"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

சனி, ஜனவரி 10, 2015

காதல்



                                             

முதல் வகை காதல்

மனிதனின் ஆதி உணர்வுகளில்  ஒன்று காதல் .  அந்த காதலை நமக்குள் எழுப்புபவள் ஒரு தேவதை. நிலவின் மகள். குளிர்ந்த இளம் பொன்னொளியால் ஆனவள்.

உதிர்ந்த பழுத்த இலை மெதுவாக காற்றில் ஆடி கீழ் இருக்கும் தெளிந்த நீர் நிலை மேல் விழுந்து மெல்லலைகளை எழுப்புவது போல அவள் தன்
பொன்னொளி சிறகை விரித்துப்பறந்து வந்து தன் முயல் பஞ்சு பாதங்களை நம் மனதின் மேல் வைக்கும்போது நாமும் சிறு அலைகளை உணர்வோம்.

அவள் நம் அகங்காரத்துடன் பேசத்துவங்குகிறாள்.

ஒரு பெண்ணின் மனதில் புகும் அந்த தேவதை உனக்கான ஆண் அதோ அங்கே நிற்கிறான். அவன் உன்னை பார்க்கிறான் என்கிறது. அகங்காரம் வரிந்துகொண்டு வாதிடத்துவங்குகிறது. என் அழகு என்ன தெரியுமா, என் தகுதி என்னதெரியுமா அவன் எப்படி எனக்கு ஏற்றவன்.

தேவதை புன்சிரிப்போடு அவனை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறது. அகங்காரம் மெல்ல பணிந்ததும் தேவதை தன் கையில் உள்ள மயில்பீலியால் மனதை வருடி காதலை எழுப்புகின்றது. அதன் பின் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் தேவதை வெளியேறுகிறது.

அதன்பின் அவளுக்குப்பிடித்ததெல்லாம்  செய்யக்கூடிய அவளுக்கு பிடித்த குணம் கொண்ட ஒரு ஆண்மகனை காதல் அவளுக்குள் சமைக்கிறது.

அப்படி சமைக்கப்பட்ட ஆணை அவள் காதலிக்கத்துவங்குகிறாள்.

பெரும்பாலும் காதலிக்கும்  ஆணும் அது போலவே நடந்துகொள்கிறான்.

ஒரு தருணத்தில் ஆணின் உண்மை நிலை வெளிப்படும் போது அந்த பெண்ணினுள் இருக்கும் ஆணின் பிம்பம் நொறுங்கி காதல் குலைந்து, தொடும்போதெல்லாம் வலிக்கும் ஒரு வடுவாக மாறிவிடுகிறது.

வெகு சிலருக்கே இரண்டும் ஒன்று போலவே அமைந்து காலமெல்லாம் காதலில் திளைக்கும் வாய்ப்பு அமைகிறது. அவர்கள் காதலை ஒளிரும் வைரமாக்கி தன் மனப்பேழையில் வைத்து அவ்வப்போது திறந்து பார்த்து பரவசம் கொள்கிறார்கள்.                


இரண்டாம் வகை காதல் 

முதல் வகை காதல் ஒரு தேவதை நமக்குள் தொட்டு எழுப்புவது. ஆனால் இது நாமே நம் மனதில் ஆழ்ந்தா தேடல் முலம் கண்டடைவது.

நம் அகம் எதன்மீது அதீத விருப்பம் கொண்டுள்ளது என்பதை கண்டடைவது.

அந்த அதீத விருப்பத்தை அகத்தின் காதல் எனலாம்.

முதல் சொன்ன காதல் கொடுத்த அத்தனை அனுபவங்களையும் இந்த காதலும் கொடுக்கும். இன்பம், துயரம், உவகை, காத்திருப்பு , இழப்பு அனைத்தும்.

பயணத்தின் மீது காதல் கொண்டவன் நிலையாமல் ஊர்தோறும் அலைவதை பார்க்கிறோம்.

அறிவியல் மீது காதல் கொண்டவன் ஊண் மறந்து , உணர்வு மறந்து ,காலம் அழிந்து அதுவாகவே ஆவதை பார்க்கிறோம்.

கலை, இலக்கியம் மீது  காதல் கொண்டவர்கள்   தன் வாழ்வின் இருதித்துளியையும் அதற்காகவே செலவிடுவதை நாம் பார்க்கிறோம்.

புத்தகத்தின் மீது பெரும் விருப்பம் கொண்டவன் தன் வருவாயின் பெரும்பகுதியை அதற்க்கு செலவிடுவதை நாம் பார்க்கிறோம்.

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?



இது மொழின் மீதும் இந்த சமுகத்தின் மீதும்   காதல் கொண்ட பாரதியின் வரிகள்.இன்று நாம் பார்க்கும் அனைத்து உன்னதங்களும், அனுபவிக்கும் அனைத்து கண்டுபிப்புகளும் தன் அகத்தின் காதலை கண்டடைந்தவர்களால் உருவாக்கப்பட்டது.நம் பெரும் விருப்பத்தை கண்டடைவோம். காதலை கண்டடைவோம்.  















திங்கள், டிசம்பர் 29, 2014

2014

2014 ஆண்டு ஒரு இனிமையான வருடமாக கழிந்தது. இனிமையின், மகிழ்வின் ஊற்று  எங்கள் இரண்டரை வயது மகன் தான். கூடுதல் எடையோடு , இரண்டு தலைகளோடு இந்த வருடம் முழுக்க சுற்றினேன்.

நான் பார்க்கும் தொழிலில் இந்த வருடம் கொஞ்சம் மந்த நிலைதான்.

ஆனால் தனிப்பட்ட வாழ்வில் எனக்கு பிடித்ததெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்.

ஜுபைல் சொல்வேந்தர் மன்றத்தில் சேர்ந்து தமிழை தடை இல்லாமல் மேடையில் பேசும் திறனை வளர்த்துக்கொண்டு இருக்கிறேன்.

என் blogகிளும் facebook பக்கத்திலும் நான் பார்த்த படித்த விஷயங்களை எழுத முயன்றேன்.

புத்தகங்களை அதிகம் வாசித்தேன்

1. வென்முரசு - முதற்கனல் -ஜெயமோகன்
2.வென்முரசு - மழைபாடல் -ஜெயமோகன்
3.வென்முரசு - வண்ணக்கடல் -ஜெயமோகன்
4. வென்முரசு - நீலம் - ஜெயமோகன்
5. வென்கடல் - ஜெயமோகன்
6. யாமம் - எஸ். ரா
7. எனது இந்தியா - எஸ். ரா
8.ஆழிசூழ் உலகு - ஜோடி. குருஷ்
9. மிளிர் கல் - இரா. முருகவேல்
10. வனவாசம்  - கண்ணதாசன்
11. குருதிபுனல் - இந்திரா பார்த்தசாரதி
12. 20 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்

கடந்த வருடம் இனிதே அமையா உதவிய நண்பர்கள், உறவினர்கள், நலம்  விரும்பிகள் அனைவருக்கும் நன்றி.









ஞாயிறு, டிசம்பர் 28, 2014

விசும்பல்

குழந்தைக்கு ஐந்து மாதங்கள் முடிந்து , அவன்  அழைத்து செல்ல வந்ததுமே அவள் நிலையழிந்தாள்

துக்கம் துளிர்த்து கண்களில் முட்டி முட்டி நின்றது.

இரைச்சலும்  வெம்மையும் நிரம்பி வழிந்த பேருந்து நிலையத்தில்
அவர்கள் ஊர் செல்லும் பேருந்துக்காக காத்து நின்றனர்.

பேருந்து நுழைந்ததும் மதகு திறந்த ஏரிநீர் போல காத்திருந்த மக்கள் அதை நோக்கி ஓடி திறந்திருந்த நுழைவுகளில்லெல்லாம் புகுந்து இடம்பிடித்தனர்.

ஜன்னல் வழியாக தாவியேறி இடம்பிடித்து குழந்தையை அவன் வாங்கிக்கொண்டான்.

உடல் தளர்ந்து, உளம் சோர்ந்து அவள் வந்து அமர்ந்தாள்.

தன்னுள் புகுந்த அத்தனை மனித உடல்களையும் வளைத்து நெளித்து ஒற்றை உடலாக மாற்றியது பேருந்து.

வேற்று ஆணின் மூச்சுக்காற்று தன் கழுத்தில் உணர்ந்த பெண்கள் நெளிந்து விலக முயன்றனர்.

பெண்ணின் தோள்கள் நெஞ்சில் உரசிய ஆண்கள் சற்று வளைய முயன்று தோற்றனர்.

குழந்தை வெம்மையில் உருகி அழத்துவங்கியது. பால் புட்டியை எடுக்க கையை பையில் துழாவியபோது துணியெல்லாம் நனைந்து இருந்தது.

மெல்லிய பயம் ஊறி கை நடுங்கியது. வெறும் புட்டியை கையில் வைத்து            " பால் "  என்று நடுங்கும் குரலில் அவனிடம் சொன்னாள்.

"சனியன் " என்று சொல்லிவிட்டு புட்டியை பிடிங்கிக்கொண்டு ஜன்னல் வழியாகவே இறங்கி வெளியில் சென்றான்.

நேரம் ஏற ஏற குழந்தையின் அழுயொலி  மெலிதாகி விசும்பலாக மாறியது.

அவன் வரவே இல்லை. பேருந்து மெதுவாக நகரத்துவங்கியது. பயத்தில் அழும் குரலில் " ஏங்க பஸ்ஸ நிர்த்துங்க " அவர் பால் வாங்க போயிருக்காரு " என்றாள் .

" எவ்வளவு நேரம் இன்ன பண்ணிநிருந்திக " என்று வல்லேன்றார் நடத்துனர்.

அவள் ஜன்னல் வழியே அவனை தேடியபடியே தவித்து நடுங்கினாள், பேருந்து நகர்ந்து கொண்டே இருந்தது.

" ஏம்பா பஸ்ஸ நிறுத்துங்க பா " என்று நடுவயது பெண்மணி ஒருவர் பெருங்குரலெடுக்க, பேருந்து நின்றது.

சிறிது நேரம் கழிய " ஏம்மா இறங்குமா வேக்காடு தாங்கல  " என்று ஒரு குரல் எழுந்தது.
அவள் இறங்க எழுந்ததும் , அந்த குரலுக்கு சொந்தக்காரன் அந்த இடத்தில் அமர்ந்துகொண்டான்.

குழந்தை விசும்பிக்கொண்டே இருந்தது. அவள் அருகிலிருந்த டீ கடைக்கு சென்று குழந்தைக்கு பால் வேண்டும் என்றாள்.
பாலை நன்றாக ஆறவைத்து டீ கிளாஸ் கழுவும் தண்ணீர்ல் மேலும் குளிரவைத்து டீ மாஸ்டர் அவளிடம் நீட்டினார்.

மூன்று விரல்களை அந்த பாலில் முக்கி குழந்தையின் வாயில் வைத்தாள்.
விரலை சப்பி சப்பி பாலை குடித்தது குழந்தை. கடைசியில் மீந்த பாலை அவள் வாயில் உற்றிகொண்டாள்.

குழந்தை தூங்கியபின் அவன் நினைவு வந்து அந்த மாஸ்டரிடம் கேட்டாள்.
ஒருவன் வந்து பால் வேண்டும் என்று ஐனூறு ரூபாய்யை நீட்டினான்.  சில்லறை  இல்லை என்றதும் போய்விட்டான் என்றார்.

தலையை கைகளில் தங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

முன்பொருநாள் பள்ளிவிட்டு அவள்  வரும் வேளையில் அப்பா அவனை அறிமுகப்படுத்தினார். அவன் சைக்கிளில் ஒரு மட்டக்கோல் இருந்தது. தலை முழுக்க சிமன்ட் பரவி இருந்தது. குடிபோதை அவன் கண்களிலும் சிரிப்பிலும் வழிந்து கொண்டிருந்தது. நிக்க முடியாமல் சைக்கிளை பிடித்துக்கொண்டு இருந்தான். "பொண்ண நல்லா பாத்துக்கப்பா என்றார் அப்பா "

அன்று அழத்துவங்கியவள் இன்னும் அழுதுகொண்டு இருக்கிறாள்.

சாற்று தயங்கி அண்ணா இங்கு டாஸ்மார்க் ஏதாவது பக்கத்துல இருக்குதா என்று கலங்கிய விழிகளில் டீ மாஸ்டரை கேட்டாள்.

புதன், டிசம்பர் 24, 2014

கதைகள்


ஜுபைல் தமிழ் சொல்வேந்தர் மன்றத்தில் பேசியது


ஒரு நிகழ்வுக்கு வாரத்தைகள் மூலமாகவோ  அல்லது எழுத்தின் மூலமாகவோ ஒரு வடிவத்தை கொடுத்தால் அதை கதை என அழைக்கலாம்.

அந்த நிகழ்வு நடந்த ஒன்றாக இருக்கலாம். முழுக்க கற்பனையாக இருக்கலாம் அல்லது இரண்டும் கலந்து இருக்கலாம்.

மனிதன் கற்பனை செய்யத்துவங்கியது  முதல் கதைகள் உருவாகிவிட்டன. கதைகள் இல்லாத காலம் ஒன்று மனித வரலாற்றில் இல்லை எனலாம்.

நம் கலைகள் அனைத்தும் ஏதாவது ஒரு கதையை நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது. கலைகள் மூலம் கதைகளும் கதைகள் மூலம்   கலைகளும் ஒன்றைஒன்று வளர்த்தேடுத்துக்கொள்கிறது.

ஆனால் இன்றைய நிலையில் கதைகள் நம் அன்றாட வாழ்வுக்கு அவசியம் இல்லை என்ற பொது மனநிலை மக்களிடைய இருக்கிறது.

கதை படிப்பவன் ஒரு கனவு மனநிலையில் இருக்கிறான். அவன் வாழ்வின் எதார்த்தங்களை புரிந்துகொள்வதே இல்லை என்ற கண்ணோட்டம் இருக்கிறது.

பிள்ளைகள் படிக்கும் போது பாடபுத்தகங்களை தவிர வேறு எந்த புத்தகங்களையும் நாம் படிக்க அனுமதிப்பது இல்லை. கதை புத்தகங்கள் உனக்கு "சோறு போடுமா " என்று கேட்ப்போம்.

உண்மையில்  கதைகள் ஒரு மனிதனுக்கு தேவைதானா ?
அது எந்தவகையான மாற்றங்களை  நமக்குள் ஏற்படுத்துகிறது ?

ஏன் கதைகளை படிக்க வேண்டும் ?

நம் வாழ்வில் தினம் தினம் எத்தனயோ நிகழ்வுகள் நடக்கின்றன. அதில் பாதிக்கும் மேற்பட்ட நிகழ்விலிருந்து நாம் எந்த அனுபவங்களையும் நேரடியாக பெற்றுக்கொள்வது இல்லை. ஆனால் அது நம் அகத்தை வடிவமைக்க பயன்படுகிறது. அதே போல தான் கதைகளும்.

நம் சலிப்புற்ற அன்றாட வாழ்வில் உணர்வுகளின் உச்சத்தை அடைவதே இல்லை. மகிழ்வின் உச்சத்தை, கொண்டத்ததின் உச்சத்தை , காம குரோத மோக உச்சத்தை, பயத்தின் உச்சத்தை. ஆனால் கதைகள் எளிமையாக  நமக்குள் அவற்றை நிகழ்த்திவிடும்.

நம்மை நாமே அறிந்துகொள்ள கதைகள் உதவும். ஒரு கதையில் உள்ள கிழ்மையை நாம் ஆர்வத்தோடு படித்தால் அது நம் மனதில் உள்ள கிழ்மையை நமக்கு காட்டிகொடுத்துவிடும். அதே போலதான் மேன்மையையும்.

நான் ஒருகட்டத்தில் வரலாற்று கதைகளை ஆர்வமாக படிக்கத்துவங்கினேன்.
அப்போதுதான் என்னக்கு வரலாறு பிடிக்கும் என்பதை அறிந்துகொண்டேன்.

கதை படிப்பவன் கனவுலகத்தில் கற்பனையில் வாழலாம் ஆனால் அவர்களால் தான் இந்த உலகத்தில் அழகான விஷயங்கள் நடக்கின்றன.

இப்படி தனிப்பட்ட மனிதனுக்கும் கதைகளுக்கும் இடையுள்ள தொடர்பை சொல்லிக்கொண்டே போகலாம் .

ஒரு கதைக்கும் ஒரு சமூகத்திற்குமான தொடர்பு என்பது முக்கியமான ஒன்று.

பாட்டி வடை சுட்ட கதையை கொண்டு எங்கள் ஊரில் பாட்டிகள் கூட உழைத்து உன்ன விழைகிறார்கள் , நரி என்பது  தந்திரத்துக்கும் , ஏமாற்றுக்கும் பயன்படும் ஒரு படிமம், காக்கை அறிவுக்கும் புத்திசாலி தனத்துக்கும் ஒரு பயன்படும் படிமம்  என்று நம் சமுகத்தின் நிலையை விளக்கிவிட முடியும்.

ஒரு குலம் தன் மூதாதையரின் கதைகள் வழியாக தனக்கான விழுமியங்களையும் , கட்டுப்பாடுகளையும் வடிவமைத்துக்கொள்கிறது.

நம் நாட்டின் ஒட்டு மொத்த பண்பாட்டு மரபையும் ஒரு சிறிய கதைக்குள் அடக்கி அதை காலம் தோறும் பயணிக்கச் செய்ய முடியும்.

மனிதம்  கண்டடைந்த வாழ்வின் உயரிய தத்துவங்களை  நம் வாழ்வின் ஒரு பகுதியா மாற்ற  கதைகள் பயன்படுகின்றன. ஜென் , சூபி , கீதை கதைகள் போல.

கதைகள் இல்லாத சமூகம் அடையாளம் இல்லாத சமூகமாக மாறிவிடும்.

வாழ்வை முன்னகர்த்துவதர்க்கு கொஞ்சம் தொழில்நுட்ப பயிற்சியும் அதை சார்ந்த அறிவும், நம்மை சுற்றி நடக்கக்கூடிய வாழ்வியல் நிகழ்வுகளும் அது தரும் அனுபவங்களும் நமக்கு போதாதா ? என்று கேட்பவர்களுக்கு கதைகள்  தேவை இல்லை.

ஆனால் வாழ்வை கொண்டாட நினைப்பவர்களுக்கும், உயர்ந்த நாகரீகத்தை நோக்கி நகர நினைக்கும் சமூகத்திற்கும் கதைகள் தேவை.