மே, ஜூன் , ஜூலை ஆகிய மூன்று மாதங்கள் மகன் எங்கள் கிராமத்திலும் அவன் பாட்டி வீட்டிலும் மாறி மாறி இருந்தான்.
அங்கு சென்ற இரண்டு மூன்று நாட்களில் அவன் சுபாவம் முற்றிலும் மாறியது.
முதல் இரண்டு நாட்கள் அவன் யாரிடமும் செல்லவில்லை. என்னோடும் அவன் அம்மாவோடும் ஒட்டிக்கொண்டு இருந்தான். அவனை ஆசையாக அணைக்க வரும் கைகளை கண்டு பயந்துகொண்டே இருந்தான் . பின் ஒவ்வொரு முகமாக அவனுக்கு ஞாபகம் வந்து பழக துவங்கினான்.
இங்கு வீட்டில் அவன் எங்கள் கண்பார்வையிலேயே இருப்பான். ஆனால் அங்கு அவன் அண்ணன்களோடு மண்ணில் விளையாட துவங்கிவிட்டான். தென்னந்தோப்பில் தேங்காய் பிஞ்சுகளை பொறுக்கியும், கீற்றுகளை இழுத்தும், கோழிகளை துரத்தியும் அவன் கால்கள் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. நாய்களை முதல் முறை பார்த்தான். நாய் ஒன்று வீட்டுக்குள் வந்தபோது அதை ஏய் என்று நான் துரத்தினேன். அதை பார்த்த அவன் எப்பொழுது நாயை பார்த்தாலும் அதை ஏய் என்று துரத்திக்கொண்டே இருந்தான்.
ஆடு, மாடு, குரங்கு எல்லாவற்றையும் புத்தகத்திலும், டிவியிலும் அவனுக்கு பலமுறை காட்டினேன். ஆனால் அவன் மனதில் பதியவே இல்லை. அங்கு அனைத்தையும் நேரில் கண்டுவிட்டான். இப்பொழுது அவைகளை எதில் பார்த்தாலும் அதன் பெயர்களையும் அதே போல கத்தியும் காட்டுகிறான்.
கடந்த ஒரு வருடமாக மனதில் தேன் துளிகளாக சேர்ந்த வார்த்தைகள் இப்பொழுது மழலை மொழியா சொட்டத்துவங்கியுள்ளது. ஒவ்வொரு வார்த்தையையும் முழுமையாக சொல்லிமுடித்தபின் பெருமிதத்தில் முன்பால் தெறிக்க சிரிக்கின்றான்.
தண்ணீரின் மீது அவனுக்கு இருந்த பயத்தை போக்க தோப்பில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் அவனை தூக்கி ஒரு முக்கு முக்கினேன். அலறிபயந்தவன் கொஞ்ச கொஞ்சமாக பயம் தெளிந்து நீரோடு விளையாட துவங்கினான். ஒவ்வொரு முறையும் அவன் குளிர்ந்த நீரில் இறங்கும்போதும் அவன் முகம் சிலிர்த்து மலரும். அவன் தூவி எறியும் தண்ணீர் குமிழ்கள் அவன் தலைமீதே உடைந்து தெறிக்கும். களைப்பில்லாமல் தண்ணீரில் தண்ணீரோடு விளையாடிக்கொண்டே இருந்தான். இப்போது அவன் சிறந்த நண்பர்களில் தண்ணீரும் ஒன்று.
அவன் பாட்டி வீட்டில் இரவில் ஒருநாள் மழை பெய்தது. முதல் துளி அவன்மீது விழுந்ததும் அப்பா தண்ணி என்று என்னிடம் காட்டினான். அது மழை என்றேன். அவன் " மாழ் " என்றான். இங்கு சவுதியில் ஒருநாள் மழையை ஜன்னல் வழியே அவனுக்கு காட்டினேன். ஆனால் அவனால் அதை உணர்ந்துகொள்ள முடியவில்லை. அங்கு முதல்முறையாய் அவன்மீது மழைத்துளிகள் விழத்துவங்கியதும் அது எங்கிருந்து வருகிறது என்று வானத்தை பார்த்தான். மழை வேகமாக வரவே மகிழ்வில் குதிக்கத்துவங்கினான். மழையை முதன் முதலில் உணர்ந்து பரவசத்தில் திளைக்கும் உயிரை முதன் முதலில் நான் கண்டேன். அவனை தடுக்கவே இல்லை.
முற்றிலும் தூய்மையான தொல்மனிதனாகவே ஒரு குழந்தை பிறக்கிறது. அது இயற்கையை முழுதுணர்ந்து அதில் திளைப்பதற்கு முன்பே இன்று நாம் உருவாக்கி இருக்கும் புற உலகு தன் கோடி கைகளால் இழுத்து வந்து நிகழ் காலத்தில் அதை நிறுத்திவிடுகிறது.
எங்கள் போனில் Tomy பூனையை அவன் சுட்டு விரலால் குத்திக்கொண்டே இருப்பான். அது நோ நோ என்று அலறும்போது அதைகண்டு சிரிப்பான். அதை போலவே அவன் குழந்தைகளிடம் விளையாடும்போது கண்ணை குத்த துவங்கிவிட்டான். பின் அந்த பழக்கத்தை கஷ்டப்பட்டு மாற்றினோம்.
இப்போதெல்லாம் அவன் சந்தோஷப்படும் விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறோம். அதுவே அவனை வழி நடத்துகிறது.
ஒருவயதாக இருக்கும்போது அவனிடம் எந்தப்பொருளை கொடுத்தாலும் அதை வாயில் நுழைத்து எச்சிலில் நனைத்து சுவைத்துப்பார்த்து அறிந்துகொள்ள முயல்வான். ஆனால் இப்பொழுது பொருட்களை பிரிக்கத்துவங்கிவிடுகிறான். விதவிதமான சாக்லெட், பிஸ்கெட்களை அவனுக்கு வாங்கி கொடுத்தால் அதை சுவைப்பதைவிட அனைத்தையும் ஒரே நேரத்தில் பிரித்து அதில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு வைத்துவிடுவான். பொம்மைகளுக்கும் அதே நிலைதான்.
இப்பொழுது அவன் மகிழ்வு "சுகந்திரம்" மட்டுமே . அவன் துன்பம் அதை தடுக்கும் என் சொல். அனைத்தையும்
அறிந்துக்கொள்வது மட்டுமே அவன் நோக்கமாக இருக்கிறது. அவனுக்குள் துளிர்விடும்
அறிவு பார்ப்பதையெல்லாம் உண்டு தன்னை வளர்தெடுக்கிறது. அவனுக்கு நான் கற்றுக்கொண்ட வித்தைகளும், அனுபவங்களும் எதுவும் தேவையே இல்லை. அவன் நடந்து பழக என் சுட்டு விரலை மட்டுமே எதிர்பார்க்கிறான்.
அந்த மூன்று மாதங்கள் அவன் அத்தைமார்கள், மாமாமார்கள் , பெரியப்பாக்கள், பெரியம்மாக்கள், சித்தப்பாக்கள், சித்திகள், அண்ணன்கள், அக்காக்கள் , பாட்டிமார், தாத்தா இருவர் என அவனை கண்டுமகிழ்ந்து, தொட்டு அரவணைத்த தருணங்கள் ஒவ்வொரு நாளும் அவனுக்கு கிடைகாத என்ற ஏக்கம் எனக்குள் எழுகிறது.
ஒரு செடி வளர்வதற்கு கூட வளமான மண்ணும், நல்ல காற்றோட்டமும், நீரும், சூழலும் வேண்டும் என்ற எளிமையான அறிவு எனக்கு இருக்கிறது. ஆனால் ஒரு குழந்தை வளர்வதற்கு இயற்கையான சூழலும், உளமான உறவுகளும் அவனுடன் வேண்டும் என்று புரியாமல் போனது.
இன்னும் அவன் மல்டி காம்ப்ளெக்ஸ் மால்களில் ஒய்யாரமாக நடப்பதையும், வீட்டுக்குள் அமர்ந்து TAB, I போன்களை லாவகமாக கையாள்வதையும் பார்த்து வியந்து மகிழ்வது என் தவிர்க்க முடியாத அறியாமை, கையறுநிலை.