"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, டிசம்பர் 21, 2014

பாக்கிஸ்தானி நண்பர்

கடந்த வாரம் பாக்கிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு மனதை கனக்க செய்கிறது.
இன்று ஒரு பாக்கிஸ்தான் நண்பரிடம் இதை பற்றி பேசிக்கொண்டு இருந்தேன் .

கைபர் பக்துன்கவா மாவட்டம் ஆப்கானுக்கு அருகில் பழங்குடிகள் அதிகம் வாழும்  பகுதி. காடும் மலைகளும் நிறைந்த அந்த பகுதியை அரசு அதிகம் கவனம் செலுத்தவில்லை. அந்த பகுதி மக்கள் மேல் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெரும்பாலான மக்கள் அவர்களை நம்புகின்றனர். இது அரசை நெருக்கடிக்குள்ளக்குகிறது.

இப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தின் பெரும் பகுதி அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு நடந்து வரும்  நிகழ்வுகளுக்கு பின்னால் பலநாடுகளின் தந்தி மீட்டல் இருக்கிறது. காஷ்மீரில் பதட்டம் குறைக்கும் பொருட்டு பாக்கிஸ்தான் ராணுவத்தின் கவனத்தை அந்த எல்லையில் திசை திருப்ப நம் நாடு கூட அந்த பகுதியில் வேலை செய்யலாம் என்று அவர் கூறிய போது நான் வெறுமனே மறுத்தேன்.

இங்கு சவூதியில் நான் பல பாகிஸ்த்தான் நண்பர்களுடன் பணியாற்றி வருகிறேன். அனைவரும் இந்த தலைமுறையினர் .
பொது நோக்கில் பார்க்கும் போது தன்மையாக பழகக் கூடிய நன்கு உழைக்கக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அங்கு இன்னும் software துறை வளர்ச்சி அடையவில்லை. ஆதலால் பொறியில் படித்தவர்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கும் கனடா போன்ற நாடுகளுக்கும் வேலைக்காக செல்கிறார்கள். அவர்கள் தன் நாடு வளர்ச்சி அடையவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இளையவர்களுக்கு இம்ரான்கான் நம்பிக்கை அளிக்கிறார். அந்த கட்சிக்கு இங்கிருந்து பணம் அனுப்புகிறார்கள்.

காஷ்மீர் பற்றி கேட்டால் அங்கு நிகழும் அரசியல் விளையாட்டில் அதுவும் ஒன்று என்ற புரிதல் இருக்கிறது. இந்தியாவின் மீதும் நம்மீதும் எந்த காழ்ப்பும் இல்லை. நாங்கள் இங்கு பெரும்பாலும் ஒன்றாகவே வேலை செய்கிறோம். தோல்மீது கைபோட்டு நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம்.

பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதி மட்டும் நல்ல வளமான பகுதி. படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அதனால் அந்த பகுதி மக்கள் அரசியலிலும் மற்ற துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மற்ற பகுதிகளில் வளர்ச்சி மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் மின்சார தடை என்பது தினநிகழ்வு.

அங்கு தினமும் நிகழும் வன்முறைகளும், குண்டு வெடிப்புகளும் நாம் அவர்கள் பின்பற்றும் மதம் சார்ந்து புரிந்துகொள்ளவும், விமர்சிக்கவும் முயல்கிறோம். ஆனால் அந்த நிகழ்வுகளுக்கு பின்னால் வறுமை, பசி, இயலாமை, நிலம், அரசியல், மற்ற நாடுகளின் சூழ்ச்சி , தனிப்பட்ட தீவிரவாத குழுக்களின் சுயநலம் என்று எண்ணற்ற காரணிகள் அணிவகுக்கின்றன. இதில் சாதாரன மக்கள் இலக்காகி சிதைக்கப்படுகிறார்கள்.

அந்த 142 பள்ளிக்குழந்தைகளின் கனவையும் உடலையும் சிதைத்த காரணி ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கே எதிரானது. அந்த நிகழ்வாள்  மனம் இன்னும் கணத்துக்கொண்டே தான் இருக்கிறது.

 என்னோடு பேசிக்கொண்டு இருந்த அந்த பாக்கிஸ்தானி  நண்பர் கடைசியா சொன்னார் " மற்ற நாடுகளை போல எங்கள் நாடும் வளர்ச்சி அடைந்து எங்கள் மக்களும் ஒருநாள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்வோம் அதுவே இன்றைய இளைஞ்சர்களின் கனவு".

அந்த கனவு நிறைவேற நான் வாழ்த்தினேன்.

                                                                                                                         கிராமத்தான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக