"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், மார்ச் 22, 2018

மகன் வயது 5.11

மகன் வயது 5.11

நமக்குள் எந்த தன்மை கூர் கொள்கிறதோ அந்த தன்மை நமக்கு மகனாக பிறகும் என்று  என்   ஆசிரியர் கூறுவதுண்டு.

அந்த தன்மைகள் அவனிலிருந்து வெளிப்பட துவங்கி இருக்கிறது. நானும் அதை உணரத்துவங்கி இருக்கிறேன். என்னுடைய பழக்க வழக்கங்கள் அவனிடம் எதுவும் இல்லை என்றே எனக்கு தோன்றும் . ஆனால் எதோ ஒரு கணத்தில் எதோ ஒரு பார்வையில் அவன் ஏதோ ஒன்று செய்து கொண்டு இருக்கும்போது நான் தானே அவன் என்று உணர்ந்து விடுகிறேன். அந்த கணத்தில் ஏனோ நெஞ்சு கனத்தது நின்றுவிடுகிறேன்.

ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவு என்பது மாபெரும் தொடர்ச்சியின் ஒரு முடிச்சி. ஒரு கயிற்றின் நுனி மற்றோரு கயிற்றால் முடிச்சிடப்பட்டு இருக்கவேண்டும்.  ஒரு ஆண்  கட்டப்படாத கயிற்றின் நுனியென காற்றில் ஆட விரும்புவதில்லை.

அக்‌ஷய் கடந்த ஒருவருடமாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்கிறான். சவூதியில் மலையாள வட்டம் என்பது மிகப்பெரியது. அதில் பல்வேறு அடுக்கு பேதங்கள் இருந்தாலும் ஒரு சில புள்ளிகளில் அவர்கள் ஒன்றிணைந்து நிற்கிறார்கள். அதில் ஒன்று கலை. சாதி மதங்களை தாண்டி  அவர்கள் அனைவரும் பின்பற்றுகின்ற சில பண்பாட்டு பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. அவர்கள் அதை வளரும் பிள்ளைகளுக்கு சரியாக கடத்துகிறார்கள். அதில் முக்கியமாக சங்கீதமும் பரதமும்.

இங்கு சவூதியில் பிற நாட்டு  கலாச்சார நிகழ்வுகளை பொதுவெளியில் நடத்த அனுமதி இல்லை. சிறிய  அளவில் குடும்ப நிகழ்வு போல உள் அரங்குகளில் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன. மலையாள வட்டத்தில் xperssion என்ற இசை அமைப்பு இருக்கிறது. 2006 ல் சில மலையாள நண்பர்கள்  ஆசிரியர் பிஜுவை  நாட்டிலிருந்து அழைத்துவந்து இந்த இசை குழு துவங்கி இருக்கிறார்கள். துவங்கும்போது ஆறு குழந்தைகள் சங்கீதம் கற்றிருக்கிறார்கள்.  இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்று தேர்ந்திருக்கிறார்கள். சிலர் சினிமாவிலும் பாடிக்கொண்டு இருக்கிறார்கள் . இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரிடம் பயில்கிறார்கள்.

அதன் ஆண்டுவிழா சமீபத்தில் நடந்தது. நூறு குடும்பங்கள் இணைந்த குடும்ப விழா. தன்னிடம் படிக்கின்ற நூறு மாணவர்களையும் மேடையேற்ற வேண்டும் என்று ஆசிரியர் நினைத்தார் போலும். அதற்காக கடுமையாக தன்னை வருத்திக்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். கற்கின்ற  மாணவர்களை குழுவாகவும்   கற்றுத்தேர்ந்த மாணவர்களை தனியாகவும் மேடை ஏற்றினார். கவிதா அக்‌ஷய்க்கு  அவன் ஆசிரியரை விட இருமடங்கு பயிற்சி அளித்தாள் . "கனனாய காயா" என துவங்கும்  விநாயகனை பற்றிய சம்ஸ்கிருத பாடல். இந்த பாடலை முதல் முறை கேட்டபோது அதிர்ந்துவிட்டோம் . இதை எப்படி இவன் பாடுவான். ஆசிரியரிடம் இந்த பாடல் பெரியவர்கள் பாடவே கடினமாக இருக்கும்  இவர்கள் எப்படி படுவார்கள் என்றோம். பெரியவர்கள் பாடமுடியாது ஆனால் இவர்கள் பாடமுடியும் என்கிறார் அவர் .

ஒரு மாதத்தில் முழுமையாக அந்த பாடலை கற்றார்கள். முதலில் மேடையேறிய குழுவில் அக்‌ஷய் இருந்தான். அவனும் அவனுடன் இணைந்த குழந்தைகளும் முதன் முதலில் மேடையேறிய நிகழ்வு மறக்க முடியாதது.

புதிய ஓடை ஒன்று புதிய வழித்தடத்தில் நின்று தயங்கி சூழ்ந்து முன் செய்வது போல அந்த மேடையை சூழ்ந்தனர்.

தயங்கி நின்ற அனைவரையும் ஆசிரியர் வரிசைப்படுத்தி நிறுத்தினார். பாடத்தொடங்கியதும்  பெரும் அமைதி நிலவியது. பாடல் அனைவரையும் சூழ்ந்து ஆடியது. அக்‌ஷய் பாடுவதை தொடர்ந்து பார்க்கமுடியவில்லை. மனம் விம்ம துவங்கிவிட்டது. 

அதனால் மற்ற குழந்தைகள் பாடுவதை கவனிக்க துவங்கினேன். ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஒவ்வொரு முகபாவம். கூரை நோக்கி உரக்க பாடும் முகம் , மருளும் விழியால் நிலம் நோக்கி படும் முகம், நேர்விழியால் அசையாமல் நின்று பாடும் முகம் , தாளத்திற்கு தலையாட்டும் முகம் இசையே ஆன முகம் ஒவ்வொன்றையும் இப்பவும் என்னால் மனதிலிருந்து தொட்டெடுக்க முடிகிறது.

குழுப்பாடலுக்கு ஏற்ற தாளக்கட்டில் அமைந்திருந்தது அந்த பாடல். அந்த தாளம் நம் மனதை தூக்கிக்கொண்டு மேலே பறந்து அங்கிருந்து கீழே போட்டுவிட்டு தரை தொடும் கனத்தில் மீண்டும் தூக்கிக்கொண்டு பறப்பது போல இருந்தது. 

பாடல் முடிந்தவுடன் நிலை மீண்டு பெருமூச்சு வாங்க இருக்கையிலே அமர்ந்திருந்தேன். கவிதா உளவிசையால் நீர் நிறைந்த விழிகளால் என்னை நோக்கினாள். இது முழுக்க முழுக்க அவர் இருவரின் உழைப்பு. மனம் முழுக்க பெருமிதம் நிறைய உடல் முழுக்க அது அசைவுகளாக தெரிய அமர்ந்திருந்தாள்.

 அதன்பின் ஒவ்வொரு குழுவாக மேடையேறி பாடினர். பாடல்கள் அனைத்தும் நவரசங்கள் அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தன. 

கலை சோறு போடுமா என்ன ? அதற்க்கு செலவிடும் நேரத்தை உருப்படியாக படிப்புக்கு செலவிடலாம் தானே ? என்ற கேள்விகள் தொடர்ந்து யாரவது கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் . இன்றைய  கல்வி கண்டிப்பாக சோறு போட்டுவிடும் . சோற்றுக்கல்வியோடு சேர்த்து பண்பாட்டு கல்வியையும் அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஏன் என விளக்கவேண்டிய அவசியம் இல்லை. தொலைக்காட்சியில் அரைமணிநேரம் செய்தியை பார்த்தாலே புரிந்துவிடும்.

கலைகளை கற்பது இன்று செலவேரிய ஒன்று. ஆனால் அவர்களை திருவிழாக்களுக்கும் , குடும்ப விழாக்களுக்கும் அழைத்து செல்வது கூட பண்பாட்டு கல்வி அளிப்பது தான்.
எதுவும் முடியவில்லை என்றால்  கதைகளையாவது சொல்லலாம்.

வாழ்வில் பெரும் சோர்வோ , நிலையழிவோ அல்லது கொண்டாட்டமோ "கலை" ஒளிவிடும் சுடர்மணியன அக்‌ஷய்யை  காக்கும் என நம்புகிறேன். அவன் வாழ்க.

சே .சிவக்குமார்  

1 கருத்து: