"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், அக்டோபர் 22, 2015

நீ இல்லாத நாட்களில்


ஒரு சிறிய பயணம் என்றாலும் அங்கு நம்மை எதிர்கொள்ள எதுவுமே இல்லை, யாருமே இல்லை என்கிற போது உருவாகும் சலிப்பை சகித்துக்கொள்ள முடியவில்லை

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹலோ ஹலோ கேக்குதா

ம் ........

இந்த உப்பை ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கேன் காணும் ...

மறுமுனை : நேத்துத்தான சட்னிக்கு போட்ட அங்கதான் இருக்கும் நல்ல பாரு

இல்லபா தொலஞ்சி போச்சு

மறுமுனை:  ம் ...... fridge ஐ தொறந்து பார் .

ஹோ இங்க இருக்கு சரி சரி நா பாத்துக்குறேன் நீ புள்ளைய பத்திரமா பா ......டொங்  ..... ஹோ கட் பண்ணிட்டியா
---------------------------------------------------------------------------------------------------------------------

மாலையில் நான் வீடு திரும்பியது அப்படியே சோபாவில் வெகு நேரம் அமர்ந்துவிடுகிறேன். அடுத்து எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஏன் இப்படி அமர்ந்திருக்கிறேன் என்று யோசிக்கும் போது.......

வா கொஞ்ச நேரம் பார்க்ல நடந்துட்டு வரலாம்,

இன்னக்கி நாம வெளில போலாம் ,

இன்னக்கி உனக்கு ஒன்னு சமச்சி இருக்கேன் ஜென்மத்திலும் இந்த மாதிரி சாப்பிட்டிருக்க மாட்ட ,

இந்தா இவனோடு கொஞ்சம் விளையாடிட்டு இரு,

இன்னக்கி நாம ஏதாவது சூப்பரான படம் பார்க்கலாம்,

நேத்து அந்த மேல் வீட்டு அம்மா என்ன பண்ணுச்சு தெரியுமா .......

என்று நீ சொல்லியது எல்லாம் நினைவுக்கு வந்தது.

உன்னோடு இருந்த நேரம் முழுவதும் நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ தான் முடிவெடுத்து இருக்கிறாய். அதனால் தான் அந்த கணங்கள் அவ்வளவு அழகாய் என்னை கடந்து போயிருக்கின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------------------

பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை மட்டுமே நான் வீட்டில் தங்கி இருந்தேன். அதன் பின் நீ வரும் வரை பல வருடங்கள் தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ அறைகளில் தங்கி இருந்தேன்.
வேலை முடிந்து திரும்புகையில் நான் அறைக்கு  போகிறேன் என்று தான் நண்பர்களிடம் சொல்லிவிட்டு வருவேன்.

ஆனால் நீ வந்த பின்பு நான் வீட்டுக்கு போகிறேன் என்று சொல்ல பழகினேன். அப்போது நெஞ்சில் கொஞ்சம் பெருமிதம் ஊரும்.

 நேற்று என்னை அறியாமல்  நண்பனிடம்  நான் அறைக்கு போகிறேன் என்றதும் மனதில் ஒரு துளி அமிலம் விழுந்து ஆழ இருங்குவது போல் இருந்தது.

-------------------------------------------------------------------------------------------------------------------

அந்த மாபெரும் வணிக வளாகத்தில் சிலரே உலவிக்கொண்டு இருந்த துணிக்கடையில் உயரத்தில் இருந்த ஒரு துணியை எடுக்க முயற்சித்துக்கொண்டு இருந்தாய்.

முன்னமே அதே போன்ற  உடையை  உனக்காக எடுத்து கையில் வைத்துக்கொண்டு உன்னை தேடிக்கொண்டு இருந்த நான் உன்னை கண்டு பின்னால் நின்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஏதோ உள்ளுணர்வில் தீடீர் என்று திரும்பிய நீ என் கையில் அடர் மஞ்சள் துப்பட்டாவை கண்டதும் ஒரு மென் சிரிப்பை உதிர்த்துவிட்டு, ஓ நீ மஞ்சள் எடுத்துவிட்டாயா   ம் .... எனக்கு நீலம் தான் வேண்டும் என்றாய்.

நான் ஓஹோ என்றேன்.

என் கோரிக்கைகள்  அனைத்தையும் ஒரு சிறு மாற்றம்  செய்தபின் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் உன் சூட்சமத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் ஏதோ ஒன்றை நமக்குள் தக்க வைக்க முயற்சிக்கிறாய் என்று மட்டும் புரிகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------

மழைக்கு முன்னால் வீசிய பெரும் காற்றில் நீ உலர்த்திய ஆடைகளை எடுக்க பாடுபட்டுக்கொண்டு இருந்தாய்....

ஆடைகள் பறந்து சிக்கி படபடத்து உன்னை அலைகழித்தது

உன் கருந்தழல் முடிகள் காற்றில் பறக்க கண்கள் சுருங்கி, உதடுகள் மடிந்து, உன் ஆடைகள் அலைந்து பறக்க ஒரு நவீன ஓவியம் போல் இருந்தாய்.

சில மழைத்துளிகள் என் முகத்தில் விழுந்து உணர்வுகள் கலைந்த போது

டேய் எண்டா லூசு மாதிரி பார்த்துட்டு இருக்க உன் சட்ட பறக்குது பார் புடி புடி போ ... நீ கண்கள் விரிய கத்தினாய்

நான் சிரித்து விட்டு ஆடையை பிடிக்க போனேன்.

அதன் பின் ஏன் சிரித்தாய் என்று நீ பலமுறை கேட்டுவிட்டாய்.......

---------------------------------------------------------------------------------------------------------------------







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக