"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வெள்ளி, செப்டம்பர் 18, 2015

புத்தகம் வாங்க


புத்தக கண்காட்சிக்கு முதல் முறையாக சென்றுவந்தேன். வெகுநாள் ஆசை நிறைவேறியது. இந்த பதிவை ஒரு மாதம் முன்னரே எழுத வேண்டியது. இந்த விடுமுறை நாட்களில் தொடர் பயணத்தில் இருந்ததால் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை.

இந்த விடுமுறையின் முதல் பயணமாக ஈரோடு சென்றேன்.  பொதுவாக சேலம் , ஈரோடு ,கரூர், கோயம்பத்தூர் போன்றவை தொழில் நகரங்கள். வெளியில் இருந்து தொழில் சார்ந்து மட்டும் அதிகம் வருவார்கள். சுற்றுல பயணிகள் அந்த நகரங்களை கடந்து மட்டுமே செல்வார்கள்.

இரவே சேலம் சென்று அங்கு என் நண்பன் ராஜாவுடன் தங்கினேன். சேலம் எனக்கு நெருக்கமான நகரம் . அங்கு மூன்று வருடம் தங்கி படித்தேன் . நானும் நண்பனும்  விடிய விடிய பேசிக்கொண்டிருந்தோம் . தூக்கம் கண்களை முட்டி துளைத்தபோது எங்களை அறியாமல் தூங்கிவிட்டு இருந்தோம்.

மறுநாள் காலை பேருந்தில் ஈரோடு சென்றேன். பவானி ஆற்றில் நீர் நிறைந்து இருந்தது மனதுக்கு எதோ நிம்மதி அளித்தது. சமிப காலங்களில் மழை இல்லை , மணல் கொள்ளை , காடுகள் அழிப்பு , காற்று மாசு , மக்கள் தொகை பெருக்கம் , விவசாயம் அழிப்பு போன்ற கருத்துக்கள் மனதில் வாழ்வை பற்றி ஒரு லேசான பயத்தையும் அவநம்பிக்கையும் உருவாக்கியுள்ளது. எங்காவது நீர்நிலைகளை கண்டாள்  இறங்கி குளிக்க வேண்டும் என தோன்றும்  பேர புள்ளங்களுக்கு சொல்லலாம் நாங்கெல்லாம் ஒரு காலத்துல ஆத்துல குளிச்சிருக்கோம் என்று. ஈரோடு நெருங்குகையில் சாலை ஓரத்தில் பெரிய பெரிய வீடுகளை கண்டேன். பெரும்பாலான வீடுகளில் ஒரு ஆடீ காரும் ஒரு சிறிய காரும் நின்றிருந்தன . எங்கள் வேலூர் மாவட்டத்தில் இது போன்ற வீடுகளை நான் பார்த்தது இல்லை.

புத்தக கண்காட்சி பேருந்து அருகிலேயே இருந்தது. அதிகம் அலையாமல் அந்த இடத்துக்கு சென்றேன். நம் தமிழகத்தில் அறிவு சார்ந்த நிகழ்வுகள் இப்படி பொது வெளியில் நடப்பது அரிது. இந்த கண்காட்சி திரு. ஸ்டாலின் குணசேகர் என்பவரின் தனிப்பட்ட பெரும் முயற்சியால் நடத்தப்படுகிறது.

உள்ளே நுழைந்ததும் வெறுமனே ஒரு முறை சுற்றிவந்தேன். அனைத்து கடைகளிலும் பெரும்பாலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இருந்தார்கள். சுஜாத்தா  எழுதிய புத்தகங்கள் சிலரும் , அறிவியல் புத்தகங்கள் சிலரும் வாங்குவதை கண்டேன் . சில பெண்கள் கோல புத்தகங்களையும் , சமையல் புத்தகங்களை வாங்கி கொண்டு இருந்தனர். அதிகம் பேர் புத்தகங்களை வெறுமனே பிரித்துப்பர்த்தும் அவற்றை களைத்தும் கடைக்காரர்களை நோகச்செய்து கொண்டு இருந்தனர். எனக்கு கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. புத்தகங்கள் புடவைகள் அல்ல. நிறம், விலை எல்லாம் பார்த்து வாங்க. முதலில் நமக்கான ஒரு விருப்பு எதாவது ஒரு துறையில் இருக்க இருக்கவேண்டும். பொழுதுபோக்கு , அரசியல் , அறிவியல் , சூழியல் , பெரியாரியம் , வாழ்வியல் , ஆன்மீகம், காந்தியம், வரலாறு , சினிமா  என்று   எதாவது ஒரு துறையில் ஈடுபாடு இருந்தால் அது சார்ந்த புத்தகங்களை இணையம் வழியாகவோ அல்லது அதை பற்றி தெரிந்தவர்கள் வழியாகவோ அறிந்துகொண்டு புத்தகம் வாங்க செல்வது நலம். பல்வேறு நிகழ்வுகள் நடக்கும் அந்த கண்காட்சியில் யாராவது ஒரு ஆர்வலர் உள்ளே நுழையும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு ஐந்து நிமிடம் புத்தகங்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விவரித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

நான் தேடிய அனைத்து புத்தகங்களும் எனக்கு கிடைத்தது.வெகுநாள் தேடிய புத்தகங்கள் கிடைத்த தருணம் அற்புதமானது. நான் கொண்டு சென்ற பட்டியல் ஒருவருடம் நண்பர்கள் மூலம் மற்றும் இணையத்தில் பார்த்த புத்தகங்களின்  வரிசை

1. இன்றைய  காந்தி  - ஜெயமோகன்
2. இந்து மதம் எளிய அறிமுகம் - சூதி மோகன்
3. வெக்கை நாவல்- பூமனி
4. இயற்கை வேளாண்மை - மானச ஃ க்பூபுகா
5. கொற்றவை - ஜெயமோகன்
6. யாருடைய எலிகள் நாம் - சமஸ்
7. கொற்கை - ஜோ டி குருஸ்
8. சிலுவையின் பெயரால் - ஜெயமோகன்
9.கொற்றவை - ஜெயமோகன்
10. மறைக்கப்பட்ட இந்தியா - எஸ் .ரா
11. ரப்பர் - ஜெயமோகன்
12.பண்டைய இந்தியா ஒரு அறிமுகம் - டி .டி . கோசம்பி
13. இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன்
14. உணவே மருந்து - சிவராமன்

இந்த வருடத்துக்கு இது போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நான் மறுபடியும் சேலம் திரும்பும் வழியில் நானும் ராஜாவும் சங்ககிரியில் சந்திப்பதாக முடிவு செய்திருந்தோம். சங்ககிரி டோல் கேட்டுக்கு அருகில் மண்சட்டி சமையல் என்ற ஹோட்டல் இருக்கிறது. அங்கு சந்திப்பதாக திட்டம். எனக்கு முன்பே ராஜா அங்கு இருந்தான். அந்த ஹோட்டலில் என்ன சிறப்பு என்றால் நாட்டுக்கோழிகளை ஒரு பட்டியில் அடைதிருப்பார்கள். நமக்கு தேவையான கோழியை தேர்வு செய்து கொடுத்துவிட்டால் அதை சுத்தம் செய்து மண்சட்டியில் சமைத்து பரிமாறுவார்கள்.

நான் அங்கு போகும்போது எங்கள் கோழி கொதிதுக்கொண்டு இருந்தது. பெரிய உயரமான அடுப்பு. தீ நேரடியாக சட்டியின் மீது படவில்லை. கீழே கட்டைகள் மிதமாக எரிந்து கொண்டு இருக்க அந்த அனலில் குழம்பு கொதித்துக்கொண்டு இருந்தது. அதில் மசாலா அதிகம் சேர்க்கவில்லை . வரமிளகாய், இஞ்சி பூண்டு , உப்பு போன்ற அடிப்படை பொருட்கள் மட்டும் சேர்த்திருந்தார்கள். நான் சென்று அமர்ந்ததும் கோழி சூப்பு இரண்டு சிறிய சட்டியில் வந்தது. சட்டியின் மனமும் குழம்பின் மனமும் மூக்கின் வழி ஏறி மண்டையில் எதோ ஒரு மூலையில் முட்டிக்கொண்டு நின்றது. சுவை நா முழுக்க, சூடு உடல் முழுக்க பரவியது. நிலைகொள்ளாமல் கொழம்பு கொதிக்கும் சட்டியை எட்டி பார்த்தேன். இறக்கிவிடலாம என்றேன். இன்னும் குழம்பு  கொஞ்சம் கெட்டியாகட்டும் என்று ராஜா சொன்னான். பசித்தவன் உணவுக்காக காத்திருப்பது கொடுமை ருசித்தவன் ருசிக்காக காத்திருப்பது அதனினும் கொடுமை.

சிறிது நேரத்தில் குழம்பு சட்டி டேபுளுக்கு வந்தது. சட்டியின் ஓரத்தில் குழம்பு ஒரு மெல்லிய அடுக்காக படிந்திருந்தது. மண்சட்டியில் மட்டுமே அப்படி படியும். அதை சுட்டு விரலால் வழித்து வாயில் வைத்தேன். என் முன்னால் மண்சட்டியில் சோறு , மண்சட்டியில் மிளகு ரசம் , மண்சட்டியில் தோயவைத்த சின்ன வெங்காயம் போட்டு தளித்த கெட்டி தயிர் . பின் நடந்தவை எல்லாம் சென்சார் ......

பின் ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தேன்.
                                                                                                                      - கிராமத்தான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக