"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வெள்ளி, ஜூலை 22, 2016

நீ இல்லாத நாட்களில்


நடு இரவு தாண்டியும் தூக்கம் வரவில்லை

மணமகன் அறையிலிருந்து வெளியே வந்தேன். நாட்டியம் முடித்து அணிகலன் கலைந்து அமர்ந்திருக்கும் மங்கை போல இருந்தது மண்டபம்.

என்னை கடந்து சென்ற தொல் தூரத்து அக்கா ஒருவர் என்ன தம்பி தூங்களையா என்று கேட்டு விட்டு நடந்தார்.

நான் மறுபடியும் அறைக்குள் நுழைந்தேன். லட்டு வாசனை, மூலையில் குவிந்திருக்கும் ரோஜா மாலையின் வாசனை களைத்து குவிக்கப்படட புடவைகளின் வாசனை அங்கு உறங்கிக்கொண்டு இருந்த சொந்தங்களின் வியர்வை நெடி அத்தனையும் நாசியில் ஏறி மூளையை தொட்டது.

அங்கும் இங்கும் தாவி கட்டிலை அடைந்து படுத்துக்கொண்டேன். அந்த கட்டிலில் நான்கு ஐந்து குழந்தைகள் படுத்திருந்தான. அருகிலிருந்த குழந்தை பட்டு பாவாடை சட்டை அணிந்து கண்களில் தீட்டிய மை கலந்து கொழுத்த கரிய கைகளில் மாட்டியிருந்த சிவப்பு வளையல்கள் சரிந்து கிடைக்க குட்டி அம்மன் போல் தூங்கிக்கொண்டு இருந்தது.

வாழ்வின் முக்கியமான நிகழ்வு சாதாரணமாக என்னை கடந்து போவதாக எனக்கு தோன்றியது. அந்த நினைப்பே மனதில் வெறுமையை கூட்டியது.

உன்னிடமிருந்து ஏதாவது குறுந்செய்தி வந்திருக்கிறதா என்று பார்க்க செல்பேசியை எடுத்தேன், திடீரென அழைப்பு வந்தது.

என்ன தூக்கம் வரலையா ......என்றாய்

கவலை படாத "நாளையிலிருந்து நா உன் கூட இருப்பேன்"   என்றாய் 

அப்போது அந்த வார்த்தை எனக்கு சாதாரணமாக இருந்தது

நீயும் சாதாரணமாக தான்  சொல்லியிருப்பாய்

வெகு நாட்களுக்குப்பின் அந்த வார்த்தைகள் இன்று நினைவிலிருந்து இயல்பாக எழுந்து வந்தன ..

கடந்த ஏழு வருடங்களின் முக்கியமான தருணங்களை அந்த வார்த்தைகள் தொட்டு தொட்டு சென்று கொண்டே இருக்கின்றன.

என் காத்திருப்பின் கணங்களை கனமாக்கி மனதை தவிப்பால் நிறப்புகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக