"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

புதன், செப்டம்பர் 16, 2015

மென்வெப்பம்

நீண்ட விடுமுறை முடிந்து வேலைக்கு சவுதி திரும்பிவிட்டேன். நாற்பது நாட்கள் விடுமுறை , ஒரு நாள்கூட வீணாக்கவில்லை என்று தோன்றுகிறது. வாழ்வில் முக்கியமான நிகழ்வுகள் முக்கியமான சந்திப்புகள் நடந்தேறியது. ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுதவேண்டும். நான் ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும்போதும் இவ்வளவு பரந்த வெளியில்  இவ்வளவு மக்கள் திரள் கொண்ட நாட்டில் எனக்கான ஒரு வாழ்வை நான் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லையே என்ற  எண்ணம் எழும். அது என் இயலாமை என்ற தன்கோவம் மேலெழும் பின் அதை வெல்ல தன்னிரக்கம் எழுந்து அழத்தோன்றும்.

இங்கு சவுதியில் எனக்கு அத்தனை வசதிகளும்  உள்ளது. ஆனாலும் மனதில் ஒரு நிறைவின்மை. ஊருக்கு வந்து சில நாட்களில் கிடைக்கும் நிறைவு எதனால் என பலமுறை நினைத்ததுண்டு. எதைக்கொண்டு மனம் தன்னை நிரப்பிக்கொள்கிறது. கட்டற்ற சுகந்திரம் , விரிந்து கிடக்கும் பசுமை , எப்போதும் கேட்டுக்கொண்டு இருக்கும் ஏதேதோ ஒலிகள், நண்பர்கள் உறவினர்கள் எது வேண்டுமானாலும் இருக்கலாம். என் ஆழ்மனதுக்கு மட்டுமே தெரியும் எதில் அது நிறைவடைகிறது என்று.

இங்கு வருபவர்கள் இரண்டு வருடம் மூன்று வருடம் என்று கணக்கு வைத்துக்கொண்டு வருவார்கள். ஆனால் வந்து சில வருடங்களில் அவர்களின் பழக்கவழகம் , எண்ணங்கள் வசதிகள் எல்லாம் மாறும்போது திரும்பி போகவேண்டும் என்ற எண்ணம் வெறும் புலம்பலாக மட்டுமே மாற்றிக்கொள்கிறார்கள். எங்க சார் போறது அங்க போய் என்ன பண்ணுவது நம்ம யார் அங்க மதிப்பா.

முன்பெல்லாம் சவுதியில் வேலை பார்க்கிறேன் என்று சொல்வது எனக்கு பெருமையாக இருந்தது. ஆனால் இப்போது சொல்லும்போது ஒருவித தயக்கம் மனதில் எழுகிறது. இந்த ஐந்தாறு வருடங்கள் நான் பெற்றதைவிட இழந்தது அதிகமா இருக்கிறது.

கிளம்புவதற்கு முதல் நாள் மனதில் பாரம் ஏறி ஏறி வந்தது. அது எரிச்சலாகவும் கோவமாகவும் மாறி நிலைகொள்ளாமல் அலைகழித்தது. வெறுமனே சாலை ஓரம் வந்து நின்றுகொண்டு டீ அருந்திவிட்டு போகும்வரும் மக்களை பார்த்துக்கொண்டு இருந்தேன். எத்தனைவிதமான மக்கள். எவ்வளவு மக்கள்.

மறுநாள் விமான நிலையத்தில் அனைத்து பரிசோதனைகளும் முடித்துவிட்டு விமானத்துக்காக காத்துக்கொண்டு இருந்தேன். அழுத்தம் ஏறிக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் கண்ணீர் வந்துவிடும் போல் இருந்தது. ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கத்துவங்கினேன். எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் மூழ்கி மேலும் மூழ்கி இறுக்கிக்கொண்டேன்.

பின் விமானத்தில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு படிக்கத்துவகினேன். பின் இருக்கையில் ஒருவர் தொலைபேசியில்

" ம் அக்கா நா பிளைட்டுக்குள்ள உக்கார்ந்து இருக்கேன்

இங்கைகும் அங்கைக்கும் ரெண்டு மணி நேரம் வித்தியாசம்

அங்க போயி போன் பண்றேன்

அம்மாகிட்ட குடு

" ம்  சாப்டேன்மா ஒன்னு இல்ல நீ அழுவாத , இதுல சார்ஜ் இல்ல நா வச்சிடட்டுமா

அந்த புள்ள சின்ன புள்ள அதாவது சொன்ன கொன்சம் பொறுத்து போ

பக்கத்துல இருந்தா  குடு

" ஏயி சும்மா அழுவாத உடம்ப பத்துக்க  (மௌனம் .......) 

சரி அம்மா வயசானவங்க நீ கோவிச்சிக்காத

இங்க திட்டறாங்க நா வச்சிறேண்டா ,,,"


அவர் சத்தமாக பேசியது சுற்றி உள்ள அனைவரையும் கொஞ்சம் எரிச்சல் கொள்ள செயிதது. பணிப்பெண் இரண்டு மூன்று முறை வந்து தொலைபேசியை அணைக்குமாறு சொல்லிவிட்டு போனார்.

புத்தகத்தை முடிவிட்டு சற்று நேரம் அமைதியாய் அமர்ந்துவிட்டு பின் மறுபடியும் படிக்கத்துவங்கினேன். விமானம் ஓடு பாதையில் ஓடும் போதும்  மேலெழும் போதும்  பறக்கும் போதும் படித்துக்கொண்டே இருந்தேன்.

சவுதி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். அந்த இரவு நேரத்திலும் ஒரு மென்வெப்பம் என்னை சூழ்ந்து கொண்டது. இன்னும் ஒரு வருடம் என்னை அது விடப்போவது இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக