"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், அக்டோபர் 22, 2015

நீ இல்லாத நாட்களில்


ஒரு சிறிய பயணம் என்றாலும் அங்கு நம்மை எதிர்கொள்ள எதுவுமே இல்லை, யாருமே இல்லை என்கிற போது உருவாகும் சலிப்பை சகித்துக்கொள்ள முடியவில்லை

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹலோ ஹலோ கேக்குதா

ம் ........

இந்த உப்பை ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கேன் காணும் ...

மறுமுனை : நேத்துத்தான சட்னிக்கு போட்ட அங்கதான் இருக்கும் நல்ல பாரு

இல்லபா தொலஞ்சி போச்சு

மறுமுனை:  ம் ...... fridge ஐ தொறந்து பார் .

ஹோ இங்க இருக்கு சரி சரி நா பாத்துக்குறேன் நீ புள்ளைய பத்திரமா பா ......டொங்  ..... ஹோ கட் பண்ணிட்டியா
---------------------------------------------------------------------------------------------------------------------

மாலையில் நான் வீடு திரும்பியது அப்படியே சோபாவில் வெகு நேரம் அமர்ந்துவிடுகிறேன். அடுத்து எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஏன் இப்படி அமர்ந்திருக்கிறேன் என்று யோசிக்கும் போது.......

வா கொஞ்ச நேரம் பார்க்ல நடந்துட்டு வரலாம்,

இன்னக்கி நாம வெளில போலாம் ,

இன்னக்கி உனக்கு ஒன்னு சமச்சி இருக்கேன் ஜென்மத்திலும் இந்த மாதிரி சாப்பிட்டிருக்க மாட்ட ,

இந்தா இவனோடு கொஞ்சம் விளையாடிட்டு இரு,

இன்னக்கி நாம ஏதாவது சூப்பரான படம் பார்க்கலாம்,

நேத்து அந்த மேல் வீட்டு அம்மா என்ன பண்ணுச்சு தெரியுமா .......

என்று நீ சொல்லியது எல்லாம் நினைவுக்கு வந்தது.

உன்னோடு இருந்த நேரம் முழுவதும் நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ தான் முடிவெடுத்து இருக்கிறாய். அதனால் தான் அந்த கணங்கள் அவ்வளவு அழகாய் என்னை கடந்து போயிருக்கின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------------------

பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை மட்டுமே நான் வீட்டில் தங்கி இருந்தேன். அதன் பின் நீ வரும் வரை பல வருடங்கள் தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ அறைகளில் தங்கி இருந்தேன்.
வேலை முடிந்து திரும்புகையில் நான் அறைக்கு  போகிறேன் என்று தான் நண்பர்களிடம் சொல்லிவிட்டு வருவேன்.

ஆனால் நீ வந்த பின்பு நான் வீட்டுக்கு போகிறேன் என்று சொல்ல பழகினேன். அப்போது நெஞ்சில் கொஞ்சம் பெருமிதம் ஊரும்.

 நேற்று என்னை அறியாமல்  நண்பனிடம்  நான் அறைக்கு போகிறேன் என்றதும் மனதில் ஒரு துளி அமிலம் விழுந்து ஆழ இருங்குவது போல் இருந்தது.

-------------------------------------------------------------------------------------------------------------------

அந்த மாபெரும் வணிக வளாகத்தில் சிலரே உலவிக்கொண்டு இருந்த துணிக்கடையில் உயரத்தில் இருந்த ஒரு துணியை எடுக்க முயற்சித்துக்கொண்டு இருந்தாய்.

முன்னமே அதே போன்ற  உடையை  உனக்காக எடுத்து கையில் வைத்துக்கொண்டு உன்னை தேடிக்கொண்டு இருந்த நான் உன்னை கண்டு பின்னால் நின்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஏதோ உள்ளுணர்வில் தீடீர் என்று திரும்பிய நீ என் கையில் அடர் மஞ்சள் துப்பட்டாவை கண்டதும் ஒரு மென் சிரிப்பை உதிர்த்துவிட்டு, ஓ நீ மஞ்சள் எடுத்துவிட்டாயா   ம் .... எனக்கு நீலம் தான் வேண்டும் என்றாய்.

நான் ஓஹோ என்றேன்.

என் கோரிக்கைகள்  அனைத்தையும் ஒரு சிறு மாற்றம்  செய்தபின் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் உன் சூட்சமத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் ஏதோ ஒன்றை நமக்குள் தக்க வைக்க முயற்சிக்கிறாய் என்று மட்டும் புரிகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------

மழைக்கு முன்னால் வீசிய பெரும் காற்றில் நீ உலர்த்திய ஆடைகளை எடுக்க பாடுபட்டுக்கொண்டு இருந்தாய்....

ஆடைகள் பறந்து சிக்கி படபடத்து உன்னை அலைகழித்தது

உன் கருந்தழல் முடிகள் காற்றில் பறக்க கண்கள் சுருங்கி, உதடுகள் மடிந்து, உன் ஆடைகள் அலைந்து பறக்க ஒரு நவீன ஓவியம் போல் இருந்தாய்.

சில மழைத்துளிகள் என் முகத்தில் விழுந்து உணர்வுகள் கலைந்த போது

டேய் எண்டா லூசு மாதிரி பார்த்துட்டு இருக்க உன் சட்ட பறக்குது பார் புடி புடி போ ... நீ கண்கள் விரிய கத்தினாய்

நான் சிரித்து விட்டு ஆடையை பிடிக்க போனேன்.

அதன் பின் ஏன் சிரித்தாய் என்று நீ பலமுறை கேட்டுவிட்டாய்.......

---------------------------------------------------------------------------------------------------------------------







புதன், அக்டோபர் 14, 2015

தஞ்சாவூர்

நான் தினமும் முக நூலை திறந்ததும் அன்று வந்த புதிய செய்திகளில் குறைந்தது ஐந்தாவது தமிழின் பெருமை அல்லது பண்டைய தமிழர்களின் பெருமை பற்றி இருக்கும். ராஜ ராஜ சோழன்டா , லெமுரியா கண்டம்டா, கல் தோன்றி மண்தோன்றா காலத்தே மச்சி , தமிழன்டா தலை நிமிர்ந்து நில்லு மாமு  ..., என்று யாரோ ஒருவர் சொல்லிக்கொண்டே  இருக்கிறார்.
தமிழ் இனம் தொன்மையானது. அதற்க்கு முன்பே தமிழ் பிறந்து வளர்ந்து விட்டது. அவன் வீர பராக்கிரமங்களை பாருங்கள் , உலகில் மனித குலம் தோன்றுவதற்கு முன்பே அவன் தோன்றிவிட்டான் என்று ஓயாமல் சொல்வதினால் சாதாரன மக்கள்  மனதில் என்ன விதமான எண்ணங்களை உருவாக்க நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நம் பழைய வரலாற்றை தெரிந்துகொள்ள ஒரு முறை இருக்கிறது. அதை துண்டுகளாக துணுக்குகளாக தெரிந்துகொள்வதில் பயனில்லை. சில நொடிகளுக்கு நமக்கு கொஞ்சம் சிலிர்ப்பை தரும் அவ்வளவே.

ஆனால் நாம் நம்  பழமையான வரலாற்றை முறையான வழியில் தெரிந்து கொள்ள வேண்டும். என்னெனில்

1. அதன் தொடர்ச்சி தான் நாம் என்பதை புரிந்து கொள்வதற்காக
2. வரலாற்றை திரித்து அதை மக்கள் மனதில் புகுத்தி தனக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ளும் மேதாவிகளிடமிருந்து நம்மை கத்துக்கொள்வதர்க்காக
3. பல நூறு வருடங்களாக பல்வேறு இனமக்கள் வாழ்ந்து உருவாக்கிய பன்மை தன்மை கொண்ட நம் பண்பாட்டின் சிறப்புக்களையும் சாத்திய கூறுகளை புரிந்துக்கொண்டு அதை வாழ்வில் பண்படுத்தி அதை மேலும் வளர்க்கவும்
நாம் வரலாற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

வரலாறு என்றால் அரசியல் மற்றும் சமுக வரலாறு மட்டும் அல்ல , நம் பண்பாடு மற்றும் கலாச்சார வரலாறு,  அதில் உட்பிரிவாக நம் கலைகளின் வரலாறு , தொழில் நுட்ப்பங்களின்  வரலாறு , சாதி மத வரலாறு , மொழி மற்றும் இலக்கிய வரலாறு என பல பிரிவுகள் உள்ளன.

இவற்றில் எதாவது ஒன்றை தெரிந்துகொள்ள முயலும் போது பிற அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

தமிழர்களின் தனிப்பெரும் அடையாளமாக நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தை முன்வைக்கிறோம்.

பழங்குடிகளாக இருந்து சிற்றரசுகள் உருவாகி அவை ஒன்றோடு ஒன்று கலந்து சேர சோழ பாண்டிய பல்லவ பேரரசுகளாக உருவாகின. வெளியில் இருந்து வாதாபி மன்னர்கள், களப்பிரர்கள் , மொகலாயர்கள், மராட்டியர்கள், நாயக்கர்கள், திப்பு சுல்தான், போர்ச்சுக்கல் , டச்சு , ஆங்கிலேயர்கள் என தொடர்ந்து வந்துகொண்டே இருந்ததனர். கடைசியாக ஜனநாயகம் வந்தது.

நம் மைய பண்பாடு , வெளியில் இருந்து வந்தவர்களின் பண்பாட்டோடு தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தது. அதை கொண்டு தன் பள்ளங்களை நிரப்பிக்கொண்டது. மேலும் தன்னை வளர்த்துக்கொண்டது.

தமிழர்களின் உயர் பண்பாடு என்பது தமிழ் பேசும் தமிழர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது அல்ல . அது ஒரு கூட்டுக்கலவை.

நம் பண்பாட்டு பதிவுகளை வரிசை படுத்தினால் முதல் இடத்தில் வருவது இலக்கியம் இரண்டாவது கோவில்கள்.

பண்டைய சமுகத்தின் கலை, தொழில் நுட்பம், ஆன்மிகம் , மொழி , வாழ்வியல் என்று அணைத்து பண்பாட்டுக்கூறுகளின் ஒட்டு மொத்த தொகுப்பு நம் கோவில்கள். கோபுரத்தில் உள்ள சிலைகள் நாம் பார்த்து ரசிப்பதற்காக உருவாக்கப்படவில்லை. கோபுர உச்சியில் உள்ள சிலைகளை பல காலம் யாரும் பார்த்திருக்ககூட  மாட்டார்கள். கோவில் என்பது அப்போது வாழ்ந்த சமூகத்தினர் நாங்கள் இப்படி வாழ்ந்தோம் என்று கூரும் ஒரு அறிவிப்பு மட்டுமே.

கடந்த மூன்று வருடங்களாக வருட விடுமுறையில் தமிழத்தில் உள்ள முக்கியமான ஊர்களை ஒவ்வொன்றாக பார்க்கவேண்டும் என முடிவு செய்திருந்தேன். அந்த வரிசையில் இந்த வருடம் நான் சென்ற ஊர் தஞ்சை.

வெகுநாள் நான் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட ஊர். ஒரு பின் மத்தியம் என்  மனைவியிடம் மட்டும் சொல்லிவிட்டு தஞ்சை நோக்கி கிளம்பினேன். சேலம் வரை ரயிலில் சென்று அங்கிருந்து திருச்சிக்கு பேருந்தில் சென்றேன். அந்த பாதையில் இதுவே முதல் முறை செல்கிறேன். நாமக்கல் வரை இருவழி சாலை . அங்கிருந்து ஒருவழி  சாலை. நாமக்கல் புற நகர் பகுதியில் வரிசையாக கோழி பண்ணைகள். அவற்றை பண்ணைகள் என்று சொல்வதைவிட கோழி தொழிற்ச்சாலைகள் என்று சொல்லலாம். அதை தொடர்ந்து கிட்ட தட்ட அதே அமைப்புகளில் பொறியியல் கல்லூரிகள் வந்தன.
ஒரு வழி சாலையின் அழகே அதன் இருமருங்களிலும் கைகோர்த்து  நிற்க்கும் புளிய மரங்கள் தான். வாழ்நாள் எல்லாம் பயணிகளை பார்த்துக்கொண்டு நிற்ப்பது மட்டுமே அதன் வேலை.

முசிறியை கடந்ததும் வேளாண்மையின் அடர் பசுமை துவங்கியது. கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு அப்பாலும் நெல் வாழையின் பசுமை. போனை எடுத்து கூகுள் மேப்பில் பார்த்தால் காவிரி நதி அருகில் எங்கோ ஓடிக்கொண்டு இருந்தது. நதியை தொட்டும் தொடாமலும் சாலை இருந்தது.

இரவு திருச்சி அடைந்து அங்கு தங்கினேன். பேருந்து நிலையத்திக்கு அருகில்  உள்ள அனைத்து ஹோட்டல்களின் அறைகளும் பழமையானதாகத்தான் இருக்கும் என்பது என் எண்ணம். நான் தங்கிய   ஹோட்டல் முன்னாடி மட்டும் இடித்து புதியதாக கட்டி இருந்தார்கள். அறை பழைய அறைதான். என்னை அறையில் விட்டவர் எதாவது வேண்டுமா என்றார். தண்ணிர் வேண்டும் என்றேன். வேற என்று தயங்கினார். எனக்கு அந்த தயக்கத்தை பார்த்தவுடன் பகீர் என்றது. பின்பு தான் தெரிந்தது அவர் சுபாவமே அப்படிதான் என்று. பயனக்களைப்பும் கொசுவும் நீயா நானா என்று சண்டை இட்டுக்கொண்டு இருந்தது. பின் களைப்பு வென்றது.

திருச்சியிலிருந்து தஞ்சைக்கு ஐம்பது கிலோ மீட்டர். ஒன்றைரை மணி  நேர பேருந்து பயணம். நான் ஏறிய பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அதிகம் இருந்தார்கள். நேரம் போக போக கூட்டம் அதிகம் ஆகி பேருந்து உறுமியது. வழி கிராமங்களில் ஊர்கள் என அனைத்து நிறுத்தத்திலும் பேருந்து நின்றது. அந்த நிறுத்தங்களில் தவறாமல் ஒரு கல்யாண வாழ்த்து பிளக்ஸ் பேனர்  இருந்தது. அதில் ஒரு கல்யாண தட்டி என்னை கவர்ந்தது,

மச்சி அண்ணனுக்கு கல்யாணம் நைட் முருகனை கூடிட்டு வந்துடுமச்சி

......மச்சி சாமியும் வருவான் நல்லா கவனிக்கணும்

நீ வா மச்சி பாத்துக்கலாம்

என்று இருவர் Whatsapp ல் பேசிக்கொள்வது போல போடோவோடு பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்கள் ,எனக்கு வியப்பாக இருந்தது. அருகில் கலாமின் கண்ணிர் அஞ்சலி  பிளக்ஸ் பேனர் இருந்தது.

அங்காங்கே சில பந்தல்களை பார்த்தேன். இங்கு வேளாங்கண்ணி மாத கோவிலுக்கு நடைபயணம் செல்பவர்கள் இளைப்பாறலாம் என்று எழுதிருந்தது. வழிநெடுக்க காவி உடை அணிந்து கழுத்தில் ருத்தரட்சை அணிந்து இளஞ்சர்கள் நடந்து கொண்டு இருந்தார்கள். எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

ஒருவழியாக தஞ்சை புறநகர் பேருந்து நிலையம் அடைந்து அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் அடைந்தேன். எல்லா பழைய பேருந்து நிலையத்துக்கு  அருகிளும் ஒரு புராதானமான ஓட்டல் இருக்கும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அங்கு விசாரித்த போது ஆரிய பவனை சுட்டிக்காட்டினார்கள். வழக்கம் போல தலை சற்று நரைத்த நெற்றி முழுதும் பட்டை அணிந்த குண்டு மனிதர் கல்லாவில் அமர்ந்திருந்தார்.

பழைய கட்டிடம். பரிமாறுபவர்கள் சற்று வயதான பெண்மணிகள். கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. வழக்கமாக முதலில் இரண்டு இட்டிலியும் பின் ஒரு தோசையும் வாங்கிக்கொண்டேன். ம் ..... பாரம்பரியமான சுவை.

சாப்பிட்டு முடித்ததும் கோவிலை தேடி நடந்தேன். வழியில் ஒருவரிடம் கேட்டபோது நடக்குற தூரம்தாங்க என்று சொல்லி போய்விட்டார். எந்த பக்கம் என்று சொல்லவில்லை. இன்னொருவரிடம் கேட்டேன் நேரா போயி லெப்ட்ல சோத்துக்கை பக்கம் திருப்புங்க என்றார். டேய் யாரும் எனக்கு வழி சொல்ல வேண்டாண்டா என்று நடக்கத்துவங்கினேன். சற்று தூரத்தில் கோட்டை தெரிந்தது.

எனக்கு கொஞ்சம் வியப்புத்துதான். எங்கள் வேலூரில் கோட்டைக்குள் ஜலகடெஷ்வரர் கோவில் இருக்கும் ஆனால் இங்கு கோவிலுக்காகவே கோட்டை கட்டி இருக்கிறார்கள்.

கூட்டம் அதிகம்  இல்லை. வாயிலில் ஒரு காவலர் மட்டும் அமர்ந்திருந்தார். கேமரா கொண்டு செல்லக்கூடாது என்ற தடை இல்லாதது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இது ஒரு புகழ் பெற்ற புண்ணியஸ்தலம் அல்ல. நெருக்கி அடிக்கும் கூட்டமோ பெரும் தெய்வத்தை பார்க்க செல்லும் பக்தி உணர்வோ எதுவும் இல்லை.

மாபெரும் கலை செல்வத்தை பார்க்கும் உணர்வு. நம் தொல் பண்பாட்டின் புறவடிவம். ஆயிரம் வருடம் முன் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையின் உன்னதத்தை சொல்லும் ஒற்றைச்சொல்.

வெறுமனே இந்த கோவிலை பார்ப்பதைவிட யாராவது வழிகாட்டியை அமர்திக்கொள்ளலாம்  என்று முடிவு செய்து அங்கு கும்பலாக நின்றவர்களை அணுகினேன். அவர்கள் அரசாங்கத்தால் அமர்த்தப்பட்ட வழிகாட்டிகள். அவர்கள் என்னை சட்டை செய்யவில்லை. சார் guide வேண்டும் என்றேன். அவர்கள்  என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு கண்ணாடி போட்ட முன்வழுக்கை அதிகாரி which language you want ? என்றார். நான் தமிழ் என்றதும்  அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. இதோ இவரு MA தமிழ் நல்ல சொல்லுவார் என்றார் அந்த கமுஅ.

தோளில் ஒரு பையும் அதிலிருந்து கொஞ்சம் சாம்பார் வாசமும், காலில் பாதி தேய்ந்த பாட்டா செருப்பும், வெள்ளை சட்டையும் நீல நிற பேண்டும், முகத்தில் வெள்ளந்தி சிரிப்பும் அணிந்திருந்த முருகேஷன்  கை கொடுத்தார். நான் புன்னகை செய்துவிட்டு எவ்வளவு ஆகும் என்றேன். ஒருமணிநேரம் சுற்றி காட்டுகிறேன் முன்னூறு போதும் என்றார். நான் என் சாமர்த்திய சிரிப்பை சிரித்துவிட்டு கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் என்றேன். மொதல்ல எல்லாத்தையும் பார்க்கலாம். அப்புறம் நீங்களே சந்தோஷமா குடுங்க என்றார்.
என்னை உள்ளே அழைத்து சென்று விளக்கத்துவங்கினார். அவர் எவ்வளவோ முயற்சித்தும்  ஆங்கிலம் கொஞ்சம் நாவிலிருந்து தெறித்து அவரையும் என்னையும் துன்புறுத்தின.

மூன்று வாயில்கள் 

முக்கியமான கோபுரம் மற்றும் அதன் சுற்றுச்சுவர் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பின் பாண்டியர்கள், நாயக்கர்கள் ,மராத்திய மன்னர்கள்  சிறு கட்டுமானங்களை உருவாக்கி இருக்கிறார்கள். முதல் நுழைவாயில், கோட்டை சுவர் மற்றும் அதை சுற்றி  அகழியும் மராட்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது .

அடுத்த நுழைவாயில் நாயக மன்னர்களால் அமைக்கப்பட்டது. அதற்க்கு பெயர் கேரளாந்தகன் திரு வாசல்.

மூறாவது  உள்வாயில் சோழர்காலத்து வாயில். அதன் பெயர்  இராஜா இராஜன் திருவாயில் . இந்த வாயிலின் உயரம் 63 அடி மற்றும் மூன்று நிலைகளை கொண்டது . சோழர்கள் கோவிலை எழுப்ப முழுக்க முழுக்க கருங்கல்லை பயன் படுத்தினர். முகப்பு வாயிலில் இடது புறம் விநாயகர் சிலை வலது புறம் முருகன் சிலை. முருகனுக்கு வாகனமாக யானை இருப்பதை கண்டேன். கோவிலின் வாயிலில் காவல் தெய்வமாக இருப்பது துவார பாலகர்கள். ஒரே கல்லால் ஆனா 18 அடி உயரம் கொண்ட கர்ச்சிலை. வாயிலின் உள் ஒரே கல்லால் ஆனா சுவர்கள்.







மரத்தியரின் முன்வாயில் மற்றும் கோட்டை சுவர் 


             

                                              நாயக்கர் காலத்து நுழைவாயில் 

                  

                 

                                             யாதவ கன்னிகளும் மாயக்கண்ணனும் 


நாயக்கர் வாயில் பின்பக்கம் 





                                                       நாயக்கர் வாயில் பின்பக்கம் 



               



தவக்கோல சிவன் முகப்பு வளைவு 






சோழர் கால நுழைவாயில் 


விநாயகர் 


துவார பாலகர்கள்


சிவபுராண சிற்பங்கள் இடது 



                                                           சிவபுராண சிற்ப்பங்கள் வலது 


தமிழ் கல்வெட்டுகள் 11 ஆம் நுற்றண்டு 








நந்தி மண்டபம்

நந்தி மண்டபம் நாயக்க மன்னர்களால் 16 ஆம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள நதிகளில் இரண்டாவது பெரிய நந்தி. முதல் பெரிய நந்தி ஆந்திர மாவட்டத்தில் உள்ள லிபக்ஷி என்ற ஊரில் உள்ளது. 18 டன் கொண்ட நந்தி 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது. ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. மண்டபத்தில் உள்ள ஓவியங்கள் 18 ஆம் நுற்றாண்டில் மராட்ட மன்னர்களால் முழுக்க இயற்க்கை வண்ணக்களை  கொண்டு வரையப்பட்டது.





நாயக்கர் சிலை


பிரகன் நாயகி கோவில்

பிரகன் நாயகி கோவில் 13ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது.





அம்மன் வாயிலை காக்கும் துவார பாலகிகள் 




காஞ்சி காமாட்சி பாலற்றங்கரையில் தினமும் மணலில் ஒரு லிங்கம் செய்து வழிபடுவது வழக்கம். சோதிப்பதற்காக சிவன் ஒருநாள் வெள்ளம் பெருக்கெடுக்கச்செயும் போது  காமாட்சி லிங்கத்தை கட்டித்தழிவிக்கொள்ளும் கட்சி.

மராட்டிய ஓவியங்கள்


                                   





மார்கண்டேயன் சிவலிங்கத்தை தழுவிக்கொள்ளும் காட்சி 


பிரகதிஸ்வரர் ஆலயம்

பிரக என்றால் பெரியது என்று பொருள். பெரிய ஈஸ்வரன் கோவில் இன்று பெரிய கோவில் என்று அழைக்கப்படுகிறது.
கோவிலின் மொத்த பரப்பளவு 36 ஏக்கர்.முகப்பில் இருக்கும் ஆடல் மேடை அதற்க்கு நேர் எதிரே அரசர் அமர்ந்து பார்க்க மேடையும் உள்ளது. 50 பதுக்கும் மேற்பாட்ட ஆடல் தேவதைகள் கோவிலில் தங்கி நடனம் ஆடி இருக்கிறார்கள் . அவர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவரின் மேல் 1008 நந்திகள் இருக்கிறது. கோவிலை சுற்றிய பிரகாரத்தில் 252 சிவா லிங்கங்கள் உள்ளன. எண்களின் கூட்டுத்தொகை 9 வரும். அது நவகிரகங்களை குறிக்கும்.












                   

                 



முன்புற தோற்றம் 

உள்ளே இருக்கும் சிவன்லிங்கதின் கல் நர்மதை ஆற்றங்கரையில் இருந்து கொண்டுவரப்பட்டது.11 அடி உயரம் 54 அடி சுற்றளவு. லிங்கத்துக்கு முன்னால் இருக்கும் வாயில் குறுகலானது. இதன் மூலம்  லிங்கத்தை வைத்த பிறகே இதன் முன்வாயில் அமைக்கப்பட்டு  இருக்க வேண்டும் என்று உகிக்க முடிகிறது. தலைக்கு மேல் உள்ள ஐந்து தலை நாகம் ஐந்து பூதங்களை குறிக்கும். கருவறையின் உள் கட்டமைப்பு 7.9 மீட்டர் அளவு கொண்ட மிகத்துல்லியமான சதுர வடிவமாகும். கருவறையை சுற்றி ஒரு 12 அடி அகலம் உள்ள  உட்பிரகாரம் உள்ளது. அதன் சுவர்களில் சோழர்காலத்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியங்களின் மேல் நாயக்கர்கள் ஓவியம் வரைந்து உள்ளனர். சமிபத்தில் அதை நிபுணர்கள் கண்டறிந்து பிரித்திருக்கிறார்கள். மேலும் உள்ளே அறிய நாட்டிய சிற்பங்கள் உள்ளன. அதை சிறப்பு அனுமதி பெற்று பார்க்கமுடியும். அதன் மாதிரிகளையும் ஓவியங்களின் மாதிரிகளையும் அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். கோபுரம் விமானம் என்று அழைக்கப்படுகிறது. முக்கோண வடிவில் அமைந்த கோபுரம் கிழே இரு சுவர்களாக பிரிகிறது. இந்த கட்டிட அமைப்புக்கு "கதளிகாகரம்" என்று பெயர். தமிழில் கூறினால் வாழைக்குலை சீர் அடுக்கு. பொதுவாக கோவில்கள் 3 அல்லது ஐந்து அடுக்குகள் கொண்டதாக இருக்கும். இந்த கோபுரம் 13 அடுக்குகளை கொண்டது. உச்சியில் உள்ள ஸ்தூபி ஒரே கல்லால் ஆனது அல்ல. பல கல் அடுக்குகளை கொண்டது. இந்த கோவில் அமைக்க சுற்றி உள்ள நகரங்களான திருச்சி மற்றும் புதுக்கோட்டையிலிருந்து கற்களை நிலம் மற்றும் காவேரி நீர் வழியாக கொண்டு வந்திருக்கலாம் என்று உகிக்கப்படுகிறது.

















108 நாட்டிய வடிவங்கள் 


நாயக்கர் கால ஓவியங்களை பிரித்தெடுக்கும் நிபுணர் குழு 



1987 இல் இந்த கோவில் ஐக்கிய நாடுகள் கல்வி ,அறிவியல் , பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது .கி .பி 1950 யில் கோவிலின் நிலையை நான் கண்டது நிலை கொள்ளாது வியந்துவிட்டேன். புதர்கள் மண்டி செடிகள் வளர்ந்து பாழடைந்து கிடக்கிறது. வெளையர்கள் ஆராய்ந்து கண்டடையும் வரை இந்த கோவில் எதோ பூதங்கள் கட்டியதாக ஒரு நம்பிக்கை தான் அந்த ஊர் மக்களிடையே இருந்திருக்கிறது. இன்று தமிழர்களின் முக்கிய அடையாளமாக நாம் மார்தட்டிக்கொள்ளும் இந்த கோவில் 50 களில் அடையலாம் இல்லாமல் புதர் காடாக இருந்திருக்கிறது .
















முதல் அடுக்கில் சிவன் போர்க்கோலத்தில் இருக்கும் சிலைகள் உள்ளன. இந்த சிலைகளுக்கு பெயர் "திருப்புராந்தகர்". பைரவர் , பிசாடனார் என்று பல்வேறு உருவங்களில் சிவன் சிலைகள் முதல் அடுக்கில் நிறுவப்பட்டுள்ளது.














இது போல பூத சிலைகள் இருந்தால் கோவிலில் பொக்கிஷ நிலவறை இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த பொக்கிஷத்தை இந்த பூதங்கள் காக்கும்.
















வெளிநாட்டு பயணி 


வெளிநாட்டு பெண் 







பொன்னியின் செல்வன் 


கேரள பாணி கூரை வளைவுகள் 


அனைத்து சோழர் கால கோவில்களிலும்  கோவிலின் உள்நுழைவு படிக்கட்டுகள் பக்கவாட்டில் இருக்கும். பிற்காலத்தில் மராட்டியர்கள் முன் பக்கம் ஒரு படிக்கட்டை கட்டி இருக்கிறார்கள்.









ஒரு கட்டிடம் கட்டத்துவங்கும் போது பலிகொடுப்பது வழக்கம். ஆனால் இந்த கோவில் கட்டத்துவங்கும் போது பலி ஏதும் கொடுக்கவில்லை.  கோவிலை கட்டத்துவங்கும் போது ஒரு யானை இங்கு வந்து இறந்தது என்றும் அதன் பின் இந்த பிள்ளையார் இங்கு நிறுவப்பட்டது என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது .





இந்த மரத்தில் ஒரு பல்லி இருப்பதாகவும் அதை பார்த்தால் நல்லது நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளூர் மக்களிடம் இருக்கிறது. 

முருகன் கோவில் 

16 ஆம் நுற்றாண்டில் நாயக்க மன்னர்களால் இந்த கோவில் எழுப்பப்பட்டது. சிலைகள் சுதையாலும் கருங்கல்லாலும் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டு குதிரைகள் ரதம் ஒன்றை இழுப்பது போல இது அமைந்துள்ளது. நுணுக்கமான சிற்ப அமைப்புகள். ஒரு தாளில் சிறு தூரிகை வைத்து வரைந்தது போல .

படிகளின் இருப்பக்கத்திலும் இரு யானைகள் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டும் வெவ்வேறு உணர்வு கொண்ட யானைகள். ஒன்று போரிலே சண்டை இடும் ஆக்ரோஷமான யானை. அதன் வால் சுழற்றி துதிக்கை கொன்று குவிக்க ஓடும் நிலையில் உள்ளது. மற்றொன்று அனைத்தும் முடிந்து ஆவதானமாக நடந்து வரும் யானை. 

சன்னதியின் முன்வாசலில் வழு வழு வென்று இழைக்கப்பட்ட இரு துவார பாலகர்கள். சன்னதியில் நான்முக முருகர் வீற்றுளார். பின்னால் இருக்கும் முகத்தை கான ஒரு ஆடி உள்ளது. பூசை செய்பவர் பின்னாலும் ஆரத்தி எடுத்தார். 
கோவிலை சுற்றி நுணுக்கமான கற்சிலைகள். கலையின் வளர்ச்சி என்பது அதன் நுணுக்கத்தில் அடங்கி உள்ளது. 

இந்தியாவில் மூன்று வகையான கோவில் கட்டும் மரபு இருக்கிறது. ஒன்று திராவிட கட்டிட வடிவம். இதில் கோவிலின் மேலே உள்ள ஸ்தூபி எண்கோண வடிவில் இருக்கும். அதாவது அதற்க்கு எட்டு பக்கங்கள் இருக்கும். வடஇந்தியாவில் பெரும்பாலும் நாகார கட்டிட வடிவத்தில் கோவில்கள் அமைந்துள்ளன. கஜிராஹோ கோவில் இந்த வடிவத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. மத்திய இந்தியாவில் வேசாரா கட்டிட வடிவத்தை பயன் படுத்தி கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. கோவில் உச்சியில் ஸ்தூபி வெக்காயம் திருப்பி போட்டது போல இருக்கும். 












அதி நுணுக்கமான வளைவுகள் 




கல் ஜன்னல் 



போர்க்கள யானை 



                             போர்க்களத்தில் அடிபட்டவருக்கு உதவி செய்யும் யானை                                


அலங்கார குதிரை 


கல் ஓவியம் 


கல்வளைவு 











முருகேஷன் இறுதியாக கலைத்துவிட்டார். முழுமையாக ஒரு சுற்று வந்ததும் வேறெதுவும் பேசாமல் 300 ரூபாய் கொடுத்துவிட்டு அவரிடம் விடை பெற்றேன். மன்டபத்தில் சிறிது நேரம் படுத்துக்கொண்டேன். ஒருவர் அங்கு உள்ள காதலர்களை வெளியே போகும்மாறு ஒரு குச்சியை வைத்துக்கொண்டு கத்திக்கொண்டு இருந்தார். காதலர்கள் அவரை கண்டுகொள்வதாக தெரியவில்லை. வெயில் சுடத்துவங்கியது. சிறிது இளைப்பாறிவிட்டு மறுபடியும் ஒரு சுற்று வரத்துவங்கினேன். இந்த முறை ஒவ்வொரு இடமாக ஒவ்வொரு சிலையாக பொறுமையாக நகர்ந்தேன். இரண்டு முறை சுற்றி வந்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது விஷயம் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தது.  

பின் களைத்து ஓய்ந்து ஓரிடத்தில் அமர்ந்தேன். ஒரு குட்டி பெண் கையில் செல் போனை வைத்து பார்த்துக்கொண்டு இருந்தது. பின்னால் ஆயிரம் வருடம் பழமையான கோவில் இறந்த காலமாக நிற்க நிகழ்கால பெண் ஒருத்தி எதிர் காலத்தை கையில் வைத்து பார்த்துக்கொண்டு இருக்கிறாள் என்று தோன்றியது.