ஒன்றாம் வகுப்பு முதல் மூன்ராம் வகுப்பு வரை தரையில் அமர்ந்து பாடம் படிக்க வேண்டும். தரை சொர சொரப்பாக தரமற்று இருக்கும். அதில் அமர்ந்தால் விரைவில் டௌசர் கிழியும். நான்கு ஐந்து வகுப்புக்கு பலகை. ஆறு முதல் எட்டு வகுப்புக்கு பெஞ்ச். சீமை ஓடு கூரை அமைக்கப்பட்ட கட்டிடங்கள். விளையாட்டு மைதானம் இல்லை ஆனால் அகலமான மணல் நிறைந்த பாலாறு இருந்தது. பள்ளியின் முன்னுள்ள மரமல்லி தினமும் தினமும் பூக்களால் கோலம்போடும். கழிவரை தனியாக இல்லை, சுற்றும் தோப்புகள் வயல்கள் என்பதால் தேவைப்படவில்லை.
மத்திய உணவு அரசு உணவு. அதன் வாசனை என்னுள் எங்கோ தேங்கி இருக்கிறது. குழம்பு ஒரே மாதிரியான சில காய்கள் சேர்த்து பாமாயில் எண்ணை ஊற்றி செய்யும் பருப்பு குழம்பு. சோறு வடித்த கஞ்சி குழம்பில் சேர்ப்பர். ஒருவருக்கு இரண்டு கரண்டி சோறு , ஒரு கரண்டி குழம்பு. கையில் அலுமினிய தட்டோடு கண்ணில் பசியோடு முண்டியடித்த சிறுவர்களை இன்னும் நினைவிருக்கிறது. கொஞ்சம் வசதியான மாணவர்கள் வீட்டிக்கும் அல்லது வீட்டிலிருந்து கொண்டுவந்தும் சாப்பிடுவர். வாரம் இருமுறை முட்டை. சாப்பிட்டபின் கழுவுவதற்கு சுற்றி இருந்த நான்கு பம்பு செட்டுகளுக்கு பிள்ளைகள் போவார்கள்.
புத்தகங்கள் அரசாங்கம் கொடுத்தது. அது எல்லோருக்கும் போதுமானதாக இருக்காது. தலைமை ஆசிரியர் அதை சரியாக பிரிப்பார். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் , கூலி வேளை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கும் எல்லா படத்திர்க்குமான புத்தகங்களை கொடுப்பார் , ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தாள் மூன்று புத்தகம், இரண்டு ஏக்கர் நிலம் இருந்தாள் இரண்டு புத்தகம், பம்பு செட்டு வைத்திருந்தாள் புத்தகம் இல்லை. மேலும் போதவில்லை என்றால் பழைய புத்தகங்களை சேகரித்து கொடுப்பார். சில பெற்றோர்கள் அவரிடம் வந்து சண்டையிடுவர். சீருடை, செருப்பு, பல்பொடி எல்லாம் கொடுத்தார்கள். நிறைய சிறுவர்கள் முதன் முறையாக செருப்பு அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
ஆறாம் வகுப்பு வரை தமிழ் தவிர வேறு பாடங்கள் முன்னெடுத்து படிக்கவில்லை. ஏழாம் வகுப்புக்கு மேலே அறிவியல்,கணக்கு, வரலாறு & புவியியல் என தனித்தனியாக படித்தோம். ஆங்கிலம் சுத்தம்.
ஆறாம் வகுப்பில் ஒரு வாத்தியார் Grammar என்றால் என்ன என்னறார். நான் எழுந்து கிராமம் என்றால் சிறிய ஊர் சார் என்றேன். கிளாஸ்ல எல்லோரும் கை தட்டினார்கள். அந்த வாத்தியாரோட நிலமைய நெனச்சி பாருங்க.
எங்கள் தலைமை ஆசிரியர் தான் அதை எளிமையாக்கி அடிப்படைகளை சொல்லிகொடுத்தார். ஏழாம் வகுப்பில் தமிழை சரளமாக பெரும்பாலும் படித்தனர் சிலர் எழுத்துக்கூட்டி படித்தனர். ஆங்கிலம் எட்டாம் வகுப்பு வரை யாருக்கும் படிக்க வரவில்லை. சில மாணவர்களுக்கு ABCD முழுமையாக தெரிந்திருக்கவில்லை.
இந்த மாணவர்களுக்கு நகரத்துடனான தொடர்பு மிகவும் குறைவு. மருத்துவமனைக்கும் சினிமாவுக்கும் யாராவது அழைத்து சென்றாள் உண்டு. இங்கு படித்துவிட்டு மேலே படிக்க செல்லும் போது ஆங்கிலம் மட்டும் பயமுறுத்துவது இல்லை நகர பின்னணி மாணவர்களின் பழக்கங்கள், பேச்சு, உடல் மொழி , உடை அத்தனையும் புதியதாக கற்க வேண்டும். அப்படி கற்காமல் இருக்கும் பட்சத்தில் பயம் சூழ்கிறது.
எதையும் உணர்வு சார்ந்து சிந்திக்கவே பழகிவிட்டு அறிவு சார்ந்து சிந்திக்க துவங்கும் போது இயல்பாகவே ஒரு குழப்பம் வருகிறது அதை தொடர்ந்து பயம் சூழ்கிறது.
அடுத்து ஏழ்மை. கிராமத்தில் அடிப்படை தேவைகளின் எண்ணிக்கை குறைவு. நகரத்தை நோக்கி நகரும் கிராமத்து மாணவனை அதன் அடிப்படை தேவைகளின் எண்ணிக்கையே பயமுருத்திவிடும்.
அடுத்து ஆங்கிலம். நாகரிகத்தின் அடையாளமாக அதை உள்வாங்க துவங்கும் போது அது பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது.
இதையெல்லாம் தாண்டி நிறைய இளஞ்சர்கள் சாதிக்கிறார்கள்.
( தொடரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக