"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், நவம்பர் 03, 2016

வீட்டை கட்டிப்பார் -3 அணிநகை


ஆகஸ்டு இறுதியில் நான் ஊருக்கு வந்தேன். பூசு வேலை நடந்து கொண்டு இருந்தது.
அண்ணன் எங்களிடம் கணக்குகளை ஒப்படைத்தார் . அவர் ஆசிரியர் என்பதால் வேலைக்கு சென்று வந்து வீடுகட்டும் வேலையும் பார்ப்பார். அவருக்கு அது பெரும் அழுத்தமாக இருப்பதாக அண்ணி கூறினார். அதனால் அவருக்கு வீடு சம்மந்தமாக எந்த வேலையும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அது ஒருவகையில் உண்மையே ஆனால் அப்படி திடீரென நான் அனைத்தையும் கையில் இடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் எனக்கு யாரும் தெரியாது. அண்ணனே ஒவ்வொருவராக அறிமுகம் செய்துவைத்தார்.
மேஸ்திரி , பெயிண்டர் , எலெக்ட்ரிசின், மரபெல்ஸ் மற்றும் டைல்ஸ் ஓட்டுபவன் குழி எடுப்பவன் , வீட்டுக்கு லைன் கொடுப்பவன், சிற்ப வேலை செய்பவன் , ஆச்சாரி , கதவுக்கு பாலிஷ் போடுபவர் , செங்கல் கொடுப்பவர் , ஜல்லி கொடுப்பவர், மதிய சாப்பாட்டுக்கு ஹோட்டல் அனைவரும் எங்கள் வட்டத்துக்குள் வந்தனர்.
பூசு வேலை முடிவதற்குள்ளாகவே பதினைந்து லட்ச்சத்தை தொட்டு இருந்தது. ஏழு மாத சம்பளம் மற்றும் சிறிய சேமிப்பு , கையிருப்பு அனைத்தும் கரைந்திருந்தது. ஏல சீட்டு ஒன்று துவங்கி சில மாதங்கள் ஆகி இருந்தது. அதையும் எடுத்துவிட்டோம்.
கிராமத்தில் வீடு கட்டும்போது பெரும்பாலான வேலைகளை அந்த ஊர்காரர்களே செய்வார்கள். பெரும்பாலும் மாமா மச்சான் பங்காளி என்று உறவு கொண்டு அழைப்பவர்கள். அப்பாவுக்கும் அண்ணனுக்கும் பழக்கமானவர்கள். வெளி ஆட்கள் உள்ளே வந்து வேலை செய்ய சங்கடப்படுவார்கள். அதையும் மீறி ஜன்னல் மற்றும் மர வேளைகளை வாணியம்பாடியில் மாமா ( கவிதாவின் அண்ணன் ) அங்குள்ள ஆச்சாரிகளை வைத்து எங்களுக்கு செய்து கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். முதல் விஷயம் மரம் மண்டி மாமாவின் நண்பருடையது. அவரிடம் நன்கு விளைந்த நாட்டு தேக்கு இருந்தது. இரண்டாவது ஆச்சாரிகளின் (கங்கா & குரூப் ) நேர்த்தியான வேலை. அதனினும் முக்கியமான ஒன்று பணம் மாமா பார்த்துக்கொள்வார் நான் சில மாதங்கள் கழித்து கொடுத்தால் போதும்.
ஆனால் அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் ஆச்சாரிக்கு ஏமாற்றம். மேஸ்திரிக்கு கொஞ்சம் ஒவ்வாமை. எப்பா நம்மவூர்ல இல்லாத ஆச்சாரியா என்று சிலர் எண்ணெய் ஊற்றினார். வீட்டில் என் தங்கம் என் உரிமை போராட்டம் எழுந்தது. நம்ம ஊர் ஆச்சாரி நல்லா செய்வான் அவன விட்டுட்டு அங்க எதுக்கு போன. அப்புறம் ஏதாவது சின்ன வேலை செய்ய கூட இவனுங்க வரமாட்டானுங்க பார்த்துக்க என்றார்கள். அது உண்மைதான்.
வாணியம்பாடி ஆச்சாரிகளும் அதை மனதில் வைத்தே வேலை செய்தனர். மாமா மரங்களை பார்த்து பார்த்து எடுத்திருந்தார். மரம் கதவுகள் அவர் மேற்பார்வையில் வணியம்பாடியிலேயே செய்யப்பட்டது. தேர்ந்த ஆச்சாரிகள் என்பதால் மர வேலைகள் நேர்த்தியாக இருந்தது.
ஜன்னல் கண்ணாடி , கைப்பிடி , பூட்டு ஆகியவற்றின் வகைகளை வீட்டுக்கு எடுத்துவந்து காண்பித்தார்கள். கவிதாவும் நானும் தேர்வு செய்தோம். முதல் நுழைவாயிலின் பக்கவாட்டில் பொருத்தும் கண்ணாடியில் மயிலிறகு ஓவியம் வரைய சொன்னோம். கண்ணாடியில் ஓவியம் வரைய தனியாக ஆட்கள் இருக்கிறார்கள்.
சாதாரணமாக வரைய வேண்டும் என்றால் ஒரு தொகை. அதிலே அமிலம் பயன்படுத்தினால் ( Acid Finishing) தொகை அதிகம். எப்போதும் முதல் தரத்தை விரும்பும் மாமா ஆசிட் பினிஷிங் செய்யுங்கள் என்கிறார்.
ஜன்னல்களையும் கதவுகளையும் கொண்டுவந்து வீட்டில் பொருத்தியபின் அதன் அமைப்பே மாறிவிட்டது. வீட்டை பார்க்கும்போது சட்டெனெ கண்ணில் படுவது ஜன்னல்கள்தான்.
ஜன்னல் மற்றும் கதவுகளை மெருகேற்றுபவர்கள் தனி குழுவாக வந்தார்கள். பத்துநாட்கள் வேலை செய்தார்கள். அதில் ஏழு நாட்கள் ஜன்னல்களையும் கதவுகளையும் சலிக்காமல் தேய்த்து மெருகேற்றி இறுதியில் மூன்று அடுக்கு வண்ணங்கள் பூசப்பட்டன.
Wood tech pu - Interior & Exterior
Wood tech - Varnish
Wood tech emporio PU
மரம் சம்பந்தப்பட்ட வேளையில் மட்டும் மரம் விற்றவர் , ஆசாரிகள் , அதில் கம்பி கிரில் பொருத்தியவர்கள் , கண்ணாடியில் ஓவியம் வரைபவர்கள், மரத்தை மெருகேற்றுபவர்கள் , கிரில்களுக்கு வண்ணம் திட்டியவர்கள் என்று ஆறு குழுக்கள் தனியாக வேலை பார்த்தன.
அத்தனை வேலைகளும் முடிந்ததும் ஜன்னல்களும் கதவுகளும் வீட்டை அலங்கரித்த அணிநகை போல ஜொலித்தன.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக