"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, நவம்பர் 22, 2015

மகன் வயது 3.5

நாங்கள் சவுதியில் இருந்து ஊருக்கு கிளம்புவது  பெரிய வேலை. அதற்கான ஆயத்த வேலைகள் மூன்று மாதங்களுக்கு முன்பே துவங்கிவிடும். முதலில் எங்களுக்கான புதிய உடைகளை வாங்க வேண்டும். அங்கு நாங்கள் பயன்படுத்தும் பொருட்கள்  ஒரு பட்டியல் இருக்கும். கவிதா மற்றும் என் குடும்பத்தில் மொத்தம் பத்து உபகுடும்பங்கள் இருக்கின்றன. அதில் பெண்களுக்கு என்ன வாங்க வேண்டும் ஆண்களுக்கு என்ன வாங்க வேண்டும், பெரியவர்களுக்கு மற்றும் சிறியவர்களுக்கு என்ன வாங்க வேண்டும் என்று கவிதா முடிவெடுத்தவுடன் ஒவ்வொரு வாரம் ஒரு கடைக்கு போவோம். ஊருக்கும் கிளம்பும் ஒருவாரத்துக்கு முன் பொருட்களை பத்தாக பிரித்து அடுக்க துவங்குவோம். அதை எடை பார்த்து தேவையில்லாத பொருட்களை எடுத்துவிட்டு மறுபடியும் அடுக்கி கிளம்புவதற்கு முதல் நாள் வரை இது தொடரும்.

நான் ஊரில் வேலை செய்யும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் அக்காவை சந்திக்க செல்வேன். அக்கா குழந்தைகளை கடைகளுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுப்பேன். சிறிய பொருட்செலவுதான் ஆனால் அது கொடுத்த மகிழ்ச்சி பசுமையான மகிழ்ச்சி.

அதற்கான வாய்ப்பு இப்போது வருடத்து ஒருமுறை கிடைக்கிறது. அதனால் ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து வாங்க துவங்கும் போதே அந்த மகிழ்ச்சி எங்களுக்கு துவங்கி விடுகிறது. பரிசளிக்கும் போது அவர்களின் மகிழ்வை நாங்கள் கனவு கானத்துவங்கி விடுவோம். அக்ஷய்க்கு ஒவ்வொரு பொருளையும் யாருக்காக வாங்குகிறோம் என்று சொல்லிக்கொண்டே இருந்தோம். ஊருக்கு சென்றதும் அத்தனையும் நினைவில் வைத்து அவனே அவர்களுக்கு கொடுத்தான்.

இங்கு அவனுக்கு நேரடியான சொந்தங்கள் இல்லை. ஆனால் என் நண்பர்கள் எங்களுடன் குடும்பம் போல பழகி விட்டதால் அவனுக்கும் அப்படியே பழகி விட்டது. சித்தப்பா , சித்தி , அத்தை , மாமா, அண்ணன் என்று பெரும்பாலான உறவுகள் அவனுக்கு தெரிந்து விட்டது.

அதனால் ஊரில் அந்த உறவுகளை அவனுக்கு பழக்குவது எங்களுக்கு எளிமையாக இருந்தது.

அங்கு யார் யார் மாமா யார் யார் பெரியப்பா, அண்ணன்கள் என்று இரண்டு நாட்களில் புரிந்து கொண்டுவிட்டான்.

இங்கு அவனை வெளியில் அழைத்து போகும்போதும் , பூங்காக்களில் அவன் விளையாடும் போதும் என் கண்களும் , என் சிந்தையும் அவனை சுற்றியே இருக்கும். ஆனால் கிராமத்து வீட்டில் அவனை கொண்டு போய் விட்டவுடன் ஏதோ ஒரு விடுபடலை  மனதில் உணர்ந்தேன். என் சிந்தையிலிருந்து அவன் முழுமையாக இல்லாமலானான். அவன் தண்ணி தொட்டில்  குதித்து , மணலில் புரண்டு, கோழிகள் பின்னல் ஓடி, காலெல்லாம் உப்பு பூத்திருக்க , சளி ஒழுக ஓடி வந்து அப்பா நா அப்படியே அங்கிருந்து குதிச்சி ஓடி வந்துட்டேன் என்று சொன்னபோது " என் இனம்மட நீ " என்று கட்டிப்பிடிக்க தோன்றியது.

முதல் வாரத்தில் பைக்கில் ஏறவே இல்லை. ஏதோ வித்தியாசமான ஜந்துவை பார்ப்பது போல பார்த்துக்கொண்டு நின்றான். ஒவ்வொரு புதியனவற்றை அணுகும் போதும் அவன் கண்களில் பூக்கும் தயக்கம் , பயம் , வியப்பு அத்தனையும் பார்க்க எனக்கு சிரிப்பாக இருக்கும். எப்படியோ ஒரு நாள் வண்டியில் அமர்ந்து கடைக்கு சென்று திரும்பிவிட்டான். எதோ புதிய ஜந்துவை வென்றுவிட்ட துடிப்பு அவன் மனதில் பொங்கி விட்டது. உணர்ச்சி பொங்க அம்மா நா வண்டியில போய்ட்டு வந்துடேன். மாமா நா வண்டியில போயிட்டு வந்துட்டேன்.  என்று ஊரெல்லாம் உற்சாகமாக சொல்லிக்கொண்டு இருந்தான். அவன் மாமா ஒருவர் வண்டி மெக்கானிக் என்பதால் தினமும் ஒரு வண்டியை வீட்டுக்கு கொண்டு வருவார். ஒரு வாரத்தில் பல வண்டிகளின் பெயர்களை தெரிந்துகொண்டுவிட்டான். ஒரு நாள் அவனை டிவிஎஸ் , ஹோண்ட , யேமஹா ஷோரூம்களுக்கு   அழைத்துக்கொண்டு போய் சுற்றிக்காட்டினார். வீட்டில் என்னிடம் வந்து அப்பா அப்பாச்சி பார்த்தேன் பா என்று இரண்டு கைகளை விரித்து வியப்பு கண்களில் தெறிக்க சொல்லிக்கொண்டு இருந்தான்.

அப்போது ஒன்றை நான் கவனித்தேன். ஒவ்வொரு கணமும் அவனோடு நாங்கள் இருந்ததால் அவன் பார்க்கும் புதிய விசயங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பே அவனுக்கு இல்லை. துண்டு துண்டாகத்தான் பேசுவான். ஆனால் ஊரில்  பெரும்பாலும் மற்றவர்களோடு சுற்றிக்கொண்டு இருந்தான். சென்று வந்தவுடன் எங்கு போனான் யாரை பார்த்தான் என்ன வாங்கினான் என்று கோர்வையாக பேசத்துவங்கிவிட்டன்.

" சில விஷயங்களை பிள்ளைகள் தனக்கு மட்டுமே தெரியும்  என்று நம்புகின்றன. அந்த விஷயங்களை ஆர்வமுடன் நம்மிடம் பகிர்ந்து கொள்ள முற்படும் போது அவர்களை அனுமதித்தாலே அவர்கள் சரளமாக பேசத்துவங்குவர்".

முதல் முறையாக அவனை அழைத்துக்கொண்டு "பாகுபலி " படம் பார்க்க சென்றோம். சவுதியில் திரையரங்குகள் இல்லை. முதல் முறையாக அவ்வளவு பெரிய திரையில் கட்சிகள் அசைவதை பார்த்ததும் மிரட்சியில் இமையசையவில்லை. பக்கவாட்டில் பின்னல் வரும் சத்தங்களை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு இருந்தான்.

பாகுபலி லிங்கத்தை தூக்கி தோளில் வைப்பது போலவே இன்றும் குப்பைத்தொட்டி , தண்ணிர் பாட்டில் , பொம்மைகள் அனைத்தையும் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு நடந்து தண்ணிரில் போடுகிறான்.  அவனுக்கு ஒரு லிங்கம் செய்துகொடுக்கலாம் என்று எண்ணம் தோன்றியது. அந்த எண்ணத்தை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் தனி கதை. அதை தனியாக தன் எழுதவேண்டும்.

இங்கு வந்தவுடன் அவனை பாலர் பள்ளியில் சேர்க்க முடிவு செய்திருந்தோம். அதற்க்கு முன்னோட்டமாக ஊரில் வீட்டுக்கு அருகில் உள்ள கிருஷ்ணா  பாலர் பள்ளியில் 14.09.2015 திங்கட்கிழமை அவன் அம்மா சேர்த்தார்கள். முதல் முறையாக புதிய இடத்தில் அறியா நபர்களுடனே மூன்று மணிநேரம் அன்று முதல் முறையாக இருந்தான். ஒரு வாரமாக நீ பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தோம். அவன் அண்ணன்கள் தினமும் பள்ளி செல்லுவதை பார்க்க பார்க்க அவனுக்கும் ஆர்வம் வந்தது. முதல் நாள் அவனுக்கு தனியாக புத்தக பை மற்றும் பேனா பென்சில் இத்தியாதிகளை வாங்கி விட்டோம். அவன் முதல் நாள் பள்ளிக்கு செல்லும்போது நான் இங்கு சவூதி வந்து விட்டு இருந்தேன். காலையில் அவன் அம்மாவும் மாமியும் அவனும் கிளம்பி இருக்கிறார்கள். உற்சகமாக அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி பள்ளிக்கு சென்றிருக்கிறான். அங்கு நுழையும் போது முற்றத்தில் மழை துளிகள்  இணைந்து  சிறு ஓடை என வழிய துவங்குவது போல பயம் , தயக்கம் , மிரட்சி அத்தனையும் இணைந்து  விம்மி அழுதுவிட்டான் . கவிதா தன் மனதை பிடித்து வைத்திருந்தாலும் அவன் மாமி அங்கேயே அழுதுவிட்டார். சுகன்யா மிஸ் அவனை வாரி அனைத்து அழைத்து உள்ளே சென்றிருக்கிறார். அங்கு படித்த நாப்பது நாட்களுக்கும் பள்ளிக்கு போகிறேன் என்று அடம்பிடித்தும்  வேண்டாம் என அழுதும் ஒவ்வொரு நாளும் ஒரு கோலம். அதற்குள் இரு நண்பிகள் வேறு காவியா மற்றும் கோபிகா.

சுகன்னியா மிஸ் நல்லபடியாக பார்த்துக்கொண்டதாக சொன்னார்கள். அவனை அழைத்துவர செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் மடியில் தான் உறங்கிக்கொண்டு இருப்பனாம்.

அவனிடம்  கடந்த மூன்று வருடங்களாக கட்டை விரல் சூப்பும்  பழக்கம் இருந்தது. அந்த மிஸ் தான் கொஞ்ச கொஞ்சமா சொல்லி சொல்லி அந்த பழக்கத்திலிருந்து அவனை விடுவித்திருக்கிறார். அவனுக்கு போர் அடிக்கும் போதும், தூக்கம் வரும்போதும் கையை வாயில் வைத்துவிடுவான். இன்னொரு கொடுமை அவன் அம்மாவின் தலி கயிற்றையும் பிடித்துக்கொள்வான். இப்போது இருவருக்கும் விடுதலை. அந்த பழக்கம் விட்டதிலிருந்து நன்றாக சாப்பிடவும்,பேசவும், விளையாடவும் செய்கிறான்.

பள்ளிக்கு சென்றவுடன் அவன் பழக்கவழக்கங்கள் முறை படுத்தப்பட்டு இருக்கிறது. ஆடையில் கக்கா போவதில்லை , நேராக கழிவறைக்கு சென்று விடுகிறான் . புட்டியில் பால் குடிப்பதை தவிர்த்து டம்ளருக்கு மாறிவிட்டன.

இங்கு வந்ததும் பத்து நாள் கழித்து ஜாக் & ஜில் பாலர் பள்ளியில் 15 ஆம் தேதி சேர்த்தோம் . வழக்கம் போல முதலில் கொஞ்சம் அழுகையோடு துவங்கினான். வீட்டுக்கு கிழே வண்டி வந்து அழைத்து சென்றாலும் கவிதாவுக்கு தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் பள்ளிக்கு சென்று திரும்பும் வரை எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததாக சொன்னால். அப்பா நானே போயிட்டு வந்துடேன் என்று போனில் உரக்க கத்தினான். ஆபிஸில் இருந்தேன் அள்ளி அணைத்துக்கொள்ள முடியவில்லை. மாலையில் வீடு திரும்பியதும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தான். அவனுக்கான பொறுப்பு இன்றிலிருந்தே துவங்கி விட்டது. இனி அவனுக்கோ அல்லது  யாருக்கோ அவன் கால்கள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். மனதில்,  புலப்படாத  ஓட்டம் ஒன்று ஒட்டிக்கொண்டுவிட்டது. இனி அவன் கால்கள் ஓய்ந்தாலும்  மனம் ஓயாது.

அவன் இரு கால்களையும் மடியில் வைத்துக்கொண்டு அவனுடனே படுத்துக்கொண்டேன்.
                                                                                                                                     - கிராமத்தான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக