காலையில் எழுந்தவுடன் உடல் முறுக்கி திமிர் விடுகிறான்.
படுக்கைலிருந்து இறங்கி வீட்டில் இருக்கும் இரு அறைகளையும் ஒரு நோட்டம் விட்டுவிட்டு டிவியை எழுப்பி அதில் விளம்பரம் வருகிறதா என பார்க்கிறான். டிவியில் அவன் விளம்பரங்களை தவிர வேறெதுவும் பார்ப்பது இல்லை. பின்பு விளையாட துவங்கி விடுகிறான்.
எந்த பொருளுக்கும் அவனிடத்தில் எந்த மதிப்பீடும் இல்லை. ஆதலால் அவனை பொருத்தவரை எல்லா பொருளும் விளையாட்டு பொருள்தான்.
வயிறு நிறைந்தாள் உணவை வைத்து விளையாடுகிறான். சமையல் அறையில் பாத்திரங்கள், குளியல் அறையில் தண்ணீரோடு , படுக்கை அறையில் படுக்கையில், அம்மாவின் அழகுசாதன பொருட்கள், என் சுத்தியல், திருப்பிலி , அடுக்கி வைத்த துணிகள் , துப்புரவு பொருட்கள் என அவன் விளையாடும் பொருட்களின் பட்டியல் நீளும். அவன் பொம்மைகளை அதிகம் தொடுவது இல்லை. ஏனெனில் அவன் எங்கள் இருவரை பார்த்து கற்றுக்கொள்ள நினைக்கிறான். ஆதலால் நாங்கள் உபயோகிக்கும் பொருட்களே அவனுக்கும் தேவைபடுகிறது. சில நேரங்களில் நானும் அவனும் விளையாடுவோம். அவன் உற்சாகத்தோடு ஏறி குதித்து , சிரித்து மகிழ்ந்து , ஓடி சுழன்று விளையாடுவான். அந்த உற்சாகம் எனக்குள்ளும் பொங்கும் ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. மறுபடியும் மனம் இறுகி அமைதியாகிவிடும். ஆனால் அவன் தொடர்ந்து அதே நிலையில் இருப்பான். இந்நிலையில் அவன் முன் எஞ்ஞாநியும் அஞ்ஞானியே .
ஒருநாள் parkக்கு அழைத்து சென்றேன். பரந்த புல்வெளியில் விளையாட விட்டேன். திடீரென உற்சாகம் கொண்டு புல்வெளி முழுவதும் கைகளை உயர்த்தி ஓட துவங்கினான். ஆனந்தமாக ஓடிக்கொண்டே இருந்தான். என்னால் அவனை பிடிக்கவே முடியவில்லை. பெரிய மழைத்துளிகளை போல அவன் பாதங்கள் புல்வெளியில் படர்ந்து கொண்டே இருந்தது. அங்கிருந்த புல்வெளியும், சறுக்கு மரங்களும் , ஊஞ்சலும் மணல் பரப்பும் அவனை ஈர்க்கவில்லை, ஆனால் அந்த திறந்தவெளி அவனை ஈர்த்தது. மூச்சுமுட்ட அந்த திறந்தவெளியை பருகித்திளைத்தான்.
அவன் விரும்பி உண்ணும் உணவு என்று எதும் இல்லை. பசித்தால் பழைய சோறு முதல் பாதாம் பருப்பு வரை தின்பான். இப்போது ஊட்டுவது பிடிக்கவில்லை, அவனே இரைத்து பூசி தின்றால் ஒரு திருப்த்தி.
இட்லியை இட்டா அல்லது இட்டி என்பான். ஹலோவுக்கு ஹலா என்பான். இன்னும் சில நாளில் ஒரு புது மொழி எங்கள் வீட்டில் உலாவும் என நினைக்கிறேன்.
தூங்கும்முன் கட்டை விரலை வாயில் வைத்துக்கொள்கிறான். தூக்கத்தை உறுஞ்சி குடிக்கிரானோ என தோன்றும். அம்மா தலைமீது கொஞ்சநேரம், எங்களுக்கு இடையில் கொஞ்சநேரம், குருக்குவெட்டாக கொஞ்சநேரம் என புரண்டுவிட்டு இறுதியில் காலுக்கு அடியில் தூங்கிவிடுவான்.
கோவம் தெரியவில்லை ஆனால் வீம்பு உள்ளது. அழ தெரிகிறது ஆனால் துக்கம் தெரியவில்லை. அவன் நினைத்ததை செய்கின்றான் ஆனால் ஒரே மாதிரி அல்ல. சிரித்தாள் கண்களும் சிரிக்கின்றது.
அவன் விரல் பிடித்து என் உலகத்திற்கு அவனை அழைத்து வர இது வரை எனக்கு தோன்றவில்லை . அவன் மழலையில் திளைத்திடவே எனக்கு நேரம் போதவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக