இவனுடன் விளையாடுவதற்கு கொக்கினும் பொறுமை வேண்டும்.
விளையாட்டின் அனைத்து விதிகளையும் அவனே உருவாக்குவான்
அப்பா இந்த இடத்தில் ball பட்டால் winner ஓகே
சரி என்று அடித்து ball அங்கு பட்டால் அப்பா இங்க வைங்க பா
இங்க வச்சி அடிங்க
சரி என்று குனிந்தாள்
அப்படி இல்ல இப்படி வைங்க ,
சரி என்று அடிக்க முற்பட்டால் பந்தை எடுத்துக்கொள்வான் I am the winner என்பான்.
நேற்று முன்தினம் மாலை நானும் அவன் நண்பர்களும் விளையாடிக்கொண்டு இருந்தோம்.
அதில் ஒரு குட்டி பையன் ஒரு பெரிய பந்தை எடுத்து வந்தான்.
அதை பார்த்து மற்ற குட்டிகளும் அதே போல பந்தை எடுத்து வந்து விளையாடினர்.
அதைப்போல பந்து இவனிடம் இல்லை
சாலை ஓரத்தில் எப்பொழுதாவது போடப்படும் கடைகளில் கிடைக்கக்கூடிய பெரிய பந்து அது
நேற்று நான் அலுவலகத்தில் இருக்கும்போது என்னிடம் போனில் பேசினான்
அப்பா எனக்கு அந்த Ball வேணும் வாங்கிட்டு வாங்க என்றான்
தம்பி அது கிடைக்காது பா அந்த கடை எப்பவாது தான் போடுவான்
அப்பா இன்னிக்கி கட இருக்கும் பா வாங்கிட்டு வாங்க
நான் வழக்கமாக போவது இருவழி சாலை
போகும்போது அது போன்ற சாலையோர கடைகளை பார்ப்பேன்
ஆனால் வரும்போது ஒரு நாளும் பார்த்தது இல்லை.
இன்று வரும்போது பாதிவழியில் திடீரென ஒரு கடையை கடந்தேன்
ஆனால் நிறுத்தி பின்னால் வர முடியாத சூழல்
தவறவிட்டோமே என வருந்தி வந்துகொண்டு இருந்தேன்
அடுத்து ஐந்து நிமிட தூரத்தில் இன்னொரு கடை இருந்ததைக்கண்டு துள்ளலுடன் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினேன்
ஒரு அரபி சிறுவன் ஓடிவந்தான். அவன் அரபியில் கேட்டது புரியவில்லை. நான் அந்த பந்தை கை காட்டினேன். அவன் அரபியில் விலை சொன்னதை புரிந்துகொள்ளாமல் போன் எடுத்து அதில் எண்களை காட்டினேன்.
அவன் 15 என்று அழுத்தினான். நான் பணத்தை கொடுத்ததும் அவன் பந்தை கொடுத்தான்.
அவன் அப்பா ஓடிவந்து அது 20 ரியால் என்று பையனை தட்டினார். அவன் முகம் சுருங்கி என்னை பார்த்தன்.
நான் மறுபடியும் 5 ரியால் கொடுத்ததும் வானத்தில் வான்வெடி வெடித்து சிதறுவது போல மலர்ந்தான்.
அந்த சிரிப்பு கையில் ஒட்டிக்கொள்ளும் செம்பருத்தி மகரந்தம் போல என்முகத்திலும் ஒட்டிக்கொண்டது
நான் வீட்டின் கதவை தட்டி பந்தை மகனிடம் கொடுக்கும் போது அதே மலர்வை அவனிடமும் கண்டேன்.
குழந்தைகளுக்கு தனியான ஒரு உலகம்
நமக்குள்ளும் கொஞ்சம் குழந்தைமை இருந்தால் மட்டுமே அந்த அதிசய உலகத்தை அணுக முடியும்