"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், பிப்ரவரி 06, 2017

அன்புள்ள மகளுக்கு


நீ படித்து முடித்தவுடன் உன் வேலைக்காக என் நண்பர்களை அணுகினேன். ஆனால் அவர்களின் நிலை உதவும் நிலையில் இல்லை. மேற்கொண்டு நானும் அதிக சிரத்தை எடுக்கவில்லை. அதற்காக மெல்லிய குற்றவுணர்வை உணர்கிறேன்.

ஆனால் உனக்கு வேலை கிடைத்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. என் வாழ்த்துக்கள்.

நான் இரண்டு விதமான மனிதர்களை பார்க்கிறேன். வேலை கிடைத்தவுடன் தன் தின வாழ்வை வேலைக்கார தேனீ போல மாற்றிக்கொள்பவர்கள்.

அது தேனை பூவிலிருந்து எடுத்து அடையில் சேர்த்துக்கொண்டே இருக்கும். அதற்காக கடுமையாக உழைக்கும். அதற்க்கு வேறு எதுவும் தெரியாது. அந்த தேனை கூட அது ருசிப்பதில்லை.

மக்களில் பெரும்பான்மையோர் இப்படித்தான்.
எழுவார்கள் தின்பார்கள் வேலைக்கு சென்று திரும்புவார்கள் தூங்குவார்கள்.

சமூகத்தின் பெரும் பகுதி இவர்கள்தான்.

இரண்டாவது வகை சமூகத்தில் சொற்பமானவர்கள். அன்றாட வாழ்வியல் நிகழ்விலிருந்து சற்று விலகி யோசிப்பவர்கள் . அவர்கள் கனவு காண்பவர்கள் .  தன்னை இலக்கியம் ,கலை , பயணங்கள், புத்தகங்கள் , இசை , ஆன்மிகம் ....ect , வழியாக தேடிக்கொண்டே இருப்பவர்கள். தேடலையே வாழ்க்கையாக கொண்டவர்கள். அவர்கள் படைப்பாளிகள். படைத்தளின் வழியாக தன்னை கண்டடைபவர்கள்.

தான் செய்யும் தொழிலையே முழுமையாக நேசித்து தன்னையும் தொழிலையும் புதுப்பித்துக்கொண்டே இருப்பவர்கள்.

முதல் வகை பெரும் மரம் என்றால் இரண்டாம் வகை அதில் பூக்கும் மலர்கள் அல்லது கனிகள்.

வாழ்வை ஒரு எளிய சுழற்சியாக மாற்றிக்கொண்டு தொடர்ந்து ஒரே பாதையில் ஓடிக்கொண்டு இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் சலிப்புறுகிறார்கள். ஏன் இந்த வாழ்க்கை என்று தளர்வார்கள்.

தினமும் புதியதாய் பிறப்பவர்கள் வாழ்வை தினமும் கொண்டாட பழகியவர்கள். பிறர் இவர்களை நகையாட கூடும். அதையும் கொண்டாடுபவர்கள் இவர்கள்.

"நீரில் மிதந்து வரும் நீர் குமிழிகள் என் பாதம் தொட்டு உடையும் போது அதனிடம் சொல்லவேண்டும் போல தோன்றும் நானும் உன்னை போல தான் என "

நீ  எழுதிய இந்த வரிகள் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. நீ வாழ்நாள் முழுக்க இரண்டாம் வகையில் இருக்க வாழ்வை தினம் தினம் கொண்டாட வாழ்த்துகள்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக