"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், செப்டம்பர் 28, 2020

மணல்


"உலகத்தின் தூக்கம் கலையாதோ


உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ


உழைப்பவர் வாழ்க்கை மலராதோ


ஒரு நாள் பொழுதும் புலராதோ"


ணா ணா  இன்னா ணா பாட்டு இது 


பஹ்ரின் வந்ததே என்ஜோய் பண்ணத்தான் நல்லா சந்திர பாபு பாட்டு பாடுனா 

கல்யாணம்........கல்யாணம்..........

வேணும் வாழ்வில் கல்யாணம்......

உல்லாசமாகவே உலகத்தில் வாழவே

மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்

கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்

கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்


மங்காத இன்பமே மனைவியினாலே

மாமியார் வீடே சொர்க்கத்தை போலே

ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்

வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம்

வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம் வைபவம்..

மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்


கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்

கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்


காதலுக்கு ஜாதி இல்லே பேதமில்லே ஏதுமில்லே

கருப்பில்லே செகப்பில்லே கட்டு தாலி கழுத்திலே

கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்

கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்


ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தானே

ஆகும் என் மனமே அன்றைய தினமே…

சரோஜா, கிரிஜா, ஜலஜா, வனஜா.

மாலினி, லோசனி, மஞ்சுளா, பாஷிணி.


யாரோ ஒரு பெண்மணி அவளே உன் கண்மணி

பட்டண பெண்ணோ பட்டிக்காடோ

கட்டின ராஜ ஹனி மூன் போடா

வீட்டின் விளக்கு வாய்த்தாள் உனக்கு

விதி கூட்டி வைத்த....


கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்


கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்..(உல்லாசமாகவே)


ணா இன்னா கிண்டல் பன்றியா , எல்லாம் இன்னியோட முடிய போகுது பாத்துக்க 

இன்னாடா முடிய போகுது 

நீ பாரு ...

ஆமா வந்தலிருந்து பாத்துன்னு இருக்கேன் ஒரு நாலு பீரு வாங்கி வச்சிக்கினு ரூம்லே படுத்துனு இருக்க இதுக்கு நீ ஜுபைலே படுதுனு தூங்கி இருக்கலாமில்லையா எதுக்கு  வண்டி எடுத்துகுனு ரெண்டுமணிநேரம் செக் போஸ்ட் கடலைத்தாண்டி இங்க வரணுமா....

ரெஸ்ட் எடுக்க தான்

அடிக்கிற வையிலுக்கு அங்கே ரூம்ல படுத்து தூங்கியிருக்கலாம் ....இங்க வந்து தான் அத பண்ணனுமா 

நமக்கு கிடைக்கிறதோ வருசத்துல மொத்தமா ரம்ஜானுக்கு அஞ்சு நாலு லீவ்  , பக்ரீத் அஞ்சுநாள் லீவ் அதல ரம்ஜான் லீவ்ல வேல வச்சிட்டானுக , இந்த பக்ரீத் லீவாச்சும் கெடச்சுதே ..., அங்க இருந்தா நொய் நொய் ன்னு எவன்னா வேலைக்கு பொறந்த பய கால் பண்ணிட்டே இருப்பான் அதான் இங்க வந்துட்டேன் , உங்க அண்ணிக்கு ஒரு மெசேஜ் போட்டுட்டு போன ஆப் பண்ணீடேன்... தேனமும் பக்கக்குற மூஞ்சிகள பக்கா கூடாது ..தெனமும் போற எடத்துக்கு போக கூடாது தெனமும் பண்ற வேலைகள பண்ணக்கூடாது அப்படியே அப்படியே இருக்கணும் .... இந்த ரெண்டு நாவல எந்த டிஸ்டர்ப் இல்லாம படிச்சு முடிக்கணும் ...

சலிப்பு சலிப்பு .... அது முத்தி விரத்தியா ஆயிட கூடாது 

நம்ம ஊருக்கு போனா கூட நா ஒரு beg எடுத்துக்கிட்டு கிளம்பிடுவேன் ஒருவாரம் ஊர் பேர் தெரியாமல் சுத்துவேன் 

அதுக்கு தான் என்ன கூட , வரவேண்டான்னு சொன்னியா 

அதான் வந்துட்ட இல்ல 

இன்னக்கி ரெண்டு  கெடா வாங்க ஆளுங்க போயிருக்கு,  நல்லா பிரியாணி சாப்பிட்டு ஒரு படத்த பார்த்துட்டு ரெண்டு மோசி குடிச்சிட்டு போர்த்திட்டு படுக்களாண்முன்னு நினைச்சேன் ஆனா ரொம்ப நாளா நெனச்ச ஒரு வேலைய முடிக்கவேண்டி இருக்கு அதான் வந்தேன் 

என்ன வேல, பப்புக்கு போகணுமா ஈவ்னிங் போலாம் 

ஆமா வந்தலிருந்து ரூமுக்குள்ளயே இருக்க, வெளியே நா மட்டும் போயிட்டு போயிட்டு வந்திட்டு இருக்கேன் போர் அடிக்கிது



டே சுரேஷு  காலைல நீ தூக்கிட்டிருந்தப்ப ஒரு பியர் அடிச்சிட்டு ஓட்டல் மாடிக்கு போனேன் ....

மாடியில ஓபன் ஸுமிங் புல் , ஒரு வெள்ளைக்காரி , கொஞ்சம் நடுவயது தசைகளையும் முகத்தையும் இறுக்கமா மாத்தி வச்சிருந்தா ..., மல்லாக்க படுத்திருந்தா நா சிரிக்கலான்னு வாய் எடுத்தா க்ரீம் எடுத்து அவ கால்ல தேய்க்க ஆரமிச்சிட்டா ...

அடிப்போடின்னு குபீர்ன்னு  தண்ணியில குதிச்சு மூழ்கி எழுந்தா திபீர்ன்னு ஒரு சூடாணி தண்ணிலைருந்து எந்திரிச்சான் . பயந்து போய்ட்டேன் . சிரிச்சிக்கிட்டே நைஸ்  ன்னான். அவன் பள்ளு வெள்ளைய ஈரு சேவப்ப இருந்தது. அவன் கருப்பு தோல் எண்ண பூசுன மினுமினுப்பு . தண்ணி ஒட்டவே இல்ல . ஒவ்வொரு முற மூழ்கி எழும்போதும் ஒரு நைஸ் . ஒரு அடிம இன்னொரு அடிமையப்பத்து சிரிக்கிறாப்புல ஒரு அன்பான சிரிப்பு அதுல ஒரு ஏகாந்தம் .....நா வாய் நெறியை தண்ணிய எடுத்து பிய்யிச்சி அடிச்சேன் அவனும் அதே மாதிரி பண்ணன் ...இப்ப என்ன கெட்டுப்போச்சி 

நாலுவாட்டி குதிச்சி எந்திரிச்சி கரையில சாஞ்சிகிட்டு வானத்த பார்த்துகிட்டு நீனேன் ஒடம்புல எடை இல்ல மனசுளையும் தான் .தாளுக்கு தாளுக்குனு  தண்ணியோட தழும்பால்  சத்தம் போட்டு பாடணும் போல தோணுச்சு... 

ஆனா இன்னும் கொஞ்சம் அந்தப்பக்கம் பிலிப்பெயினி குடும்பம் , ஒரு வயசு பையன் , பிகினி உடையில் ஒரு பொண்ணு ரப்பர் பொம்மைங்க மாதிரி உடம்பு , தண்ணில மெதந்துட்டே இருந்தாங்க ஒரு வர்த்த பேசிக்கல எங்களையும் கண்டுக்கல அவங்களோட இருப்ப மட்டும் உணர்ந்தாங்க போல அல்லது ஒருத்தரோட ஒருத்தர் இருப்பு ...

அவங்கள பார்த்ததுக்கு பிறகு நா சத்தம் போடல 


அப்படியே தண்ணிக்குள்ள மூழ்கி அந்த மங்கலான சத்தங்களை கேட்டுகிட்டே இருந்தேன் காலத்தை கொஞ்சநேரம் நகாரம கால்ல அழுத்தி புடிச்சிருந்தேன். 

மறுபடியும் வெளியே வந்தேன் 

இப்ப அந்த வெள்ளைக்காரிய பார்த்தேன், அவ என்ன பார்த்து சிரிச்சா நானும் சிரிச்சேன்...

பக்கத்துல சூடானி நைஸ் ன்னு சிரிச்சான் 

கப கபன்னு பசி பிறகு கிழ இறங்கிவந்தேன் 

பெல் அடிக்கிது இல்ல 

யாரு 

இரு ணா நா பார்த்துட்டு வரேன் 

யாரு 

நம்ம சேட்டா 

என்னவாம் 

இல்ல அவனுக்கு தெரிஞ்ச ஹோட்டல் இருக்காம் ஏதாவது வேணுமான்னு கேட்டான் 

இங்கதான் ஆனந்தபவன் , பொன்னுசாமி எல்லாம் இருக்கே போன் பண்ணா கொண்டுவந்து கொடுக்க போறான் ..

சரினா அதவுடு என்ன பேப்பர் குடுத்துட்டியாமா , அந்த புது மேனேஜர் பையனா 

அவனுக்காகவா ஊருக்கு போற 

அவனுக்காகவெல்லாம் இல்ல போதும்ன்னு தோணுச்சு அதான் 

அந்த மேனேஜர் பொசிஷஷனுக்கு நீ வந்திருக்கணும் ஆனா நீ இன்னும் சீனியர் எஞ்சினீராகவே இருக்க 

அதெல்லாம் ஒண்ணுமில்லடா கொஞ்சநாளுக்கு முன்னாடி வரைக்கும் அந்த எண்ணம் இருந்தது மேனஜர் ஆகணுன்னு 

எனக்கும் நாப்பத்தஞ்சி வயசாயிடுச்சு இனி என்னத்த புதுசா கத்துக்க 

எனக்கு பணமும் அதிகாரமும் தேவபட்டுச்சி 

அதுவும் இல்லாம என்னோட அனுபவம் அது குடுத்த ஆணவம் 

நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் பீல்ட் ஒரு மாதிரியான பில்டுடா 

இப்ப நம்ம ஹெட் ஆபீஸ்க்கு போய்  இருக்கியா , ஆபீஸ் செட்டப் பத்துவருஷமா அப்படியே இருக்கு டேபிள் சேர் கேண்டின் வேல செய்ற  ஆளுங்க , அவங்க செய்ற வேல எதுவும் மாறாது அதனால அவங்களுக்கு மனசு உடம்பு  ஒருமாதிரி செட் ஆகிடும் . 

ஆனா நம்ம சைட் அப்படி இல்ல தெனமும் மாறிக்கிட்டே இருக்கும் , கட்டிடம் கட்ட கட்ட இடம் மறிக்கிட்டே இருக்கும் . இன்னக்கி வச்ச பொருள் நாளைக்கு அங்க இருக்காது , erection பண்ணவேண்டிய புது புது பொருட்கள் வந்து இறங்கிட்டே இருக்கும் , வேல செய்ற ஆளுங்க மறிக்கிட்டேயே இருப்பாங்க ,  
தொடர்ந்து எல்லாம் மாறிகிட்டே இருக்கிறதனால  நமக்கும் ஆழத்துல அலைபஞ்சிகிட்டே இருக்கும். மனசு நிலைகொள்ளாது.

அதில்லாம புது புது பிரச்சனைகள் வந்துகிட்டே இருக்கும் , தெனமும் புது புது பிரச்னைகள் அதனால புது புது முடிவுகள எடுத்துகிட்டே இருக்கனும்....
நம்ம எடுக்கிற முடிவோட விளைவு பல நேரங்கள்ல  நமக்கு தெரியாது ஆனாலும் முடிவெடுக்கணும் , அந்த முடிவுக்கு நம்ம பொறுப்பேத்துக்கணும் ....., 


அதுக்கு 

அதுக்கு நமக்கு அனுபவம் வேணும் ...

ஒவ்வொரு வேலையும் ஆழமா கவனிச்சு செய்யணும் , ஆளுங்களோட கவனிச்சு பழகணும் ...

அனுபவம் நம்ம உள்ளுணர்வ நல்லா கூர்மையாக்கும் 

உள்ளுணர்வு கூர்மையா இருந்தா தொடுக்கிற  சொல்லும் எடுக்கிற முடிவும் பெரும்பாலும் சரியா இருக்கும் 

அப்ப ஏன்னா உங்கள மேனேஜர் ஆக்கள 

படிப்பு பாக்குறாங்க மேனேஜர் ஆகா என்ஜினீயர் படிச்சிருக்கணுமா 

யார்சொன்னது 

நம்ம கிளைன்ட் சொல்றான் 

அதுக்காக அந்த பொடிப்பையான மேனேஜரா போட்டு , அவன் ஆடுற ஆட்டமும்  படுற பட்டும் 

நீங்க டிப்ளோமாவ 

ஆமா 

சரி நாம என்ன பண்ணமுடியும் .....

அதுக்காக ஊருக்கு போறியா 

அதுக்காக இல்ல ஒரு சம்பவம் அது உனக்கு சொன்ன புரியாது 

புரிரா மாதிரி சொல்லு 

போனவாரம் நம்ம சூப்பர்வைஸேர்  குமரேசன் ..... ஒரு நாலு பிட்டர் பசங்கள கூட்டிட்டு வண்டில கெளம்புனாரு ..... ஒரு நாலுமணி இருக்கும் நா வேலை எல்லாம் முடிச்சிட்டு பார்க்கிங்கில் தம் அடிச்சிட்டு இருந்தேன். குமரேசன் சும்மா கிண்டலுக்கு என்ன சார் டவர் tightness பக்க போறோம் வரிங்களா இன்னு கேட்டாரு. நா substation விட்டு வேற எங்கைக்கும் போறது இல்ல .... அதுவும் transmission லைன் பக்கம் நமக்கு எந்த வேலையும் இல்ல 

அன்னக்கி இன்ன நெனச்சேன்னு தெரியல சரி வாணா போலன்னு அவங்களோட கிளம்பிட்டேன் . ஊரைவிட்டு வெளீயே போனவுடனே பாலை ஆரமிச்சிடுச்சு .....மணலு மணலு எங்க பார்த்தாலும் மணலு , வண்டி என்னவோ 120 Km வேகத்தல போகுது ஆனா ரெண்டுபாக்கமும் ஒரே மாதிரி இருக்கிறதால நாங்க போகமே ஒரே இடத்துல நிக்கிறமாதிரியும் இருக்கு ...., இன்னும் கொஞ்சம் வேகமா போய்யன்னு டிரைவர் கிட்ட சொல்லிகிட்டே இருந்தேன் .

ஒருவழியா டவர் லைனுக்கு போனோம் . வண்டில இருந்து இறங்கி எல்லாம் safety built எடுத்து மாட்டிக்கிடானுங்க. பிட்டர் ஒருத்தன் சார் என்ன மேல வரிங்களா இன்னன்

இந்தியாவுல இருக்கும்போது ஒரு நாலஞ்சுவாட்டி டவர் மேல ஏறி இருக்கேன் . அதுவும் பத்து வருசத்துக்கு முன்ன. இங்க சவூதில ஒருவாட்டி கூட ஏறுனது இல்ல . 380kV லைனு ஒரு 40 மீட்டர் height இருக்கும் .

எனக்கு என்னமோ தோணி சரி நானும் வரேன்னு சொன்னேன். குமரேசன் சார் வான நீ கீழையே இரு இன்னாரு ...

நா அதுக்குள்ள safety built எடுத்து மாட்ட தொடங்கினேன்.

சார் நீங்க சொன்ன கேக்க மாட்டீங்க , பார்த்து பொறுமையா ஏறுங்கன்னு சொல்லிட்டு குமரேசன் ஏற ஆரமிச்சாரு 

நா பாத்துக்கிறேன் ..., அப்படின்னு சொல்லிட்டுநானும் ஏற  ஆரமிச்சேன் . எனக்கு முன்னாடி பின்னாடி பிட்டர் பசங்க .. , ஏறினாக

மேலேறி நா ஒரு ஓரமா Gandary மேல வேடிக்க பாக்க ஆரமிச்சேன் 

அவங்க எல்லா போல்ட் titness பார்த்துட்டு இருந்தாங்க ,

நவம்பர் மாசம் மிதமான குளிர் .., இந்த டைம் ல சவூதிக்கு புதுசா வரவன் , என்னாடா இது இந்த ஊர் இவ்வளவு ராமியமா இருக்குன்னு நினைப்பான் ...

வானத்துல சூரியன் இல்ல , ஆனா அதனோட நிழல் மாதிரி தழல் சிவப்பு வானத்துல படிஞ்சு இருந்தது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வெளி வெட்ட வெளி

சில இடங்கள்ல மணல் மண்ணா மாறி மண் மலையா மாறிட்டு இருந்தது , அல்லது மலை மண்ணா , மணல மாறிட்டு இருந்ததா தெரியல ,

கொஞ்சமா மணல் கொட்டிவச்சிருந்தா , மனசு குதூகலம் ஆகிடும் , மணலை கை அல்லறத்துக்கு முன்னாடி மனசு அள்ளிடும் அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம் , குழந்தைகளுக்கு மணல் போல விளையாட்டு பொருள் வேற இல்ல , கைநெறியா அள்ளி அள்ளி தலையில உடம்புல எல்லாம் போட்டுக்கும் ..

ஆனா கண்ணுக்கு எட்டர தூரம் மணல் இருந்தா , மனசுக்கு என்ன பண்றதுன்னு தெரியாது அள்ள தோணாது அலைபாயும் , பெரும் புல்வெளிகளை பார்த்தா மனசு அமைதி அடையும்னு சொல்லுவாங்க , பாலைய பார்த்தா ஏன் இப்படி மனசு வெறுமையா அலையதுன்னு தெரியல ஒருவேளை இந்த பாலை நம்ம வாழறதுக்கு ஒண்ணுமே குடுக்காதுங்குற பயமோ என்னவோ

டவருக்கு பக்கத்துல ஒரு ஒட்டக கூட்டம் மணல் கலர்லே இருக்கிற கஞ்சா சிறும்புள்ள மேச்சிட்டு இருந்ததுக , நா மேலிருந்து பாதப்ப அருவம ஏதோ மேஞ்சமாதிரி இருந்தது 

ஒரு நாள் சைட்டுக்கு போற வழில ஒரு செத்த ஒட்டகத்த கொண்டுவந்து போட்டிருந்தாங்க ,  இங்கதான் ஆடு ஒட்டகம் எது செத்தாலும் புதைக்க மாட்டங்களே...

மொதநாள் கொஞ்சம் நாத்தடிக்க ஆரமிச்சது அடுத்தடுத்து கடுமையான வையில் தொடர்ந்து மண்ணு காத்து வேற

மணல் காத்து அந்த ஒட்டகத்தை கொஞ்ச கொஞ்சமா அரிக்க அறமிச்சது மணல் அடிச்சிஅடிச்சி அந்த ஒட்டகம் சில்லு சில்லா பொல பொலன்னு  உத்திர அரமிச்சிட்டது வேகமா கடந்துபோற ஒவ்வொரு மணல் துகளும் ஒட்டக சதையை அரிச்சி அடிச்சி கொண்டுபோயிடுச்சி , கொஞ்ச நாள்ல ஒட்டகம்   மணலோட மணாளா காணாமப்போயிடுச்சி

இந்த பாலைல வேல செஞ்சு செஞ்சு மனசுல இருந்த ஈரமெல்லாம் இந்த மணல் அடிச்சிட்டு போய்டுச்சு , என் மனசுல எந்த உணர்ச்சியும் இல்ல , வறண்டு நானே பொத்தல் பொத்தலா  இருக்கிற மாதிரி ஒரு பீலு 

என்மேலையே எனக்கு ஒரு இரக்கம் வந்து துக்கம் தொண்டையை அடைச்சது 
வாய்விட்டு அழணுபோல இருந்தது....கண்ணையெல்லாம் இருட்டி போச்சு 
அள்ளி வீசுன மணல் போல  மனசு சிலு சில்லுன்னு செதறி போச்சு . உடம்போட முக்காவாசி எட மனசுதான் போல , அது செதறி போன பிறகு  ஒடம்பு லேசா ஆகி பறக்குது , விடுதலை எல்லாத்துல இருந்தும் விடுதலை

இதெல்லாம் ரெண்டு மூணு செக்ண்ட்ல நடந்து முடிஞ்சிபோச்சு , கிணத்துல மேல இருந்து குதிச்சி மூழ்கி மேல எழுந்து மூச்சு வாங்கற மாதிரி

இருக்கிறோம்முன்னு ஞாபகம் தெளிஞ்சி  பாத்த அந்தரத்துல தொங்கிட்டு இருக்கிறேன் .

safety built டோட கயிறு உடம்பெல்லாம் இறுக்கி புடிக்கிது , மேல டவர் சேனல்ல மாட்டிருந்த safety built டோட ஊக் சத்தம் கர் கர் ன்னு காத கடைஞ்சது 

பயம் அலைபோல  வந்து அமுக்க உடம்பெல்லாம் நடுங்கி மூச்சுவாங்க ஆரமிச்சிடுச்சி 

குமரேசன் அந்த பக்கம்தமிருந்து  அலற ஆரமிச்சாறு , மத்த ஆளுங்க கிட்ட ஒரு சலனமும் இல்ல 

சார் என்ன சார் என்ன , நல்ல தானே உக்கார்த்திருந்திங்க ஏன் திடீர்ன்னு விழுந்திட்டிங்க , நல்ல வேல saftey built போட்டிருந்திங்க கடவுளே 

தூக்குங்கடா தூக்குங்க 

என்ன மேல தூக்கி ஸ்டப்ல உக்கார வச்சி தண்ணி குடுத்தாங்க , 

சார் என்ன கண்ணெல்லாம் கலங்கி போய்டுச்சு , சார் என்னா கடவுள் தெரிஞ்சரா இல்லடா மேடம் தெரிஞ்சிருப்பாங்க ...

ஏய் எல்லாம் தள்ளி போங்கடா இதை எவனும் எங்கயும் வெளில சொல்லக்கூடாது , முக்கியமா sefety deportment க்கு  மேட்டர் போக கூடாது . எல்லாருக்கும் பிரச்னை ஆகிடும் என்று குமரேசன் கத்த ஆரமிச்சிட்டார்

சார் நீங்களும் வெளில சொல்லாதீங்க , பிரச்னையாகிடும் வருஷத்துக்கு ஒன்னு ரெண்டு கேஸு தவறி கீழ விழுந்து மேல போய் செருந்துங்க ..உங்கள டவர் மேல ஏத்துனது என்னோட தப்பு .. 

ஏய் எல்லாம் எறங்கு அப்படியே மெதுவா எறங்குங்க சார் நீங்களும் மெதுவா எறங்குங்க சார் 

நான் மெதுவா இறங்கிக்கிட்டே யோசிச்சேன் செத்தவன் எல்லாம் தவறி விழுந்துதான் செத்தானா என்று என் கைகள் இன்னும் நடுங்க துவங்கியது

ஆனா இப்ப எல்லாத்தையும் வீட்டுட்டு ஊருக்கு போகன்ன்னு தோணுது காலைல மொதல்ல எவனாவது போன் பன்னிடுவான் நைட் பத்தரைக்கு எவனாவது போன் பண்ணி என்ன தூங்கிட்டிகளா ண்ணுவான் சில நாள்ல முந்நூறு போன் கால் வரை அட்டென்ட் பண்ணியிருக்கேன் ...., திருப்பி திருப்பி ஆணவம் அதிகாரம் ..., நாள் முழுக்க ..., மற்றவர்களும் நானும் மாத்தி மாத்தி முவைக்கிறது அதைத்தான் ...வேற இல்ல ...

எனக்கு மனசு இப்பவெல்லாம் வேற மாதிரி மாறிப்போச்சு ..., நம்ம மேல அன்பா இருப்பவங்க இல்ல எல்லார்மேளையும் அன்பா இருக்கிற ஆளுங்கள பாக்கணும் பேசணும் போல இருக்கு , நாள் முழுவதும் அன்புக்கு நான் அன்ப முன்வைக்கிற வைக்கிற சூழல்ல வாழனும் ..




நீ இன்ன சொல்லவரான்னு கொஞ்சமா புரிந்து ஆனா ஏதோ கனவுகாண்றன்னு மட்டும் தெரியுது ...




ஆனா யாருன்னா ஊருக்கு போறா சும்மா போறேன்னு சொல்லறீங்க ..

ஆனா போகமாற்றங்க ..




கொஞ்ச நாள் ஒருத்தன் ஒரு வேலைய பழகிட்டானா அத விட்டுவிட்டு போகமாட்டான் . அது அவனுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்துடும் அல்லது ஒரு அடையாளத்தை அவனே உணர்ந்துடுவான். நெறய முறை நான் பாப்பேன் . சிலர் கஷ்ட்டமான வேலைய செய்வாங்க , அவங்க அத வாங்க விட்டுவிட்டு வேற வேலைக்கு போன என்னனு தோணும்




நமக்கும் அப்படி தான் , இங்கேயிருந்து நெறய பேர் ஊருக்கு கிளப்பி போய்டுவாங்க . அங்க போயிட்டு ஒரு மூணு மாசம் இருப்பாங்க பின்ன நா யாருன்னு ஒரு கேள்வி வந்துடும் ,வேற வேலைக்கி போய் அத கத்துக்கிட்டு அதல ஓட்டறதுக்கு பதிலா மறுபடியும் இங்கயே வந்துடலாம்னு நினைப்பாங்க ... மறுபடியும் இங்க வர முயற்சிபண்ணுவாங்க , காசு இருந்தாலும் அடையாளம் இல்லாம வாழறது ரொம்ப கஷ்டம்




ஆனா நா முடிவு பண்ணிட்டேன்...




இஸஹ் அல்லா ஊருக்கு போய்டணும்




நீ ஏன்னா போனும் போனான்னு சொல்ற , ஊர்ல அண்ணி சென்ட்ரல் கோவெர்மென்ட் வேல பசங்க படிக்கிறாங்க , இன்னும் கொஞ்சநாள் வேல செய்ஞ்சிட்டு செட்டில்மென்ட் வாங்கிட்டு போகலாமுல்ல




போன சைட் ஊருக்கு வெளில டெசர்ட்ல நீ வந்திருக்க இல்ல




ஆமா ஹபியூலா





ஏனா இப்பதான் சொன்ன ஊருக்கு போனா இருக்க முடியாதுன்னு




ஆமாண்டா , எனக்கும் அதே யோசனையாத்தான் இருந்தது .






டேய் கலிங்கு பெல்லடிக்கிது பார்




யாரு பாரு




யாரு அது நம்ம சேட்டா , என்னவாம் கைல என்னாது , அது சாப்பாடு ஹோட்டல் விசிட்டிங் கார்டனா




இங்க தான் எல்லா ஹோட்டலும் இருக்கே சரவணா பவன் , ஆனந்த பவன் அஞ்சப்பர் போன் பன்னா ரூமுக்கே எடுத்துட்டு வரப்போறான் , ஏதா அந்த கார்டா குடு




நா இது வேறான ,




என்னடா வேற




இது ஒரு பிலிப் குட்டியோடது already புக் பண்ணி இருக்கு இன்னும் பத்து நிஷத்துல வந்துடும்




சுரேஷு தப்பு பண்ணலாம் அதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கும் மன்னிப்பு இருக்கும் ஆனா பாவம் பண்ணாத ஜென்மத்துக்கும் அனுபாவிக்கணும்




நா சும்மா பேசாதனா உனுக்கு தெரியாது ,




நீ வேணான்னு சொல்லியும் ஊங்கூடா வந்ததே இதுக்குதான்




தம்பி நானும் உனுக்கு நெறைய முறை சொல்லிட்டேன் பொண்டாட்டிய சயூதிக்கு கூட்டியாந்திடுன்னு நீ கேக்கல




எங்கன கூடியறது ஒரே சண்டை சண்டை , போன எடுத்தலே சண்டை நாலு வருஷம் லவ் பண்ணோம் அப்பாலம் ஐஸ் கட்டி உருகி சொட்டறமாதிரி பேசுவா பேசிக்கிட்டே இருப்பா




இப்ப போன எடுத்தாலே சண்டைதான்




தம்பி போன்ல லவ் பண்ணலாம் ஆனா குடும்பம் நடத்த முடியாது




நா சும்மா இருநா இந்த நேரத்தல பஞ்ச பேசிக்கிட்டு




டேய் நானும் பாத்துட்டேன் புதுசா கல்யாணம் அவனிலிருந்து , பசங்க காலேஜி போற பசங்க இருக்கற ஆள் வரையும் போன்ல சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க




நானும் அப்படி தான் ..




நா இப்ப எங்க வீட்டில யாருக்கும் என்மேல உண்மையான அக்கறை இல்ல , அப்படியே அக்கறை இருந்தாலும் அதுக்கு பின்னாடி அவங்களோட சர்வேவள் இருக்கு




முதல்ல எனக்கு புரியல ஆனா இப்பவெல்லாம் ரொம்ப மனசு கஷ்ட்டமா இருக்கு யார்மேலயும் நம்பிக்கை இல்ல யாரையும் புடிக்கல




தம்பி இந்த வயசுலவர ஒருமாதிரி குழப்பம் தான் ..இது இதுவரைக்கும் படிச்சா வேலைக்கு போன ஒரு கனவுலகத்துல வாழ்த்துன்னு இருந்த , இப்ப கல்யாணம் ஆகிடுச்சு உங்க வீட்டுல இருப்பவர்களுக்கு இப்ப நீ வேற ஒரு எதார்த்த உலககத்த பாக்குற படபடப்பு . ஒரு குருவி தரைல காலவச்சவுடனே அதுக்கு ஏற்படுற படபடப்பு ...கொஞ்சம் பொறுமையா இரு எல்லாம் சரியா போய்டும் ...




எங்கண்ணனுக்கு கல்யாணம் ஆகரவரிக்கும் நானும் எங்கண்ணனும் ஒன்னாதான் சுத்துவோம் சினிமாவுக்கு போவோம் சட்ட மாத்தி போட்டுப்போம் அவனுக்கு கல்யாணம் அனுப்ப எனக்கு அவ்வளவு சந்தோசம் எனக்கு ...கல்யாணத்துல ஆறேழு மோதிரம் அவனுக்கு மொழியா வந்தது , அதுல ஒண்ணே என் கையில போட்டான் அப்பதான் மொத்தமுற தங்கத்துல மோதிரம் போடுறேன் ...




ஒரு பதினைந்து நாள் கழிச்சி அவன எங்கோ போக பஸ் ஸ்டாண்டல உட சைக்கிள போயிட்டு இருந்தோம் அப்ப மெதுவா டே அந்த மோதிரத்தை கழட்டுன்னு சொன்னான் ..மொதல்ல அவன் எனக்கு என்ன சொல்றன்னு புரியல என்னன்னு கேட்டேன் அந்த மோதிரம் அவங்க பக்கம் உழுந்தது... பஸ் ஸ்டாப் வரவரிக்கும் நா எதுவும் பேசல , ஸ்டாப் வந்ததும் நா சைக்கில நிறுத்திட்டு மோதிரத்தை கழட்டி கைல குடுத்துட்டு திருப்பி பக்கமா வீட்டுக்கு வந்துட்டேன் ....




எங்களுக்குள்ள ஏதோ ஒன்னு அருந்துபோச்சு .. அப்பா அவ்வளவு கோவம் இருந்தது ஆனா அன்னக்கி அவனோட நிலம இன்னான்னு இப்ப புரிது ...




பொறுமையா இரு







அட போன்னா


வியாழன், மார்ச் 22, 2018

மகன் வயது 5.11

மகன் வயது 5.11

நமக்குள் எந்த தன்மை கூர் கொள்கிறதோ அந்த தன்மை நமக்கு மகனாக பிறகும் என்று  என்   ஆசிரியர் கூறுவதுண்டு.

அந்த தன்மைகள் அவனிலிருந்து வெளிப்பட துவங்கி இருக்கிறது. நானும் அதை உணரத்துவங்கி இருக்கிறேன். என்னுடைய பழக்க வழக்கங்கள் அவனிடம் எதுவும் இல்லை என்றே எனக்கு தோன்றும் . ஆனால் எதோ ஒரு கணத்தில் எதோ ஒரு பார்வையில் அவன் ஏதோ ஒன்று செய்து கொண்டு இருக்கும்போது நான் தானே அவன் என்று உணர்ந்து விடுகிறேன். அந்த கணத்தில் ஏனோ நெஞ்சு கனத்தது நின்றுவிடுகிறேன்.

ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவு என்பது மாபெரும் தொடர்ச்சியின் ஒரு முடிச்சி. ஒரு கயிற்றின் நுனி மற்றோரு கயிற்றால் முடிச்சிடப்பட்டு இருக்கவேண்டும்.  ஒரு ஆண்  கட்டப்படாத கயிற்றின் நுனியென காற்றில் ஆட விரும்புவதில்லை.

அக்‌ஷய் கடந்த ஒருவருடமாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்கிறான். சவூதியில் மலையாள வட்டம் என்பது மிகப்பெரியது. அதில் பல்வேறு அடுக்கு பேதங்கள் இருந்தாலும் ஒரு சில புள்ளிகளில் அவர்கள் ஒன்றிணைந்து நிற்கிறார்கள். அதில் ஒன்று கலை. சாதி மதங்களை தாண்டி  அவர்கள் அனைவரும் பின்பற்றுகின்ற சில பண்பாட்டு பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. அவர்கள் அதை வளரும் பிள்ளைகளுக்கு சரியாக கடத்துகிறார்கள். அதில் முக்கியமாக சங்கீதமும் பரதமும்.

இங்கு சவூதியில் பிற நாட்டு  கலாச்சார நிகழ்வுகளை பொதுவெளியில் நடத்த அனுமதி இல்லை. சிறிய  அளவில் குடும்ப நிகழ்வு போல உள் அரங்குகளில் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன. மலையாள வட்டத்தில் xperssion என்ற இசை அமைப்பு இருக்கிறது. 2006 ல் சில மலையாள நண்பர்கள்  ஆசிரியர் பிஜுவை  நாட்டிலிருந்து அழைத்துவந்து இந்த இசை குழு துவங்கி இருக்கிறார்கள். துவங்கும்போது ஆறு குழந்தைகள் சங்கீதம் கற்றிருக்கிறார்கள்.  இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்று தேர்ந்திருக்கிறார்கள். சிலர் சினிமாவிலும் பாடிக்கொண்டு இருக்கிறார்கள் . இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரிடம் பயில்கிறார்கள்.

அதன் ஆண்டுவிழா சமீபத்தில் நடந்தது. நூறு குடும்பங்கள் இணைந்த குடும்ப விழா. தன்னிடம் படிக்கின்ற நூறு மாணவர்களையும் மேடையேற்ற வேண்டும் என்று ஆசிரியர் நினைத்தார் போலும். அதற்காக கடுமையாக தன்னை வருத்திக்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். கற்கின்ற  மாணவர்களை குழுவாகவும்   கற்றுத்தேர்ந்த மாணவர்களை தனியாகவும் மேடை ஏற்றினார். கவிதா அக்‌ஷய்க்கு  அவன் ஆசிரியரை விட இருமடங்கு பயிற்சி அளித்தாள் . "கனனாய காயா" என துவங்கும்  விநாயகனை பற்றிய சம்ஸ்கிருத பாடல். இந்த பாடலை முதல் முறை கேட்டபோது அதிர்ந்துவிட்டோம் . இதை எப்படி இவன் பாடுவான். ஆசிரியரிடம் இந்த பாடல் பெரியவர்கள் பாடவே கடினமாக இருக்கும்  இவர்கள் எப்படி படுவார்கள் என்றோம். பெரியவர்கள் பாடமுடியாது ஆனால் இவர்கள் பாடமுடியும் என்கிறார் அவர் .

ஒரு மாதத்தில் முழுமையாக அந்த பாடலை கற்றார்கள். முதலில் மேடையேறிய குழுவில் அக்‌ஷய் இருந்தான். அவனும் அவனுடன் இணைந்த குழந்தைகளும் முதன் முதலில் மேடையேறிய நிகழ்வு மறக்க முடியாதது.

புதிய ஓடை ஒன்று புதிய வழித்தடத்தில் நின்று தயங்கி சூழ்ந்து முன் செய்வது போல அந்த மேடையை சூழ்ந்தனர்.

தயங்கி நின்ற அனைவரையும் ஆசிரியர் வரிசைப்படுத்தி நிறுத்தினார். பாடத்தொடங்கியதும்  பெரும் அமைதி நிலவியது. பாடல் அனைவரையும் சூழ்ந்து ஆடியது. அக்‌ஷய் பாடுவதை தொடர்ந்து பார்க்கமுடியவில்லை. மனம் விம்ம துவங்கிவிட்டது. 

அதனால் மற்ற குழந்தைகள் பாடுவதை கவனிக்க துவங்கினேன். ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஒவ்வொரு முகபாவம். கூரை நோக்கி உரக்க பாடும் முகம் , மருளும் விழியால் நிலம் நோக்கி படும் முகம், நேர்விழியால் அசையாமல் நின்று பாடும் முகம் , தாளத்திற்கு தலையாட்டும் முகம் இசையே ஆன முகம் ஒவ்வொன்றையும் இப்பவும் என்னால் மனதிலிருந்து தொட்டெடுக்க முடிகிறது.

குழுப்பாடலுக்கு ஏற்ற தாளக்கட்டில் அமைந்திருந்தது அந்த பாடல். அந்த தாளம் நம் மனதை தூக்கிக்கொண்டு மேலே பறந்து அங்கிருந்து கீழே போட்டுவிட்டு தரை தொடும் கனத்தில் மீண்டும் தூக்கிக்கொண்டு பறப்பது போல இருந்தது. 

பாடல் முடிந்தவுடன் நிலை மீண்டு பெருமூச்சு வாங்க இருக்கையிலே அமர்ந்திருந்தேன். கவிதா உளவிசையால் நீர் நிறைந்த விழிகளால் என்னை நோக்கினாள். இது முழுக்க முழுக்க அவர் இருவரின் உழைப்பு. மனம் முழுக்க பெருமிதம் நிறைய உடல் முழுக்க அது அசைவுகளாக தெரிய அமர்ந்திருந்தாள்.

 அதன்பின் ஒவ்வொரு குழுவாக மேடையேறி பாடினர். பாடல்கள் அனைத்தும் நவரசங்கள் அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தன. 

கலை சோறு போடுமா என்ன ? அதற்க்கு செலவிடும் நேரத்தை உருப்படியாக படிப்புக்கு செலவிடலாம் தானே ? என்ற கேள்விகள் தொடர்ந்து யாரவது கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் . இன்றைய  கல்வி கண்டிப்பாக சோறு போட்டுவிடும் . சோற்றுக்கல்வியோடு சேர்த்து பண்பாட்டு கல்வியையும் அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஏன் என விளக்கவேண்டிய அவசியம் இல்லை. தொலைக்காட்சியில் அரைமணிநேரம் செய்தியை பார்த்தாலே புரிந்துவிடும்.

கலைகளை கற்பது இன்று செலவேரிய ஒன்று. ஆனால் அவர்களை திருவிழாக்களுக்கும் , குடும்ப விழாக்களுக்கும் அழைத்து செல்வது கூட பண்பாட்டு கல்வி அளிப்பது தான்.
எதுவும் முடியவில்லை என்றால்  கதைகளையாவது சொல்லலாம்.

வாழ்வில் பெரும் சோர்வோ , நிலையழிவோ அல்லது கொண்டாட்டமோ "கலை" ஒளிவிடும் சுடர்மணியன அக்‌ஷய்யை  காக்கும் என நம்புகிறேன். அவன் வாழ்க.

சே .சிவக்குமார்  

திங்கள், ஜூன் 05, 2017

ஆயாவின் பெட்டி - புனைவு


"ம்மாவ் இந்த பொட்டிய இன்னாத்துக்கு இங்க அங்கன்னு மாத்தி மாத்தி வாச்சினு கீர ... சும்மா எடத்த அடச்சினு கீது

டேய்  இருந்தா இருந்துனு போது உன்ன இன்னா பண்ணுது அது .....ஆயா உன்மேலதான் பாசமா இருஞ்சி

அட்டத்தில் இருந்த அந்த இரும்பு பெட்டியை கீழே இறக்கி திறந்து பார்த்தேன். மெல்லிய புகை இலை வாசனை வருவதாக எனக்கு தோன்றியது. என் சின்ன வயதில் இந்த பெட்டியை திறந்து பார்த்துவிட வேண்டும் என்பது  எங்களுக்கு ஒரு கனவாக இருந்தது. சற்று நேரத்தில் அந்த வாசனை ஒரு நினைவாக மனதில் பதிந்துள்ளதாகவும் அந்த நினைவு தான் மேலெழுந்து வந்ததாகவும் தோன்றியது.

இரும்பு பெட்டியின் ஓரத்தில் ஒரு ஐந்து பைசா இருந்தது. அதை எடுத்து தன்னிச்சையாக முகர்ந்து பார்த்தேன். என் ஆயாவிடம் எப்போது காசு பிடிங்கினாலும் முதலில் அதை முகர்ந்து பார்ப்பது வழக்கம் . சுருக்குப்பையில் புகையிலையோடு அந்த காசுகள் முயங்கி அதே வாசனை அடிக்கும். அந்த வாசனை ஒரு கிறக்கத்தை தருவது எனக்கு பிடிக்கும் .

எங்கள்  வீட்டின் நுழைவாயிலுக்கு வலப்புறம் ஒரு சிறிய அரை இருந்தது. அதை நாங்கள் ஆயா ரூம் என்று அழைப்போம். அதில் புகையிலை வாசமும் மற்ற சில வீச்சமும் இருக்கும். பெரியவர்கள் யாரும் அதில் நுழைய மாட்டார்கள். சிறியவர்களுக்கு அது விளையாட்டின் போது ஒளிந்து கொள்வதற்கான இடம்.

அந்த அறையின் ஓரத்தில் அந்த நீல நிற இரும்பு பெட்டி இருக்கும்.
என்னை போன்ற சிறுவர்களுக்கு அது ஒரு கனவு பெட்டி . அதற்குள் நகைகள் இருக்கும் , இல்லை இல்லை சுருட்ட பட்ட பத்து ரூபாய் நோட்டுகள் கொத்து கொத்தாக இருக்கும் , இல்ல அதுக்குள்ள ஆயாவோட நகைகள் இருக்கும் என்று எங்கள் கற்பனை விரிந்து கொண்டே போகும்.

ஆயாவுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள். தாத்தா கொட்டாப்புளி ஒரு சோக்கான ஆள். ஆயா தனி ஆளாக பின் நின்று பல ஏக்கர் நிலங்களையும் தென்னந்தோப்புக்கு நடுவே  மூன்று வீடுகளையும் சேர்த்தார்.  அவருக்கு முன்பாகவே இரண்டு மகன்களும் ஒரு மகளும் உயிரணைந்தனர்.
மகன் வழியில் பதினான்கும் மகள் வழியில் மூன்று பேரர்கள் மற்றும்  அந்த பேரர்களுக்கு பிள்ளைகள் என்று பெருவாழ்க்கை.

ஆயாயாவை  யாரும் மரியாதையாக அழைப்பதில்லை . என்னை போன்ற பேர குசுமான்களும் கொள்ளு பேர குளுவான்களும் ஏய் அண்ணும்மா என்று தான் அழைப்போம். கொஞ்சம் பெரியவர்கள் எங்கடா அவ என்ற ரீதியில் பேசுவார்கள். மகன் வழி பேத்திகள் ஏய் மொத்தி என்பார்கள். பெண் வழி பேத்திகள் மட்டும் ஆயா என்று அழைப்பதை பார்த்திருக்கிறேன். என் அப்பா ஒருமுறைகூட அம்மா என்று அழைத்து  நான் பார்த்ததே இல்லை.

பெரியவர்களுக்கு அந்த பெட்டி உரையாடலில் பயன் படும் ஒரு முக்கிய குறியீடு. எதாவது யாரவது மறைத்தால் என்ன மொத்தி பெட்டியில அமுக்கிர மாதிரி அமுக்கிர என்பார்கள். அந்த பெட்டியில் இருப்பதாக எண்ணும்  பொருட்கள் யாருக்கு சேரவேண்டும் என்ற பேச்சு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

ஒரு நாள் ஆயா படுக்கையிலிருந்து எழவே இல்லை. காலை உணவு நான் கட்டிலுக்கு அடியில் வைத்த போது மெல்லிய முனங்கல் கேட்டது. காலம் தேங்கி பழுத்த கண்களிலிருந்து நீர் வழித்துக்கொண்டு இருந்தது. சற்று கூர்ந்த போது பொட்டி பொட்டி என்ற ஒலி மட்டும் கேட்டது.

ம்மாவு அண்ணம்மா  பொட்டிய காணும்  , ஆயா அழுவுது வா என்றேன். அம்மா வேக வேகமாக வந்து முதலில் பெட்டி இருந்த இடத்தை பார்த்தார்.
மெல்லிய சந்தோசம் போன்ற முக பாவனையை அம்மாவின் முகத்தில் படருவதை பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் . அம்மா சட்டென்று பயந்து நா குழற ஏமா யாராவது வந்த மாதிரி இருந்ததா ? நீ யாரையாவது பார்த்தியா ? என்று கேள்விகளை அடுக்க ஆயா எதுவுமே பேசவில்லை. கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்துகொண்டே இருத்தது.

ஐயோ எவன் வந்தான் தெரியலையே .. என்ற அம்மாவின் பதற்றம் அக்கம் பக்கத்து  பங்காளிகளின் வீடு முழுக்க பரவியது. அத்தனை உறவுகளும் கூடி விட்டன.

அப்பா நிலத்திலிருந்து  வேக வேக வந்து நம்மமூட்டாண்ட போய் எவண்டா வருவான் ... என்றார். இல்ல சின்னு எவனோ தெரிஞ்சவன் தான் வந்து போயினருக்கான் என்றார் மூத்த பெரியப்பா வழி அண்ணன்.

யாருமே நுழையாத அந்த அறையில் அன்று அனைவரும் தன்னை நுழைத்து கொண்டனர். ஆயாவின் மருமகள்கள் மூவரும் கெஞ்சி கெஞ்சி கொஞ்சம் காஞ்சியை புகட்டினர்.

தோப்பில் இருக்கும் எங்கள் வீட்டிலிருந்து செய்தி ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஊருக்குள் பரவியது. முதல் அடுக்கு உறவுகள் , இரண்டாம் அடுக்கு உறவுகள் ஆயாவின் தோழிக்கிழவிகள் என்று ஆட்கள் கூடத்துவங்கினர்.

எங்கள் அனைவருக்குமே ஆயாவின் மீது ஏனோ அதீத பாசம் உருவாயிற்று.
அந்த அறை ஒரு பேத்தியால் சுத்தமாக கழுவப்பட்டது. பழைய கலைந்த புடவைகள் எல்லாம் சரியாக அடுக்கப்பட்டன. அழுவாத ஆயா என்று ஒவ்வொரு பேரர்களும் கையை பிடித்துக்கொண்டு சொன்னார்கள்.

அந்த தீபம் ஜுவல்லரில தான் அது எப்ப பார்த்தாலும் ஒக்காந்து இருக்கும் , இல்ல அது துட்டாதான்  தான் சுருட்டி சுருட்டி வச்சி இருக்கும். அதுக்கு ஏதுடி அவ்ளோ துட்டு . நீ வேற அது தொடப்பம் கிழிக்கும் , மாடு ஒன்னு வெச்சின்னுகிது , தென்ன ஓல மொடையும் , அதுக்கு ஐஞ்சு தென்ன மரம் ஒதுக்கி விட்டு இருக்காங்க , முருங்க விக்கும் , துட்டு நெறைய வச்சிக்கினு இருக்கும் . அட துட்டு போனா போது பெட்டியில கொட்டாபுலியோட பழைய செருப்பு ஒன்னு இருந்தது தெரியுமா என்று கிழவிகள் வெற்றிலை போட்ட வாயால் சொற்களை தூப்பத்துவங்கினர்.

ஆண்கள் பல பிரிவுகளாக பிரிந்து ஒரு குழு தென்னந்தோப்பு , கரும்பு தோட்டம் என்று தேடத்துவங்கியது , இன்னொரு சிறு குழு கிணற்றின் ஆழம் வரை சென்று பார்க்க துவங்கியது. இருவர் குழு பக்கத்து ஊர் அகப்பை மந்திரவாதியை அழைக்க சென்றது.

அகப்பை மாத்திரவாதி என்ற பேரை கேட்கவே குதூகலமாக இருந்தது. மத்தியான வேளையில் எங்கள் மாமா ஒருவர் வேகமாக வந்து வண்டியை வீட்டின் முன் நிறுத்தினார். இளம் வயதினன் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தான். அவன் தான் மாத்திரவாதி என்கிறார்கள் . எங்களால் நம்பவே முடியவில்லை. பெரும் ஏமாற்றமாக இருந்தது. கையில் ஒரு பை வைத்திருந்தான். அவன் அறைக்குள் நுழைந்த போது அங்கிருந்தவர்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டார்கள். பெட்டி இருந்த இடத்தில் ஒரு சிகப்பு காட்டன் துண்டை விரித்தான். அதன் மேல் பூசை பொருட்கள் பரப்பப்பட்டன. ஒரு நூல் கண்டு எடுத்து பிரித்து ஒரு சிறு கைராக்கி அதில் மஞ்சள் பூசி அகப்பையின் கழுத்து பகுதியில் கட்டினான். பின் மந்திரத்தை ஜபித்து கற்பூரம் கொளுத்தி வணங்கிவிட்டு எழுந்தான். அகப்பை கட்டிய கயிற்றை நுனியில் பிடித்து அதை லேசாக மேலே தூக்கி குச்சி மட்டும் தரையில் தொடுமாறு பிடித்தான். அகப்பை ஒரு சுழற்சி சுழன்று கிழக்கு திசையில் நின்றது. பின் மெதுவாக நகர்ந்து வாசலை கடந்து தென்னத்தோப்பை நோக்கி சென்றது. முதல் தோப்பில் ஒரு பங்காளி வீடு. குழுமி இருந்தவர்களின் நடுவே சிறிய சலசலப்பு எழுந்து அடங்கியது. கல்யாணம் ஆனவர்கள் யாராவது கயிற்றை பிடியுங்கள் என்கிறார் மந்திரவாதி. சிறிய தயக்கத்துக்கு பின் பெரிய அண்ணன் நூல் கயிற்றை பிடித்தார். பின் ஒவ்வொருவாக மாறி மாறி காற்றை பிடித்தனர். அகப்பை ஊர்ந்து ஊர்ந்து தோப்பில் காவல் இருக்கும் கருப்பன் வீட்டை நோக்கி சென்றது.

கருப்பன் கோலார் தங்கவயலில் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பியவன். இன் செய்யப்பட்ட சட்டை , பாண்ட் ,கேன்வாஸ் ஸூ அணிந்து அவன் வேலை கேட்டு வந்து நின்ற போது யாரும் அவனை சட்டை செய்யவில்லை.அவன் உடைகளை கூட பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் அவனுக்கு இரண்டு மனைவி என்பதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். அதுவும் இளையவள் தேன் நிறம் தேக்கு உடம்பு.

சில பல சமரசங்களுக்கு பிறகு தோப்பில் காவல் காக்கும் வேலை கருப்பனுக்கு கிடைத்தது.

இளையவளை "சின்னாலு " என்று தன் பேச்சின்னுடாக  நுழைத்துக்கொள்ள அனைவரும் விரும்பினர்.

அகப்பை குடிசையை நெருங்க நெருங்க கருப்பனுக்கு முதுகு வளயத்துவங்கியது . அப்பவே என்னக்கு சந்தேகம் சின்னாலு தான் பண்ணி இருப்பான்னு என்று புழுதி சொற்கள் எழுந்தன.

அந்த கூட்டத்திற்கு சற்று தள்ளி பெரியவள் படபடத்தும் , சிறியவள் சற்று துள்ளலாகவும் நின்றிருந்தனர். கருப்பன் திரும்பி பெரியவளை பளீர் என்று கன்னத்தில் அடித்தான். மகளே எடுத்திருந்தா குடுத்துடுங்க என்று சீரவும் மக்கள் அவனை தொடாமல் தடுத்தனர். என் புள்ளைங்கள ஒன்னா நா தாடுறேன் , நாங்க எடுக்கல என்று பெரியவள் சீரினாள்.

நாலைந்து பேர் அந்த குடிசைக்குள் நுழைந்து அடிக்கி வைத்திருந்த சட்டி , பாத்திரங்களை உருட்டிவிட்டு துணிகளை கலைத்துவிட்டு ஒன்றும் இல்லை என்று கைவிரித்தனர்.

சந்திரன்  தூரத்திலிருந்து கத்திக்கொண்டே ஓடி வந்தான். ஏஏ பொட்டி கெடச்சிடுச்சி வூட்டாண்ட வரச்சொல்றாங்கோ என்று கூச்சலிட்டான் . அகப்பையை அங்கேயே போட்டுவிட்டு எல்லோரும் வீட்டை நோக்கி ஓடினர்.

பூட்டு உடைக்கப்பட்ட பெட்டி வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்தது. சுற்றி ஆட்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

பெட்டியில் என்ன இருந்ததென்று ஆயாவை பலர் துளைத்துக்கொண்டு இருந்தனர். அந்த கேள்வியில் பரிதாபத்தைவிட ஆர்வம் அதிகம் இருந்தது. ஆயா ஏதேதோ உளறிக்கொண்டே இருந்தாள்.

தோப்புகளுக்கெல்லாம் அப்பால் கலர் நிலத்தில் புதரில் அதை கண்டெடுத்திருக்கிறார்கள். யாரோ வெளியாளுப்பா , இல்ல இல்ல எவனா குடிகாரனா இருக்கும் , போலீசுக்கு போலாம்பா , யோவ் ஆயா அதல இன்ன இருந்ததுன்னு சொல்ல மாட்டிக்கிது எப்பிடி போலிஸுக்கு போறது. ஆயாவுக்கே தெரிஞ்சி இருக்கும் யார் எடுத்தாங்கன்னு . சுவாரசியம் நீங்கியவர்கள் இப்படியாக பேசி கலயத்துவங்கினர். பசி மேலும் பலரை களைய செய்தது. கூலி வாங்கிக்கொண்டு மந்திரவாதி திருப்பி கொண்டுவிட ஆள் இல்லாமல் நடையை காட்டினார். காலிப்பெட்டி ஆயா ரூமில் அதே இடத்தில் வைக்கப்பட்டது.

அதன் பின் ஆயா கொஞ்சம் கொஞ்சமாக உதிரத்துவங்கினாள்.

பலவருடங்கள் கழித்து இப்போது என் உள்ளுணர்வில் தோன்றுகிறது. அந்த பெட்டி எப்போதுமே காலியாகத்தான் இருந்ததோ என்று.


சனி, மே 20, 2017

"அவுனுக்கு இன்னா " - சவுதிலிருந்து சிவக்குமார்


"அவுனுக்கு இன்னா " என்ற வார்த்தை ஊரில் சொந்தங்கள் மற்றும் நண்பர்களிலின் நடுவே என்னை பற்றிய பொதுவான சொல். 

நான் சவூதிக்கு வந்து பத்துவருடங்கள் நிறைவுற போகிறது. பொருளியல் ரீதியாக ஓரளவுக்கு நிறைவடைந்திருக்கிறேனே தவிர முழுமையாக இல்லை . நாளைக்கு உனக்கு வேலை இல்லை என்று கம்பெனிகாரன் சொல்லிவிட்டால் வியர்த்து படபடத்து மயங்கிவிடும் நிலையில் தான் என் பொருளாதரம் இருக்கிறது.

ஊரில் இருப்பவர்கள் வெளியில் சென்று வேலை செய்பவர்களை வெறும் பொருளாதார பண அடிப்படையிலேயே வைத்து சிந்திக்கிறார்கள். ஊரில் என்னை பார்ப்பவர்கள்  "உனக்கு என்னப்பா " துபாய் பணம் என்ற ரீதியில் தான் பேசத்துவங்குவார்கள்.

ஆனால் பொருளாதார நிறைவு மட்டுமே வாழ்வின் முழு நிறைவு இல்லை.

ஊரில் ஒரு சாதாரண மனிதர் அனுபவிக்கும் கண்ணுக்கு தெரியாத அவர் பிரஞ்சையில் உணராத எத்தனையோ வசதிகள் இங்கிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. 
உலகத்தில் சுகந்திரம் என்னும் சொல்லின் முழுமையான அர்த்தத்தை அனுபவிப்பவர்கள் இந்திய மக்கள் தான் என்று ஒவ்வொரு முறையும் நான் ஊருக்கு வரும்போதும் உணர்கிறேன்.

என் ஆசிரியர் சொல்வது போல ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நீங்கள் சென்றால் ஒருமுறை கூட யாரும் உங்களை நிறுத்தி நீங்கள் யார் என கேட்கமாட்டார்கள். ஆனால் இங்கு அப்படி அல்ல. ஒவ்வொரு நூறு கிலோமீட்டர்க்கும் நீங்கள் சோதனை சாவடியை தாண்ட வேண்டியிருக்கும். மனம் பட படத்து கைகள் தன்னை அறியாமல் உங்கள் அடையாள அட்டையை தேடும்.

 நான் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை கிராமத்தில் வளர்ந்தேன். என்  ஊரை சுற்றி தென்னை மரம் தான் பிரதானம் . அதனால்  பசுமையும் பச்சை நிறமும் கண்களில் எப்போதும் நிறைந்தது இருக்கும். என்னை சுற்றி  வெவ்வேறு மனிதர்கள்  இருந்துகொண்டே இருப்பார்கள். வெவ்வேறு முகங்கள் அந்த முகங்களில் தவழும் வெவ்வேறு உணர்வு நிலைகள். அதே போல பெண்கள். எப்போதும் சாதாரண உடையில் அல்லது இரவு உடையில் இருக்கும் எங்கள் வீட்டு பெண்கள் குடும்ப விழாக்களிலும் திருவிழாக்களிலும் பொட்டுட்டு , பட்டுடுத்தி, குழல் திருத்தி தெய்வமகள்கள் போல மாறிவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். திருவிழா காலங்களில் ஊரும் அப்படித்தான் மாறிவிடும்.
நாங்கள் பயன்படுத்திய மொழியும் நாகரிகம் மற்றும் வாழ்வியல் முறையும் தொன்று தொட்டு அந்த கிராமத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. பேசும் மொழியில் பெரும்பாலும் கட்டுபாடுகள் இல்லை . ஒரு நாளைக்கு ஐம்பது கெட்டவார்த்தைகள் பேசாத மனிதர்கள் அங்கு குறைவு. பள்ளி பருவத்தில் மேற்சொன்ன அனைத்தும் தான் என் ஆழமனதை வடிவமைத்தது.

ஆனால் சவூதி வந்த ஒருவருடத்தில் ஒரு இருளை அதன் சிறு எடையை மனதில் உணர்ந்தேன். அந்த இருளை அதனுள் உள்ளதை என்னால் அறியவே முடியவில்லை. நான் தனிமையில் இருக்கும் போது அந்த இருள் ஏக்கமாக , வெறுமையாக உருமாறி நிற்கும். என் மனதில் மகிழ்ச்சியும் முகத்தில் சிரிப்பும்  குறைந்து கொண்டே வந்தது. சில வருடங்களில் நல்ல சம்பளம் வீடு, கார் எல்லாம் கிடைத்தது.ஆனால் அந்த இருள் பெரும் நோய் போல முகம் முழுக்க பரவி இருந்தது.

அது ஏன் என்று பலநேரம் நான் யோசித்ததுண்டு. சில மட்டுமே எனக்கு தட்டுப்பட்டது.

இங்கு பசுமை என்பதே இல்லை , தமிழர்கள் எந்த கலாச்சார நிகழ்வுகளையும் இங்கு நடத்துவதில்லை, ஒரு திரையரங்கு கூட இல்லை , பெண்கள் ஆண் துணையுடன் பர்தா அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும், எப்போதும் நன்மை யாரோ ஒருவர் கண்காணித்து கொண்டே  இருப்பது போன்ற ஒரு உணர்வு, சொந்தங்கள் கூடி தன் மகிழ்வை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை, 

இல்லை என்ற பட்டியலை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். 

இப்படி தன் ஆழ் மன கட்டமைப்புக்கு முற்றிலும் தொடர்பில்லாத சூழலில் நாம் வாழ முற்படும்போது ஆழ்மனம் குழம்பதுவங்கும். தனிமையும் ஏக்கமும் நம்மை ஆட்கொள்ளும். பலநேரங்களில் காரணம் இல்லாமல் நமக்கு அழுகை கூட வரும்.

அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி கடுமையாக வேலைசெய்வது. காலையில் 6.30 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 8 மணிக்கு மேல் தான் அறைக்கு வருவோம். கட்டுமான பணியில் உள்ள பெரும்பாலானவர்களின் வழக்கம் இதுவே. ஒருகட்டத்தில் என் மனமும் உடலும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

அந்த தருணத்தில் சரியான நேரத்தில் மனைவி ( கவிதா) வாழ்வோடு இணைந்தார்.  கவிதாவின் உதவியோடு கொஞ்சம் கொஞ்சமாக என்னையும் வாழ்வையும் மேம்படுத்திக்கொண்டேன்.வேலையை குறைத்துக்கொண்டு பாடுவது, ஆடுவது, சிலம்பம்   என்று  கலாச்சாரத்தோடு தொடர்பு படுத்திக்கொண்டேன். 
நவீன தமிழ் இலக்கியம் அறிமுகமானது. அதன் வழியாக பல்வேறு மனிதர்களின் வாழ்வில் நானும் இணைந்து கொண்டேன்.
மேலும்ன் கவிதாவும் நானும் ஊர் நிகழ்வுகளை , உறவுகளின் செயல்பாடுகளை சதா பேசிக்கொண்டே இருப்போம். 

ஆழமாக சொல்வதென்றால் உடல் மட்டும் இங்கு இருக்கிறது , உள்ளம் ஊரைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த பத்துவருடங்களில் என் கனவுகளில் இந்த ஊர் ( சவூதி) ஒருமுறைகூட வந்ததே இல்லை.
எப்படியோ ஒரு வழியில் வாழ்வை உயிர்ப்போடு வைத்திருக்க முயற்சிக்கிறோம். 

ஏன் எவ்வளவு கஷ்ட்டப்படணும் ஊருக்கு போகலாம் என்று தோன்கிறோம் . 
மனுஷ் ஒரு கவிதையில் கூறியது போல "ஊருக்கு செல்லும் எல்லா வழிகளையும் அழித்துவிட்டு தானே இங்கு வந்திருக்கிறோம்", என்ற வரி தான் நினைவுக்கு வருகிறது.

எங்கு நம் பொருளியல் தேவைகளும் அன்றாட லெளதீக தேவைகளும்  தடையில்லாமல் கிடைக்கிறதோ அங்கேயே முடங்கிவிடத்தான் பெரும்பாலான ஆண் மனம் நினைக்கிறது. அதில் நானும் ஒருவனாக தான் நெளிந்து கொண்டு இருக்கிறேன்.