"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், நவம்பர் 03, 2016

வீட்டை கட்டிப்பார் - 5 வெள்ளை எழில் மாளிகை


ஒரு காலை நேரத்தில் அருண் என்பவரை ரஞ்சித் அழைத்துவந்தான். "அருணே வீடு உள்ள போய் பார்த்துட்டு வா" என்று அனுப்பிவிட்டு என்னிடம் பெயிண்டர் சித்தப்பா பக்கத்தூர் பையன். நல்ல பண்ணுவான் என்றான் . வீட்டை சுற்றி பார்த்துவிட்டு ஒரு நாப்பது குடுத்துடுங்கணா என்றான் அருண் . சரி ஒரு முப்பத்தஞ்சி வாங்கிக்க என்ன சித்தப்பா சரியா என்றான் ரஞ்சித். நான் சரி என்றேன். அருண் சற்று யோசித்துவிட்டு சரிங்கணா நாளைக்கு வேலை ஆரமிச்சுடலாம் என்றான்.
அருண் வேண்டிய பொருட்களை தன் முத்து முத்தான கையெழுத்தில் எழுதி கொடுத்தான்.
முதல் இரண்டு நாட்க்களில் வெளிப்பகுதி முழுவதும் வெள்ளை சிமெண்ட்டை நீரில் கலந்து பூசினார்கள். மறுநாள் முழுக்க சுவர்களை நீரில் நனைத்து காயவிட்டானர்.
பின்பு Exterior primer white paint இரண்டு முறை அடித்ததும் வீடு நீவிய வெள்ளை குதிரைபோல மினு மினுத்தது . எங்களுக்கே அது ஒரு வீடு என்ற உணர்வு அப்பொழுதான் வந்தது.
அருண் பட்டி வேண்டும் என்றவுடன் நான் 20 லிட்டர் வாங்கிவந்தேன். இது வேண்டாம் பொடியாக மூட்டையில் வரும் அது வேண்டும் என்றான். அது இதனினும் பாதிவிலை தான். வீட்டின் உட்புறம் இருமுறை பட்டி பார்த்து காயவிட்டனர்..
வீட்டின் உள்வேலைகள் முடியும் தருவாயில் Interior Primary white paint ஒரு முறை மட்டும் அடித்தனர். அனைத்துவேலைகளும் முடிந்தபின்னர் இன்னொரு முறை வெள்ளை அடித்து வேலையை முடித்தனர். வீடு வெள்ளை எழில் மாளிகையானது.
எனக்கு பிடித்ததே அருணின் தன்மை தான். நாம் எந்த பகுதி எப்போது முடியவேண்டும் வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். அதேகேற்றாற்போல் ஆட்களை அமர்த்தி சொன்ன நேரத்தில் வேலையை முடித்துவிடுவான். அவனுக்கு காசு கொடுக்கும்போது மட்டும் மனசுக்கு அவ்வளவு திருப்தியாக இருக்கும்.
" உம் " என்ற ஒலியை ஒரு வார்த்தையாக பயன்படுத்துவர் தான் கார்த்திக். எங்கள் எலக்ட்ரிசியன். தயங்கி தயங்கி ஆனால் வேகமாக பேசுவார் .
நானும் அண்ணனும் அவரை கூட்டிக்கொண்டு எலக்ட்ரிக்கல் பொருள் வாங்க வேலூர் சென்றோம். வேண்டிய பொருட்களின் பட்டியலை ஒரு அட்டையில் எழுதிவைத்திருந்தார். வேலூரில் எலக்ட்ரிகல் கடைகள் நிறைய இருக்கின்றன. பெரும்பாலும் இது போன்ற பொருட்க்களின் மொத்த விலை சந்தை மார்வாடிகளின் கையில் இருக்கும் . " பாம்பே எலெக்ட்ரிக்கல்ஸ்" பழைய கடை , ஒரே விலை , எலெக்ட்ரிசின்னுக்கு கமிஷன் கிடையாது என்று அண்ணனுக்கு தெரிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அங்கு தான் சென்றோம். மொத்த பொருட்களையும் வாங்கி அடுக்கிய பின்னர் 80 ஆயிரம் பில் வந்தது.
அடுத்து பிளம்பிங் பொருட்கள் வேறு கடையில் வாங்கினோம். குளியலறை பொருட்கள் பல்வேறு தரத்தில் இருந்தது. Parry ware அனைவருக்கும் தெரிந்த கம்பெனி. பெரும்பாலான பொருட்களை அதில் தான் எடுத்தோம். குழாய் பொருட்களின் விலை பத்து ரூபாயில் துவங்கி ஆயிரம் ரூபாய்வரை செல்கிறது. மனதை கட்டுப்படுத்திக்கொண்டு பொறுமையாக நடுத்தரமாக பார்த்து எடுத்தோம். கடைசியில் விலைப்பட்டியல் 40 ஆயிரம் என கை நீட்டி நின்றது.
வீட்டுக்கு வந்ததும் அன்று செலவானதை கவிதாவிடம் சொன்னதும் அயர்ந்துவிட்டாள். ஏன்பா எல்லாம் கொஞ்சம் பார்த்து வாங்க வேண்டியது தானே என்றாள். ம்ம் .. பார்த்து தான் வாங்கினேன். என்று சுருங்க சொல்லிவிட்டு அகன்றுவிட்டேன்.
கையிருப்பை பார்த்து மனதிலிருந்து பயம் உடலுக்கு சொட்டிக்கொண்டு இருந்தது. அதன் குளிர்விசை தாளாமல் உடல் விதிர்க்க துவங்கியது.
மறுநாளே எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் வேலைகளும் துவங்கின.
கார்த்திக்கின் கூட்டாளி சுவாரசியமான மனிதர். கூட வேலை செய்யும் பசங்களை " என் சின்னாள சீனத்து பட்டே வாடி செல்லம் அந்த சுத்திய எடு .... அடடா சனியனே சனியனே மூதேவி உளிய எடுக்காத சுத்தி சுத்தி என்று கத்துவார். ஆவுன்னா உளிய கையில எடுத்துப்பான் என்று பச்சை வாசனை வீச பேசிக்கொண்டே இருப்பார்.
அவர்கள் செய்யும் வேலை கோர்வையாக இருக்காது. ஒன்றை முழுமையாக முடிக்குமுன்னமே அடுத்த வேலைக்கு சென்றுவிடுவார்கள். ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டாலும் ஏதோ ஒன்று குறை இருப்பதுபோலவே நமக்கு தோன்றுகிறது.
பேன் மற்றும் விளக்குகள் அனைத்தும் HAVELLS கம்பெனி வாங்கினோம். நல்ல விதவிதமான வடிவில் கிடைத்தது. LED tube லைட்டுகள் 18 வாட்ஸ் 600 ரூபாய். அது 40 வாட்ஸ் tube லைட் தரும் அதே வெளிச்சத்தை தரும் மற்றும் ஆயுட்காலம் அதிகம். ஆனால் எங்கள் நிலைக்கு அது கட்டுப்படி ஆகவில்லை. மூன்றை மட்டும் அதை வாங்கிக்கொண்டு மற்றவை சாதா விளக்குகளையே வாங்கினோம்.
அதுவே 37000 ரூபாய் வந்துவிட்டது.
குளியல் அறையில் டைல்ஸ் போடும்முன் அனைத்து நீர் வழி பாதைகளையும் ஒருமுறை சரிபார்க்க சொல்லி மேஸ்திரி சொல்லிக்கொண்டே இருந்தார். டைல்ஸ் போட்டபின் எதாவது ஒழுகினால் மறுபடியும் அனைத்தையும் உடைத்தெடுக்க வேண்டும் என்பது அவர்க்கவலையாக இருந்தது.
நல்லவேளையாக அதைபோல எந்த சங்கடமும் ஏற்படவில்லை . எல்லாம் முடிந்து குழாய்களை திறந்தபோது குழாய் இணைப்புகளில் எந்த ஒழுக்களும் இல்லை அதனால் சுவரும் ஈரமாகவில்லை.
என்னுடன் படித்த சரவணன் தான் அந்த பகுதி லைன் மேன். வீட்டு வேலை நடந்துகொண்டு இருக்கும்போது வாரம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டு சென்றான்.
மணியக்காரரிடம் இந்த வீட்டின் சர்வே நம்பர் எழுதி வாங்கு பின் இந்த நிலத்துக்கு வரிகட்டிய ரசீது ஊர் தலைவர் ஆபீஸ்ல வாங்கிக்க மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு போனான்.
என் அண்ணன் ஒருவர் ஊர் கவுசிலர். அவர் மூலம் மணியக்காரரின் சிப்பந்தியை பிடித்து பதிவுகளை எடுத்து பார்த்தபோது அந்த நிலம் உள்ள வரைபடத்தையே காணோம் என்றான். என்னாது கிணறு காணோமா என்றேன் . ஒரு சிறு தொல்பொருள் ஆராட்சிக்கு பிறகு சர்வே எண்ணை பிடித்து மணியக்காரரிடம் கையப்பம் வாங்கி நிலவரி ரசீதையும் வாங்கி சரவணனிடம் கொடுப்பதற்குள் பழைய செருப்பை மாற்றிவிட்டு புது செருப்பை வாங்கிவிட்டேன்.
நல்லவேளை நம்ம லைன் மேன் அலையவிடவில்லை. அரசு எந்திரத்துக்கு கொஞ்சம் ஆயில் மட்டும் விடவேண்டி இருந்தது. மீட்டரை கொண்டுவந்து அவர்களே பொருத்திவிட்டு அதில் சக்கரம் சுழல்கிறதா என்று பார்த்துவிட்டு சென்றார்கள்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக