"ம்மாவ் இந்த பொட்டிய இன்னாத்துக்கு இங்க அங்கன்னு மாத்தி மாத்தி வாச்சினு கீர ... சும்மா எடத்த அடச்சினு கீது
டேய் இருந்தா இருந்துனு போது உன்ன இன்னா பண்ணுது அது .....ஆயா உன்மேலதான் பாசமா இருஞ்சி
அட்டத்தில் இருந்த அந்த இரும்பு பெட்டியை கீழே இறக்கி திறந்து பார்த்தேன். மெல்லிய புகை இலை வாசனை வருவதாக எனக்கு தோன்றியது. என் சின்ன வயதில் இந்த பெட்டியை திறந்து பார்த்துவிட வேண்டும் என்பது எங்களுக்கு ஒரு கனவாக இருந்தது. சற்று நேரத்தில் அந்த வாசனை ஒரு நினைவாக மனதில் பதிந்துள்ளதாகவும் அந்த நினைவு தான் மேலெழுந்து வந்ததாகவும் தோன்றியது.
இரும்பு பெட்டியின் ஓரத்தில் ஒரு ஐந்து பைசா இருந்தது. அதை எடுத்து தன்னிச்சையாக முகர்ந்து பார்த்தேன். என் ஆயாவிடம் எப்போது காசு பிடிங்கினாலும் முதலில் அதை முகர்ந்து பார்ப்பது வழக்கம் . சுருக்குப்பையில் புகையிலையோடு அந்த காசுகள் முயங்கி அதே வாசனை அடிக்கும். அந்த வாசனை ஒரு கிறக்கத்தை தருவது எனக்கு பிடிக்கும் .
எங்கள் வீட்டின் நுழைவாயிலுக்கு வலப்புறம் ஒரு சிறிய அரை இருந்தது. அதை நாங்கள் ஆயா ரூம் என்று அழைப்போம். அதில் புகையிலை வாசமும் மற்ற சில வீச்சமும் இருக்கும். பெரியவர்கள் யாரும் அதில் நுழைய மாட்டார்கள். சிறியவர்களுக்கு அது விளையாட்டின் போது ஒளிந்து கொள்வதற்கான இடம்.
அந்த அறையின் ஓரத்தில் அந்த நீல நிற இரும்பு பெட்டி இருக்கும்.
என்னை போன்ற சிறுவர்களுக்கு அது ஒரு கனவு பெட்டி . அதற்குள் நகைகள் இருக்கும் , இல்லை இல்லை சுருட்ட பட்ட பத்து ரூபாய் நோட்டுகள் கொத்து கொத்தாக இருக்கும் , இல்ல அதுக்குள்ள ஆயாவோட நகைகள் இருக்கும் என்று எங்கள் கற்பனை விரிந்து கொண்டே போகும்.
ஆயாவுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள். தாத்தா கொட்டாப்புளி ஒரு சோக்கான ஆள். ஆயா தனி ஆளாக பின் நின்று பல ஏக்கர் நிலங்களையும் தென்னந்தோப்புக்கு நடுவே மூன்று வீடுகளையும் சேர்த்தார். அவருக்கு முன்பாகவே இரண்டு மகன்களும் ஒரு மகளும் உயிரணைந்தனர்.
மகன் வழியில் பதினான்கும் மகள் வழியில் மூன்று பேரர்கள் மற்றும் அந்த பேரர்களுக்கு பிள்ளைகள் என்று பெருவாழ்க்கை.
ஆயாயாவை யாரும் மரியாதையாக அழைப்பதில்லை . என்னை போன்ற பேர குசுமான்களும் கொள்ளு பேர குளுவான்களும் ஏய் அண்ணும்மா என்று தான் அழைப்போம். கொஞ்சம் பெரியவர்கள் எங்கடா அவ என்ற ரீதியில் பேசுவார்கள். மகன் வழி பேத்திகள் ஏய் மொத்தி என்பார்கள். பெண் வழி பேத்திகள் மட்டும் ஆயா என்று அழைப்பதை பார்த்திருக்கிறேன். என் அப்பா ஒருமுறைகூட அம்மா என்று அழைத்து நான் பார்த்ததே இல்லை.
பெரியவர்களுக்கு அந்த பெட்டி உரையாடலில் பயன் படும் ஒரு முக்கிய குறியீடு. எதாவது யாரவது மறைத்தால் என்ன மொத்தி பெட்டியில அமுக்கிர மாதிரி அமுக்கிர என்பார்கள். அந்த பெட்டியில் இருப்பதாக எண்ணும் பொருட்கள் யாருக்கு சேரவேண்டும் என்ற பேச்சு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
ஒரு நாள் ஆயா படுக்கையிலிருந்து எழவே இல்லை. காலை உணவு நான் கட்டிலுக்கு அடியில் வைத்த போது மெல்லிய முனங்கல் கேட்டது. காலம் தேங்கி பழுத்த கண்களிலிருந்து நீர் வழித்துக்கொண்டு இருந்தது. சற்று கூர்ந்த போது பொட்டி பொட்டி என்ற ஒலி மட்டும் கேட்டது.
ம்மாவு அண்ணம்மா பொட்டிய காணும் , ஆயா அழுவுது வா என்றேன். அம்மா வேக வேகமாக வந்து முதலில் பெட்டி இருந்த இடத்தை பார்த்தார்.
மெல்லிய சந்தோசம் போன்ற முக பாவனையை அம்மாவின் முகத்தில் படருவதை பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் . அம்மா சட்டென்று பயந்து நா குழற ஏமா யாராவது வந்த மாதிரி இருந்ததா ? நீ யாரையாவது பார்த்தியா ? என்று கேள்விகளை அடுக்க ஆயா எதுவுமே பேசவில்லை. கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்துகொண்டே இருத்தது.
ஐயோ எவன் வந்தான் தெரியலையே .. என்ற அம்மாவின் பதற்றம் அக்கம் பக்கத்து பங்காளிகளின் வீடு முழுக்க பரவியது. அத்தனை உறவுகளும் கூடி விட்டன.
அப்பா நிலத்திலிருந்து வேக வேக வந்து நம்மமூட்டாண்ட போய் எவண்டா வருவான் ... என்றார். இல்ல சின்னு எவனோ தெரிஞ்சவன் தான் வந்து போயினருக்கான் என்றார் மூத்த பெரியப்பா வழி அண்ணன்.
யாருமே நுழையாத அந்த அறையில் அன்று அனைவரும் தன்னை நுழைத்து கொண்டனர். ஆயாவின் மருமகள்கள் மூவரும் கெஞ்சி கெஞ்சி கொஞ்சம் காஞ்சியை புகட்டினர்.
தோப்பில் இருக்கும் எங்கள் வீட்டிலிருந்து செய்தி ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஊருக்குள் பரவியது. முதல் அடுக்கு உறவுகள் , இரண்டாம் அடுக்கு உறவுகள் ஆயாவின் தோழிக்கிழவிகள் என்று ஆட்கள் கூடத்துவங்கினர்.
எங்கள் அனைவருக்குமே ஆயாவின் மீது ஏனோ அதீத பாசம் உருவாயிற்று.
அந்த அறை ஒரு பேத்தியால் சுத்தமாக கழுவப்பட்டது. பழைய கலைந்த புடவைகள் எல்லாம் சரியாக அடுக்கப்பட்டன. அழுவாத ஆயா என்று ஒவ்வொரு பேரர்களும் கையை பிடித்துக்கொண்டு சொன்னார்கள்.
அந்த தீபம் ஜுவல்லரில தான் அது எப்ப பார்த்தாலும் ஒக்காந்து இருக்கும் , இல்ல அது துட்டாதான் தான் சுருட்டி சுருட்டி வச்சி இருக்கும். அதுக்கு ஏதுடி அவ்ளோ துட்டு . நீ வேற அது தொடப்பம் கிழிக்கும் , மாடு ஒன்னு வெச்சின்னுகிது , தென்ன ஓல மொடையும் , அதுக்கு ஐஞ்சு தென்ன மரம் ஒதுக்கி விட்டு இருக்காங்க , முருங்க விக்கும் , துட்டு நெறைய வச்சிக்கினு இருக்கும் . அட துட்டு போனா போது பெட்டியில கொட்டாபுலியோட பழைய செருப்பு ஒன்னு இருந்தது தெரியுமா என்று கிழவிகள் வெற்றிலை போட்ட வாயால் சொற்களை தூப்பத்துவங்கினர்.
ஆண்கள் பல பிரிவுகளாக பிரிந்து ஒரு குழு தென்னந்தோப்பு , கரும்பு தோட்டம் என்று தேடத்துவங்கியது , இன்னொரு சிறு குழு கிணற்றின் ஆழம் வரை சென்று பார்க்க துவங்கியது. இருவர் குழு பக்கத்து ஊர் அகப்பை மந்திரவாதியை அழைக்க சென்றது.
அகப்பை மாத்திரவாதி என்ற பேரை கேட்கவே குதூகலமாக இருந்தது. மத்தியான வேளையில் எங்கள் மாமா ஒருவர் வேகமாக வந்து வண்டியை வீட்டின் முன் நிறுத்தினார். இளம் வயதினன் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தான். அவன் தான் மாத்திரவாதி என்கிறார்கள் . எங்களால் நம்பவே முடியவில்லை. பெரும் ஏமாற்றமாக இருந்தது. கையில் ஒரு பை வைத்திருந்தான். அவன் அறைக்குள் நுழைந்த போது அங்கிருந்தவர்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டார்கள். பெட்டி இருந்த இடத்தில் ஒரு சிகப்பு காட்டன் துண்டை விரித்தான். அதன் மேல் பூசை பொருட்கள் பரப்பப்பட்டன. ஒரு நூல் கண்டு எடுத்து பிரித்து ஒரு சிறு கைராக்கி அதில் மஞ்சள் பூசி அகப்பையின் கழுத்து பகுதியில் கட்டினான். பின் மந்திரத்தை ஜபித்து கற்பூரம் கொளுத்தி வணங்கிவிட்டு எழுந்தான். அகப்பை கட்டிய கயிற்றை நுனியில் பிடித்து அதை லேசாக மேலே தூக்கி குச்சி மட்டும் தரையில் தொடுமாறு பிடித்தான். அகப்பை ஒரு சுழற்சி சுழன்று கிழக்கு திசையில் நின்றது. பின் மெதுவாக நகர்ந்து வாசலை கடந்து தென்னத்தோப்பை நோக்கி சென்றது. முதல் தோப்பில் ஒரு பங்காளி வீடு. குழுமி இருந்தவர்களின் நடுவே சிறிய சலசலப்பு எழுந்து அடங்கியது. கல்யாணம் ஆனவர்கள் யாராவது கயிற்றை பிடியுங்கள் என்கிறார் மந்திரவாதி. சிறிய தயக்கத்துக்கு பின் பெரிய அண்ணன் நூல் கயிற்றை பிடித்தார். பின் ஒவ்வொருவாக மாறி மாறி காற்றை பிடித்தனர். அகப்பை ஊர்ந்து ஊர்ந்து தோப்பில் காவல் இருக்கும் கருப்பன் வீட்டை நோக்கி சென்றது.
கருப்பன் கோலார் தங்கவயலில் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பியவன். இன் செய்யப்பட்ட சட்டை , பாண்ட் ,கேன்வாஸ் ஸூ அணிந்து அவன் வேலை கேட்டு வந்து நின்ற போது யாரும் அவனை சட்டை செய்யவில்லை.அவன் உடைகளை கூட பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் அவனுக்கு இரண்டு மனைவி என்பதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். அதுவும் இளையவள் தேன் நிறம் தேக்கு உடம்பு.
சில பல சமரசங்களுக்கு பிறகு தோப்பில் காவல் காக்கும் வேலை கருப்பனுக்கு கிடைத்தது.
இளையவளை "சின்னாலு " என்று தன் பேச்சின்னுடாக நுழைத்துக்கொள்ள அனைவரும் விரும்பினர்.
அகப்பை குடிசையை நெருங்க நெருங்க கருப்பனுக்கு முதுகு வளயத்துவங்கியது . அப்பவே என்னக்கு சந்தேகம் சின்னாலு தான் பண்ணி இருப்பான்னு என்று புழுதி சொற்கள் எழுந்தன.
அந்த கூட்டத்திற்கு சற்று தள்ளி பெரியவள் படபடத்தும் , சிறியவள் சற்று துள்ளலாகவும் நின்றிருந்தனர். கருப்பன் திரும்பி பெரியவளை பளீர் என்று கன்னத்தில் அடித்தான். மகளே எடுத்திருந்தா குடுத்துடுங்க என்று சீரவும் மக்கள் அவனை தொடாமல் தடுத்தனர். என் புள்ளைங்கள ஒன்னா நா தாடுறேன் , நாங்க எடுக்கல என்று பெரியவள் சீரினாள்.
நாலைந்து பேர் அந்த குடிசைக்குள் நுழைந்து அடிக்கி வைத்திருந்த சட்டி , பாத்திரங்களை உருட்டிவிட்டு துணிகளை கலைத்துவிட்டு ஒன்றும் இல்லை என்று கைவிரித்தனர்.
சந்திரன் தூரத்திலிருந்து கத்திக்கொண்டே ஓடி வந்தான். ஏஏ பொட்டி கெடச்சிடுச்சி வூட்டாண்ட வரச்சொல்றாங்கோ என்று கூச்சலிட்டான் . அகப்பையை அங்கேயே போட்டுவிட்டு எல்லோரும் வீட்டை நோக்கி ஓடினர்.
பூட்டு உடைக்கப்பட்ட பெட்டி வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்தது. சுற்றி ஆட்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
பெட்டியில் என்ன இருந்ததென்று ஆயாவை பலர் துளைத்துக்கொண்டு இருந்தனர். அந்த கேள்வியில் பரிதாபத்தைவிட ஆர்வம் அதிகம் இருந்தது. ஆயா ஏதேதோ உளறிக்கொண்டே இருந்தாள்.
தோப்புகளுக்கெல்லாம் அப்பால் கலர் நிலத்தில் புதரில் அதை கண்டெடுத்திருக்கிறார்கள். யாரோ வெளியாளுப்பா , இல்ல இல்ல எவனா குடிகாரனா இருக்கும் , போலீசுக்கு போலாம்பா , யோவ் ஆயா அதல இன்ன இருந்ததுன்னு சொல்ல மாட்டிக்கிது எப்பிடி போலிஸுக்கு போறது. ஆயாவுக்கே தெரிஞ்சி இருக்கும் யார் எடுத்தாங்கன்னு . சுவாரசியம் நீங்கியவர்கள் இப்படியாக பேசி கலயத்துவங்கினர். பசி மேலும் பலரை களைய செய்தது. கூலி வாங்கிக்கொண்டு மந்திரவாதி திருப்பி கொண்டுவிட ஆள் இல்லாமல் நடையை காட்டினார். காலிப்பெட்டி ஆயா ரூமில் அதே இடத்தில் வைக்கப்பட்டது.
அதன் பின் ஆயா கொஞ்சம் கொஞ்சமாக உதிரத்துவங்கினாள்.
பலவருடங்கள் கழித்து இப்போது என் உள்ளுணர்வில் தோன்றுகிறது. அந்த பெட்டி எப்போதுமே காலியாகத்தான் இருந்ததோ என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக