"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

சனி, நவம்பர் 07, 2015

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

வேலுர் சாரதி மாளிகைக்கு அருகில் ஒரு பழைய புத்தகக்கடை இருந்தது. என் மாமா அங்கு  பழைய அம்புலி மாமா புத்தகங்களை  வாங்குவார். நான் எப்போதெல்லாம் வேலூர் சென்றாலும் அந்த கடையில் மர்ம நாவல்கள் அல்லது காமிக்கிஸ் புத்தகங்கள் என்று எதாவது வாங்குவேன். அப்போது சிறுகதை, புதினம் , புனைவு , நாவல், கட்டுரை என்ற வார்த்தைகள் அறிமுகம் ஆகவில்லை. ஒருநாள் அப்படி துழாவிக்கொண்டு இருக்கும்போது ஐந்து புத்தகங்கள் ஒரே கட்டாக புத்தகக்குவியலில் கிடந்தது. மேல் அட்டைகள் இருக்கவில்லை. பக்கங்கள் நூல் பிரிந்து உதிரத்துவங்கும் பூங்கொத்து போல இருந்தது. அந்த கட்டியின் மேல் பொன்னியின் செல்வன் என்று எழுத்தி இருந்தது . ஐந்து புத்தகமும் சேர்த்து இருவது ரூபாய் என்றார் கடைக்காரர்.

புத்தகங்களை வாங்கி வீட்டுக்கு எடுத்துவந்து புரட்டிக்கொண்டு இருந்தேன். இரண்டாம் புத்தகத்தில் ஒரு சிறிய ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி இருந்தது. இதற்க்கு முன் எதோ ஒரு பெண் அதை படித்திருக்கிறார் என்று தோன்றியது. அந்த இளம் வயதில் புத்தகத்தை படிப்பதை விட்டுவிட்டு அந்த பெண்ணை பற்றி கற்பனை செய்துகொண்டு இருந்தேன். வெகு நாள் அந்த புத்தகங்களை படிக்கவே இல்லை.

2008 ல்  நான் சவூதி வந்த பின் அந்த புத்தகத்தை படிக்கத்துவங்கினேன். ஒரு பக்கத்துக்கு மறுபக்கம் ஒரு பத்திக்கு மறுபத்தி ஒரு வரிக்கு அடுத்த வரி ஒரு சொல்லுக்கு அடுத்த சொல் என்று என்னால் சுவாரசியம் தாங்க முடியவில்லை. வேலையை விட்டு வந்து அமர்ந்து கொண்டால் இரவு உண்டு படுப்பதுவரை படித்துக்கொண்டு இருப்பேன். ஒரு நாள் விடாமல் தொடர்ந்து ஒரு மாதம் அந்த ஐந்து புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். அந்த வயதில் காதல், வீரம் , மர்மம் என்ற முக்கியமான உணர்வுகளை அது எழுப்பிக்கொண்டே இருந்தது. அதன் பின் " சிவகாமியின் சபதம் " படித்தேன். அது எனக்குள் மாபெரும் கற்பனை உலகை படைத்தது தொடர்ந்து நல்ல நாவல்களை தேடிப்படிக்க இது நல்ல தொடக்கமாக அமைந்தது.

சமிபத்தில் என் நண்பர் பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் எனக்கு கொடுத்தார் . வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு காரில் ஒருமணி நேரம் பயணம் செய்வதால் வழியில் கேட்க அதை வாக்கினேன்.

திரு . பாம்பே கண்ணன் மற்றும் சி .கே வெங்கட்டராமன் இணைந்து  உருவாக்கி இருக்கும் இந்த ஒலி புத்தகம் ஒரு அறிய முயற்சி. வழக்கமாக ஒலி புத்தகம் யாரவது படிப்பதாக இருக்கும். ஆனால் இந்த புத்தகம் நாடக பாணியில்  உருவாக்கப்பட்டுள்ளது . மொத்தம் 64 கலைஞ்சர்கள் இதில் பங்கு பெற்றிருக்கிறார்கள். மொத்தம் 5 DVD கள். 78 மணிநேரம் .

சமிபத்தில் நான் ஒரு நாவலை ஒலி புத்தகமாக மாற்றினேன். நான்கு மாத கடும் உழைப்பை கோரியது அந்த பனி. அதை ஒப்பு நோக்கும் போது திரு. கண்ணன் அவர்களில் கற்பனைக்கு எட்டாத கடும் உழைப்பை உணரமுடிகிறது.

திரு. கண்ணன் அவர்களின் குரலில் கதை துவங்குகிறது. " சல சல என்று ஓடும் நதி " சிலு சிலு என்று விசும் காற்று " என்று அவர் வர்ணிக்கத்துவங்கும் போது நாம் அந்த சுழலை இயல்பாக கற்பனை செய்ய முடிகிறது. திரு கல்கியின் அழகு தமிழை தன் இயல்பான மொழி நடையில் திரு. கண்ணன் கையாள்வது அழகு.

ஒருவரின் இயல்புகளை அவர் குரலை வைத்து நம்மால் உகிக்க முடியும். ஒலி வடிவ நாடகங்களில் கதா பத்திரத்தின் இயல்புகளை நாடக நடிகரின் குரல் மற்றும் அவர் மொழியை வைத்து நாம் கற்பனை செய்கிறோம். அதனால் கதப்பத்திரத்தின் இயல்புக்கு ஏற்ப குரல் தேர்வு என்பது முக்கியம்.

இந்த ஒலி புத்தகத்தில் மிகத்துல்லியமாக குரல்களை தேர்வு செய்திருக்கிறார்கள். இதில் பங்கு கொண்ட ஒவ்வொரு கலைஞ்சரும் கதா பத்திரத்தின் இயல்புகளை , உணர்வுகளை தன் குரலால் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

துடுக்கும் வீரமும் நிறைந்த வந்தியத்தேவனின் குரல் , கண்ணியமும் கணவுகளும் நிறைந்த அருண்மொழி வர்மரின் குரல் , முன்கோவமும் வீரமும் நிறைந்த ஆதித்த கரிகாலரின் குரல்  , அறிவும் அழகும் நிறைந்த குந்தவை தேவியின் குரல் , மென்மை ததும்பும் வானதி ,  துக்கமும் வலியும் நிறைந்த சுந்தர சோழரின் குரல், பக்தி கலந்த செம்பியன் மாதேவி குரல், அதிகாரமும் கர்ஜனையும் மிகுந்த பழுவேடரையர்களின் குரல், சூட்சமம் நிறைந்த வைஷ்ணவனின் குரல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒவ்வொருவரும் தன் குரலால் அற்ப்புதம் நிகழ்த்தி இருக்கிறார்கள்.

நான் மிகவும் ரசித்தது பூங்குழலின் குரலும் நந்தினியின் குரலும்.

காட்டுக்கொடி போல எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்பவள் பூங்குழலி. யாரும் பார்க்கவிட்டாலும் தன்னியல்பில் பூத்துச்சிரிப்பவள். தன்னியல்பில்  வாடி அழுபவள் . நிலையில்லாத கடலைப்போன்றவள். இந்த அத்தனை இயல்பும் அந்த குரல் பிரதிபலிக்கிறது.

காமம் ஒரு துளி , அழகு ஒரு துளி , நளினம் ஒரு துளி , வஞ்சம் ஒரு துளி என்று சேர்த்த குரல் நந்தினியின் குரல்.

கதையின் இறுதியில் ஆதித்த கரிகாலருக்கும் நந்தினிக்கும் நடக்கும் உரையாடல்  சிறந்த எடுத்துக்காட்டு. ஏமாற்றமும், முன்கோவமும் , தவிப்பும் நிறைந்த குரலில் ஆதித்த கரிகாலர் கொதித்து தளும்ப மறுபுறம் குழப்பமும், கோவமும் , காதலும் , குரோதமும் ததும்ப நந்தினி அவரிடம் நெகிழ, இரண்டு கலைஞ்சர்களும் தன் நடிப்பால் உச்சத்தை அடைகின்றார்கள்.

 அடுத்து முக்கியமான இரு  விஷயங்கள்  இசையும் பின்னணி ஒலி அமைப்பும்.

சோக நிகழ்வின் பின்னணியில் ஒலிக்கும் அந்த புல்லாங்குழ

ல் இசையும் , பாடல்களும் கதை மாந்தர்கள் பெரும்  உணர்வுகளை நமக்குள் எழுப்புகின்றன.

 இடை இடையே வரும் போர்கள பின்னணி இசை மற்றும் ஓடைகளின் சலசலப்பு , குதிரை காலடி சத்தம், முரசொலி அனைத்தும் கதை நடக்கும் காலத்துக்கு நம்மை அழைத்துச்செல்கிறது.

இந்த கதையை கேட்டுக்கொண்டு இருந்த கடந்த ஒரு மாத காலமாக வந்தியத்தேவன் மற்றும் அருண்மொழி வர்மனோடு வாழ்ந்தது போல் இருந்தது.

இதில் பங்காற்றிய அனைத்து கலைஞ்சர்களுக்கும் வாழ்த்துகள் .

பொன்னியின் செல்வன் போலவே பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் , ரமண சரித்திரம் மூன்று புத்தகங்களும் ஒலி  வடிவமாக  கிடைக்கிறது.

CD பெற திரு பாம்பே கண்ணன் அவர்களை முகனுளில் தொடர்பு கொள்ளலாம்.

www.facebook.com/bombaykannan.kannan

C K Venkataraman
17 D, Sumanth Aptt, Devanathan Street, Mandaveli, Chennai 28
email : venkyckv@gmail.com
Ph: +91 44 24939595
Mobile : +9198441 138304 /
+ 91 9841153973 (bombay Kannan)























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக