"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், பிப்ரவரி 04, 2014

காப்பகம்

சமிபத்தில் ஒரு பொங்கல் பட்டிமன்றம் பார்த்தேன் அதில் ஒரு பேச்சாளர் பெற்றோரை காப்பகத்தில் விடும் மகன்களை வழக்கம் போல் வசை பாடினார்.

எனக்கு சில கேள்விகள் மனதில் எழுந்தன

பெற்றோரை காப்பகத்தில் விட காரணம் அன்பு குறைவதினாலா  அல்லது பொருளாதார நெருக்கடியா?

வயதான பெற்றோர்கள் மீது மகனுக்கு அன்பு குறையும் என்றால் அதன் உளவியல் காரணம் என்ன ?

பெற்றோர்களை காப்பகத்தில் விடும் மகனுக்கு அன்பு இல்லை என்றால் தன் குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் தாய்க்கு அன்பு இல்லையா ?

மருமகளின் நெருக்கடியும் மீறி மகனோடு இருக்கும் பெற்றோர்கள் மனநிம்மதியோடு இருக்கிறார்களா?

நல்ல நிலையிலிருந்து வயதான காலத்தில் மகனுக்கும் மருமகளுக்கும் எடுபுடி வேலை செய்யும் பெற்றோர்களின் மனநிலை எப்படி இருக்கும் ?

வெளிநாடுகளில் வேலை பார்க்கும் மகன் பெற்றோர்களை அங்கு அழைத்து சென்றால்  அந்த சூழலும் கால நிலையும் அவர்கள் மகிழ்வாக இருக்க உதவுமா?

மகனும் மருமகளும் வேலைக்கு சென்ற பின் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா ?

காப்பகங்கள் இல்லாத காலங்களில் இவர்களின் நிலை என்னவாக இருந்தது ?

காப்பகத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சி இல்லாமல் துன்பத்தில் வாழ்கிறார்களா ?

நகரத்தில் மாறிவரும் சூழல், பொருளாதார நிலை , வாழ்வியல் இவை அனைத்தும் பெற்றோர்களை காப்பகம் நோக்கி தள்ளுகின்றன.
இதை உணர்வு பூர்வமாக மட்டுமே  சிந்திக்கும் சிலர் மகன்களை முன்வைத்து வசவு பாடிக்கொண்டே இருக்கிறார்கள்.

கிராமத்திலும் மகன் தாயை அடிக்கும் காட்சியை பார்த்திருக்கிறேன். கைவிடப்படும் வயதானவர்களுக்கு அந்த கிராமமும், சாதியும், உறவுகளும்  உதவுகின்றன. அவர்கள் கூலி வேலை செய்கிறார்கள், கீரை, பழங்கள் விற்கிறார்கள், அரசாங்கம் உதவி தொகை அளிக்கிறது .

என் அப்பா காலையில் ஆறுமணிக்கு எழுவார். சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்து கிராமத்துக்கு சென்று டீ குடிப்பார். அது ஒரு முஸ்லிம்கள் வாழும் கிராமம். அங்கு நண்பர்களோடு பேசிக்கொண்டு இருப்பார். வணக்கம் வைக்கும் நாலு பேர்க்கு டீ வாங்கி கொடுப்பார். மறுபடியும் வீட்டுக்கு வந்து கூழ் குடித்துவிட்டு நிலத்துக்கு சென்று கூலி ஆட்களை வைத்து வேலை செய்வார். மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தூங்குவார். மாலை வெள்ளை உடை அணிந்துகொண்டு அருகில் இருக்கும் நகரத்துக்கு செல்வார். அங்கும் நண்பர்களோடு பேசிக்கொண்டு இருப்பார். இரவு வந்து கொஞ்ச நேரம்  டிவி பார்த்துவிட்டு சாப்பிட்டுவிட்டு துங்கி விடுவார்.

கடந்த இருவது வருடங்களாக இது விடாமல் நடக்கிறது. எனக்கு தெரிந்து அவர் வெளியில் தங்கியதே இல்லை, வீடுவந்து சேர்ந்து விடுவார். வீடு வந்தால் தான் நிம்மதி என்பார்.

அவருக்கு உன்ன உணவும் , தங்குமிடம் மட்டும் இருந்தால் போதாது , அவரை பார்த்து வணக்கம் வைக்க நான்கு பேர், அவர் வேலை வாங்க நான்கு பேர் , பேச நண்பர்கள் என எல்லாம் வேண்டும்.

அவரை வேறு இடத்துக்கு  மாற்றுவது என்பது ஒரு ஆலமரத்தை பிடுங்கி ஆற்றுக்கு நடுவில் நடுவதை போன்றது. வேரும் அழுகும் மரமும் உதிரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக