புதிய வீடு கட்டும் முனைப்பில் இந்தமுறை நான் திட்டமிட்ட அறக்கட்டளையின் செயல்பாடுகளை முழுமையாக செயல்படுத்தமுடியவில்லை.
இப்போதைக்கு நான் படித்த அரசு பள்ளியில் திட்டங்களை செயல்படுத்திவருகிறோம்.
இந்த வருட திட்டம் பள்ளி கழிவறைகளை புனரமைப்பது. மற்றும் இன்னும் இரு அரசு பள்ளிகளை தத்தெடுப்பது.
கழிவறைகளுக்கு பழைய உடைந்த கதவுகளை அகற்றிவிட்டு புதிய சிமெண்ட் கதவுகளை பொருத்தப்பட்டுள்ளது.
குழாய்களை சீரமைக்கும் பணியும் மேல் கூரை அமைக்கும் பணியும் பாக்கியுள்ளது. அடுத்த மாதம் அந்த வேலையும் முடிந்துவிடும்.
ஒருகட்டிடம் முழுக்க போதிய வெளிச்சம் இல்லாமல் குழந்தைகள் படித்துக்கொண்டிருந்ததை தலையாசிரியர் சுட்டி காட்டி இந்த கட்டிடத்துக்கு மின்வசதிகள் உள்ளது ஆனால் மின்சாரம் அருகில் உள்ள கட்டிடத்திலிருந்து கொண்டுவர வேண்டும் என்கிறார். அப்படி கொண்டுவர கேபிள் வசதி இல்லை என்றும் கூறினார். அன்று மாலை 1700 ரூபாய்க்கு கேபிள் வாங்கி மறுநாள் காலை அந்த கட்டிடத்துக்கு மின்சாரம் கொண்டுவந்தோம்.
இந்த வேலைகளை பார்த்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தன் பங்குக்கு ஐந்து மின்விசிறிகளையும் ஐந்து டியூப் லைட் களையும் அன்பளித்தார்.
ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுக்க இரண்டு மணிநேரம் எனக்காக தலைமை ஆசிரியர் ஒதுக்கி அளித்தார். என் ஆசிரியர் ( ஜெ ) எழுதிய அறம் பற்றிய கருத்துக்களை அவர்களுடன் விவாதித்தேன்.
இந்த முறை என்னுடன் வேலை செய்யும் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் குழந்தைகளுக்கு உதவிட பணம் கொடுத்தனர்.
கேட்டவுடன் கணம் கூட யோசிக்கவில்லை. என் விழிகளைக்கூட பார்க்கவில்லை. கொடுத்தார்கள். இதில் என் பாகிஸ்தானிய நண்பர்களும் அடங்கும்.
அந்த பள்ளி குழந்தைகளின் குமிழ் சிரிப்பு இந்த வருடத்தில் நான் பெற்ற இணையற்ற செல்வம். அதை என் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக