ஜுபைல் தமிழ் சொல்வேந்தர் மன்றத்தில் பேசியது
ஒரு நிகழ்வுக்கு வாரத்தைகள் மூலமாகவோ அல்லது எழுத்தின் மூலமாகவோ ஒரு வடிவத்தை கொடுத்தால் அதை கதை என அழைக்கலாம்.
அந்த நிகழ்வு நடந்த ஒன்றாக இருக்கலாம். முழுக்க கற்பனையாக இருக்கலாம் அல்லது இரண்டும் கலந்து இருக்கலாம்.
மனிதன் கற்பனை செய்யத்துவங்கியது முதல் கதைகள் உருவாகிவிட்டன. கதைகள் இல்லாத காலம் ஒன்று மனித வரலாற்றில் இல்லை எனலாம்.
நம் கலைகள் அனைத்தும் ஏதாவது ஒரு கதையை நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது. கலைகள் மூலம் கதைகளும் கதைகள் மூலம் கலைகளும் ஒன்றைஒன்று வளர்த்தேடுத்துக்கொள்கிறது.
ஆனால் இன்றைய நிலையில் கதைகள் நம் அன்றாட வாழ்வுக்கு அவசியம் இல்லை என்ற பொது மனநிலை மக்களிடைய இருக்கிறது.
கதை படிப்பவன் ஒரு கனவு மனநிலையில் இருக்கிறான். அவன் வாழ்வின் எதார்த்தங்களை புரிந்துகொள்வதே இல்லை என்ற கண்ணோட்டம் இருக்கிறது.
பிள்ளைகள் படிக்கும் போது பாடபுத்தகங்களை தவிர வேறு எந்த புத்தகங்களையும் நாம் படிக்க அனுமதிப்பது இல்லை. கதை புத்தகங்கள் உனக்கு "சோறு போடுமா " என்று கேட்ப்போம்.
உண்மையில் கதைகள் ஒரு மனிதனுக்கு தேவைதானா ?
அது எந்தவகையான மாற்றங்களை நமக்குள் ஏற்படுத்துகிறது ?
ஏன் கதைகளை படிக்க வேண்டும் ?
நம் வாழ்வில் தினம் தினம் எத்தனயோ நிகழ்வுகள் நடக்கின்றன. அதில் பாதிக்கும் மேற்பட்ட நிகழ்விலிருந்து நாம் எந்த அனுபவங்களையும் நேரடியாக பெற்றுக்கொள்வது இல்லை. ஆனால் அது நம் அகத்தை வடிவமைக்க பயன்படுகிறது. அதே போல தான் கதைகளும்.
நம் சலிப்புற்ற அன்றாட வாழ்வில் உணர்வுகளின் உச்சத்தை அடைவதே இல்லை. மகிழ்வின் உச்சத்தை, கொண்டத்ததின் உச்சத்தை , காம குரோத மோக உச்சத்தை, பயத்தின் உச்சத்தை. ஆனால் கதைகள் எளிமையாக நமக்குள் அவற்றை நிகழ்த்திவிடும்.
நம்மை நாமே அறிந்துகொள்ள கதைகள் உதவும். ஒரு கதையில் உள்ள கிழ்மையை நாம் ஆர்வத்தோடு படித்தால் அது நம் மனதில் உள்ள கிழ்மையை நமக்கு காட்டிகொடுத்துவிடும். அதே போலதான் மேன்மையையும்.
நான் ஒருகட்டத்தில் வரலாற்று கதைகளை ஆர்வமாக படிக்கத்துவங்கினேன்.
அப்போதுதான் என்னக்கு வரலாறு பிடிக்கும் என்பதை அறிந்துகொண்டேன்.
கதை படிப்பவன் கனவுலகத்தில் கற்பனையில் வாழலாம் ஆனால் அவர்களால் தான் இந்த உலகத்தில் அழகான விஷயங்கள் நடக்கின்றன.
இப்படி தனிப்பட்ட மனிதனுக்கும் கதைகளுக்கும் இடையுள்ள தொடர்பை சொல்லிக்கொண்டே போகலாம் .
ஒரு கதைக்கும் ஒரு சமூகத்திற்குமான தொடர்பு என்பது முக்கியமான ஒன்று.
பாட்டி வடை சுட்ட கதையை கொண்டு எங்கள் ஊரில் பாட்டிகள் கூட உழைத்து உன்ன விழைகிறார்கள் , நரி என்பது தந்திரத்துக்கும் , ஏமாற்றுக்கும் பயன்படும் ஒரு படிமம், காக்கை அறிவுக்கும் புத்திசாலி தனத்துக்கும் ஒரு பயன்படும் படிமம் என்று நம் சமுகத்தின் நிலையை விளக்கிவிட முடியும்.
ஒரு குலம் தன் மூதாதையரின் கதைகள் வழியாக தனக்கான விழுமியங்களையும் , கட்டுப்பாடுகளையும் வடிவமைத்துக்கொள்கிறது.
நம் நாட்டின் ஒட்டு மொத்த பண்பாட்டு மரபையும் ஒரு சிறிய கதைக்குள் அடக்கி அதை காலம் தோறும் பயணிக்கச் செய்ய முடியும்.
மனிதம் கண்டடைந்த வாழ்வின் உயரிய தத்துவங்களை நம் வாழ்வின் ஒரு பகுதியா மாற்ற கதைகள் பயன்படுகின்றன. ஜென் , சூபி , கீதை கதைகள் போல.
கதைகள் இல்லாத சமூகம் அடையாளம் இல்லாத சமூகமாக மாறிவிடும்.
வாழ்வை முன்னகர்த்துவதர்க்கு கொஞ்சம் தொழில்நுட்ப பயிற்சியும் அதை சார்ந்த அறிவும், நம்மை சுற்றி நடக்கக்கூடிய வாழ்வியல் நிகழ்வுகளும் அது தரும் அனுபவங்களும் நமக்கு போதாதா ? என்று கேட்பவர்களுக்கு கதைகள் தேவை இல்லை.
ஆனால் வாழ்வை கொண்டாட நினைப்பவர்களுக்கும், உயர்ந்த நாகரீகத்தை நோக்கி நகர நினைக்கும் சமூகத்திற்கும் கதைகள் தேவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக