"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016

ரமேஷ் அண்ணா

ஐந்து வருடங்களுக்கு முன் என் மனைவியை சவுதிக்கு அழைத்துவர இங்கு வீடு தேடிக்கொண்டு இருந்தேன். இங்கு வீடு எளிதில் கிடைக்கும். ஆனால் நாம் நினைக்கின்ற வாடகையில் நம் நாட்டு மக்கள் வசிக்கும் கட்டிடம் கிடப்பது அரிது.

அப்போது தான் எனக்கு ரமேஷ் அண்ணா அறிமுகமானார். என் கிராமத்துக்கு பக்கத்து கிராமத்துக்காரர். ஊரில் அப்பாவுக்கும் அறிமுகம் உண்டு. அவர் பெயர் மட்டும் தெரிந்து வைத்திருந்தேன்.

அவரே என் செல்பேசி எண்ணை யாரிடமோ வாங்கி என்னை அழைத்தார். நாந்தாம்பா ரமேஷ் நல்ல இருக்கியா என்று பழகியவர்போல இயல்பாக பேசத்துவங்கினார்.

அதன் பின் அவரை பலமுறை சந்தித்தது பேசத்துவங்கினேன்.

அவர் குடும்பம் தங்கியிருந்த குடியிருப்பில் எனக்கும் வீடு பார்த்து கொடுத்தார். என் மனைவி வந்தவுடன் அவர்களுடன் ஒரு குடும்பமென கலந்துவிட்டோம்.

ஒரு முறை அறிமுகம் இல்லாத ஒருவரின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவர் வரவேற்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் ரமேஷ் அண்ணா சவுதியில் ஓட்டுநர் உரிமம் எப்படி பெறுவது என்று பொறுமையாக சொல்லிக்கொண்டு இருந்தார்.
யாரை பார்க்கவேண்டும் , எப்படி வண்டி ஓட்டி பழகவேண்டும் என்று நுணுக்கமான தகவல்களை சொல்லிக்கொண்டு இருந்தார்.
அந்த ஆள் எங்களை உக்கார கூட சொல்லவில்லை. எனக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் ஒன்றை கவனித்தேன் அது ரமேஷ் அண்ணாவின் உதவும் குணம்.

புதியதாக வருபவர்களுக்கும் நண்பர்களுக்கும் அவர் இயல்பாக உதவுவதை நானும் கவிதாவும் ( மனைவி ) அடிக்கடி பேசிக்கொள்வோம். நாங்கள் தங்கியிருந்த குடியிருப்பில் தண்ணீர் பிரச்சனை மின் தூக்கி பழுது என்று எந்த சிறு பிரச்சனை ஆனாலும் அதற்கான ஆட்களை முதலில் சந்தித்து தீர்க்க முனைவது ரமேஷ் அண்ணா தான்.

அந்த குடியிருப்பில் இருக்கும் முப்பதிற்கும் மேற்படட குடும்பத்திற்கும் அறிமுகமானவர் அவர் மட்டும் தான்.

பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவர் சவுதியில் வேலை செய்தார். நான் ஐந்து வருடங்களாக அவருடன் பழகினேன். நான் பார்த்து வியந்த இன்னொரு விஷயம் அவரின் உரையாடல்.

எதை பற்றி பேசினாலும் அந்த தருணத்தில் நுணுக்கமான தகவல்களை அடுக்கிக்கொண்டே போவார். நான்கைந்து பேர் பேச அமர்ந்தால்  முதலில் எல்லோரும் பேசுவோம்  பின் மூவர் பின் இருவர் பின் அவர் பேசுவதை அனைவரும் கேட்டுக்கொண்டு இருப்போம்.

70 - 80 களில் கல்லூரியில் படித்தவர்களுக்கு தமிழ் மீது அதிகப்பற்றுள்ளதை கவனித்திருக்கிறேன் . ரமேஷ் அண்ணாவுக்கும் தமிழ் மீது பற்று இருந்தது . தமிழ் சொல்வேந்தர் மன்றத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதை பார்த்திருக்கிறேன்.

ஒரு நாள் எதிரில் நடந்துவந்த என்னிடம் நீ ஏன் சொல்வேந்தர் மன்றத்துல சேரல இன்னக்கி போலாம் வா என்று அழைத்து சென்றார்.

சரி அடுத்து நீ மேடைல ஏறி  பேசு என்றார். என்ன பேசுறது என்றேன். சும்மா உன்ன பத்தி ஐந்து நிமிடம் பேசு என்றார். ஏதோ ஒரு உற்சாகத்தில் நான் இருவது நிமிடம் பேசினேன். இறங்கி வந்ததும்  நேரம் முக்கியம் புரியுதா என்கிறார்.

அதன் பின் வெவ்வேறு தலைப்புகளில் பதினோரு முறை மேடையில் பேசிவிட்டேன். மன்றத்தில் பல உறவுகள் கிடைத்தன. பொங்கல் விழாவில் பட்டிமன்றத்தில் பேசவும் பாடவும் அவர்கள் வாய்ப்பளித்தார்கள்.

கவிதாவையும் விடவில்லை. கவிதா நீ அடுத்த வருடம் மேட ஏறு என்றார். அடுத்த  வருடம் தோழிகளான அவர் மனைவியும் கவிதாவும் கதம்பம் நிகழ்ச்சியை அழகாக நடத்தினர் . அது அவருக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது.

சில நாட்களுக்கு முன் நான் வேலையை விட்டு வரும்போது எங்கள் குடியிருப்பின் கீழே கடைக்கு முன் நண்பர்களோடு நின்று பேசிக்கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும் என்ன இப்பதான் வரியா என்கிறார். ஆமாணா  வேல கொஞ்சம் அதிகம் என்று அவரை கடந்து போனேன். குடியிருப்புக்குள் நுழையும்போது இந்தியாவில் கல்லூரியில் படிக்கும் அவர் மகன் எதிரில் வந்தான். என்ன Uncle நல்ல இருக்கீங்களா இப்ப தான் வரிங்களா என்று சிரித்துக்கொண்டே கடந்து போனான். படிக்கட்டில் விளையாடிக்கொண்டு இருந்த ஏழாவது படிக்கும் அவர் மகள் Hai Uncle இப்ப தான் வரிங்களா என்றதும் அவளுக்கும் அதே பதிலை கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன்.

கவிதாவிடம் குடும்பமே ஒரே கேள்வியை வரிசையா கேக்குறாங்க பா என்று நடந்ததை கூறினேன். கவிதா மேல போயிட்டு அவங்க வீட்டம்மா கிட்டயும் இப்ப தான் வந்தேன்னு சொல்லிட்டு வந்துரு போ என்று சிரித்துக்கொண்டு இருந்தாள். இல்ல பா ரமேஷ் அண்ணா முகம் கொஞ்சம் ஒடுங்கி இருக்கு   இல்ல என்றேன்.
ஆமாம் பா அவருக்கு சுகர் இருக்கு தெனமும் நடக்குறாரு என்று கவிதா சொன்னாள்.

அதன் பின் அவரை போன மாதம் குடியிருப்புக்கு கீழே இருக்கும் சிறிய உணவகத்தில் பார்த்தேன். என்ன சிவா கவிதா ஊருக்கு போயாச்சா என்றார். ஆமாணா  அவங்களும்  ஊருக்கு போய்டாங்களா என்றேன். ஆமா ..... நம்ம ஊர்ல நல்ல மழையாமே என்று ஊர் கதையை பேசத்துவங்கினார்.

எங்கோ தூர மண்ணில் நம்ம ஊர்காரர் நாம் வளர்ந்த மண்ணை பற்றியும் மக்களை பற்றியும் பேசுவதை கேட்பது எவ்வளவு அலாதியானது.

அவர் பேசுவதை கேட்டுக்கொண்டே சாப்பிட்டு முடித்தேன். சரினா வறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். கடைசியாக என்ன பேசினார், என்ன வார்த்தை சொன்னார் , அவர் முகம் எப்படி இருந்தது என்று நினைத்து நினைத்து பார்க்கிறேன். அதை நினைவிலிருந்து மீட்டெழுப்ப முடியவே இல்லை.

அதன் பின் அவரை நான் பார்க்கவில்லை. பின் ஒரு நாள் ரமேஷ் அண்ணாவுக்கு உடம்பு சரியில்ல ஹாஸ்பெட்டில சேர்த்திருக்காங்க போய் பார்த்துட்டு வா என்று கவிதாவிடமிருந்து குறுந்செய்தி வந்தது.

நானும் நண்பரும் ஹாஸ்பெட்டுளுக்கு சென்று பார்த்தோம். ICUவில் சேர்த்திருந்தார்கள். வார்டின் முன்னாள் நண்பர்கள் கனத்த மௌனத்தில் உறைந்திருந்தார்கள். அவர் அண்ணனும் இங்கு தான் பணியாற்றுகின்றார். மரியாதைக்குரிய மனிதர். அவரும் தளர்ந்து போய் அமர்ந்திருந்தார்.


உள்ளே சென்று ரமேஷ் அண்ணாவை பார்த்தேன். இதயம் மட்டும் மெதுவாக இயங்கிக்கொண்டு இருந்தது. அது மட்டுமே அவர் இருப்பாக இருந்தது.

சனிக்கிழமை அவருக்கு விடுமுறை நாள். வீட்டில் அவர் தனியாக தான் இருந்திருக்கிறார். காலையில் சற்று மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவமனைக்கு சென்று முதல் உதவி எடுத்துக்கொண்டு வீடு வந்திருக்கிறார். இங்கு சவுதியில் கருணையற்று தழல் நின்றாடும் காலம் இது. அன்று காற்றில் ஈரப்பதமும் அதிகம் இருந்திருக்கிறது. வீட்டுக்கு வந்து ஓய்வெடுத்திருக்கிறார். US யில் படிக்கும் அவர் அண்ணன் மகள் அவரை பார்க்க வந்திருக்கிறார். இருவரும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போதே அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வியர்த்து வழிந்திருக்கிறது. மகள் அவர் அப்பாவுக்கு குறுந்செய்தி அனுப்பிவிட்டு ரமேஷ் அண்ணாவுக்கு முதல் உதவி அளித்திருக்கிறார். அருகில் இருந்த அவர் நண்பர்களையும் உதவிக்கு அழைத்திருக்கிறார். பின் அவர் அப்பாவும் வந்துவிடவே அவசர கதியில் ஹாஸ்பிட்டளுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். மகள் செல்லும் வழி முழுக்க ரமேஷ் அண்ணாவிடம் பேசிக்கொண்டும் முதல் உதவி அளித்ததுக்கொண்டும் சென்றிருக்கிறார்.

மருத்துவமனைக்கு சென்றடைவதற்கு மூன்று நிமிடம் முன்னாள் அவர் இதயம் தளர்த்திருக்கிறது.

மருத்துவமனையை அடைந்ததும் உடனடியாக சிகிழ்ச்சை அளிக்கப்பட்டு இதயம் மீண்டும் இயங்க துவங்கி இருக்கிறது.

அவர் மனைவியும் மறுநாள் ஊரிலிருந்து வந்துவிட்டார். மருத்துவர்கள் கடவுளை பிராத்திக்க சொன்னார்கள்.

அன்று முழுக்க மருத்துவ மனை வளாகத்தில் காத்திருந்தோம். இரவு ஒன்பது மணிக்கு மேல் அங்கு யாரும் இருக்க கூடாது. ஒருவர்க்கு  மட்டுமே அனுமதி உண்டு.

நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். தூக்கம் வரவில்லை . எந்த நினைவு எழுந்தாலும் அவரில் சென்று முடிந்தது . இரவு 12 மணிக்கு செய்தி வந்தது. அவர் இதயம் மலர்ந்ததென்று.

மறுநாள் அத்தனை நண்பர்களும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.  அழுது தவிக்கும் அவர் மனைவிக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை . அழுது அழுது மட்டுமே கடந்து செல்லவேண்டிய துயரமல்லவா இது.

இங்கு யாரவது இறந்துவிட்டால் உடல் ஊருக்கு செல்ல ஒரு மாதம் ஆகிவிடும். ஆனால் அவர் அண்ணன் மற்றும் நண்பர்களின் தொடர் முயற்சியால் பத்து நாட்களுக்குள் அனைத்து முறைமைகளும் முடிந்து அவர் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்றார்கள்.

நேற்று உற்றார் உறவினர் நண்பர்கள் அழுது புடை சூழ அந்த நல் ஆத்மா வாழ்ந்த உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இன்றும் அவர் எப்போதும் நின்று பேசும் கடையை கடந்து போகிறேன். அவர் இல்லை ஆனால் வேறு யாரோ நான்கு பேர் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

கெத்து கதை


தட்.... தட் ....தட்.... தட் 
அவன் :  ஏய் வெளில வாடா அடிங்க வெளில வாடா

ஏய் கதவ தட்டுனா சீக்கிரம் தொறக்க மாட்டியா 

உனக்கு எத்தனை தடவ சொல்றது 

மேட ஏறி பேசாதேன்னு 

அது என்னடா கட்சி அது ஊர் பேர் தெரியா கட்சி

மொவன இந்த ஊர்ல ஒரு கட்சி தான் இருக்கணும் 

நா ஒரு தவைவன்தான் இருக்கணும் 

நேத்தே பசங்க கேட்டானுங்க முடுச்சுல்லமான்னு  

நா தான் ஏதோ பட் சிகிறையே ஊருக்கு சின்ன சின்னதா 

நல்லது பண்றியே உட்ருங்கடானு சொன்ன 

மொவன சோன்னா போதும் இந்த தம்மாத்துண்டு ஊட்டோட  

வச்சி உன்ன கொழுத்தி சாம்பல ஏரில கரைச்சிட்டு வந்துடுவானுங்க 

ஏய் இன்னா நா பேசினே கீரங் சொம்மா மோரிக்கிர
 
------------------------------------------------------------------------------------------------


 நான்  :  இல்ல நீ தனியாவா வந்திருக்க 

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2016

" கோட்டி " சிறுகதை

திரு. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் சிறுகதை


தொகுப்பிலிருந்து " கோட்டி " சிறுகதை

வாசிப்பது - கிராமத்தான்



செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

" நீலம் " 2016



அன்புள்ள நண்பர்களுக்கு,

நான் மற்றும் என் இரு தம்பிகளும் ( சிவா & சங்கர் ) இணைந்து கடந்த வருடம் " நீலம் " என்ற பெயரில் ஒரு கல்வி அறக்கட்டளை துவங்கினோம். மாதம் ஒரு சிறு தொகையை சேமித்து கிராமத்து பள்ளி குழந்தைகளுக்கு உதவுவதாக திட்டம்.

இதுவரை இரண்டு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

1. நான் படித்த அணங்காநல்லூர் ( வேலூர் மாவடடம் ) ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஒரு ஆங்கில ஆசிரியரை அமர்த்தி குழந்தைகளுக்கு ஆங்கில வகுப்புகளை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் துவங்கி இன்றுவரை நல்ல முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறன. அந்த ஆசிரியைக்கு முதலில் மாதம் 2500 ரூபாய் கொடுத்தோம் இப்போது கடந்த இரண்டு மாதங்களாக 3000 ரூபாய் தருகிறோம்.

2. அருகில் உள்ள இன்னொரு கிராம பள்ளிக்கு டிஜிடல்  வகுப்பறை அமைக்க 20000 ரூபாய் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த பிள்ளைகளின் கல்விகற்கும் திறன் நன்கு வளர்ந்துள்ளது. அவர்களின் முன்னேற்றம் பெரும் மன நிறைவையும் மகிழ்சியையும் அளிக்கிறது.

இந்த மகிழ்ச்சியை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உருவாக்கி உள்ளது.

இந்த வருடமும் நான் படித்த கிராமத்து பள்ளியில் சிறுவர்களுக்கான ஒரு சிறந்த நூலகம் அமைக்க வேண்டும் என்று எண்ணியிருதோம் . அதை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்த போது அவர் சில புகைப்படங்களை அனுப்பி இருந்தார். அவை பள்ளியின் கழிப்பிட புகைப்படங்கள். சீரழிந்து பாழடைந்து இருந்தது. அதனால் பெண் பிள்ளைகள் எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார்கள் என்று விவரித்து இருந்தார்.

என் நூலக எண்ணத்தை கைவிட்டு கழிப்பறையை சீராக்களாம்   என்று நினைத்தேன். இந்த பணியை  முடிக்க நண்பர்களாகிய உங்கள் கரங்களை கோர்ப்பது முக்கியம்.

உங்கள் கனிவான பங்களிப்பை அளிக்குமாறு உரிமையுடன் கோருகிறேன். ஆளுக்கொரு நூல் கொடுத்தால் ஏழைக்கு ஒரு சட்டை உருவாக்கிவிடலாம்.

நன்றி .