இந்த வருடம் வேலையில் ஒரு மிகப்பெரிய ப்ரொஜெக்ட்டை மே மாதம் முடித்தோம். அது ஒரு குழு வெற்றி. பல முன்னிலைகளில் நானும் ஒருவன். ஆனால் எங்கள் நிறுவனத்தில் இது போன்ற வெற்றிகளை உணவு களியாடல் நிகழ்வுகள் முலம் கொண்டாடவோ அல்லது இரவு பகல் உழைத்து குலையும் தொழிலாளர்களை அழைத்து ஒரு பாராட்டு கூட்டம் நடத்தும் வழக்கமோ அல்லது தனிப்பட்ட முறையில் பாராட்டும் பழக்கமோ இல்லை. நிறுவனத்தின் உள் கட்டமைப்பு பல காரணங்களால் அதை அனுமதிப்பதில்லை என்று நினைக்கிறேன்.
புதியதாக நிறுவத்தில் இணைந்தவர்கள் என்ன சார் இது இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் முடிச்சிருக்கோம் ஒண்ணுமே இல்லையா என்று கேட்டு அதிர்ச்சி அடைவார்கள். என்னை போன்று வெகுநாட்களாக உரலை ஆட்டிக்கொண்டு இருப்பவர்களுக்கு அதுவும் ஒரு சாதாரண நிகழ்வு. அன்றய நாளும் ஒரு சாதாரண நாளாகத்தான் கடந்து போகும்.
எங்கள் குழுவில் பணிபுரிந்த தம்பிகளை மட்டும் வீட்டுக்கு அழைத்து ஒரு மத்திய விருந்து நானும் கவிதாவும் கொடுத்தோம். அது இந்த வருடத்தில் ஒரு நல்ல மற்றும் மகிழ்ச்சியான நினைவு.
கொஞ்ச நாட்கள் முன்புவரை கூட ஒரு ப்ராஜெக்ட் முடிக்கும்போது ஆகா முடித்துவிட்டேன் வெற்றி வெற்றி என்று என் மனம் கொண்டாடியது . ஆனால் இப்போது அதுவும் வடிந்துவிட்டது. இது போன்ற நிகழ்வுகள் ம்.... அப்படியா என்ற அளவிலேயே கடந்து போய்விடுகிறது.
அடுத்த பெரிய நிகழ்வு கிராமத்தில் வீடு காட்டியது. வீடு கட்டுவது எங்களுக்கு ஒரு பெரிய கனவு என்று சொல்ல முடியாது. வீடு கட்டும் பணி கால சூழலில் தன்னியல்பாக அமைந்தது. இதுவும் அநேகம் பேரின் நல்ல கூட்டு முயற்சி. நிறைவாக அமைந்தது.
எனக்கு உள்ளார்ந்து மகிழ்வை உண்டாக்குவது குடும்பம், நண்பர்கள், பயணம் , புத்தகம், கொஞ்சம் நாட்டு நல பணி.
இந்தவருடம் வீடு கட்டுவதற்காக மகனும் மனைவியும் என்னை ஆறு மாதம் பிரிந்து இருந்தார்கள். அதுவே பெரும் சோர்வைத்தந்தது.
இந்தவருடம் பழைய நண்பர்கள் யாரையும் சந்திக்கமுடியவில்லை. ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் நான் மேற்கொள்ளும் பயணமும் நான்மட்டும் தனியாக ஊர் சுற்றி அலையும் பயணமும் அடுத்த ஒரு வருடத்துக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கக்கூடியது. ஆனால் இந்தவருடம் அதுவும் இல்லாமல் போனது சோர்வை அளித்தது.
இந்த வருடம் மூன்று நாவல்களை படித்தேன்.
1. வெய்யோன் - வெண்முரசு
2. பன்னிரு படைக்கலம் - வெண்முரசு
3. சொல்வளர்க்காடு - வெண்முரசு
மூன்றுமே என்னை பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கிய நாவல்கள். ஒரு சடைமுடி சூடிய முதுமுனி முன் அமர்ந்து சொல் கேட்பது போல் இருந்தது இந்த நாவல்கள்.
இந்த வருடம் இரண்டு சமூக நிகழ்வுகள் என் மனதை பெரிதும் பாதித்தது. ஒன்று பியூஸ் மனுஷ் சமூக ஆர்வலர் கைது மற்றும் அவர்மேல் நடந்த வன்முறை.
இரண்டாவது முதல்வர் ஜெயலலிதாவின் மரணமும் அதை தொடர்ந்து நடக்கும் நாணமற்ற நாடகங்களும்.
ஒருவனை நான் என் பிரதிநிதி என்று வாக்களித்து நியமிக்கிறேன். அவன் சென்று ஒருவரின் காலில் விழுந்தால் நானும் காலில் விழுந்ததல்லவா அர்த்தம்.
மக்களுக்காக எந்த கலப்பணியும் செய்யாமல் எந்த மக்களையும் எந்த பகுதியிலும் சந்திக்காமல் ஒரு சின்ன மக்கள் நல போராட்டம் கூட நடத்தாமல் அவர்களின் நம்பிக்கையும் நன்மதிப்பையும் பெறாமல் ஒருவர் அனைவருக்கும் முதல்வராக முடியும் என்பதை சாமான்னிய எளிய மனம் கொண்ட என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.
இந்த வருடம் கொஞ்சம் சோர்வான வருடம் தான்.
ஆனாலும் இந்த வருத்தத்தில் என் மகிழுக்கும் வாழ்வுக்கும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் நன்றி மற்றும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
2017 புதுவருடம் முழுவதும் இனிதே அமைய வாழ்த்துக்கள்.