"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், நவம்பர் 15, 2016

நான் இல்லை

தூ சனினே சனினே எத்தினி வாட்டி சொல்றது ஸ்கூல்லாண்ட வராத வராதுன்னு, என் உயிர எடுக்கரத்துக்குன்னே வாச்சியிருக்கு என்று அருகில் சத்துணவு சமையலுக்காக உலர்த்தப்பட்டிருந்த தென்னை மட்டையை எடுத்து அவன் மீது எடுத்து வீசி எறிந்தாள் ராணி டீச்சர்.

இதா ராணி ஏண்டி அவன அடிக்கிற என்று வெற்றிலையை துப்பிக்கொண்டே ஓடிவந்த சத்துணவு ஆயா எரிந்த மரத்துண்டில் இறுதியாக நிற்கும் கங்கு போல சிவந்த ராணியின் கண்களை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.

அவளை நோக்கி திரும்பிய ராணி "செத்தும் தொலைய மாட்டிங்குது" என்று சீறி எழுந்த மூச்சின் வேகத்திலேயே சொன்னாள்.

ஆயா அவனை நோக்கி  "ஏண்டா மில்ட்ரி காலங்காத்தால பள்ளிகோட்த்துக்கு முன்னாடி இப்டீ வந்து ஒக்காந்துக்கினா அவ புள்ளைங்களுக்கு எப்படிடா படம் நடத்துவா"  "ஏம்மா ராணி காலில வரும்போதே ஒரு பத்துரூபாய வீசாட்டிட்டு வரத்தானே" என்றாள்.

"காலில எங்க உடுது எல்லங் குடுத்துட்டுதான் வந்தங் அத குடுச்சுட்டு வந்து தான் இங்க வந்து உக்கார்ந்து இருக்கு".

ஆயா ஏண்டா சாண்ட குடிச்சவனே அறிவில்ல என்று துவங்க                  " களுக்கென்ற " சிரிப்பொலியை ராணி தன் பின்பக்கமிருந்து கேட்டாள்.

வாயை பொத்திக்கொண்டு கண்களில் சிரிப்பு நிறைந்து பள்ளிப்பிள்ளைகள் நின்றிருந்தனர்.

அவள் கைகள் நடுங்கத்துவங்கின. அவள் உச்சியில் உதித்த ஒற்றை வியர்வைத்துளி அழுத்தி வாரிய முடிகளில் வழுக்கி கன்னத்தில் இறங்கி தரை நோக்கி வேகம் எடுக்கும் தருணத்தில்
" ஏய் இங்க என்ன அவுத்து போட்ட ஆற்றாங்க" போங்கடி என்று கைநீட்டி கத்தினாள். மேல் எழுந்து வரும் கல்லை கண்டு பறந்தெழும் பறவைகள் போல பிள்ளைகள் கலைந்து ஓடினர்.

ராணியின் கண்களில் இயல்பாக கண்ணீர் துளிகள் எழுந்து கண்வளைவு மையை தாண்டி கன்னத்தில் வழிந்தது.

சட்டென துளிர்த்த உணர்வில் தன் ரவிக்கை இடுக்கில் இருவிரல்களை நுழைத்து நனைந்த பர்ஸை எடுத்தாள் . அதிலிருந்து  பத்து ரூபாயை எடுத்து வீசிவிட்டு ஆசிரியர் அமரும்  அறையை நோக்கி நடந்தாள்.

கைவிடப்பட்ட புற்று போல அமர்ந்திருந்த மிலிட்டிரி தலைமுதல் கால் வரை போர்த்தி இருந்த கம்பளியை சற்றே விலக்கி மெலிந்த நடுங்கும் கைகளால்  தன் முன்னால் விழுந்த கசங்கிய பத்து ரூபாய் தாளை எடுத்து கொண்டு ஊன்றுகோலை பற்றி எழுந்து எதிர் திசையில் நடந்தான்.

ஏதோ ஒரு வகுப்பறையிலிருந்து யாகாவாராயினும் யாகாவாராயினும் என்று வெவ்வேறு ராகங்களில் பிள்ளைகள் ஒலிப்பது கேட்டுக்கொண்டே இருந்தது.

ஆயா மட்டும் ஏனோ அங்கிருந்து நகர மனமில்லாமல் அங்கேயே அமர்ந்துவிட்டாள்.


                                                                       (2)

இன்னா மிலிட்ரி போன வேகத்துல திரும்பிவந்துட்ட என்று கேட்டவாறே ஐந்து லிட்டர் வெள்ளை கேனிலிருந்து மெதுவாக உச்ச கவனத்தோடு 100 மில்லி குவளையில் சாராயத்தை ஊற்றிக்கொண்டு இருந்தாள் சரசு. அருகில் யாக்கவ் யாக்கவ் ரவ்வூண்டு கா இன்னும் ரவ்வூண்டு என்று கெஞ்சிக்கொண்டு இருந்தான் டிஸ்க்கோ. நான்கு ஆட்கள் மட்டுமே அமர முடிந்த அந்த குடிசையில்  தன் உடலை மேலும் குறுக்கிக்கொண்டு நுழைந்த மிலிட்ரி பத்துரூபாய்யை எடுத்து குடுத்தான். சரசு 100 மில்லியை அளந்து பிளாஸ்டிக் தம்ளரில் ஊற்றி பானை நீரை கலந்து அவனிடம் நீட்டினாள். அவன் குடிக்கும்போது பாதி சாராயம் கன்று சிறுநீர் கழிப்பது  போல தாடி வழியாக வழிந்தது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத டிஸ்கோ யோவ் மிலிட்ரி இந்த வேலூர் மாவட்டம் மிலிட்ரிக்கு யோவ்லோ பாமஸ் தெரியுமா. ஒரு சாராயம் கூட ஒழுங்கா குடிக்க தெரியாம நீ எப்பிடியா மிலிட்ரில வேல சென்ஞ்ச இதுல பாதில வேற ஓடியாண்ட என்று தள்ளாடினான். டேய்  சாப்பிட இல்ல மூடிட்டு  வெளில போ யோவ் மிலிட்ரி இன்னும் அஞ்சுரூபா இருக்கு தோசையும் போட்டியும் துன்றியா  என்று உறுமினாள் சரசு. அவன் தலையாட்டும் முன்னமே சுட்டு வைத்த தடித்த தோசைகள் இரண்டு அவன் முன்னால் நீண்டது. 

பனிபோர்த்திய பாறைகள் உறைந்து இருக்க குளிர் சுமந்த காற்று சுழன்று அடிக்க ஒரு மஞ்சள் நிற சிறுமியின் மீது வெறிகொண்டு படர முயன்று கொண்டு இருந்தான் மிலிட்ரி. வாகனம் ஏறியது போல் துடித்த அந்த சிறுமியின் கைகளில் ஒரு  உருளை கல் சிக்கியது . அதை  அவன் பக்கவாட்டு நெற்றியில் படியிர் என்று அடித்தாள். அவன் அலறி எழுந்து நான் இல்லை நான் இல்லை அவுனுங்க தான் அவுனுங்க தான் என்று அறற்றினான். 

பொன்வெயில் கீற்று ஒன்று பசுந்தென்னை கீற்று வழியாக இறங்கி அவன் கண்களை கூசச்செய்தது. தன் நினைவு வந்து சுற்றும் முற்றும் பார்த்த போது தென்னத்தோப்புக்கு நடுவே மரத்துக்கு நீர் பாயும் கால்வாயில் கால்கள் இரண்டையும் அகல விரித்து அமர்ந்திருந்தான். அவன் கண்களில் நீர் ஊறி வழிந்தது. மறுபடியும் குடிக்க வேண்டும் என்ற வெறி எழுந்தது. அருகில் இருந்த தன் ஊன்று கோலை எடுத்து அதே கால்வாயில் குத்திக்கொண்டே நடந்தான். ஒவ்வொரு குத்துக்கும் சத் சத் என்ற ஒரே விதமான ஒலி எழுந்தது. சற்று தூரத்தில்  ஒரு இடத்தில் மட்டும் ஒலி மாறுபடுவதை உணர்ந்து அந்த இடத்தை வேகமாக தன் கைகளால் நோண்டினான். கொஞ்சம் மண்ணை தள்ளியதும் ஒரு தகர மூடி தெரிந்தது. அதை திறந்ததும் இரை கவ்வும் மலைப்பாம்பென சாராய ஊறல் நாற்றம் அவன் நெஞ்சை கவ்வியது. 

மண்ணில் புதைக்கப்பட்ட ஆளுயர பானையில் பாதி அளவு வேலமர பட்டையும் வெல்லமும் ஊறிக்கொண்டு இருந்தது. மிலிட்ரி கையை விட்டு அதை தொட முயன்றான் முடியவில்லை. சிவந்த கண்களால் அதையே பார்த்துக்கொண்டு இருந்தான். பின் மெதுவாக நடந்து தோப்பின் மூலையில் இருந்த கிணற்றை நோக்கி நடந்தான். கிணற்று ஓரமாக இருந்த பப்பாளி மரத்தை வெறித்து பார்த்துவிட்டு  பின் ஒரு நீண்ட தென்னை மட்டையை எடுத்து ஒரு பப்பாளி தண்டை அடித்து வீழ்த்தினான். தண்டின் முனையில் இருந்த இலைகளை களைந்து அந்த தண்டு குழாயை  மட்டும் எடுத்துக்கொண்டு பானையை நோக்கி நடந்தான். தண்டின் ஒரு முனையை வாயில் வைத்து மறுமுனையை பானையில் விட்டான். ஊறல் நீர் எட்டவில்லை. தலையை பானை வாயில் நுழைத்து பப்பாளி தண்டால் ஊறல் நீரை உறுஞ்சி குடித்தான். சூடாக்கப்பட்ட அமிலம் போல அது குடலை நிறைத்தது. 

பாம்பு கடித்தவன் போல வாயில் ஊறல் நுரையோடு தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான். திடீரென வயிற்றை பிடித்துக்கொண்டு வாயுமிழ்ந்தான். புளித்த தோசையும் குடலை பிடுங்கும் ஊறலும் வெளியில் வந்து விழுந்தன. ஒடுங்கிய மார்பை பிடித்துக்கொண்டு தண்ணீர் தண்ணீர் என்று முனங்கிகொண்டு இருந்தான். கை மறுபடியும் பப்பாளி தண்டை எடுத்தது. மறுபடியும் தலையை பானைக்குள் விட்டான். நிலையழிந்து ஊறலில் தலைகீழாக விழுந்தான். மூக்கு வாய் கண் அனைத்தும் ஊறலில் நிறைந்தது. நீர்சூழலில் மாட்டியவன் நிலைப்பற்றை தேடுபவன் போல அவன் கைகள் அலைபாய்ந்தது. சிறுமியின் முகம் முன்னாள் தோன்றி நீ தான் என்றது. பயத்தில் சிறுநீர் கழித்தான். பானைக்கு மேலே கால்கள் உதறிக்கொண்டே இருந்தன . நான் இல்லை என்று சொல்லி அவன் மனமும் கால்களும் அடங்கின.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக