"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

நீச்சல் குளமும் மீன் குழம்பும்

நீச்சல் குளமும் மீன் குழம்பும்

நேற்று இரவு 8 மணி இருக்கும், ஏதோ ஒரு தேவை  இல்லா எண்ணம் எழுந்து என்னை அழைகளித்தது. ஒற்றை ஈ நம்மை சுற்றி சுற்றி வந்து எரிச்சல்லூட்டுவது போல .

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தேன். தீடீரென அருகில் உள்ள நீச்சல் குளத்துக்கு போகலாம் என ஒரு எண்ணம் வந்தது.

வண்டி எடுக்க வெளியில் வந்தால் வருடும் மென்குளிரில் உடல் சிலிர்த்தது.
குளிர் தேவதை ஒருபிடி குளிரை எடுத்து காற்றில் கலந்துவிட்டிருந்தாள்.

'அந்த  குளிரில் நீச்சல் குளம் மூடி இருக்கும் பாஸ்ச'  என்று மனதின் உள்ளிருந்து ஒருவன் குரல் கொடுத்தான்.

வண்டியை எழுப்பி மெதுவாக சாலையில் முன்னகர்ந்தேன்.

சாலை முழுவதும் நியான் விளக்கின் ஒளி வழிந்தோடியது. மஞ்சள் நிற செயற்கை கானல் நீர் போல

மனம் கொஞ்சம் அமைதியானது. சாலை ஓர  கடைகள் வாங்கும் ஆட்கள் யாரும் இல்லாமல் செயற்கையாக சிரித்துக்கொண்டு இருந்தது.

கொஞ்ச தூரத்தில் நீச்சல் குளம் இருக்கும் இடம் வந்தது. உள்ளே ஒரு கேரளா சேட்டா  லேப்டாப்பில் படம் பார்த்த்துக்கொண்டு இருந்தார். அவரை பார்த்தவுடன் சந்தோஷமாக இருந்தது. அவர் இயல்பாக என்ன என்றார்.

இங்க என்ன பல்லு புடுங்கவா வருவாங்க ?  என்று மனதில் நினைத்துக்கொண்டாளும் குளிக்கனும் சேட்டா என்றேன் பவ்வியமாக

அவர் என் பவ்வியத்தை பார்த்து எழுந்து லேப்டாப்பை கிழே வைத்துவிட்டு , தண்ணீர் ரொம்ப கூலாக இருக்கு என்றார்.

பரவயில்லை என்று காசை கொடுத்துவிட்டு உள்ளே சென்றேன்.

உள்ளே யாரும் இல்லை. நீர் மட்டும் தியானத்தில் மூழ்கி இருந்தது. இந்த தண்ணீர் முழுவதும் உனக்காக என்றது மனம்.

ஊஞ்சலில் அமர்ந்து எம்பி எழும் சிறுமி போல எம்பி நீரினில் குதித்தேன்.

உடல் நீரை தொட்ட தருணம் மின்னல் போல் ஒரு உணர்வெழுச்சி எழுந்து அடங்கியது. தண்ணீர் தண்ணிருக்குள்ளே விலகி என்னை உள் வாங்கியது. அதன்  குளிர்ச்சி மீன் குஞ்சுகள் கடிப்பது இருந்தது.

யாரும் இல்லா நீர் குளம், நான் மட்டும் தண்ணீரோடு , ஏதோ ஒரு பயம் என்னோடு நீந்திக்கொண்டே  இருந்தது. கிராமத்தான் என்றாலும் நீச்சல் முழுமையாக தெரியாது. என்னை காத்துக்கொள்ளும் அளவுக்கு தெரியும்.

தண்ணீரோடும், தண்ணிரிலும்  விளையாடுவது எவ்வளவு மகிழ்வான தருணம். ஒரு சிறுவன் போல குதித்தும் நீந்தியும், கத்திக்கொண்டும் விளையாடிக்கொண்டு இருந்தேன்.

எப்போதும் காற்று நம்மை சூழ்ந்து இருக்கும். ஒரு மாறுதலுக்காக நீர் நம்மை சூழும் போது ஏதேதோ உணர்வுகளை எழுப்பி விடுகின்றது, ஒரு அழகான பெண் நம்மிடம் வந்து பேசும் போது எழும் உணர்வுகளை போல.

கொஞ்ச நேரத்தில் கலைத்துவிட்டது. கரையில் சம்மணம் இட்டு அமர்ந்துகொண்டேன். மனமும் உடலும் நெகிழ்வாக இருந்தது. இது கூட ஒரு வகை தியானமோ என்று எண்ணிக்கொண்டேன்.

நம்ம சேட்டா வந்துவிட்டார். மூட போவதாக சொன்னார். தலையை துவட்டிக்கொண்டு உடை மாறிக்கொண்டேன். வெளியில் வந்து சிறிது நேரம் வண்டியில் அமர்ந்து இருந்தேன். களைப்பு மெல்ல வடிய துவங்கியது.

சிறு வயதில் ஊரில் ஏரிக்கு செல்வோம். நீர் வடியும் தருவாயில் ஆங்காங்கே தண்ணிர் தேங்கி நிற்கும். அது குட்டை என்று அழைப்போம் . ஐந்து பேர் சேர்ந்து தேங்கிய தண்ணிரை வாரி தரையில் இறைப்போம்.  முழுமையாக இறைத்த பின்னர் அதிலிருந்த மீன்கள் துள்ள துவங்கும். அதை அப்படியே வாரி கூடையில் போட்டுக்கொள்வோம்.

ஏதேதோ எண்ணங்கள் எழுந்து அடங்கிய பின் பசி எழுந்தது.

அருகில் ஹோட்டல் தஞ்சை இருந்தது. இது தமிழர்களால் நடத்தப்படும் சிறிய ஹோட்டல். இங்கு ஒரு பையன் இருக்கிறான் , அவன் முகம் எப்போதும் சிரிப்பால் நிரம்பி இருக்கும். அவன் அருகில் வந்ததும் மீன் கறி இருக்கா என்றேன். அவன் முதலில் இல்லை என்றபின் பொறுங்கள் என்று உள்ளே போனான். அங்கு மாஸ்டரிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தான். அப்போதே எனக்கு தெரிந்தது  அவன் மத்திய குழம்பை ரெடி செய்கிறான் என்று.

சிறிது நேரம் கழித்து சூடான பொராட்டாவும் சிறுக வெதுவெதுப்பாக்கிய மீன் குழம்பும் எடுத்துவந்து வைத்தான். பொராட்டா மிருதுவாக கையில் எடுத்தால் உதிர்ந்து விடும் போல் இருந்தது. அதன் மேல் படர்ந்திருந்த மொருமொருப்பு என் நா அடியில் உமிழ் ஊர செய்தது. வெறுமனே கொஞ்சம் எடுத்து சுவைத்துப்பார்த்தேன்.

மாஸ்டர் குண்டானை காலி செய்ய நினைத்திருப்பார் போல, நிரைய குழம்பும் அதில் ஒரு மத்தி மீனும் வைத்திருந்தார். மீன் ; குழம்பில் ஊறி சற்று கனத்திருந்து. செந்நிற குழம்பில் வெண்ணிற எண்ணை துளிகள் மிதந்து நீந்தியது. வயிறில் பசி நெளிய மனதில் சுவை விரிய நாவில் நீர் ஊர ஒவ்வொரு வாயாக, பள்ளிவிழாவில் கொடுத்த ரவா லட்டை கிராமசிறுவன் கொஞ்ச கொஞ்சமாக ரசித்து உண்பது போல உண்டு முடித்தேன்.

அறைக்கு வர இரவு பத்து மணி ஆனது. மனது  மகிழ்வோடு கை கோர்த்து விளையாடிக்கொண்டு இருந்தது. கொஞ்சம் மெனகெட்டால் போதும் மகிழ்வை நமக்குள் நிரப்பிக்கொள்ளலாம் என தோன்றியது.

நான் எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பட்டியலிட முயன்றேன். இனியாளின் கரம் பற்றும் போது, பையனோடு விளையாடும்  போது, பாட்டு பாடும் போது, படிக்கும் போது, சாப்பிடும் போது, தனியாக ஊர் சுற்றும் போது, நபர்களோடு இருக்கும் போது , அட இவ்வளவு தானா ......இந்த பட்டியலை இன்னும் கொஞ்சம் நீட்டலாம் என தோன்றியது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக