் என்ற வாசனை திரவியம் மையா சரடு. மூன்று வெவ்வேறு கதைகள். பழைய சென்னை பட்டினம். பலதரப்பட்ட மனிதர்கள் நிகழ்வுகள். இரவு அழகான படிமமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாவலை படித்த பின்னால் இரவை பற்றி இரண்டு நாட்கள் சிந்தித்துக்கொண்டே இருதேன். என் வாழ்வில் இரவில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் மனதில் எழுந்தவண்ணம் இருந்தது. அதில் எத்தனையோ துக்கங்கள் எத்தனையோ மகிழ்வுகள் . அவை அனைத்தையும் எழுத்துகளாக மாற்றிவிட வேண்டும் என நினைக்கும் போது ஒரு கோர்வையாக திரலவே இல்லை.
நம் வாழ்வில் எத்தனையோ மறக்க முடியாத நிகழ்வுகள் பகலில் நடந்தாலும், இரவு மட்டுமே அந்த நிகழ்வை மனதில் மீண்டும் மீண்டும் நிகழ்திகாட்டுகிறது.
அது மகிழ்வான தருணமாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும்.