கரைந்து ஒழுகிய மீதி சாக்லேட்
உருகி வழியும் பாதி ஐஸ் கிரீம்
பக்கவாட்டில் பாதி கொறித்த பழங்கள்
இரைத்து சிதறிய தயிர் சாதம்
அப்பா "ம் ம் " என்று அவன் கொடுப்பவைஎல்லாம்
நான் தின்று தீர்க்கிறேன்.....
ஊஞ்சலில் அவனை மடியில் அமர்த்திக்கொண்டு
ஆடும் வேளையில் ஒரு உச்சியில் நான் அவனாகவும்
மறு உச்சியில் நான் நானாகவும் உணர்கிறேன்.
அவன் கை நீட்டிய திசையில் வெகு நாள் கழித்து
பட்டம் பூச்சியை பார்த்தேன்.
நான் நேரில் பட்டம் பூச்சியை ரசித்தது இல்லை
கவிதைகளில் மட்டும் அதை ரசித்தது இருக்கிறேன்.
பட்டம் பூச்சி பறந்து போகாத காதல் கவிதைகள் மிகவும் குறைவு.
சமிபத்தில் நான் படித்தது...,
"ஒரு பெரும் காட்டின் ஆன்மா பூக்களில் தேனாக உறைகிறது.
அதை பட்டம் பூச்சி மட்டுமே ருசிக்க முடியும்
காட்டை தின்று மெல்லும் யானையாள் அதை உணர முடியாது"
"பட்டம் பூச்சிக்கு பின்னால் சென்றாள் பூக்களை அடையலாம் "
ஆனால் முதல் முறையாக ஒரு நிமிடம் ஒரு பட்டம் பூச்சியை
பார்த்துக்கொண்டே இருந்தேன்.
மகனும் பார்த்துக்கொண்டே இருந்தான்.
கொத்தான மலரில் அது ஒவ்வொரு பூவாக அமரும் தோறும்
அவன் முகத்தில் மென்சிரிப்பு மலர்ந்து தளர்ந்தது.
அடர் சிவப்பு சிறகுகள். அதில் கரும் புள்ளிகள் கொஞ்சம், வெண்ணிற தெளிப்புகள் கொஞ்சம் , நாம் முச்சு விடுவது போல அதன் சிறகுகள் அசைந்து கொண்டே இருந்தது .
அது பறந்து சென்ற பின்னும் அதன் நிழல் மனதில் பறந்து கொண்டே இருக்கிறது.
அவனோடு இருக்கும் தருங்களில் என்னுள் ஒவ்வொரு கட்டுக்களும் அவிழ்த்து நான் அவனாக மாறுகிறேன்.
வாழ்வில் நான் கவனிக்கத்தவறிய எத்தனையோ உன்னத தருணங்களை
அவன் எளிதில் மீட்டெடுத்து மறுபடியும் நிகழ்த்துகிறான்.
இந்த மகிழ்வுக்கு முன் அவனுக்கு நான் செய்யும் கடமைகள் கூட எளியவையே என்று தோன்றுகிறது.
என்னக்குள் மழலையை விதைத்துகொண்டே இருக்கிறான். அது வளர்ந்து நான் முதிரும் தருவாயில் குழந்தையாக மாறி இருப்பேன் என்று நினைக்கிறேன்.
அவன் வாழ்க ...
....கிராமத்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக