முதல் நாள் பூசைக்காக முதல் குழி எடுத்தவன், பூமி பூசை செலவு, அந்த நிலத்திலிருந்து தென்னை மரங்களை அகற்றும் செலவு, வாஸ்த்து பார்ப்பவன் , ஜோசியம் பார்த்து நாள் குறிப்பவர், செங்கல், மணல், சிமெண்ட், கம்பிகள் , மேஸ்திரி , தேவையான போது குழிகளை எடுக்கும் ஆட்கள், சுத்தம் செய்யவும் இதர சிறு சிறு வேலைகளை செய்யும் ஆட்கள், கம்பி கட்டுபவன், பெயிண்ட் அடிப்பவர், ஸ்டீல் குழாய்களை அமைப்பவர், எலெக்ட்ரியின், எலக்ட்ரிக் பொருட்கள், பிளம்பிங் பொருட்கள், மரவேலை செய்யும் ஐந்து குழுக்கள், தூண்களுக்கு சிற்பவேலை செய்பவர்கள், மார்பிள்ஸ் மற்றும் டைல்ஸ், மார்பிள்ஸ் அமைப்பவர், வீட்டுக்கு லைன் கொடுப்பவர், பெயிண்ட் மற்றும் அதை சார்ந்த பொருட்கள், தேவையான பொருட்களை நகரத்திலிருந்து வீட்டுக்கு கொண்டு வருவதற்கான வண்டி கூலிகள் ( கொஞ்சம் மூச்சி வாங்கி கொள்கிறேன் ) , கேட் மற்றும் கதவுகள், வீட்டு மேல் தளத்தில் பதிக்க மொசைக் கற்கள் அதை பதிக்க கூலி
வீட்டை சுற்றி மண் கொட்டி மேடு ஏற்ற விளைநில மண் மற்றும் அதை கொண்டுவர வண்டி கூலி, ஆட்களுக்கு டீ செலவு, சிலருக்கு மத்திய சாப்பாட்டு செலவு , புதுவீடு புகுவிழா செலவுகள், வீட்டுக்கு அரோ வாட்டர் மெஷின் போட்டவன், டிஷ் ஆண்டனா போட்டவன், வீடு மாற்ற உதவியவர்கள், புது வீட்டுக்கு தேவையான அடிப்படை பிளாஸ்டிக் பொருட்கள், கூசா பெட்டி ( பிரிஜ் பா ) , அண்டா குண்டா அடுக்கு சட்டி என அத்தனையுக்கும் செலவு 34 ஐ தொட்டிருக்கும் என்று சொல்கிறது கவிதாவின் நீண்ட மிக நீண்ட டைரி குறிப்பு.
மறைமுகமாகவும், நேரடியாகவும் கடன் 10 லகரம் இருக்கும் என்றும் முறைக்கிறது அந்த குறிப்பு.
மறைமுகமாகவும், நேரடியாகவும் கடன் 10 லகரம் இருக்கும் என்றும் முறைக்கிறது அந்த குறிப்பு.
அத்தனை செலவுகளையும் எழுதிவைத்து , அதை சரியாக கட்டுப்படுத்தி, வழிநடத்தி, பணமில்லாமல் நான் கால் தளர்ந்து அமரும் போதெல்லாம் பிறந்த வீட்டின் உதவிகளை பெற்று நான் ஊருக்கு வந்தபின் மீதி இருந்த அத்தனை வேலைகளையும் இறுதி துளிவரை முடித்து சாவியை அம்மாவிடம் கொடுத்துவிட்டு இங்கு சவுதிக்கு வந்து காலை உணவுகாக சட்னி அரைத்துக்கொண்டு இருக்கிறாள் கவிதா.
தம்பியுடையான் படைக்கு மட்டும் தான் அஞ்சான். நல்ல மனைத்துணையுடையான் ( மனைவி ) எதற்கும் அஞ்சான் ( சும்மா ஒரு பன்ச் காக)
இவ்வளவு செலவை இழுத்துவிட்டானே என்று மேஸ்திரி மேல் கடும் கோவம் இருந்தது. நாம் சொல்வதை அவன் எதையும் கேட்கவில்லை. நல்ல இருக்காதுபா என் பெரு கேட்டும்பா என்று மறுத்துவிடுவான். ஆனால் வீட்டை பார்த்தவர்கள் முதலில் சொன்ன வார்த்தையே மேஸ்திரி வேலை நல்ல செய்த்திருக்கார் என்பதுதான். அவனிடம் வேலை பார்த்தவர்கள் வீண் அரட்டை, நேரம் கடத்துதல், வேளையில் அசட்டை என்று இல்லாமல் கடுமையாக உழைப்பவர்கள். அவனுக்கு கொஞ்சம் திருப்தி இல்லை எனிலும் இடித்துவிட்டு கட்டச்சொல்லுவான். வீடு துவங்கிய நாள்முதல் முடியும் வரை ஒரு நாள் கூட வேலையை நிறுத்தவே இல்லை. அதே போல கட்டுமான பொருட்கள் வீணாகவில்லை. அதிகம் சொல்லி மிகையாகவில்லை. உள்ளூரில் வீடு கட்டுவதால் பெரும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது. அந்த விதத்தில் அவன் மேல் எனக்கு மரியாதையே ஏற்பட்டது. வீட்டின் முழுமைக்கும் அழகுக்கும் முழுக்க முழுக்க வேலு மேஸ்தியே காரணம். அவன் குலம் தழைத்து வாழ்க.
கட்டுமான பணி நடக்கும் போது வேளையாட்டுகள் வேலை செய்த சூழல் மனதுக்கு சங்கடமாக இருந்தது. கொத்தனார்கள் நாள் முழுவதும் சிமட்டிலும் ஈரத்திலும் நின்று வேலை செய்கிறார்கள். அவர்கள் வேலைக்குவந்த புதியத்தில் அந்த ஈரத்தால் உடல்நலமில்லாமல் போயிருக்கும். கைகள் பூத்து வெடித்து காய்த்திருக்கும். இப்போது அது அவர்களுக்கு அது பழகி இருக்கலாம். வண்ணம் பூசுபவர்கள் சுவற்றில் பட்டியை தேய்த்துக்கொண்டு இருக்கும் போது நான் உள்ளே சென்றேன். வீடு முழுக்க வெள்ளை துகள்கள் பரவி இருக்க இருவர் உடல் முழுக்க திருநீர் பூசிய ஆதிவாசிகள் போல என் எதிரே வந்தார்கள். எனக்கு நெடி மண்டையில் ஏறி தலை கனத்து வெளியே வந்துவிட்டேன். மார்பிள்ஸ்ன் ஓரங்களை மழுங்க தேய்ப்பவன் முகத்தில் ஒரு துண்டு மட்டும் கட்டிக்கொண்டு நாள் முழுக்க அந்த தூசி துகள்களுக்கு நடுவே வேலை செய்த்துக்கொண்டு இருந்தான். அனைத்திலும் உச்சம் கதவு ஜன்னல்கள்களை பாலிஷ் போடும்போது எழுந்த நெடி. அவர்கள் compressor மற்றும் gun எடுத்துவந்திருந்தார்கள். அவர்கள் வார்னிஷ் அடிக்கும்போது ஒரு நொடிகூட அந்த பகுதியில் நிற்க முடியவில்லை. நெடி நெஞ்சை கவ்வியது. இருவர்மட்டும் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு இரண்டு நாள் அந்த வேலையை செய்தார்கள். முன்மாலையில் அவர்கள் சோர்ந்து தலைகவிழுந்து நெளிந்து அசைந்து அமர்ந்திருப்பதை பார்த்தேன்.
அந்த வேலைகள் அனைத்தும் அனைவரின் உடலுழைப்பை மட்டுமல்ல உடலையும் சேர்த்தே கோருகிறது. அத்தனை பேரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேம் .
இங்கு பெரிய பெரிய ப்ரொஜெக்ட்டுகளில் முக்கிய பங்கு வகித்திருக்கிறேன். பல நெருக்கடியான சூழல்களை என் குழுவோடு சேர்ந்து சமாளித்திருக்கிறேன். அதில் அனுபவம் இருந்ததால் என் உள்ளுணர்வால் வேகமாக உறுதியான முடிவெடுக்க முடிந்தது.
ஆனால் வீடு கட்டுவது முற்றிலும் வேறானது. நம் சுற்றியுள்ள நெருங்கிய உறவுகளின் ஒவ்வொரு மனதிலும் ஒரு வீடு உள்ளது. அதனால் தன் விருப்பத்தை அவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கேட் சதுரமாக இருந்தால் நல்லா இருக்கும் , சுற்று சுவர் நான்கு அடி உயரம் இருக்கவேண்டும், முதல் நுழைவாயிலில் விநாயகர் சிலை செதுக்கு நல்லா இருக்கும், வீட்டுக்கு மஞ்சள் நிற வண்ணம் பூசு என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அது நம்மை சுற்றி ஒரு உணர்வு வலையை ஏற்படுத்தும். அதன் நடுவே நின்றுதான் நாம் வேலை செய்யவேண்டும் . நாம் ஒரு சொல் தவறாக சொல்லிவிட்டாலும் அது நமக்கு எதிராக பூதம் போல எழுந்து நிற்கும். வேலை முடியும் வரை பொறுமையாக இருக்கவேண்டும். என்னைவிட கவிதா பொறுமையாக இருந்தாள். ஆனாலும் சுற்றத்தாரின் உதவி போற்றத்தக்கது.
நமக்கு நுண்ணுனர்வு மட்டும் இருந்தால் வீடு கட்டும் வேலை நமக்கு பலவிதமான மனிதர்களின் குணங்களையும் வாழ்வின் அத்தனை பக்கங்களையும் திறந்து காட்டிவிடும். அதைத்தான் வீட்டைக்கட்டிப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள் போல.
சிலர் இந்த இடத்தில் இவ்வளவு பணம் போட்டு வீடு கட்டி இருப்பது வீண்தான் என்றனர். சிலர் இந்த மாதிரி அமைதியான இடத்தில் வீடு அமைவது வரம் என்றனர். இப்போதைக்கு விடுமுறைக்கு மட்டும் சென்று நங்கள் அங்கு தங்குவோம். ஆனால் ஊழின் விழவு எப்படி இருக்கும் என்று நம்மால் கணிக்க முடியாது. என் ஆசிரியர் சொல்வது போல ஒரு கரையான் தன் வாழ்நாள் முழுக்க சில மண் துகள்களை மட்டுமே நகர்த்தி ஒரு மாபெரும் புற்றை கட்ட உதவும். அந்த புற்றை தூரத்திலிருந்து முழுமையாக பார்க்கவோ உணரவோகூட அதனால் முடியாது. அதுபோலவே நானும் இந்த மாபெரும் மனிதவாழ்வில் ஒரு அணுவின் அணுவை நகர்த்தி வைத்திருக்கிறேன். அதன் காரணங்களை என்னால் உணர முடியவில்லை.
என் வாழ்வின் வேர் அந்த பூர்விக இடத்திலும் கொஞ்சம் பரவி இருக்கிறது அவ்வளவே.
என்றோ ஒருநாள் இரண்டு கிழவனும் கிழவிகளும் கிராமத்தைவிட்டு தோப்புக்கு வந்து கூலிக்கு வேலைசெய்து குடில் அமைத்து பிள்ளைகளை பெற்று நிலங்களை பெருக்கி அங்கு ஓர் குறுங்குழுவை உருவாக்கி இருக்கிறார்கள்.
இன்று அந்த இடத்தில் ஐந்தாம் தலைமுறை உருவாகிவிட்டது.
நான் எங்கு பறந்தாலும் அந்த கிளை படரும் பெருமரத்தில் எனக்கும் ஒரு சிறு பொந்து இருக்கிறது. வருங்காலத்தில் சொந்தக்களின் வஞ்சத்திலும் , கூடி கொண்டாடும் மகிழ்விலும் நானும் என் மகனும் திளைக்க அந்த வீடு ஒரு வாய்ப்பாக அமைக்க.
ஓம் ஓம் ஓம் .....



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக