"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், மே 12, 2014

மகனின் மொழி


மகனின் மொழி

தத்தி விழுந்து, எழுந்து நடக்க துவங்கியது போலவே அவன் மொழியும் மெல்ல உருவம் கொள்கிறது. காட்சிகளை உள்வாங்கி உணர துவங்கியதுமே அதை ஒலியாக மாற்றும் முயற்சி அவனுக்குள் துவங்கி விட்டது.

முதலில் 'அக்கா ' என்று தான் அவன் மொழியை துவங்கினான். பின் அம்மா , அப்பா, தாத்தா, ஆயா எல்லாம் வந்தது.

உறவுகள் இல்லாமல் வேறு வார்த்தை  ' இல்ல ' என்பது. ஏதாவது கேட்டாள் ' இல்ல ' என்பான்.

பின்பு  'ம் ம்' என்று துவங்கினான். ஏதாவது வேண்டும் என்றாள் அப்பா 'ம் ம் ' என்று கை காட்டுவான். வெளியே கூட்டி போக வேண்டும் என்றாள் என் செருப்பை காண்பித்து அப்பா 'ம் ம் ' என்பான். தண்ணிர் வேண்டும் என்றாலும் அதே 'ம் ம்' தான். அந்த 'ம் ம் ' ல்  அதிகாரம், தவிப்பு எல்லாம் வெளிபடும்.

பசிக்கும் போது ' அம்மா பூ ' என்று சைகையோடு சொல்லுவான். அதை பார்க்கும் போது எனக்கு பாவமாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உடல் மொழியையும் கற்கிறான் என்று தோன்றியது.

இதுவரை சரி.

இப்பொழுது  அவனுக்கான பிரத்தியோக மொழியில் பேச துவங்கி இருக்கிறான்.

ஒவ்வொன்றும் நமக்கு புரியாத கடவுள் மொழி.

ஒரு நாள் 'ஊட்டு ' என்று துவங்கி 'ஊட்டா ' 'ஊட்டா ' என்று சொல்லிக்கொண்டே இருந்தான். ஒரு வாரம் முழுக்க ....

புதியதாக வங்கி வந்த Tablet ஐ 'பிப்பி' என்று அழைக்கிறான். 'பிப்பி ' என்று ராகமாக அழைத்து அது இப்போது "பிங்யா "  என்று மாறி இருக்கிறது.

சிவகார்த்திகேயன் அவருக்கு பிடித்த ஸ்டார் ஆகிவிட்டார். " உதா கலரு " பாடல் மற்றும் "ஒத்த கட " பாடலையும் ஒரு நாள் முழுவதும் சலிக்காமல் அவனால் மட்டும் எப்படி பார்க்க முடிகிறது என்று தெரியவில்லை.

"அய்யையோ  ஆனந்தமே " பாடலில் "அய்யையோ " மட்டும் சொல்ல வருகிறது.

ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்து அப்பா " நா பக்கினா " என்றான். நா ஓ நீ பக்கினா வா ? என்று கேட்டேன். அப்பா "நா பக்கினா " என்றான். அப்பா நீ ஆள உட்ரா சாமி என்று நான் தெறித்து ஓட அவன் அம்மாவிடம் சென்று அம்மா நா பக்கினா என்று ஆரம்பித்தான். அவங்க அம்மா உஷாராகி சரி என்று நழுவிவிட்டார்கள். ஒரு நாள் இல்ல இரண்டு நாள் இல்ல மூன்று நாள் இதையே சொல்லி கொண்டு இருந்தான். கடைசியில் நான்தான் பக்கினா என்று மாறி நா பக்கினா இல்லை என்று முடிந்தது. இப்பொழுது அதை சுருக்கி   " நா பக்கி " என்று எப்போதாவது கூறுகிறான்.

இப்போது " அது " "அது " என்று துவங்கி இருக்கிறான். மனம் பலவீனமானவர்கள் வீட்டு பக்கம் வரவேண்டாம்.

குழந்தை அதற்க்கான தனி மொழியோடு தான் பிறக்கிறது. நாம் தான் நமக்கு தெரிந்த மொழியை அதனுள் திணிக்கிறோம் என்று நண்பர் ஆராத்து எழுதிருந்தார்.

அது எவ்வளவு உண்மை.

கோடான கோடி குழந்தைகளின் கோடான கோடி மொழி , செம்மொழி.

உலகில் மிகவும் எளிமையான மொழி தாய் மொழி, இரவில் அவங்க அம்மா அ முதல் ஔ வரை சொல்லிக்கொடுக்கிறார். அவனும் அதை அழகாக சொல்கிறான்.

அவனோடு விளையாடும் குழந்தைகள் முழுமையாக பேசுகிறார்கள். இவனால் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சிரிக்கிறான். அதுவே ஒரு ஏக்கமாக அவனுள் ஊருவதை அவன் அம்மா உணர்த்து சொன்னார். அந்த ஏக்கம் அவனுக்குள் உந்துதலாக மாறி இப்போது அவன் பேசுவதிலே முழு கவனமாக இருக்கிறான்.

அவன் வாழ்க ..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக