"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

சனி, ஏப்ரல் 30, 2016

என் திருமண நாளுக்கு வயது ஏழு

ஒரு நாள் என் உயிரின் ஊற்று புள்ளியில் ஒரு மட்கிய இலை ஒன்று விழுந்து அடைத்துக்கொண்டது. கைகால்கள் ஓய்ந்து படுக்கையில் வீழ்ந்து போர்வைக்குள் சுருண்டு புதைந்துக்கொண்டேன். நான் சேர்த்து வைத்திருந்த "நான்"கள் எல்லாம் எறிந்த காகித சாம்பல் போல விலகிப்பறந்தது. சிறுவெயில் வெப்பம் உடலில் பரவி படர்ந்து கனத்தது. மனம் அறைக்குள் மாட்டிக்கொண்ட பறைவையன நிலையில்லாமல் அலை பாய்ந்து கொண்டே இருந்தது. உணர்வு கயிற்றின் இறுதி இழை அரும் கணத்தில் குளிர்ச்சியான தொடுகை  ஒன்று நெற்றியில் படர்ந்தது . பூண்டின் மணம் நாசியில் ஏறியது. "என்ன இப்படி சுடுதே" என்று நீ சொன்னது மெலிதாக எங்கோ கேட்டதும் அது உன் கரங்கள் என்று உணர்ந்தேன். மனம் அந்த கரத்தை அப்படியே பற்றிக்கொள்ள என்  கைகளை வேகமாக உந்தியது. கை எழவே இல்லை.பாறையில் சரிந்து விழும் ஒருவன்  பற்ற வேர் ஒன்று கிடைத்தும் தவற விட்ட தருணம். நீ விலகி செல்வதை கால் கொலுசின் ஒற்றை மணி ஒலி சொல்லியது. பின்பு நெருங்கி வருவதும் விலகிச்செல்வதுமாக அந்த ஒலி. காதில் அது மட்டுமே விழுந்தது. மனம் அதை மட்டுமே நாடியது. ஒரு கட்டத்தில் மனமே அந்த ஒலியாக மாறியது. "ஜல் ஜல் ஜல் " .

நான் எங்கு விழ்ந்து கிடந்தாலும்  உன் மணம், உன் தொடுகை , உன் ஒலிகள் , உன் பார்வை , உன் சொல் , உன் இருப்பு இவை அத்தனையும் சேர்ந்தோ அல்லது ஏதேனும் ஒன்றோ என்னை மீட்டெடுத்து   நிலைநிருத்திக்கொண்டே இருக்கிறது.

கடந்த ஏழு வருடங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். இனிவரும் ஏழேழு வருடங்களுக்காக பிராத்திக்கிறேன்.

1 கருத்து: