"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், நவம்பர் 03, 2016

வீட்டை கட்டிப்பார் -4 - டைல்ஸ் , மார்பில்ஸ் , கிரானைட்


கவிதா வீட்டுக்கு டைல்ஸ் போடவேண்டும் என்றதும் அதற்கான கடைகளில் ஏறி இறங்கினோம். டைல்ஸ் பத்து பதினைந்து வருடம் மட்டும் நன்றாக இருக்கும் பின் தேய்ந்து பழையதாகிவிடும் அல்லது நடந்தால் சத்தம் வரும் என்று கேட்பவர்கள் சொன்னார்கள். கிரானைட் கல் சிலருக்கு ஆகாது என்றனர் . பெரும் குழப்பமாக இருந்தது.
மார்பில் ஆரம்ப விலை 45 ரூபாய். பாண்டிச்சேரி பக்கம் சென்றால் 35ரூபாய் முதல் கிடைக்கும். டைல்ஸ்சும் துவக்க விலை 42 ரூபாய். அதனால் நான் மார்பில் போடலாம் என்று முடிவெடுத்தேன்.
மார்பில்ஸ் போடுபவன் ஒருவன் வந்தான். அவன் பேச்சே யாருக்கும் பிடிக்கவில்லை. ஒரு சதுர அடிக்கு முப்பத்தி ஐந்து ரூபாய் என்று பேச்சை துவங்கினான். நாங்கள் 28 க்கு முடித்தோம்.
கவிதா இரண்டு மூன்று பேரிடம் விசாரித்து முடிவு செய். இவன் ஒருவனை மட்டுமே நம்பாதே என்றாள். எனோ நான் அவனை முடிவு செய்த்துவிட்டேன்.
அவன் ஆட்கள் இரண்டு பேர் முதலில் வந்து வேலையை துவங்கினார்கள். வேலை நன்றாக போய்க்கொண்டு இருக்கும் திடீர் என்று யாருமே வரமாட்டார்கள். செல் பேசியும் எடுக்கமட்டான். அடுத்து ஆறேழு பேர் கூட்டிவருவான் வேலை போகும் அப்படியே நிறுத்திவிட்டு போய்விடுவான். அவனை சமாளிக்கவே முடிவில்லை.
அப்போது தான் தெரிந்தது டைல்ஸ் மற்றும் கிரானைட் போடுவதில் வேலை குறைவு. மொத்தம் பத்து நாட்களில் அனைத்து வேலைகளும் முடிந்திருக்கும். ஒரு சதுர அடிக்கு எட்டிலிருந்து பத்து ரூபாய்த்தான்.
ஆனால் மார்பில்ஸ் அப்படி அல்ல. அங்கு கடையில் வாங்கும்போதே பஞ்சாயத்து துவங்கிவிடும். கற்களை வண்டியில் ஏற்றி இறக்குவதற்கு ஒரு சதுரடிக்கு இரண்டு ரூபாய் தனியாக தரவேண்டும். ஏற்றுவது கடையில் உள்ள ஆட்கள். நம் இடத்துக்கு வந்து அவர்களே இறக்கவும் செய்வார்கள். ஆனால் இறக்கும் இடம் நகரமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அந்த பகுதி யூனியன் கூலி ஆட்கள் தான் இறக்கவேண்டும். மீறி கடை ஆட்கள் இறக்கினால் அவர்களை மிரட்டவும் அடிக்கவும் செய்வார்களாம். அதனால் அவர்களை தனியாக பணம் கொடுத்து கவனிக்கவேண்டும். நம் வீடு கிராமம் என்பதால் கடை ஆட்களே இறக்கிவிட்டார்கள். பின் அவர்களுக்கு டீக்கு தனியாக இருநூறு கொடுத்ததால் பொன்போல் சிரித்து வணக்கம் வைத்துவிட்டு சென்றார்கள். செங்கல், சிமெண்ட், ஜல்லி எது இறக்கினாலும் நூறு இருநூறு தனி.
முதலில் அணைத்து அளவுகளும் எடுத்து கற்களை அதன் வரிசை படி அறுக்கவேண்டும். அதை ஒவ்வொரு அறையாக பதித்தபின் வண்ண கற்களால் பார்டர் மற்றும் டிசைன் செய்ய வேண்டும். வண்ணக்கற்களில் பார்டர் அமைத்தால் அதன் அகலம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை ஒரு அடியாகவே கணக்கில் கொள்ளப்படும். சுவர் ஓரங்களில் பதிக்கும் கற்களை அறுத்து அதன் ஓரங்களை மழுங்க தேய்த்து பதிக்க வேண்டும். ஓரங்களை மழுங்கடிப்பதை நோசிங் என்கிறார்கள். நேசிங் செய்ய ஒரு அடிக்கு 45 ரூபாய்.
கற்களை பதிக்கும் வேலைகள் முடிந்துவிட்டால் அடுத்து தேய்க்கும் வேலை துவங்கும். மொத்தம் ஏழு முறை தேக்கப்படும். அதற்கான மெஷினை கொண்டுவருவதற்கு ஆட்டோ கூலி நாம் கொடுக்க வேண்டும். போகும்போது அவர்கள் எடுத்து செல்வார்கள். ஒவ்வொரு முறையும் தேய்க்கும்போதும் அதற்கான தேய்க்கும் கற்களை அந்த மெஷினில் பொருந்துகிறார்கள். கடைசியாக தேங்காய் நாரை பொருத்தி தேய்க்கிறார்கள். இறுதியாக மார்பில்ஸ் கண்ணாடி போல பள பளக்க வேண்டும். மேலும் பளபளப்பு வேண்டும் என்றால் அதற்க்கான திரவங்கள் கடையில் கிடைக்கிறது. அதை பயன்படுத்தலாம்.
என் விடுமுறை நாட்களும் குறைந்து கொண்டே போனது ஆனால் வேலை முடியவில்லை. மற்ற எல்லா வேலையும் மார்பில்ஸ் போடுபவனால் பாதித்தது. கவிதாவுக்கு என் மேல் கடும் கோவம். டைல்ஸ் போட்டிருக்கலாம் என்று கடுகாடுத்தாள். எனக்கும் அதுவே தோன்ற ஆரமித்தது.
செப்டம்பர் 14 புகுவிழா வைத்தோம். அந்த நாளை சொல்லி சொல்லி அவனை வேலை வாங்கிக்கொண்டு இருந்தோம்.
ஒருவழியாக தரை மட்டும் முடித்து கொடுத்தான். அதன் பின் பத்து நாட்கள் வரவே இல்லை. இடை இடையே வந்து குளியலறை டைல்ஸ் போட்டு கொடுத்தான். ஒரு கட்டத்தில் வெறுத்து எங்களுக்கும் அவனுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. கவிதா வார்த்தைகளால் தாண்டவம் ஆடிவிட்டாள்.
மறுநாள் காலை ஆறுமணிக்கு வந்து கை வைத்த வேலை அனைத்தையும் முடித்தான். தொடாத வேலையை அப்படியே விட்டுவிட சொன்னோம். மாலை அத்தனையும் அளவெடுத்து கணக்கை முடித்து கையில் காசை கொடுத்தோம்.
அவனிடம் பேரம் பேசவே இல்லை. அது அவனுக்கு சங்கடமாக இருந்தது. ஆயிரம் ரூபாய் திருப்பி கொடுத்தான். வேண்டாம் நீயே வைத்துக்கொள் கிளம்பு என்றோம். கொஞ்சநேரம் யோசித்து கொண்டு இருந்தான். பின் திரும்பி சென்றுவிட்டான். அவனை புண்படுத்திவிட்டோம் என்று மனது சங்கடமாக இருந்தது. அவன் பண்பு எங்களுக்கு பிடிக்கவில்லை ஆனால் அவன் வேலையை கட்சிதமாக செய்கிறான் என்ற நம்பிக்கை இருந்தது.
மறுநாள் காலை தான் தரை காயும் யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்தான். மறுநாள் நாங்கள் உள்ளே சென்றோம். அப்படி ஒன்றும் தரை பளபளப்பாக இல்லை. அவன் நான்கு முறை மட்டுமே மெஷின் ஓட்டி இருப்பான் பின் மெழுகு (வேக்ஸ்) பயன்படுத்தி இருப்பான் என்று விஷயம் அறிந்தவர்கள் சொன்னார்கள். சின்ன வயதில் பேசித்திரிந்த எல்லா கெட்டவார்த்தைகளும் மனதில் எழுந்து குத்தாட்டம் போட்டன.
எங்களுக்கு கிடைத்த வேலை ஆட்களில் அவன் ஒரு திருஷ்டி.
அவனை நயமாக பேசி வரவழைத்து குமுறலாம் என்று தோன்றியது. அன்று எனக்கு இருந்த அழுத்தத்தில் முடியவில்லை.
நான் ஊருக்கு கிளம்பும் தருவாயில் வேறு ஆட்கள் கிடைத்தார்கள்.
நேர்த்தியாக சொன்ன நேரத்தில் முடித்துக்கொடுத்தார்கள்.
உடைந்த மரபெல்ஸ் துண்டுகளைவைத்து கோலமிடுவதுபோல அழகாக செய்திருந்தனர். அந்த வேலையும் நல்லபடியாக முடிந்தது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக