"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், ஜூலை 07, 2016

நீ இல்லாத நாட்களில்


படுக்கையில் நானும் தனிமையும் படுத்திருந்தோம்

நிசப்தம்

அடுமனையிலிருந்து " நறுக் நறுக் " என்று சப்தம் எழுந்தது.

போர்வையை விளக்கி அங்கு எட்டி பார்த்தேன்

ஒரு சுண்டெலி

முதல் முறையாக நம் வீட்டில்

சிதறிய வேர்க்கடலையை கொரித்துக்கொண்டு இருந்தது

நர நரவென்று ஏறியது கோவம்

கையில் கிடைத்த எவர்சில்வர் கோப்பையை

அதனை நோக்கி வீசி எறிந்தேன்

கண் இமைக்கும் இடைவெளியில்

சாளரம் வழியே வெளியே குதித்தது ஓடிவிட்டது 

விளக்குகளை அணைத்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டேன்

சற்று நேரத்தில் சர சரப்பு ஒலி

காலில் ஏதோ பட்டு விதிர்த்து எழுந்தமர்ந்தேன்

மூன்று பிஞ்சு முற்களின் தொடுகை

வாலின் மென்மயிர் வருடல்

மெல் அதிர்வு அலை ஒன்று உடல் முழுவதும் எழுந்து அடங்கியது

வாழ்வில் முதல் முறையாக உடல் உணர்ந்த புது தொடுகை

வெகுநேரம் வெறுமனே அமர்ந்திருந்தேன்

பின் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டேன்

மனம் அந்த எலியை கொல் கொல் என்று அழற்றியது

அதை எப்படி கொள்வது என்றே வெகுநேரம் யோசித்து

புரண்டு கொண்டு இருந்தேன்

பின் கனவில் ஒரு எலிப்பொறியோடு ஒரு காய்ந்த புல்வெளியில்
முடிவே இல்லாமல் நடந்துகொண்டு இருந்தேன்

 மறுநாள் விழித்தெழுந்த போது முன் மதியம் ஆகியிருந்தது

சன்னலை திறந்ததும் புழுதியும் வெம்மையும் கலந்த காற்று முகத்தில்  அறைந்தது

ஆளில்லா சாலையில் அனல் எழுந்தாடிக்கொண்டு இருந்தது.

அந்த எலி என்றது மனம்

அந்த விழி மணிகள்

சிறு ஓசைக்கும் அசையும் மென்காதுகள்

எந்த நேரத்திலும் ஓடத்துடிக்கும் அதன் பிஞ்சு கால்கள்

சிரிப்பை மூட்டும் அதன் வால்

முகர்ந்து முகர்ந்து முன்னகரும் மூக்குக்கு

அந்த எலியை நினைத்த போது எனக்கு சிரிப்பு வந்தது

ஏன் ஒரு உயிரை கொள்ளவேண்டும் என்று

அவ்வளவு துடித்தது என் மனம்

கொல் கொல் ஏன் வெறி கொண்டு ஆடியது

யோசனையில் வெகு நேரம் சன்னலின் அருகே நின்று கொண்டு இருந்தேன் 

இரவு அந்த எலி  வரவேண்டும் என்று மனம் ஏங்கியது

வந்தால் அதனோடு நான் பழக முடியுமா என்று யோசித்தேன்

சமையல் அறையில் சென்று கடலையை தரைமுழுவதும் கொட்டி வைத்தேன்

ஆனால் அது திரும்பி வரவே இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக