"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், மே 06, 2014

காடு





"காடு " நான் படித்த முதல் இலக்கிய நாவல். ஜெயமோகன் எழுதியது . படிப்பது என்ன தந்துவிடும் என்ற எண்ணம் வெகுநாள் எனக்குள் இருந்தது. அப்படி படிப்பதாக இருந்தாள் வேலை சம்மந்தமாக எதாவது படித்தாள் நமக்கு உதவும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் வேலையில், அது செய்யும் போது கிடைக்கும் நேரடி அனுபவம் மிகசிறந்த அறிவு என்று உணர்ந்த பொழுது சந்தேகம் வரும்போது மட்டும் படிப்பது என்று முடிவானது.

நேரம் கிடைக்கும் போது விகடன் குமுதம் போன்ற வணிக இதழ்களை படித்துக்கொண்டு இருந்தேன். அதை தொடர்ந்து கல்கி அறிமுகமாகி பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என்று வணிக நாவல்களை படிக்க துவங்கி இலக்கிய நாவல் படிக்கலாம் என்ற ஆவல் எழுந்தது. புரியாது என்று நிறைய பேர் சொன்னார்கள், ஒரு முயற்சிக்காக " காடு " நாவலை வாசிக்க துவங்கினேன்.

தமிழக கேரள எல்லை காட்டில், முப்பது நாப்பது வருடங்களுக்கு முன் அரசு contract வேலைகளை செய்யும்  ஒரு சிறு குழுவின் கதை.

ஒரு பதின் பருவ இளஞ்சன் கிரி வேலை பழக அங்கு வருகிறான். contract எடுப்பவர் அவன் மாமா. மேற்பார்வைக்கும் , வேலை பழகவும் அவனை அங்கு அனுப்புகிறார்.

காடு அவனுக்கு புதியது. நாவல் படிக்கும் நாமும் அவன் கண்கொண்டே மெல்ல மெல்ல காட்டுக்குள் நுழைகிறோம். காட்டை அறியும் பொருட்டு தனிமையில் அவன் காட்டுக்குள் நுழையும் போது அவனுக்குள் எழும் பயமும், வியப்பும், வழி தவறி அலையும் போது எழும் பதட்டமும் நாவல் படிக்கும் நம் மனதிலும் குவிந்துக்கொண்டே இருக்கிறது.

அவன் மனது அதன் முன் பெரும் வெளியாக விரிந்து படர்ந்து இருக்கும் காட்டின் உள்நிகழ்வுகளையும், உயிரோட்டத்தையும், அதன் ஆன்மாவையும் அறிந்துகொள்ள துடிக்கும் கனங்களில் பரவசத்தின் உச்சத்தை அடைகின்றது. அந்த பரவசத்தை துளி சிதறாமல் வார்த்தைகளின் வழியே அப்படியே நம் மனதிற்கு கடத்துகிறது நாவல்.

அந்த தருணத்தில் ஒரு மலயத்தியை அவன் பார்க்கிறான். அவள் அந்த காட்டின் ஆன்மாவின் ஒரு துளி அல்லது அவள் ஆன்மாவின் ஒரு துளி இந்த காடு என அவன் உணரும் தருவாயில் காதல் அவனுள் ஊறி பெருகுகிறது. அவன் கண் முழுவதும் பசுமையாக, மனமுழுவதும் பூக்களாக, அவனே ஒரு மரமாக, காட்டினுள் காடாக.....மாறி மகிழ்கிறான். அதன் பின் நாவல் காட்டினுள் காதலையும், காதலினூடெ காட்டையும் வர்ணித்துக்கொண்டே நகர்கிறது.

குட்டப்பன் அவனோடு வேலை செய்யும் மேஸ்த்திரி. எனக்கு பிடித்த காதப்பாத்திரம். காட்டின் நிகழ்வுகளையும் , சில நேரங்களில் அங்கு வாழும் மனிதர்களின் வழ்வையும்  புரிய வைக்கிறான்.  இது போன்ற எண்ணற்ற எளிய, வலிய மனிதர்கள் மூலம் வாழ்வை பற்றிய புரிதலை நம் மனதில் அடிக்கி வைத்துக்கொண்டே வருகிறது  நாவல்.

மனிதர்களின் மேன்மையின் உன்னதத்தையும், கிழ்மையின் சுவாரசியத்தையும் சொல்லிக்கொண்டே நகர்கிறது.

ஒருகட்டத்தில் காட்டை மழை சூழ்கிறது. மேக மிருகம் தன் லட்சவிழிகளின் ஈரத்தை சொட்டுகிறது. காட்டுக்கு பல காட்டாறு கால்கள் முளைக்கின்றன. கால்கள் ஓடுகிறது , காடு  அங்கேயே இருக்கிறது. நீர் வழியே புதுபித்துக்கொள்கிறது. பெரும் தொற்று நோய் வந்து காட்டில் வாழும் சிலர்  மடிகிறார்கள். சிலர் இடம் மாறி போகிறார்கள். புதிய மனிதர்கள் வருகிறார்கள்.

நாவல் ஒரு சுவாரசியமான முடிவை நோக்கி நகரவில்லை. அது முடிவில்லா அனுபவங்களை அடுக்கிக்கொண்டே போகிறது. நாவல் முடியவே இல்லை, அதன் பக்கங்கள் மட்டும் முடிகின்றது.

காட்டின் வழியே செல்லும் சாலை ஒரு பெரும் வடகயிறு. அதை கொண்டு நகரம் காட்டை தன்னை நோக்கி இழுக்கின்றது. அல்லது நகரம் காட்டை நோக்கி நகர்கிறது. இந்த நகர்வு காட்டின் ஆன்மாவை அழித்து அதை ஒரு காட்சி பொருளாக மாற்றுகின்றது.

இனி ஒரு மரம் வெட்டினாலும் இந்த உலகத்தின் சமநிலை குலைந்து விடும் என்ற நிலை என்றாவது ஒரு நாள் வரும். அன்று மனிதன் அந்த மரத்தை வெட்டத்துவங்குவான் , மரம் புன்னகையோடு சரிந்து விழும் , உலகம் அதிர்ந்து குலுங்கும், பெரும் மழை துவங்கும்.

வணிக நாவல் படித்த போது அதில் இருந்த திருப்பங்கள், சாகாசங்கள் சுவாரசிய நிகழுவுகள் என்னை பரவசப்படுத்தியது. உணர்வெழுச்சி எழுந்து படி படி என்னாச்சி  என்னாச்சி அந்த காதாநயகனுக்கு என்று உசுப்பியது. ஆனால் இந்த நாவல் எளிய மனிதர்களின் மனங்களின் வழியே நடக்கிறது. சில நேரங்களில் புல்வெளியில் பனித்துளிகள்  உரச, சில நேரங்களில் கால்களை பிடித்து சண்டையிடும் சகதியின்  வழியாக

ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி .

                                                                                                                           - கிராமத்தான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக