அணங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (வேலூர் மாவட்டம் ).அணங்காநல்லூர், மோட்டூர், கார்னாம்பட்டி, வாத்தியார்பட்டி, பட்டுவாம்பட்டி, ஏரிக்கரை என சுற்றி உள்ள கிராம பிள்ளைகளுக்கு ஒரே பள்ளிக்கூடம்.
என் பாட்டி தான் என்னை பள்ளியில் சேர்த்தாங்க . நுழைவு தேர்வு இல்லை, அப்பா அம்மா படித்திருக்க தேவை இல்லை, ஏங் பாட்டிகூட படித்திருக்க தேவை இல்லை , நன்கொடை ( கொடையே நல்லது நன்கொடை நல்லது அல்ல ) தேவை இல்லை, சிபாரிசு தேவை இல்லை ஆனா நீங்க ஒன்னாவுதுல சேரத்துக்கு ஒரே ஒரு தகுதி வேணும், உங்க வலது கைய அப்படியே உயர்த்தி தலைமேல மடக்கி இடது காத தொடணும் அவுளவுதான்.
தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் நம்ம பக்கத்து ஊர்காரர் , அதனால சுற்று வட்டாரத்தில் அனைவரையும் தெரியும். அப்பா பேர் சொன்னதும் சேர்த்துக்கொண்டார்.
80பதுகளில் ரேடியோ தான் உலக தொடர்பு சாதனம். காலை 7.15க்கு செய்திகள் அதைதொடர்ந்து நிகழ்ச்சி நிரல், 7.40க்கு இன்று ஒரு தகவல் , தென்கட்சி சுவாமிநாதன் தகவலை சொல்லுவார். நெருக்கமான மொழி நடையில் சிறிய கதையோடு அவர் சொன்ன தகவல்கள் இன்றும் வாழ்வோடு பயணித்து வழிகாட்டுகிறது. 7.45க்கு தமிழ் பாடல்கள் அதை தொடர்ந்து 8 மணிக்கு ஒரு இசை வரும் , அதுவே ம்ம்ம் டைம் ஆச்சு school க்கு ஓடு என சொல்வது போல இருக்கும் , அதற்குள் நானும் செங்கல் போடி அல்லது கரிதூள் அல்லது கோபால் பல்பொடியில் பல்விளக்கி, பம்பு செட்டில் குளித்து, பழயதை தின்று ஓடுவதற்கு தயாராகவே இருப்பேன். ஒரு பை அதில் பலகை மற்றும் பல்பம் போட்டு வைக்கும் டப்பா. ஒரு பக்க சிறகு போல அது தோளில் தொங்க, டப்பாவும் பலகையும் மோதி டங் டங் என சத்தத்துடன் பள்ளிக்கு ஒரு சிறிய பயத்தோடு ஓடுவேன். இன்றும் நான் காலையில் வேலைக்கு கிளம்பும் போது coffee யில் மெலிதாக எழும் ஆவி போல பயம் எழுவது அதன் நீட்சியாக இருக்கலாம்.
இங்க ஒன்னு கவனிக்கணும், முதல்ல எங்க ஊர்ல "பள்ளிக்கூடம் போகலியா " ? என கேட்பாங்க . ஆனால் தானியார் பள்ளிகளில் கொஞ்சம் வசதியானவங்க புள்ளைங்கள சேர்த்தாங்க. அப்புறம் எங்க பள்ளிக்கூடத்தை "school " அப்படின்னு கூப்பிட ஆரமிச்சிட்டாங்க.
காலையில் prayer. அதில் தமிழ் தாய் வாழ்த்து ( நீராரும் கடலோடுத்த ) இரண்டு பெண்களே தினமும் பாடும்,ஒருகட்டதில் தாங்க முடியாமல் டேப் ரெகார்டரில் போட்டார்கள், அப்போது தான் தெரிந்தது அது எவ்வளவு அழகான பாடல் என்று. ( ஒரு நாள் இந்த பாடலை நீராரும் ஓ !ஓஹோ கடலோடுத்த ஓ !ஓஹோ என மச்சான வச்சிக்கடி முன்தான முடிச்சிலதான் பாட்டு மெட்டில் பாடிக்கொண்டு இருந்தேன் P .T வாத்தியார் தலமேல ஒரு அடிவிட்டார்) . பின்பு ஒரு குறளும் அதன் பொருளும் சொல்வார்கள், தினமணி செய்தித்தாள் வாசிப்பர், உறுதிமொழி ஒருவர் சொல்ல மற்றவர் சேர்ந்து சொல்லவேண்டும். அதில் இருந்த வார்த்தைகள் எனக்கு மறந்து விட்டது, ஆனால் ஒரு பெரிய அரசமரத்தை காற்று உலுக்குவதை போல 500 சிறுவர் சிறுமியர் சேர்ந்து ஒலிக்கும் போது ஏற்பட்ட அதிர்வு இன்னும் நினைவில் இருக்கிறது. வெள்ளிகிழமை மட்டும் காலையில் தேசிய கொடி ஏற்ற வேண்டும். தேசிய கொடியில் மரமல்லி பூ போட்டு அழகாக மடித்து கட்டி பாதிவரை ஏற்ற பட்டு இருக்கும். ஒரு சிறுவன் மார்ச்பாஸ் அடித்து தலைவர் போல் நிற்கும் ஒரு சிறுவனிடம் கொடியின் கயிறை அவிழ்த்து கொடுப்பான். தலைசிறுவன் மெதுவாக அதை மேல் ஏற்றி கொடியை அவிழ்த்து பறக்க விடுவான். அனைவரின் கர ஒலி முடிந்ததும் தலைசிறுவன் சுதந்திர தியாகி யாராவது ஒருவரை பற்றி பேச வேண்டும். அதன்பின் தேசிய கொடி வாழ்த்து பாடலான தாயின் மணிக்கொடி பாரீர் பாடல் பாடப்படும்.
கிராமத்து சிறுவர்கள் எந்த தன்ஒழுக்க கட்டுக்குள்ளும் வருவது இல்லை. கெட்ட வார்த்தைகளை பெற்றோர் மற்றும் சூழ்லையிலிருந்து எளிமையாக எடுத்து கையாள்வர். வன்முறையில் வலியவன் வகுப்பில் அனைவராலும் மதிக்கபடுவான். ஒரே சாதி சிறுவர்கள் ஒன்றாய் விளையாடுவர்.
படித்தால் மட்டுமே வாழ முடியும் என யாரும் அவர்களை பயமுறுத்துவது இல்லை. ஏனெனில் கிராமத்தில், படித்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை இல்லை. நகரத்திலிருந்து வரும் ஆசிரியர்கள் இவர்களை ஒழுக்க எல்லைக்குள் நிருத்தவே படாதபாடுபடுவர். அதன்பின் அவர்களுக்கு கல்வி அளிப்பது இன்னும் சிரமமான விஷயம். ஆனாலும் சில ஆசிரியர் மாணவர்களுக்கு பிடித்தமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் பாடங்களை ஒரு சுவாரசியமான கதைகளாக மாற்றி நடத்தினார்கள்.