"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

புதன், ஏப்ரல் 14, 2010

ஒரு விடுமுறை நாளில்...


ஒரு விடுமுறை நாளின் காலை நேரத்தில் எங்கள் ஊர் அருகில் உள்ள ஏரிக்கரையில் நடந்துக்கொண்டிருந்தேன்.ஏரியில் பாதி அளவு தண்ணீர் இருந்தது.
மழைக்காலங்களில் மட்டும் ஏரியில் தண்ணிர் நிறையும்.மற்ற நேரங்களில் வெரும(ண்)னே காயும்.ஏரியின் ஒரு கரையோரம் சாலையும் மறுபுரம் இரயில் பாதையும் இருக்கும்.


ஒரு முழுநீள இரயிலும் தண்ணீரில் பிரதிபலித்துக்கொண்டே நகர்வது பார்க்க அழகாக இருக்கும்.நூற்றுக்கும் மேற்பட்ட கருவேல மரங்கள் அடர்ந்து இருக்கும்.
கருவேல மரத்தில் முட்கள் அடர்ந்து இருப்பதால் அவைகள் எப்போதும் நம்மை முறைப்பது போலவே தோற்றமளிக்கும்.நீர் இல்லாத நேரத்தில் பார்த்திருக்கிறேன் சிலர் காய்ந்த மரங்களை வெட்டி நீளமான கனத்தசுமைகளாக கட்டி தூக்கிச்செல்லுவார்கள்.அவ்வளவு கனத்தை அவர்கள் தூக்கிக்கொண்டு நடக்கவில்லை,அவர்களின் பசிதான் தூக்கிக்கொண்டு நடக்கிறது.

அந்த காலை வேளையில் சிலர் அங்கு ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தனர்.அதில் ஒரு சிறுமி ஆட்டுக்குட்டியோடு பேசிக்கொண்டு இருந்தாள்.நீல நிற பாவடை,கசங்கி சுருங்கிய வெள்ளை
நிற சட்டை அனிந்து வெளிரிய சிகப்பு நிற ரிப்பன் தலையில் கட்டியிருந்தாள்.எனக்கு அந்த சிறுமியை இதற்கு முன் பார்த்தது போன்ற உணர்வு.அவள் அருகில் சென்று நீ யாறு?, உன் போர் என்ன? என்று கேட்டேன்.தன் சட்டையின் ஒரு முனையை வாயில் வைத்துக்கொண்டு என் பேரு "வசந்தி" என்றாள்.

பக்கத்தில் இருந்த பாட்டி என்னை பார்த்து ஏம்பா நீ சேட்டு பையன் தானே லீவ்ல வந்து இருக்கியா என்று கேட்டார்.நீங்க ருக்குவோட அம்மாதானே?
ருக்கு நல்ல இருக்கா? என்று கேட்டவுடன் முகம் வாடிப்போனது அந்த பாட்டிக்கு.எங்கப்பா இருக்கு,இந்த பொண்ணு அவ வைத்துக்குள்ள இருக்கும் போது அவங்க அப்பன் குடிச்சிட்டு வந்து வைத்து மேல உதச்சிடான்.அப்ப வலி வந்து இந்த பொண்ண பெத்து கையில குடுத்துட்டு போய் சேந்துடா.
கையில் இருந்த குச்சியை தரையில் ஓங்கி இரண்டு முறை அடித்தார்.

யாரு பாட்டி இது? என்று தன் உதிர்ந்த பற்க்களின் வழியே வழியும் புன்னகையை அடக்கிக்கொண்டு கேட்டாள் வசந்தி.
நானும் உங்க அம்மாவும் பள்ளி கூடத்தில ஒன்னா படிச்சோம்.உங்க அம்மா கம்பும் வெல்லமும் சேர்த்து ஊர வைத்து கொண்டுவரும்,சாப்பிட நல்லா இருக்கும் என்று சொன்ன போது வசந்தி ஓடிச்சென்று ஒரு தூக்கு சட்டியை எடுத்து வந்து திரந்து காட்டினாள்.அதே போல கம்பும் வெல்லமும் இருந்தது.

ஏம்பா கொஞ்சம் சாப்பிடுவா என்று அழைத்தபடியே பாட்டி ஒரு தூக்கு சட்டியை திரந்து பழய சாதத்தை எடுத்து அதன் மூடியில் வைத்தார்.பழய சாதம் எளிமையன உணவுதான் ஆனால் காலை வெயிலில் வேலை செய்துவிட்டு உண்ணும் போது அது தரும் குளிர்ச்சியும் மென்மையான சுவையும் ஒரு அழகிய கவிதை போல இருக்கும்.வசந்தி கம்பும் வெல்லமும் கொடுத்தாள்.
இரண்டையும் சாப்பிட்டு முடித்தவுடன் ஏரியில் கைழுவினேன்.வசந்தியும் சாப்பிட்டு விளையாட அழைத்தாள்.ஒரு அருகம் புல்லை எடுத்து அதில் வட்டமான ஒரு முடிச்சை போட்டு காரச்செடியின் பாலை அந்த வட்டத்தில் நிரப்பி ஊதியபோது அது அழகான குமிழ்களாய் பறந்தன.தாத்தா தாத்தா பம்டி தாத்தா காசு கொடு இல்ல தலைய வெட்டிடுவேன் என்று பூண்டுச்செடியின் பூக்களை கைகளாள் சுண்டினாள்.காய்ந்த பனை ஓலையில் காத்தாடி செய்து அதில் கருவேல முல்லை நடுவில் சொருகி அதை காற்று வரும் திசையில் காட்டினாள். அது சற்று நேரம் ஓட மறுத்து பின் வேகம் எடுத்து சுற்றியது.நான் கருவேல முல்லை ஒடித்த போது அது கையில் குத்தி இரத்தம் வெளியேரியது.வசந்தி அதற்கு பதற்றம் அடைந்தது எனக்கு
ஆச்சரியமாக இருந்தது. எருக்கம் இலைகளை பறித்து வந்து குத்திய இடத்தில் அதன் பாலை விட்டாள்.அது குத்திய இடத்தில் சில்லென பரவி வலியை குறைத்தது.அவளின் துடுக்கான பேச்சும்,இயல்பான விளையாட்டுத்தனமும் மனதில் ஒட்டிக்கொண்டது.

ஏரின் அடுத்த பக்கம் ஒரு நீரிரைக்கும் பம்புசெட் இருந்தது.அதை சுற்றிலும் பெரிய பெரிய புங்கமரங்கள்வளர்ந்து நிழல் சூழ்ந்து இருக்கும்.மத்திய நேர உச்சி வெயில் தாளமல் நானும் வசந்தியும் அங்கு சென்றோம். பம்புசெட்யிலிருந்து வந்த நீர் அருகில் இருந்த தென்னை மரங்களுக்கு பாய்ந்து கொண்டு இருந்தது.கால்வாயிலிருது கொஞ்ச நீரை எடுத்து முகத்தை கழுவினேன்.வெயில் சூழ்ந்த நிலையில் அந்த இதமான குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் போல இருந்தது.வசந்தி கொஞ்சம் கேல்விறகு கூழும்,வெல்லமும் சாப்பிடக்கொடுத்தாள்.கூழ் குடித்தால் விரைவில் பசியடைங்கி விடும் ஆனால் விரைவிலேயே பசித்து விடும்.புங்க மரத்தின் இதமான குளிர்ந்த காற்றும்,மனதின் லேசான உணர்வும் என்னை ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்தியது.அருகில் இருந்த நீர் தொட்டியின் மேல் படுத்து உரங்கிவிட்டேன்.

விழித்தெழுகையில் மேற்க்கே சூரியன் ஏரியிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தது.இரயில் ஒன்று இந்த அழகிய ஏரியை கவனிக்காமள் வேகமாக கடந்து கொண்டு இருந்தது.தும்பிகள் ஏரியின் மேல் பறந்து கொண்டு எதையோ தேடிக்கொண்டு இருந்தன. தூரத்தில் வசந்தி இரயில் உள்ளவர்களுக்கு டாடா காட்டிக்கொண்டு இருந்தாள்.பாட்டி ஆடுகளை ஓடிக்கொண்டு வீடுக்கு சென்று கொண்டு இருந்தார்.

நான் திரும்பி வீடு நோக்கி நடக்கையில் இந்த நாள் சின்ன சின்ன மென்மையான நிகழ்வுகள் சேர்ந்து ஒரு அழகிய நாளாக என் மனதில் பதிந்ததை உணர்ந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக