"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், அக்டோபர் 13, 2016

வீட்டை கட்டிப்பார் -1 - துவக்கம்


வீட்டை கட்டிப்பார் -1 - துவக்கம்
--------------------------------------------------------------
கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் விடுமுறையில் என் கிராமத்து வீட்டில் இருந்தேன். இரவு எதோ உணர்வு வந்து எழுந்தபோது கவிதா உறங்காமல் அமர்ந்திருந்தாள். பத்துக்கு பத்து அளவிலான அந்த சிறிய அறை மின்துண்டிப்பால் புழுங்கி தகித்தது.
வியர்வையில் என் பின் தலையும் முதுகும் நனைத்திருந்தது.
தண்ணீர் தேடி அருந்திவிட்டு கூடத்துக்கு வந்து படுத்துக்கொண்டேன்.
அது பூர்விக வீடு. அப்பா கட்டத்துவங்கி நானும் அண்ணனும் முடித்தோம். சவூதி வந்த முதல் இரண்டு வருட சம்பாத்தியம் அதற்க்கு செலவானது. இளையவன் தங்கும் அறை பெரியவன் அறையைவிட அளவில் சின்னதாக இருக்கவேண்டும். பெரியவன் மேல் பக்கம் தங்க வேண்டும் சின்னவன் கீழ் பக்கம் தங்கவேண்டும் என்று பல நெறிகளை கொண்டு கட்டப்பட்ட வீடு அது.
அந்த வீட்டை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று காத்திருந்தேன். வீடு முடிந்தவுடன் எனக்கும் திருமணம் ஆனது. பெரும் கடனுடனையே நானும் கவிதாவும் வாழ்வை துவங்கினோம். இவ்வளவு நாள் சவூதில இருந்திருக்க கொஞ்சம் கூட நீ சேர்த்துவைவில்லையா என்று பலமுறை கேட்டு கவிதா சலித்துவிட்டாள். இதோ இந்த வீடு இருக்கே என்று சிரிப்பேன்.
அதன்பின் கடந்த ஏழு வருடங்களாக ஊருக்கு செல்லும் போதெல்லாம் அந்த வீட்டில் அந்த சிறிய அறையில் தான் தங்குவோம்.
அந்த வீடு கிராமத்திலிருந்து தள்ளி தென்னந்தோப்புக்குள் இருக்கும். சுற்றி சொந்தங்களின் வீடுகள். தூய்மையான காற்றும் பார்த்தவுடன் மனதில் படியும் பசுமையும் சூழ்ந்திருக்கும். ஆனால் எதாவது வாங்க மற்றும் மருத்துவம் என்று அடிப்படை வசதிக்கு பத்து கிலோமீட்டர் தள்ளி குடியாத்தம் வரவேண்டும்.
கவிதாவுக்கும் எனக்கும் ஒரு ஆசை இருந்தது. வேலூர் போன்ற நகரத்தில் நல்ல குடியிருப்பு பகுதில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று.
அன்று காலையில் கவிதா மாடியில் துணி உலர்த்திக்கொண்டு இருந்தாள். நான் காபி குடித்துக்கொண்டே நேத்து நைட் தூக்கமே இல்ல பா என்றேன். கொட்டாவி விட்டுக்கொண்டே ஆமா எனக்கும் தான் என்றாள். அடுத்த வருடம் எப்படியாவது நாம வேலூரில வீடு வாங்கணும் என்றேன்.
பின்பு சற்று யோசித்து ஆமா இங்க கிராமத்துக்கு வந்தா நாம எங்க தங்குவது என்றேன். அதான் கிழ நம்ம ரூம் இருக்கே என்றாள் துணியை உதறிக்கொண்டே.
ஆனால் தெய்வங்கள் ஆடல் வேறு மாதிரி இருந்தது. அப்பா கடந்த சில வருடங்களாக நான் கிராமத்தில் பழைய வீட்டின் முன்புறமாக வீடு கட்ட போவதாக பார்ப்பவரிடமெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார். தன் பிள்ளைகள் தன்னைவிட்டு சென்றுவிடக்கூடாது என்று நினைக்கும் ஒரு கிராமத்து தந்தையின் சராசரி ஆசை அது.
அப்படி அனைவரிடமும் சொல்லுவது ஒரு உத்தி . அதன் பின் என்னை பார்க்கும் சொந்தங்கள் அந்த வீடு பெரியவனுக்கு குடுத்துட்டு நீ முன்னாடி வீடு கட்டிக்க என்று அறிவுரை கூறினர். சிலர் எப்ப இங்க வீடு கட்ட போற என்று கேட்டார்கள்.
கல்வி பெற்று முதலாளித்துவ வாழ்வில் புகுந்துவிட்ட எனக்கும் கவிதாவுக்கும் எதையும் சம்மந்தப்பட்ட நபரிடம் நேரடியாக பேசி தீர்வு காண்பது தான் பழக்கம். ஆனால் வீட்டு சூழல் நேர்ரெதிரானது. எதையும் நேரடியாக சொல்ல மாட்டார்கள். தன்னிடம் அண்ணன் சொன்னதாக அத்தை சொன்னதாக அல்லது பங்காளி சொன்னதாக தான் கேட்ப்பார்கள். அப்பாவும் அம்மாவும் நேரடியாக நீங்கள் தனியாக வீடு கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லவே இல்லை. ஆனால் பேச்சு சுற்றி சுற்றி அதிலேயே வந்து நின்றது.
நாங்கள் அங்கு வீடு கட்டவேண்டும் என்ற எண்ணம் எங்கள் இருவரை தவிர மற்ற அனைவருக்கும் இருந்ததாக எனக்கு தெரிந்தது. சிலர் மறைமுகமா எங்களை அதை நோக்கி நகர்த்தினர். சிலர் நேரடியாக ஆனால் சிரித்துக்கொண்டே நகர்த்தினர்.
ஒரு கட்டத்தில் வேண்டுமென்றே நான் அந்த வீட்டில் விடாப்பிடியாக இருப்பது போன்ற பிம்பம் எனக்கே உருவானது. கவிதாவுக்கும் நிலைமை புரிந்தது.
அடுத்ததடுத்த நாட்களில் எனக்கும் கவிதாவுக்கும் பல யோசனைகள் விவாதங்கள். வேலூரில் வீடு வாங்கலாம் என்று துவங்கினோம். அதுதான் மகனை படிக்கவைக்கவும் மேற்படி எங்கள் வாழ்க்கைக்கும் சரியானது என்று நினைத்தோம்.
ஆனால் வீட்டு நிலைமை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
யோசனை கேட்ட அனைவரும் நம் பூர்விக இடத்தில் ஒரு சிறு கூடாவது நமக்கு வேண்டும் என்றனர். இறுதியாக நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம்.
நம் குடும்பத்தில் ஒரு சிறு பிரச்சனை என்பது கிராமத்தாற்கு களியாடல் பொழுதுபோக்கு . தீர்வு யாருக்கும் தேவையே இல்லை. அந்த விவகாரத்தை பேசிப்பேசி சுவைக்கவேண்டும் அவ்வளவே. வீடு பற்றிய சலசலப்பு எங்கள் வீட்டில் எழும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். பஞ்சாயத்து செய்யவும் மேலாதிக்கம் செய்யவும் சிலர் காத்திருந்திருக்கலாம்.
ஆனால் நானும் கவிதாவும் அப்பா அம்மா அண்ணன் அண்ணி நால்வரைமட்டுமே பேச அழைத்தோம்.
இரண்டு வழிகளை முன் வைத்தோம் .ஒன்று பழைய வீட்டை நாங்கள் எடுத்துக்கொண்டு அண்ணன் புது வீடு கட்ட ஒரு தொகையை அளிப்பது அல்லது பழைய வீட்டின் முன் உள்ள நிலத்தை வீடு கட்டவும் பழைய வீட்டில் எங்களுக்கு உள்ள உரிமைக்காக அந்த நிலத்தை ஒட்டி உள்ள துண்டு நிலத்தையும் கோரினோம்.
கொஞ்சம் விவாதம் எழுந்தது. அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று அனைவருக்கும் யோசனை இருந்தது. பெரும் தயக்கத்தோடு இரண்டாவது வழியை ஒப்புக்கொண்டனர்.
இந்த விவகாரம் எங்களுக்குள்ளே நல்லவிதமாக பேசி முடிக்கப்பட்டது. மூன்றாம் மனிதர் யாரும் உள்ளே வரவில்லை.
வீடு கட்டுவது என்று முடிவெடுத்த பின் அதை பற்றிய கனவு எனக்குள் விரிந்தது. நீரூற்றின் மேல் அடைத்துக்கொண்டு இருந்த இறுதி கல் நகர்ந்து நீர் மண்ணில் வழிந்தோடுவது போல.
அந்த தென்னத்தோப்பில் கேரள பாணியில் ஒரு பண்ணை வீடு அமைக்கவேண்டும் என்று விரும்பினேன். வலைத்தலத்தில் தேடி தேடி ஒரு சிறிய அழகான வீட்டை பிடித்து அச்சு எடுத்தேன்.
உள்ளூர் மேஸ்திரியை பேச அழைத்தோம்.அவன் கிராமத்து பள்ளியில் எனக்கு முன்னோ அல்லது பின்னோ படித்தவன். எங்கள் பழைய வீட்டை அவன் தான் கட்டினான்.
வீடுதானே கட்டிடலாம் என்று பேச்சை துவங்கினான். நான் 15 லகரத்துக்குள் வீடு முடியனும் இரண்டு அறை போதும் என்று அந்த அச்சு எடுத்த வீட்டை காட்டினேன். அதை பார்த்து அவன் சிரித்துவிட்டான். இதெல்லாம் நம்ம ஊருக்கு ஒத்து வராதுபா என்று காகிதத்தை ஓரமாக மடித்து வைத்துவிட்டான்.
நா ஏன் என்றதும் அதெல்லாம் முடியாதுபா என்று சிரித்தான். அதான் ஏன் என்றேன் பரிதாபமாக. அதெல்லாம் இங்க முடியாதுபா என்று செந்தில் போல அதெல்லாம் இதுல வாசிக்க முடியாதுண்ணே என்றான். ரெண்டு ரூம்தானே என்று பக்கத்தில் இருந்த பேப்பரை எடுத்து வேகமாக வரைந்தான். இரண்டு அறை ஒரு கூடம், பூசை அறை , ஒரு சமையல் அறை அவ்வளவு தான் என்று முடித்து கையில் கொடுத்தான். வீட்டின் கடைசியில் ஒரு சிறிய பலகணி வேண்டும் என்றேன். அங்க படிக்கட்டு வரும் வாஸ்து என்றான். சரி எங்க அறை கொஞ்சம் பெரியதாக வேண்டும் என்றேன். நீங்க கீழ் பக்கம் இருப்பிங்க அது கொஞ்சம் சின்னதா இருக்கணும் என்றான். சரி முன்னாடி மட்டும் நா கேட்ட மாதிரி பண்ணி குடு அதிகம் இல்லை ஒரு பிரமீடு வடிவம் இரண்டு தூண்கள் அவ்வளவு தான் என்றேன். அதெல்லாம் நா பாத்துக்குறேன் என்று வரை படத்தை குடுத்தான்அதை வாங்கி பார்த்தவுடன் அது எங்கள் பழைய வீட்டின் குறுக்கப்படட வடிவமாக இருந்தது.
அக்க்ஷய் பெயருக்கு ஜாதகம் பார்த்து செப்டம்பர் 2015 இறுதியில் பூமி பூசை நடத்தினோம். ஒரு ஆள் இறங்க குழி எடுத்து அதில் செங்கற்களை அடுக்கி ஐந்து உலோகங்கள் இட்டு மலர் அள்ளி குழில் இட்டு சொந்தங்கள் அனைவரும் குழில் தண்ணீர் ஊற்றி பூமித்தாயை வணங்கி பூசை செய்தோம். மேஸ்திரி கற்பூரம் ஏற்றி குழியில் தேங்கிநின்ற தண்ணீரில் இட்டான். கற்பூரம் எரிந்து கொண்டே தண்ணீரில் சுற்றி வந்தது.
பின் நான் சவுதி வந்துவிட்டேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக