இந்த விடுமுறையிலும் அங்கு சென்றோம். அங்கிருந்து நாங்களும் சகலை குடும்பமும் குடகு மலை செல்வதாக திட்டம்.
ஒரு அதிகாலை நேரத்தில் நாங்கள் ஒரு காரில் குடகு மலைக்கு பயணம் ஆனோம். மரங்கள் செறிந்த மங்களூர் மெது மெதுவாக துயில் கலைந்தது. நேத்ராவதி நதி மேல் மெல்ல பனி விலகிக்கொண்டு இருந்தது . நதியை பாலத்தின் வழியே கடக்கும்போது ஒரு கண் இமைப்புக்கு நதியையும் மறு இமைப்புக்கு சாலையையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு சென்றேன். மங்களுரிளிருந்தே மலை பாதை துவங்கி விடுகிறது. சாலையின் இரு மருங்கிலும் பசுமை. பசுமையில் உறி எழும் குளிர். அந்த குளிர் எழுப்பும் ஆனந்தம்.
வழியெங்கும் சின்ன சின்ன ஊர்களை கடந்து சென்றோம். கர்நாடக மாநிலமும் கேரளமும் இணையும் கோட்டில் பயணிக்கிறது சாலை.
ஒரு சாலை வளைவில் சல சலவென சிற்றருவி ஒலி கேட்டது. அதை கேட்டு வண்டியை ஓரமாக நிறுத்தினேன். வலப்புறம் பாக்குத்தோப்பு. நான் வண்டி நிறுத்திய வளைவுக்கு சற்று முன்னால் ஒரு டீ கடை இருந்தது. நடுவயது தம்பதிகள் இருந்தார்கள். ஒரு சிறுவன் படித்துக்கொண்டு இருந்தான்.
நானும் அண்ணனும் டீ சொல்லிவிட்டு பெஞ்சில் அமர்ந்தோம். என் கால்களின் அருகே கால்வாயில் தண்ணிர் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த சிற்றருவியின் ஓசை மனதில் பெரும் உவகை அளித்தது. எந்த அருவியை பார்க்கும்போதும் மனதில் முதலில் தோன்றுவது இது எங்கு துவங்குகிறது என்பதுதான்.
முடிவிலியில் துவங்கி முடிவிலியில் முடியும் வாழ்வு.
கவிதாவும் கீதாவும் ( அண்ணி ) சிண்டுவும் சோட்டுவும் காரிலிருந்து இறங்கி வந்தார்கள். சிண்டு நேராக தண்ணிரில் இறங்கி அப்பா ஜில்லு பா என்றான்.
அனைவரும் டீ குடித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தோம். கீதா பாக்கு மரங்களை காட்டி மரம் ஏறுபவர்கள் தோப்பின் ஒரு முனையில் ஒரு மரத்தில் ஏறி மரத்திலிருந்து மரம் தாவி தோப்பின் அடுத்த முனையில் உள்ள மரத்தில் கீழ் இறங்குவார்கள் என்றார். ஒல்லியான அந்த மரத்தில் ஏறி சற்று ஆட்டினால் அது அப்படியே வளைந்து அடுத்த மரத்தின் தலையை தொடும் போல.
அந்த இடம் மரங்கள் , பறவைகளின் ஒலி, காட்டை கடந்து செல்லும் காற்றின் ஒலி, ஓடையின் ஒலி, மென்குளிர் என்று அந்த இடம் ஒரு நிகழ் ஓவியம் போல் இருந்தது. அதில் ஒட்டாமல் இருந்தது கடந்து செல்லும் வாகனமும் அதன் இரைச்சல் ஒலி மட்டுமே.
மத்திய வேளையில் மடிகேரியை நெருங்கி இருந்தோம். ஒரு வளைவில் மற்றும் ஒரு அருவி பார்த்ததும் வண்டியை அப்படியே ஓரங்கட்டிவிட்டோம். 125 கிலோ மீட்டர் மெரும்பாலும் மலைவழி சாலை என்பதால் அனைவரும் சோர்ந்து விட்டோம்.
அருவி கரும்பாறை மேல் அமர்ந்திருக்கும் கொற்றவை போல வந்து எனை தொட்டு உணர் என்று அழைப்பது போல இருந்தது. இயற்கையை சமைப்பவன் வெண்சிறு பூக்களால் அதை சுற்றி அலங்கரித்து இருந்தான்.
அருவியிலிருந்து சற்றே விலகி ஓடிய கொஞ்சம் தண்ணீர் முன்பே அறிந்த வழிகள் என பாறை இடுக்கில் குனிந்து , குழைந்து , வளைந்து , நெளிந்து மீண்டும் அருவியோடு கலந்தது.
மூன்று நிமிடம் அருவின் முன்னால் அமர்ந்து அதை பார்த்துக்கொண்டு இருந்தேன் . அந்த நிமிடங்கள் கொடுத்த பரவசத்தை மனதிலிருது இன்றும் என்னால் தொட்டு எடுத்து அதில் முழ்கிவிட முடிகிறது.
அருவின் அருகில் கடைகளில் சூடான ஆம்லெட் கிடைத்தது. டீ குடித்துவிட்டு ஆம்லெட் சாப்பிட்டபின் சற்றே பசியாறி களைப்பு நீங்கியது. அங்கிருந்து மடிக்கேரி ( கூர்க் ) 20 கிலோ மீட்டர்.
மடிக்கேரி நெருங்கியதும் வானம் இருண்டு மழைவர துவங்கியது. ஹோம் ஸ்டே என்று சொல்லப்படுகிற வாடை வீட்டில் தங்கலாம் என முடிவு செய்திருந்தோம். ஒரு நபரின் தொலைபேசி என்னும் இருந்தது.
அவரை அழைத்தோம். அவர் வந்து ஒரு வீட்டின் மாடிக்கு அழைத்து சென்று காண்பித்தார். மெத்தைகளெல்லாம் அழுக்காகவும் வீடும் சுமாராகவும் இருந்தது. இரண்டு இரவுக்கு 5000 ரூபாய். வெளியே மழை உடலெலாம்
சோர்வு ஆதலால் அங்கேயே தங்கலாம் என்று முடிவெடுத்துவிட்டோம்.
இரவு யாரும் சரியாக தூங்கவில்லை. மூட்டை பூச்சி கடி. காலையில் எழுந்து குளித்துவிட்டு முதல் வேலையாக அந்த நபரை அழைத்து நாங்கள் காலி செய்வதாக கூறிவிட்டு கிளம்பிவிட்டோம்.
முதல் நாள் காலை ஓம்கறேஷ்வர் கோவிலுக்கு சென்றோம். நல்ல துவக்கமாக இருந்தது. தமிழகத்திலிருந்து செல்பவர்களுக்கு சட்டென்று அதை கோவில் என்று ஒப்புக்கொள்ள முடியாது. கொஞ்சம் பெரிய ஓட்டுக்கட்டிடம். அதன் முன் பகுதியில் பெரிய மீன் குளம்.
வெளியில் ஒரு அறிவிப்பு " இது சுற்றுலா தளம் அல்ல அமைதி காக்கவும் ". கோவிலுக்குள் நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. உள்ளே ஒரு லிங்கம் அதை சுற்றி சிறிய தாழ்வாரம். உள்ளூர்காரர்கள் சிலர் மனமுருகி வழிபட்டனர். நாங்கள் ஒரு பார்வையாளராகவே கடந்து சென்றோம்.
கிபி 1800 வாக்கில் ஒரு மன்னன் பிராமணனை கொன்று விட்டான். இந்து தர்மத்தின்படி முதன்மையான பாவம் அது. பிராமணர் மன்னனின் கனவில் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தார். மன்னன் பிராமணர் சபையை கூட்டி கருத்து கேட்டார். காசியிலிருந்து ஒரு லிங்கம் வரவழைத்து ஒரு கோவில் கட்டினால் சரியாகிவிடும் என்று ஆலோசனை சொல்லப்பட்டது. அதன்படி கிபி 1820 ல் இந்த கோவில் கட்டப்பட்டது.
கோவிலிருந்து வரும் வழியில் ஒரு ஹோட்டலில் ஒரு பெரிய அறையை அமர்த்தினோம். வசதியாகவும் அழகாகவும் இருந்தது.
அடுத்து அபே அருவிக்கு சென்றோம். கூர்க்கின் முக்கியமான சுற்றுலா தளம்.
சுற்றுலா தளத்துக்கே உரிய மக்கள் நெருக்கம் , கடைகள் , கூச்சலிடும் அரை ஆடை ஆண்கள் என்று அந்த இடம் நிரம்பி இருந்தது.
வண்டியை நிறுத்தி விட்டு ஒரு கிலோ மீட்டர் காட்டு பாதையில் நடந்து செல்ல வேண்டும்.
அந்த வழியில் தான் காபி செடியை முதன்முதலில் பார்த்தேன்.
காபி கொட்டைகள் மொட்டு மொட்டாக பச்சை நிறத்தில் செடி முழுக்க காயித்திருந்தது.
கூர்க் "இந்தியாவின் காப்பி கோப்பை " என்று அழைக்கப்படுகிறது. கிபி 1854ல் ஜோன் பிளேவர் என்ற ஆங்கிலேயரால் முதல் காப்பி தோட்டம் கூர்கில் அமைக்கப்பட்டது. இன்று வருடத்துக்கு 140 டன் காப்பி கொட்டை கர்நாடக மாநிலத்திலிருந்து ஏற்றுமதி ஆகிறது.
காபி செடி வளர்வதற்கு சூழியல் அமைப்பு மிக முக்கியம். கடல் மட்டத்திலிருந்து சரியான உயரம், ஈரப்பதம் , மண்வளம் , நிழல் தரும் மரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.
கூர்க்கில் அராபிக்கா என்ற உயர் வகை காபி கடல் மட்டத்திலிருந்து 3300 அடி முதல் 4900 அடி வரை உள்ள பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. ரோபஷ்டா என்ற வகை கடல் மட்டத்திலிருந்து 1600 அடி முதல் 3300 அடி வரை உள்ள பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.
ஆனால் நானும் அண்ணனும் கூர்க் காபி குடிக்கலாம் என்று நாங்கள் சென்ற ஹோட்டல்கள் , டீ கடைகள் எல்லாவற்றிலும் கேட்டோம் எங்கும் கிடைக்கவில்லை.
அபே அருவி
அருவி அருகே பெரும் கூட்டம். நிற்க இடமில்லாமல் வழிந்தது.
அருவியை பார்த்து உள்வாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் ஏதோ ஒரு கனத்தில் பாறை விளிம்பில் தெறிக்கும் வெண் துளிகளும் பாறை இடுக்கில் வழிந்தோடும் மெண்ணீர் அலைகளும் கரும் பாறைமேளிருந்து குதித்து தெறிக்கும் நீர் குமிழ்களும் மனதை ஈர்க்கத்துவங்கின.
மனதில் ஈரம் துளிர்த்து ஜில்லென குளிர்ந்து. கூட்டம் அதிகமாக வரவே அங்கிருந்து நகர்ந்து மறுபடியும் மேலேறி வந்தோம்.
காட்டின் பசுமையுடன் மழை நீர் கலந்ததால் காடு கரும்பசுமையாக மாறி இருந்தது.
காற்றில் பச்சை மணம் அடர்ந்திருந்தது. கற்படிகளில் நடந்து மேலே வருவதற்குள் வியர்த்து விட்டது. வண்டி நிறுத்திய இடத்தில் இளநீர் கடை இருந்தது. ஆளுக்கு இரண்டு இளநிர் கல்ப்பாக அடித்தோம்.
அபே அருவியை பார்த்துவிட்டு மறுபடியும் மடிக்கேரிக்கு வந்து மதிய உணவை முடித்தோம். மடிக்கேரியில் இயற்கை எழில் நோக்கும் இடம் ஒன்று இருக்கிறது. முன் மாலை நேரத்தில் அங்கு சென்றோம். குளிரும் வெயிலும் கலந்த மாலை பொழுது.
இந்த இடம் ராஜா இருக்கை ( Raja's Seat ) என்று அழைக்கப்படுகிறது. முன் காலத்தில் கூர்க்கை ஆண்ட ராஜா காலை நேரத்தில் இந்த இடத்துக்கு வந்து சூரிய உதையத்தை பார்த்து ரசிப்பாராம்.
குடகு மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதியில் உள்ளது. ஆங்கிலயர்கள் அதை கூர்க் என்று அழைத்தனர். இந்த மாவட்டத்தின் தலை நகரம் தான் மடிக்கேரி. மலை மேல் உள்ள மலை சூழ்ந்த ஊர்.
கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கும் அப்பாலும் பச்சை மலைகள்.
பறவையென மாறி தொடுவானம் வரை பறந்து தொடாமலே திரும்பிவர வேண்டும் என தோன்றியது.
பூங்காவில் மாலை வரை விளையாடினோம். ஒரு பெரிய குடும்பம் பேருந்தில் வந்து இறங்கினர். வட்டமாக அமர்ந்து உணவருந்திவிட்டு அவர்களும் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடினர்.
பைலகுப்பே - தங்க கோவில்
மறுநாள் காலை மடிக்கேரியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குஷால் நகருக்கு சென்றோம். அங்கு திபெத்திய புத்த பொற்கோவில் உள்ளது.
மடிக்கேரியிலிருந்து கிழே இறங்க இறங்க மனதில் ஏனோ வெறுப்பும் வெறுமையும் குடியேறியது. மலை பகுதிகள் குறைந்து சமவெளி பகுதிகள் வரத்துவங்கின. சாலையின் இரு மருங்கிலும் ரப்பர் மரங்கள் திரு வோட்டை கையில் ஏந்தி நின்றிருந்தன.
குஷால் நகர் மைசூர் நெடுஞ்சாலையில் உள்ளது. அதை தாண்டி வலப்புறம் திரும்பியவுடன் அகதிகளாக வந்த திபெத்திய மக்கள் வாழும் பகுதிகள் துவங்குகிறது.
இந்த இடத்தை பற்றி இணையத்தில் தேடியபோது கீழ் கண்ட தகவல்கள் கிடைத்தது.
ராஜிராதா - பெங்களூரு அவர்கள் முத்தாரம் இணைய இதழில் எழுதியது
திபெத்தியர்களின் சரணாலயம்
திபெத்தியர்கள் தலாய் லாமாவை தங்கள் மதத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் மதித்து தனியாக வாழ்ந்து வந்தார்கள். சீன அரசு திபெத்தை ஆக்கிரமித்து தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக ஆக்கியதோடு மட்டுமின்றி, பௌத்த நம்பிக்கை கொண்ட திபெத்தியர்களை சித்திரவதை செய்யவும் ஆரம்பித்தது. அதனால் தலாய் லாமா அங்கிருந்து தப்பி வந்து இந்தியாவில் அரசியல் தஞ்சம் பெற்றார். இமாசலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை நம் இந்திய அரசு செய்து தந்தது. இதைத் தொடர்ந்து ஏராளமான திபெத்தியர்கள், 1959ம் ஆண்டு இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வந்தனர். தென்னிந்தியாவில் அவர்கள் குடியமர்த்தப்பட்ட இடங்களில் ஒன்று, ‘பைலகுப்பே’. இது கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டத்தில் உள்ளது. இது இருப்பது, குடகு மாவட்டத்தின் ‘குஷால் நகர்’ எல்லைப் பகுதியாகும்.
இந்தியாவின் பல மாநிலங்களில் திபெத் அகதிகள் வாழ்கின்றனர். இந்த எண்ணிக்கை சுமார் 1,50,000 இருக்கும் என்றாலும் அதிகாரபூர்வ எண்ணிக்கை 94,203தான். இதுதவிர பூடானில் 13,514 பேரும், நேபாளத்தில் 1298 பேரும் குடியேறியுள்ளனர். இப்போதும் இந்தியாவிற்குள் ஆண்டுக்கு சுமார் 1000 பேர் முதல் 2,500 பேர் வரை திபெத்திலிருந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். திபெத்திய புத்த மதத்தில் ‘கக்யு’, ‘சக்ய’, ‘கேளுக்’, ‘ந்யிங்க்மா’ என நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் பழமையான பிரிவான ‘ந்யிங்க்மா’ பிரிவைச் சேர்ந்தவர்களே தலாய் லாமாவைப் பின்பற்றும் திபெத்தியர்கள். இவர்களுக்காக இங்கே ‘நம்டிரோலிங் மடாலயம்’ நிறுவப்பட்டுள்ளது. இந்த மடாலயத்தை ந்யிங்க்மா பிரிவின் 11வது தலைவரான பெனோர் ரின்போச்சே என்ற பௌத்த துறவி 1963ம் ஆண்டு நிறுவினார். இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட நிலத்தில் வெறும் மூங்கில்களைக் கொண்டு வேயப்பட்ட கூரைக் கட்டிடத்தில் இம்மடாலயம் ஆரம்பிக்கப்பட்டது.
மடாலயத்தைத் தொடர்ந்து 1978ம் ஆண்டு, இங்கே ‘சேத்ரா’ எனப்படும் பௌத்த மதக் கல்லூரி துவங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் பட்டப்படிப்பு 6 வருடங்கள். பட்ட மேற்படிப்பு 3 வருடங்கள். இவை முடிந்ததும், 3 வருடங்கள் பௌத்த மதம் சார்ந்த நேரடிப் பயிற்சிகள். இவற்றிற்குப் பின்னரே அவர்கள் புதுத் துறவி மடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பைலகுப்பேவில் பௌத்த மதத்தவர்கள் கட்டியுள்ள கோயில்களில் தங்க புத்தர் கோயில் மிகவும் பிரபலம். இங்கே 3 புத்தர் சிலைகள் உள்ளன. இவற்றின் உயரம் 40 அடி. இவை பத்மசாம்பவா, புத்தா மற்றும் அமிதயாஸ் என அழைக்கப்படுகின்றன. இந்தக் கோயிலின் சுவர்களில் திபெத், புத்த மதம் சார்ந்த கதைகள் அழகிய வண்ண ஓவியங்களாகவும் புடைப்புச் சிற்பங்களாகவும் வடிக்கப்பட்டுள்ளன.
அமைதி தவழும் இந்தக் கோயில் 1999ல் கட்டப்பட்டது. இதை தலாய் லாமாதான் திறந்து வைத்தார். ஷான்டாக் பால்டிரி கோயில், திபெத்தின் பால்டிரி கோயிலின் அச்சு அசலாகக் கட்டப்பட்டதாகும். கோயில்கள் தவிர இரண்டு துறவி மடங்கள் இங்கு பிரபலமானவை. ஒன்று தேவாஜி மடாலயம். இதில் சுமார் 5 ஆயிரம் பௌத்த துறவிகள் தங்கியுள்ளனர். மற்றொன்று தசி லகுன்போ துறவி மடம். பஞ்சன்லாமா பிரிவைச் சார்ந்தவர்களின் மடம் இது. இங்கு 250 துறவிகள் உள்ளனர். திபெத்தியர்கள் வருகையால், இன்று ‘பைலகுப்பே’ திபெத்தியர்களின் கலாச்சாரத்தில் கொழிக்கிறது.
சுற்றுலா பயணிகள் எந்த தடையும் இல்லாமல் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றார்கள் . நூற்றுக்கணக்கான மாணவர்கள் அமர்ந்து பூசை செய்யும் வளாகத்தில் பெரும் சத்தமிட்டும் பேசிக்கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் பயணிகள் செய்யும் சேட்டைகள் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிலர் அங்கு கடந்து செல்லும் பிட்ஷுக்களை தங்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வற்புறுத்திக்கொண்டு இருந்தனர்.
என்னை பிரமிக்க வைத்தது அங்கு வரையப்பட்ட அற்புதமான நுணுக்கமான ஓவியங்கள். ஒரு ஓவியத்தை பார்த்து ரசித்து முடிக்க குறைந்தது ஒருமணி நேரம் தேவைப்படும். ஓவியம் அறிந்தவர்கள் நாள் முழுவதும் ரசிப்பார்கள்.
ஒவ்வொரு வளாகத்திலும் நிறுவப்பட்டுள்ள புத்த சிலைகள் பிரமிப்புட்டுபவை. இந்து கோவில்களே பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு இந்த அனுபவம் புதுமையாக இருந்தது.
70000 திபெத்திய மக்கள் வாழும் அந்த பகுதி முற்றிலும் வேறு ஒரு நாடு போல காட்சி அளிக்கிறது. கோவிலை விட்டு வரும் வழியில் ஒரு பெரிய குளம் ஒன்றை கண்டோம். குளம் முழுக்க மீன்கள். சிண்டுவும் சோட்டுவும் குதுகலம் ஆனார்கள். ஒரு புத்த பிக்சு அந்த குளத்தை பராமரிக்கிறார். மீன்களுக்கு பிஸ்கட்டும் விற்கிறார். அதை வாங்கி தண்ணிரில் எரிந்து விளையாடிக்கொண்டு இருந்தனர். பிஸ்கெட் திண்ணும் மீன்களை அங்குதான் பார்த்தேன். குளத்தை சுற்றி மரங்கள் மற்றும் அமர்ந்து பேச இருக்கைகள் என்று அந்த இடம் ஓவியங்களில் வரும் இடம் போல இருந்தது.
காவேரி நதியின் முதல் காலடி தளத்தில்
மூன்றாம் நாள் காலை மடிகேரியில் அறையை காலிசெய்துவிட்டு காவேரி நதி துவங்கும் தலைக்கவேரிக்கு பயணமானோம்.
இரவு மழை பெய்திருந்தது. காடும் கருமை கொண்டிருந்தது. காடுகளில் பெயர் இனம் தெரியாத எத்தனையோ உயிர்கள் ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் மழை பொழியும் நேரத்தில் அத்தனையும் அடங்கி ஒடுங்குகின்றன. மழையின் ஓசை மட்டும் காடுகளில் ஒற்றை பேரொளியாக கேட்கிறது.
மடிக்கேரியில் இருந்து 48 கிலோ மீட்டர் முற்றிலும் வளைந்து வளைந்து செல்லும் மலை பாதை வழியாக பிடித்த இடத்தில் நிறுத்தி ரசித்துவிட்டு சற்று இளைப்பாறி சென்றோம்.
ஒரு வளைவில் இரண்டு கடைகள் மட்டும் இருந்தன. அதில் இரண்டு பெண்கள் இருந்தார்கள்.
ஒரு கடையில் மிளகு, ஏலம், தேன் என்று மலை பொருட்கள் இருந்தன . இன்னொரு கடையில் அன்னாசி பழம் இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு கடைமுன் கால் நீட்டி அமர்ந்து கொண்டோம். வெயில் இல்லை இதமான காற்று இருந்தது.
பழுத்து ஊரிய இரண்டு அன்னாசி பழங்களை சீவி உப்பு மிளகு இட்டு ஒரு தட்டில் பரப்பி எங்களுக்கு அந்த பெண் கொடுத்தாள்.
நா ஊர சாறு ஒழுக அதை தின்று முடித்தோம். அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து விட்டு மீண்டும் பயணத்தை துவங்கினோம்.
பிரம்ம கிரியின் ( மலையின்) உச்சியில் காவேரி துவங்குகிறது. அந்த இடம் சுற்றுலா தளம் அல்ல அமைதியும் பசுமையும் நிறைந்த அழகான இடம்.
காவேரி அம்மனுக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு கிழே ஒரு ஊற்று உள்ளது. அந்த ஊற்றிலிருந்து நீர் ஒரு பெரிய குளத்துக்கு வருகிறது. அங்கிருந்து சிறு ஓடையாக காட்டுக்குள் நுழைகிறது.
அந்த குளத்தை பார்த்ததும் அதில் இறங்க வேண்டும் எனத்தோன்றியது. புனிதத்துக்காக அல்ல அது இயற்கை உயிர்கள் மீது காட்டும் கனிவின் புறவடிவம் என்பதற்காக .
அதில் மெல்ல மெல்ல இறங்கினேன். நீரில் அடர்ந்திருந்த குளிர் உடலையும் மனதையும் உறையச்செய்தது. பின்பு தலை முழ்கி எழுந்தேன். தண்ணீர் என் கழுத்துவரை இருந்தது. சற்று நேரத்தில் இடுப்புக்கு கிழே ஊறி வரும் புது தண்ணீரின் வெதுவெதுப்பும் மேலே தேங்கி நிற்கும் தண்ணீரின் குளுமையும் உணரமுடிந்தது.
குளத்தின் மறுமுனையில் காவிரி அன்னைக்கு இரண்டடி உயரத்தில் கோவில் உள்ளது. குளத்தில் மூழ்கி மறுமுனைக்கு சென்று நின்றால் பூசாரி அன்னையின் காலடியில் சுரக்கும் சிறிய நீருற்றிலிருந்து கொஞ்சம் நீரை எடுத்து தலையில் ஊற்றுகிறார்.
கோவிலின் வலப்புறம் ஒரு மேடு இருக்கிறது. அதன் உச்சிக்கு செல்ல செங்குத்தான படிக்கட்டுகள் இருக்கின்றன.
நானும் அண்ணனும் மட்டும் மேலேரிச்சென்றோம். அதன் உச்சியில் 360 டிகிரில் எத்திசை திரும்பினாலும் மலைவெளியையும் காடும் பசுமையையும் கண்டேன். காட்டு யானை கனவுக்குள் என்னை தூக்கி எரிந்தது போல
அந்த மாபெரும் இயற்கை வெளியின் நடுவில் என்ன செய்வது என்று தெரியாமல் வெறுமனே நின்றிருந்தேன்.
அண்ணன் செல்லாம் என்றார். அந்த மலை பகுதியை வீடியோவாக பதிவு செய்துவிட்டு கீழே இறங்கி வந்தோம்.
தலை காவேரியை விட்டு கிழே வரும் வழியில் ஆறு தெரிந்தது. கவிதா ஆற்றை பார்க்கலாம் என்றவுடன் அங்கே வண்டியை நிறுத்தினோம்.
குளிக்கவேண்டும் போல் இருந்தது. முதலில் நானும் சிண்டுவும் தண்ணிரில் இறங்கினோம். நாங்கள் குளிக்க துவங்கியதும் அண்ணனும் இறங்கிவிட்டார்.
கவிதாவுக்கு தண்ணிர் என்றால் பயம். எங்கும் தண்ணிரில் கால் வைப்பதில்லை. படித்துறையில் அமர்ந்திருந்தவள் தீடீரென என்னோடு தண்ணீரில் குதித்துவிட்டாள். பின்னர் கவிதாவின் அக்காவும் தண்ணிரில் இறங்கிவிட்டார். ஒரு மணிநேரம் நீரில் விளையாடிக்கொண்டு இருந்தோம். தண்ணீரைவிட்டு எழுந்து வர மனமில்லாமல் எழுந்துவந்தோம்.
நாங்கள் குளித்த இடத்தில் காவிரியோடு இரண்டு துணை நதியும் கலக்கின்றன. அரசியல் , மனித கழிவுகள் , தொழிற்சாலை கழிவுகள் என்று மாசு அடையாத தண்ணிர். நன்னீர் .
வெகு நேரம் கழித்து அங்கிருந்து அகன்று மங்களுருக்கு கிளம்பினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக