திரு எழுத்தாளர் பூமணி அவர்கள் எழுதிய நாவல் "வெக்கை".
பதின் வயது சிறுவன் சிதம்பரம் தன் அண்ணனை கொன்றவனை பழி கொலை செய்கிறான். அதை தொடர்ந்து அவனும் அவன் தந்தையும் எட்டு நாட்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.
என் பார்வையில் "வெக்கை" மண்ணை பற்றிய கதை. கரிசல் மண்ணின் கதை. அந்த மண் உருவாக்கும் உயிர்கள் பற்றிய கதை.
அந்த உயிர்களின் தன்மை பற்றி விவரிப்பதன் வழியே அந்த மண்ணின் தன்மை பற்றி நாவல் நமக்கு விவரிக்கிறது.
அந்த மண்ணின் நீட்சி தான் அந்த உயிர்கள்.
கொலை நடந்த பின் தந்தையும் மகனும் சுற்றி அலையும் மலை, விவசாய நிலங்கள் , கம்மாய் , சுடுகாடு , கோவில் அத்தனை இடங்களின் நுட்ப்பமான விவரிப்பின் மூலம் நம்மையும் அந்த மண்ணில் சுற்றி அலையவைக்கிறது நாவல். அவர்களுக்கு நா வறண்டு தாகமெடுக்கும் போது நமக்கும் தாகமெடுக்கிறது.
இந்த நாவலின் இன்னொரு அழகு உறவுகளுக்கு இடையே உள்ள நுட்ப்பமான பிணைப்பு.
தன் மூத்த மகனை கொன்றவனை பழி தீர்க்க தந்தை வெகு நாட்கள் காத்திருந்து முடியாமல் மருகுகிறார். அதை தன் இளைய மகன் நிகழ்த்திவிட அவன் மேல் மெல்லிய பொறாமையும் காழ்ப்பும் ஏற்படுகிறது. அதை வெளிப்படுத்தாமல் சரியான சொல்லெடுத்து அவனோடு உரையாடுகிறார். அதே நேரத்தில் அவனை நினைத்து பெருமையும் கொள்கிறார். அவனை அந்த இக்கட்டிலிருந்து விடுவிக்க அலைந்து திரிகிறார்.
அவன் தாய் வழி சித்தி மற்றும் மாமா அத்தை உறவுகளுக்கும் அவனுக்கும் இடையேயான அன்பும் உரிமையும் பற்றிய சித்தரிப்பு அழகு.
ஒருபுறம் மண்ணையும் உறவுகளையும் பேசும் நாவல் மறுபுறம் சமூக ஏற்றத்தாழ்வு நீதி முறைகள் எது அறம் என்பதை பற்றியும் விவாதிக்கிறது.
காவல்துறை , நீதிமன்றம் , அரசு பற்றிய எளிய மக்களின் அவதானிப்புக்களையும் அலசுகிறது.
நான் படித்த சிறந்த நாவல்களில் வெக்கையும் ஒன்று
தமிழகத்தின் வடகோடி கிராமத்தில் பிறந்த நான் மொழியின் மூலம் தென்பகுதியில் உள்ள கரிசல் மண்ணை தொட்டு உணர்ந்தேன்.
நாவல் படைப்பாசிரியருக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக